தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துக் கலந்துரையாடினார். அப்போது, விண்வெளி துறையில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறை. இந்நிலையில், புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரசு இல்லமான ‘இஸ்தானா நுருல் இமான்’ அரண்மனையில் பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது இராணுவம், வர்த்தகம் – முதலீடு, உணவு பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதாரம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், புருனேயில் இந்திய செயற்கைக் கோள்களுக்கான டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக இரு தலைவர்கள் முன்னிலையில் புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி திட்டத்தில் புருனே முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முன்பு இந்த துறையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி புருனேயில் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கடந்த 2000-ம் ஆண்டில் இந்தியா நிறுவியது. இது கிழக்கு நோக்கி ஏவப்படும் அனைத்து செயற்கைக் கோள்களையும் கண்காணிக்க உதவுகிறது.