காபூலில் உள்ள ‘இந்திய தொழில்நுட்ப மிஷன்’ (Technical Mission of India) என்பது ‘இந்திய தூதரகம்’ என உடனடியாக தரம் உயர்த்தப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில் வெளியிட்டது. ஆப்கானிஸ்தான் தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் ஆறு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் சமீபத்திய இந்திய வருகையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப மிஷனை மீண்டும் இந்திய தூதரகமாக மாற்ற இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வளர்ந்து வரும் ராஜீய உறவுகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“பரஸ்பர நலன் சார்ந்த அனைத்து துறைகளிலும் ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த முடிவு பிரதிபலிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.