இறைமையின் பெயரால் இனத்துவ அழிப்பு;உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தான முன்னுதாரணம்

294 Views

“மக்களின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் பெரும்பான்மையினரின் அவாவினையே எப்பொழுதும் மதிக்க வேண்டும். அப்படியென்றால்தான் மக்களின் இறைமை காப்பற்றப்பட முடியும். என்னுடைய பதவிக்காலத்தில் எங்களுடைய தேசத்தின் அதிஉயர் சாசனமாகிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒற்றையாட்சியையும் பௌத்தசாசனத்தையும் பாதுகாத்து, பௌத்தசாசனத்தை வளர்ப்பேனென உறுதிமொழியளிக்கிறேன்.

இதற்கமைய எப்படி நல்லாட்சியை வழங்குவதென அறிவுரை பெறுவதற்கு முன்னணியில் உள்ள பௌத்த பிக்குகளை கொண்ட அறிவுரைக்கும் கழகம் ஒன்றை அமைக்கவுள்ளேன். எங்களுடைய பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கவென ஜனாதிபதியின் செயலணி ஒன்றை நிறுவியுள்ளேன்.

புத்தத்திற்கு முன்னுரிமையை உறுதிப்படுத்தும் அதே வேளையில், எந்த ஒரு குடிமகனும் தன் விருப்புக்கு அமைய அவனுடைய அல்லது அவளுடைய சமயத்தை வழிபடும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல் நல்லது என்பதையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசாங்கம் தேசிய பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை மற்றும் எங்கள் அடையாளங்களை நிகழ்த்துகலைகள் நாட்டார் கலைகள் உட்படப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தும். …. எங்களுடைய அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமை தேசிய பாதுகாப்புக்கே அளிக்கப்பட்டுள்ளது”

எனச் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சிறீலங்கா அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த உரையின் படி ”பெரும்பான்மை மக்களுடைய விருப்பை நிறைவேற்றுவதே இறைமையைப் பாதுகாப்பதற்கான முறைமை” என்கிற தவறான விளக்கத்தைச் சிறீலங்காவின் ஜனாதிபதி உலகுக்கு எடுத்துச் சொல்லி தேச இனம் என்ற உரிமையின் அடிப்படையிலான அனைத்துலக சட்டங்களின் பாதுகாப்பை ஈழத்தமிழர்கள் பெறாதவாறு தடுப்பதே அவரின் அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

கூடவே சிறுபான்மையினராக உள்ள முஸ்லீம்கள், மலையகத்தமிழர்கள் ஆகியோர்களுக்கான அனைத்துலகச் சட்டப் பாதுகாப்புகளும் இதனால் இழக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த முன்னுதாரணமானது உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைக்கக் கூடியதாகவும் அமைகிறது.

இந்நேரத்தில் ‘மில்லேனியத்தில் இறைமை – அறிமுகம்’ (Introduction : Sovereignty at the Millennium) என்னும் இறைமை குறித்த அரசியல் ஆய்வுக்கு வழிகாட்டுக் கட்டுரையினை அமைத்த றெபேர்ட் ஜக்சன் அவர்கள் இறைமை என்பது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

“இறைமை (அது பிறந்த 16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளில்) ஒரு அரசு இன்னொரு அரசின் தலையீட்டில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வெளிவிவகாரம் சார்ந்த ஒரு அரசியல் முறைமையாகத் தோன்றியதே தவிர, அது உள்நாட்டுக்குள் மற்றைய அடையாளங்களைப் புறந்தள்ளி ஒரு அடையாளம் தன்னை மட்டும் ஆட்சியுரிமையாளராக நிலைநிறுத்திக் கொள்ளும் அதிகாரம் அல்ல.

அத்துடன் கிறிஸ்தவ சகாப்த எழுச்சியுடன் மத்தியகாலக் கோட்பாடாகத் தோற்றம் பெற்ற இறைமை காலத்துக்கு ஏற்பத் தன்னை உருமாற்றிக்கொள்ளாது விட்டால், அனைத்துலக அரசியலில் அது இறந்து விடும்.

இறைமைக் கோட்பாட்டுக்கு மாற்றான புதிய கோட்பாடு ஒன்று தேவையாக உள்ளது. இந்தப் பின்னணியில் மாற்றுக்கோட்பாடாக நல்லாட்சி, மனித உரிமைகள், சுதந்திரமான தெரிவு முறை என்பன எந்த அளவுக்கு ஒரு நாட்டில் காணப்படுகிறதோ அந்த அளவுக்கு அந்நாட்டில் பிறநாடுகளின் தலையீடு இல்லாதிருக்கும், என்னும் அனைத்துலக நாடுகளின் ஒன்றிய அளவீட்டு முறை தோன்றியது.

அனைத்துலக முறைமைகளுக்கு அமைய மறுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் வழிகாட்டலில் நின்று விலகிய ராஜபக்ச குடும்ப ஆட்சி, சிறீலங்காவை பௌத்த சிங்கள நாடாகப் பிரகடனப்படுத்தி இறைமையின் பெயரால் இனத்துவ அழிப்பினை பாராளுமன்றக் கொடுங்கோன்மை வழி முன்னெடுக்கிறது. இந்த அபாயத்தில் இருந்து ஈழத்தமிழினத்தை உலகம் காப்பாற்ற வைப்பதற்கு ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பு மையத்துடன் அனைவரும் கூட்டாக முயற்சிக்க முன்வரவேண்டும் என்பதே ‘இலக்கின்’ இன்றைய அழைப்பாக உள்ளது.

இலக்கு-மின்னிதழ் 

Leave a Reply