இந்தியா – யாழ்ப்பா ணம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் சாத்தியக்கூறு இந்த ஆண்டு இறுதிவரை இல்லை என்று விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகளுடன் முதல் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் கப்பலை வரவேற்ற பின்னர் துறைமுக முனையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காங்கேசன்துறையில் 25 கோடி ரூபாய் செலவில் பயணிகள் முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் பலமானது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாசார ரீதியான உறவுகள் மேலும் பலமடைய வேண்டும். இதற்கான வாய்ப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் அமைந்துள்ளது.
எனினும், இந்தியா – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அது இந்தஆண்டு டிசெம்பருக்கு முன்னர் பூர்த்தியாகாது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை அடுத்த வருடத்திலாவது ஆரம்பிக்க வசதிகள் செய்யப்படும் – என்றும் கூறினார்.