இந்தியாவினதும், வட-கிழக்கில் இயங்கும் இந்திய சார்பு தமிழ் அரசியல் கட்சிகளினதும் அச்சுறுத்தல்கள் காரணமாக வடக்கில் மேற்கொள்ளவிருந்த தனது முதலீடுகளை இடைநிறுத்தி தாம் வெளியேறுவதாக சீனா கடந்த வியாழக்கிழமை (2) தெரிவித்திருந்தது. ஆனால் 24 மணி நேரத்திற்குள் சீனா தனது முடிவை மாற்றியுள்ளது. இந்தியாவும் தமிழ் கட்சிகளும் இணைந்து சீனாவை வெளியேற்றத் திட்டம் தீட்டியுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
வடக்கில் இருந்து வெளியேறவில்லை நாம் எமது திட்டத்தை இடைநிறுத்தி வைத்துள்ளோம் அதனை மீண்டும் தொடருவோம் என சீனா தூதரகம் கடந்த வெளிள்ளிக்கிழமை (3) மீண்டும் தெரிவித்துள்ளது.
வடக்கின் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு அகிய பகுதிகளில் சூரிய சக்தியின் இயங்கும் மின்உற்பத்தி நிலையங்களை அமைத்து சூழல் மாசுபடுவதில் இருந்து காப்பாற்றுவது மற்றும் வடக்கு மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது என்ற நோக்கில் தாம் மேற்கொள்ளவிருந்த திட்டத்திற்கு மூன்றாம் தரப்பில் இருந்து ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அதனை தாம் நிறுத்துவதாக சீனாவின் Sino Soar Hybrid Technology நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்தியாவையும், இந்திய சார்புக் கொள்கையுடைய வடக்கில் இயங்கும் கட்சிகளையுமே சீனா மூன்றாம் தரப்பு என தெரிவித்துள்ளது.
எனினும் மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய உடன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக இந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.
சீனாவின் திட்டத்தின் மூலம் 2900 தொன் காபன்டை ஒக்சைட்டு என்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் வாயு வளியில் கலப்பதை தடுக்க முடியும்.
இதனிடையே, இந்தியாவிடம் இருந்து எந்த நன்மையும் பெறாது, பிராந்திய வல்லரசு ஒன்றை பகை நாடாக்கும் தமிழ் கட்சிகளின் வெளிவிவகாரச் கொள்கை என்பது தமிழ் மக்கள் சந்தித்த மற்றுமொரு பேரழிவாகவே பார்க்கப்பட வேண்டும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.