அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
கோலாலம்பூரில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
“ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு” மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவதற்கு உதவும் இந்த ஒப்பந்தம், மோதல்கள் அதிகரிப்பதைத் தடுக்கும் என்று சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளிடையே விரிசல் அடைந்த உறவுகளை செய்யவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் இந்தியா மீது விதித்த வரிகளில் ரஷ்ய எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25% ‘தண்டனை’ வரியும் அடங்கும்.
இந்தியா- அமெரிக்க பாதுகாப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களுக்கும் கொள்கை வழிகாட்டுதலை இந்த ஒப்பந்தம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



