மத்திய கிழக்கு பகுதியில் அதிகரிக்கும் போர் பதற்றம்!

இஸ்ரேல் பிரதமருக்கு ஈரான் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில்ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.  இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு நடுவே, ஹமாஸ்  போராளிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லாகள் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் இராணுவம் ஹிஸ்புல்லாகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.

இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் இராணுவம் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் 180 ஏவுகணைகளை வீசியது. அவற்றை எங்கள் நாட்டின் அயன் டோம் சாதனங்கள் இடைமறித்து அழித்தன. எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இதில் சிலர் காயமடைந்தனர்” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரான் புரட்சிகர படை (ஐஆர்ஜிசி) வெளியிட்ட அறிக்கையில், “ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் எங்கள் தளபதி அபாஸ் நில்போரோஷான் ஆகிய இருவரையும் கொன்றதால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினோம். டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள 3 இராணுவதளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். 90 சதவீத ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கை தாக்கின” என தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “ஈரான் பெரிய தவறை செய்துள்ளது. இதற்கு அந்த நாடுபெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.

இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும்அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விரைவில் கொன்று விடுவோம் என ஈரான் உளவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே பிரான்ஸ், இஸ்ரேல்அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கிழக்குபகுதி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.