கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்க முடியாது – இலங்கை

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு, இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவிவரும் கோவிட் ஒமிக்ரோன் தொற்று மற்றும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, சுமார் 500 வரையான மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை  விழா நடத்தப்படவுள்ளது.

இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.