எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஷர்ம் எல்-ஷேக் நகருக்கு வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விரைவில் எகிப்து வரவுள்ளனர் ஆனால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தவிர்த்து வருகின்றன. இந்த நாடுகளில்தான் காற்றில் கார்பன் உமிழ்வு அதிகம் உள்ளது என பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஆலோசகர்கள் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி நைஜல் புர்விஸ் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் சிஓபி27 என்ற தலைப்பில் அனைத்து உகப் பருவநிலை மாற்ற மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நவம்பர் 18-ம் தேதி வரை மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் எகிப்துக்கு வருகை தந்துள்ளனர். நேற்று நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதுகுறித்து பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஆலோசகர்கள் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி நைஜல் புர்விஸ் கூறியதாவது:
மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் விரைவில் மாநாட்டில் இணைவர். இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தவிர்த்து வருகின்றன. இந்த நாடுகளில்தான் காற்றில் கார்பன் உமிழ்வு அதிகம் உள்ளது. கார்பனை அதிகம் உமிழும் மற்றொரு நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இதுகுறித்து மாநாட்டில் பேசுவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.