வெளிப்புற தாக்கம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

அண்மைய வெளிப்புற அதிர்ச்சி மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சந்திப்புகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழு இலங்கை அதிகாரிகளுடன் பொருளாதார செயல்திறன் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான நான்காவது மதிப்பாய்வுக்கான அடிப்படை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.

இதன்படி, உலகளாவிய நிச்சியமற்ற தன்மை, இலங்கையின் நிதிச் சந்தையை ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. இலங்கை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என்றும் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வெளிப்புற அதிர்ச்சியின் காரணமாக இலங்கையில் ஏற்படும் தாக்கங்களை மதிப்பிடுவதற்கு அதிக காலம் தேவையப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலையான வருவாய் திரட்டல் முயற்சிகள் அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விலக்குகளை தவிர்ப்பது நிதி வருவாய் கசிவுகளை தடுப்பதற்கு உதவும்.
மின்சார கட்டண கிரயத்தை ஈடு செய்யும் கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.