இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் – காலி துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

காலி – ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றிரவு (30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த விடுதியின் உரிமையாளர் மூவர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 7 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பண பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விடுதியின் உரிமையாளர், கொலை சம்பவமொன்றின் சந்தேகநபர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் மதுபானம் அருந்திய சந்தர்ப்பத்தில் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளிலில் பயணித்த அடையாளம் தெரியாத இருவரினால் டீ-56 ரக துப்பாக்கியால் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரையும் இலக்கு வைத்து சுமார் 25 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் பனங்கல, ஹினிதும மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே உயிரிழந்தனர். இதேவேளை, ‘இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான 11 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 9 பேர் பலியாகினர்’ என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

‘அவற்றில் 3  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கல்கிஸ்சை பகுதியில் பதிவாகியுள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலையே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கான காரணம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, போதைப்பொருள் வர்த்தகத்தை மையப்படுத்தியும் கப்பம் கோரல் செயற்பாடுகளுக்கமையவும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.