வடக்கில் குடியேற விரும்பும் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிட்வா பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கான நிரந்தர, பாதுகாப்பான காணியை பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையை மானிடம் பூமிதான இயக்கம் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் 25 குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மானிடம் பூமிதான இயக்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் காணி பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதன்படி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் காணிகள் வழங்கக்கூடிய இடங்கள் தொடர்பிலும் ஆராயப்படுவதாக அவர் கூறினார்.

இதேவேளை, மலையகத்தில் பாதுகாப்பான இடங்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அங்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் இயலுமான சாத்தியங்கள் குறித்து ஆராயப்படுவதாகவும் மானிடம் பூமிதான இயக்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளையும் ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தநிலையில், முழுமையான மனிதாபிமான நடவடிக்கையாக மாத்திரமே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மானிடம் பூமிதான இயக்கத்தின் தலைவர், சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, சுயவிருப்பின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் குடியேற முன்வரும் மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி இதுவரையில் காணி கோரிக்கைக்கு விண்ணப்பிக்காதவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

077 07 56 333 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் பட்சத்தில, அவை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மானிடம் பூமிதான இயக்கம் அறிவித்துள்ளது.