‘இந்தியா போரை ஆதரிக்காது’ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி திட்டவட்டம்

‘பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது’ என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக  அறிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுகிறது. வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பிரிவினைகள் குறித்து உலக நாடுகள் விவாதித்து வருகின்றன. ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, உணவு, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் குடிநீர் ஆகிய வசதிகளை உறுதி செய்வதற்குத்தான் நாம் இப்போது முன்னுரிமை அளிக்க வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு பிரிவினையை ஏற்படுத்தவில்லை என்பதை உலகத்துக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும். ராஜ தந்திரத்தையும் பேச்சுவார்த்தையையும் நாங்கள் ஆதரிக்கிறோம், போரை ஆதரிக்கவில்லை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். கரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு இணைந்து செயல்பட்டதோ அதுபோல பாதுகாப்பான, வலிமையான மற்றும் வளமான எதிர்காலத்தை நாம் உருவாக்குவதற்கும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில், பன்னாட்டு வளர்ச்சி வங்கிகள், உலக வரத்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இப்போதைய சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிக்ஸ் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தமைக்கும் இந்த அமைப்புக்கு தலைமை வகிப்பதற்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.