இந்தியா: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் அங்கு உமர் அப்துல்லா தலைமையில் கூட்டணி அரசு அமைய உள்ளது.
அதே நேரம் ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. அதன்படி, பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மையை பெற்றிருப்பதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 32 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
அத்துடன் 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய திகதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது. பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
இந்த நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனால் ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதல்வராக தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர், இந்த தேர்தலில் ஒமர் அப்துல்லா கந்தர்பால், புட்காம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் அவர் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



