‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்தை உடன் மீளப்பெறு’ கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு எதிராக கொழும்பு – கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுகாதாரம், மின்சாரம், புகையிரதம் மற்றும் தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

‘இயலாமையை மறைக்க அடக்குமுறையை கையாளாதே’, ‘எரிபொருள், எரிவாயு வரிசைக்கு தீர்வு வழங்கு’, ‘பொலிஸாரைக் கொண்டு பயமுறுத்தாதே’, ‘வரிகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கு’, ‘சாதாரண மக்களை பயங்கரவாதிகளென முத்திரை குத்தாதே’ என கோஷங்களை எழுப்பியவாறு குறித்த தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகிய அரசியல்வாதிகள் பங்கேற்றிருந்தனர். ஏனைய அனைவரும்  சுகாதாரம், மின்சாரம், புகையிரதம் மற்றும் தபால் உள்ளிட்ட பல்வேறு அரச சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளாவர்.

இதன் போது ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ‘அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு நாமோ மக்களோ அஞ்சப் போவதில்லை. இன்று சகல தொழிற்சங்கங்களும் எவ்வித அரசியல் கட்சி பேதமும் இன்றி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதேபோன்று இனிவரும் காலங்களில் எமது கடுமையான எதிர்ப்பினை நாம் தொடந்தும் வெளிப்படுத்துவோம்’ என்றார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிடுகையில், ‘மக்களின் ஆட்சி எனக் கூறிக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த அரசாங்கம் இன்று பாரதூரமான சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த எவரும் இவ்வாறானதொரு சட்ட மூலத்தை அங்கீகரிப்பார் என்று நாம் நம்பவில்லை. ஆரம்பகாலம் முதல் பயங்கரவாதத் தடை சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று அதனை விட மோசமான சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

நாட்டில் அதிகரித்துச் செல்லும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக மக்கள் கிளந்தெழுவதைத் தடுப்பதற்காகவே முன்னாயத்தமாக அரசாங்கம் இவ்வாறாக சட்ட மூலங்களை அறிமுகப்படுத்துகிறது. ஆனால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இந்த ஆர்ப்பாட்டம் இன்றுடன் நிறைவடையப் போவதில்லை. இனிவரும் வாரங்களிலும் இது போன்று தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம்.’ என்றார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் மாலை 4.30 மணியளவில் நிறைவடைந்தது. இவ்வார்ப்பாட்டத்தில் கனிசமானளவானோரே பங்கேற்றிருந்தனர். பெருந்திரளான தொழிற்சங்க பிரதிநிதிகளை ஒன்று திரட்டுவதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டிருந்த போதிலும், பாரியளவு கூட்டம் காணப்படவில்லை.