அர்த்தமுள்ள தீர்வு ஈழத்தமிழர் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே சாத்தியம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 216

அர்த்தமுள்ள தீர்வு ஈழத்தமிழர் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே சாத்தியம்

ஈழத்தமிழர் வரலாற்றில் 1974 முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 10, என்பது 4வது உலகத்தமிழராய்ச்சி மாநாட்டில் சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பால் உயிரிழந்த 11 தமிழர்களுக்குமான நினைவேந்தல் நாளாகவே திகழ்ந்து வருகிறது. ஆயினும் இவ்வாண்டு சனவரி 10ம் நாள் சிறிலங்காவின் அரசத்தலைவர், ரணில் விக்கிமசிங்கா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நான்கு நாள் பேச்சுக்களைச் சிறிலங்காவின் பாராளுமன்றத் தமிழ்ப்பிரநிதிகளான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புளொட் தலைவர்
த. சித்தார்த்தன் ஆகியோருடன் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தைக்கான முன்னிலைப் பேச்சுக்களை இதுவரை சிறிலங்கா அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, பிரதமரின் செயலாளர் நீதி அமைச்சர் விஜயதாசா ராஜபக்ச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் நடாத்திய சம்பந்தன் குழுவினர் பேச்சுக்களில் பேச்சுவார்த்தைக்கான வரைபைத் தருமாறு அரசத்தலைவரிடம் கேட்டுள்ளனர். அரசத்தலைவர் தமிழ்க்குழுவினரின் வரைபைக் கேட்க இவர்கள் திங்கள்கிழமை 9ம் திகதி தருவதாகக் கூறியுள்ளனர். இதில் என்ன விந்தையென்றால் ஓருநாளில் எவ்வாறு அரசத்தலைவர் இவர்களின் வரைபை எடுத்தாராய்ந்து பதிலளிப்பார் என்பதுதான். இதுவரை இவர்கள் ஏன் இந்த வரைபைத் தயாரித்துப் பேச்சில் கலந்து கொள்ளவில்லை என்பதும் கடவுளுக்குத்தான் வெளிச்சம். அதேவேளை பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் தொடர்பில் 10ம் திகதி வரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை எனச் சம்பந்தன் கடும் தொனியில் விசனம் வெளியிட்டதாகப் பேச்சில் கலந்து கொண்டவர்களும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை என்பது சிறிலங்கா அனைத்துலக நாணய நிதியம் கடன் வழங்கலுக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென முன்வைக்கும் நிபந்தனையை ரணில் தான் பூர்த்தி செய்ய முயற்சிப்பதாகக் காட்டுவதற்கு என்பது தெளிவாகிறது. இந்த நிதி நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கில் தன்னுடைய படைகளில் 86 வீதம் நிலைகொண்டுள்ள நிலையில் படையினரின் பாதுகாப்புச் செலவுக்கு மிக அதிகளவு நிதியை இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஓதுக்கி படைவிலகல் என்பதற்கே இடமில்லை என்பதை உறுதி செய்துள்ள ரணில் விக்கிரமசிங்காவிடம் படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்கும்படி தமிழ்க்குழுவினர் கேட்டல் என்பது அரசியல் நகைச் சுவையாகவே உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை என்பதே மாகாண சபை அதிகாரங்களை அதிகரிப்பது என்பதாக ரணிலால் விளக்கமளிக்கப்பட்ட நிலையில் ஜே. ஆர் ஜயவர்த்தனா 80களில் சிறிலங்காவின் இறைமையை ஈழத்தமிழர்களின் இறைமையுள்ள தாயகப் பகுதிகள் மேல் திணிக்கக் கொண்டு வந்த மாகாணசபை மூலமான நிர்வாகப் பரவலாக்கல் முறைமையை அவரின் உறவினரான ரணில் மீண்டும் உயிர்ப்பித்து ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கையாகவும் கோட்பாடாகவும் சிங்கள நாடு சிங்கள தேசியம் பௌத்த மதம் என்பது அன்றும் இன்றும் என்றும் உள்ளது என்பதை உறுதி செய்கின்றார். அதே நேரத்தில் தனது கட்சி தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்ட ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தானே தன்னையே கொண்டுள்ள நிலையிலும் அரசத்தலைவராகத் தன்னை மாட்சிமைப்படுத்திய கோத்தபாயா ராசபக்சாவின் ஒரேநாடு ஒரே சட்டம் என்னும் சிங்கள பௌத்த பேரினவாதக் கனவை தான் நிறைவேற்றி ராசபக்ச குடும்பத்துக்கான நன்றிக்கடனைப் பூர்த்தி செய்கின்றார். அத்துடன் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பெரும்பான்மை வாக்குகளை தன்பக்கம் திருப்பி அதன் பின்னர் அரசத்தலைவர் தேர்தலை நடாத்தி மீளவும் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்த ரணில் நடாத்தும் ராஜதந்திர முயற்சியாகவும் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி அமைகிறது. .
