அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்டவிரோதமாக பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த சில மாதங்களில் இவ்வாறு நாட்டை விட்டு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்து கைது செய்யப்பட்டவர்களின் ண்ணிக்கை 399 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காவல்துறை  ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ,
“சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஜனவரி முதல் இன்று வரை இவ்வாறு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது“ என்றார்.

சட்டவிரோதமாக எவரும் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்ட அவர், சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தொடர்ந்தும் அவதானித்து வரும் அவுஸ்திரேலியா, எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதிக்காது என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இவ்வாறான 91 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் “படகுகளில் பெருந்தொகையான ஆட்களை ஆட்கடத்தல்காரர்கள் ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பயணத்திற்கு சுமார் 14 நாட்கள் ஆகும்.  மேலும் இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு படகுகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எனவே, இவ்வாறான மோசடிகளுக்கு மக்கள் பலியாக வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News