பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல் 16 நாள் செயற்பாட்டின் ஒரு பகுதியாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் நடைபவனியொன்று இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இந்த நடைபவனியானது நடைபெற்றது. பெண்களை பாதுகாப்போம், உலக வேலைத் தளங்களில் பாலியல் வன்முறைகளை முடிவுறுத்தல், பெண்களுக்கான சமத்துவத்தை பெற்றுக் கொடுப்போம், பெண்கள் மீதான வன்முறைகளுக்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும், பெண்கள் மீதான வன்முறைகள் சிறப்பு நீதிமன்றங்கள் ஊடாக விசாரணை செய்யப்பட வேண்டும் உட்பட பல வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடை பவனி நடைபெற்றது.
மேலும் உலகளாவிய ரீதியில் பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதனையும் அவர்களை பாதுகாப்பதனை உறுதி செய்யும் வகையிலும் உலக மக்களை வலுவூட்டும் செயற் திட்டமாக ஆண்டு தோரும் கார்த்திகை மாதம் 25 ம் திகதியிலிருந்து மார்கழி 10 வரை 16 நாட்கள் பெண்களின் ஆதரவுக்கான அணிதிரட்டும் காலமாக கடைப்பிடிப்படுகின்றன.
இத்தகைய காலப் பகுதியில் பெண்களின் நலன்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,பிரச்சினைகள் உரிமை மீறல்களை உலகரியச் செய்யும் நோக்கில் இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.