சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பாராளுமன்றத்தில் வருடாந்திர அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தார். அதில், கடந்த 2021-ம் ஆண்டு உலகம் முழுவதும் சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டில் நிகழ்ந்த விதிமீறல்கள் பற்றி தனி அத்தியாயங்களை அந்த அறிக்கை கொண்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இந்தியா குறித்து பேசப்பட்ட அத்தியாயத்தில் தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை. ஆனால், இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியையும் அரசின் அறிக்கைகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. பல்வேறு அரசு சாரா அமைப்புகள், சிறுபான்மை நிறுவனங்கள் தங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆராய்ந்துள்ளது.

மேலும், இந்தியாவில் மத சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொலைகள், தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்கள் ஆண்டு முழுவதும் நடந்தன என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே டிஎன்ஏவைக் கொண்டுள்ளனர் என்றும், மதத்தால் வேறுபடுத்தப்படக்கூடாது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கைக்கு இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி  கூறும்போது, ‘‘அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2021 அறிக்கை மற்றும் அமெரிக்க மூத்த அதிகாரிகளின் விமர்சனங்கள் ஆகியவற்றை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம்.

சர்வதேச உறவுகளில் வாக்கு வங்கி அரசியலானது நடைமுறையில் உள்ளது என்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. உள்நோக்கம் சார்ந்த ஆய்வுகள் மற்றும் ஒருசார்புடைய பார்வைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம்.

இயற்கையிலேயே பன்முகத் தன்மை கொண்ட சமூகமாக விளங்கும் இந்தியா, மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கிறது. இன ரீதியான மற்றும் கலாசார ரீதியிலான தாக்குதல்கள், வெறுப்புணர்வு குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறை ஆகிய விவகாரங்களை கவனத்தில் கொண்டு அவற்றை அமெரிக்காவுடனான ஆலோசனையின் போதும், இந்தியா எப்போதும் சுட்டிக்காட்டி வந்துள்ளது’’ என்றார்.

Tamil News