பிரதமர் மோடியின் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

ஒன்றிணைந்த சிறீலங்காவிற்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்ய பிரதமர் மோடி சிறீலங்காவிற்கு விடுத்த அழைப்பை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இடையே காணொலி வாயிலாக இருதரப்பு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை சிறீலங்காவில் நடைமுறைப்படுத்துவது அவசியம் என பிரதமர் மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

மேலும் இந்த சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிறீலங்கா ஆளும் கட்சியின் சமீபத்திய தேர்தல் வெற்றியும் ராஜபக்ஷ அரசின் கொள்கைகளும் இந்தியா மற்றும் சிறீலங்கா இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

அத்துடன் இந்தக் கூட்டத்தின்போது பௌத்த கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 110 கோடி, சிறீலங்கா ரூபாய் மதிப்பில் சுமார் 278 கோடி) நிதியை இந்தியா இலங்கைக்கு ஒதுக்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் மோடி மற்றும் ராஜபக்ஷ ஆகியோர் இருநாட்டு வர்த்தகம் குறித்தும் விவாதித்தனர்.

எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி,பொருளாதார உறவு, சுற்றுலாத்துறை, கல்வி,கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய & சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம்,” என்று மோடி பதிவிட்டுள்ளார்.