இலங்கை வாழ் தமிழர்களுக்காக இந்தியா துணை நிற்க வேண்டும் – சுமந்திரன் தெரிவிப்பு

இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.  குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதுடன், இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பினையும் கோருவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற 9ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு பயணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏ.என்.ஐ. செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு திட்டத்தில் அந்த மக்களின் சார்பாக இந்தியாவே முன்னின்று செயற்பட்டது. எனவே அரசியலமைப்பு ரீதியிலான தீர்வு திட்ட விடயத்தில் இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதொன்றாகும்.

தற்போது அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றினேன்.

பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னரான ஒரு கால வரையறைக்குள் தீர்வு திட்டத்தை அடைவதற்கான அரசுடனான பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டு வருகின்றோம். முழுமையான அதிகாரபகிர்வு நோக்கிய தீர்வு திட்டத்தில் எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குவோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவே பெரும் சிக்கலாகும். எனவே தான்  குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதுடன், இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பினையும் கோருகின்றோம்.

அதேபோன்று கால தாமதமின்றி மாகாணசபைத் தேர்தலை நடத்தவும், எந்தவொரு தேர்தலையும் ஒத்தி வைக்கக் கூடாது என்றும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். எனவே இலங்கை வாழ் தமிழர்களுக்காக இந்தியா துணை நிற்க வேண்டும் என்றார்.