இந்நிலையில் அர்த்தமுள்ள தீர்வு இல்லையென்றால் பேச்சுக்களில் கலந்து கொள்வதில் பயனில்லை என கண்கெட்ட பின் சூரிய வணக்கம் செய்யும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அர்த்தமுள்ள தீர்வு என்பது ஈழத்தமிழர் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே அது சாத்தியமாகுமென்பது தெரியாத ஒன்றல்ல. இதனை முன்னிலைப்படுத்தினால் தங்களைப் பிரிவினைவாதிகள் பட்டியலில் சிறிலங்கா வைத்துவிடும் என்னும் அச்சமே உண்மையைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர மறுப்பதன் காரணம்.
இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் காலனித்துவத்திடம் இழந்த தங்கள் இறைமையை மீட்கவே சிங்களத் தேசியத்துடன் இணைந்து பிரித்தானிய அரசிடம் இருந்து அரசியல் விடுதலை பெறப் போராடினர் என்பது தந்தை செல்வநாயகம் சிறிவலங்காப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்தை விடுத்த பொழுது மிகத்தெளிவாகக் கூறினார். அதன் முன்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையாக விளங்கிய ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களும் அதன் முன்னர் தலைவர்களாக விளங்கிய அருணாசலம் மகாதேவா அவர்களும் எல்லோருமே ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளையே அவர்களின் அரசியல் உரிமைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.
1921இல் மன்னிங் அரசியல் சீர்திருத்தத்தால் வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை பிரித்தானிய சட்ட சபைக்கு கைவிட்டது முதல் ஈழத்தமிழர் தேசிய இனம் என்ற தனித்துவம் அனைத்து தமிழ்த் தலைமை களாலும் முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானிய காலனித்துவம் செயற்கையாக உருவாக்கிய இலங்கையர் என்ற தேசியம் சிங்கள தமிழ் தேசிய இனங்கள் இரண்டாலும் நிராகரிக்கப்பட்டு தனித்தனி தேசியஇனங்களாகவே இருஇனங்களும் பரிணாமம் பெற்றன. கூடவே வர்த்தகத்தால் இலங்கையின் நீண்டகால குடிகளாக உள்ள இலங்கை முஸ்லீம்களும் தொழில் வழி இலங்கையின் இருநூறாண்டுக் குடிகளாக உள்ள மலையகமக்களும் தங்கள் தேசியங்களையும் தனித்தன்மையான தேசியங்களாகவே இன்றுவரை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் இது எங்களின் சொந்த மண் என்னும் இறைமையுணர்வு எவ்விதம் பிரிவினைவாதமாகும் என்பதைச் சம்பந்தன் ஐயா இந்தப் பேச்சின் போதாவது எழுப்ப வேண்டும். 1931முதல் 1972 வரை டொனமூர் – சோல்பரி யாப்புக்களால் இனப்பிரச்சினையாக இருந்த ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை 1972 முதல் இன்று வரை இறைமைப்பிரச்சினையாக உள்ளது என்பது வரலாறு. 1978 மதல் 2009 வரை ஈழத் தமிழர்களின் இறைமையின் நடைமுறை அரசால் இலங்கைத்தீவுக்குள் இரு அரசுக்கள் என உலகின் இராணுவ இராஜதந்திர அறிக்கைகள் வெளிப்படுத்தியதை உலகு அறியும். இந்நிலையில் சிங்கள தமிழ் தேச இனங்களின் இறைமைகளின் கைகுலுக்களாக பேச்சுவார்த்தையை அமைத்து, இனப்பிரச்சினைக்குப் பேசாது இறைமைப்பிரச்சினைக்குப் பேசுங்கள். இலங்கை முஸ்லீம்களதும் மலையக மக்களதும் அரசியல் உரிமைகளைச் சிங்களத் தமிழ்தேச இனங்கள் உறுதிப்படுத்தும் வகையிலான தீர்வுகளை முன்னெடுக்கப் பேசுங்கள். இலங்கைத் தீவின் அனைத்து மக்களதும் ஒருமைப்பாட்டால் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியில் இருந்து அனைத்து மக்களும் விடுபடுவதற்கான நல்லாட்சி முறையொன்றை இத்தைப்பிறப்பில் தொடங்கும் ஆண்டாவது உறுதி செய்யப் பேசுங்கள். ஏற்கப்படாவிட்டால் அனைத்து மக்களுக்கும் உண்மைகளைத் தெளிவாக்கி உண்மையான சனநாயகப் போராட்டங்கள் வழி இலங்கைத் தீவை, அனைவருக்குமான தாய் மண்ணைக் காருங்கள், என்பதே இலக்கின் தைப்பொங்கல் வேண்டுகோளாக உள்ளது. இலங்கைத் தீவில் வாழும் அனைத்து மக்களதும் சமத்துவமும் சுகோதரத்துவமும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படல் உலகின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாகவும் உள்ளது என்பது இலக்கின் உறுதியான எண்ணமாகவும் உள்ளது.

Tamil News