இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது.
இந்திய விமானப்படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. பணயக் கைதிகளை மீட்பது போன்ற சாகசங்களையும் விமானப்படை வீரர்கள் செய்து காட்டினர்.
உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருக்கிறது
இந்த நிலையில், சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், தமிழ்நாடு அரசு இதனை மறுத்துள்ளது.