Home Blog Page 98

பேச்சுக்களின் விளைவுகள் என்ன? விதுரன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அறிவித்த பரஸ்பர வரிகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரப்போகிறது. இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதி பதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு ‘ஒத்திவைப்பு’ அறிவிப்பைச் செய்யமாட்டார் என்று அமெரிக்காவின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
மூன்று மாதங்களுக்கு முன்னதாக, திடீ ரென்று ஜனாதிபதி ட்ரம்ப் உலக நாடுகளுக்கான பரஸ்பர வரிகளை அறிவித்திருந்தார். அதன்பின்னர் பல நாடுகளும் அவரிடத்தில் பேச்சுக்களை நடத்துவதற்கு விரும்புவதாக அறிவித்தன. இதனால், உலக நாடுகள் தன்னிடத்தில் இரஞ்சுகின்றன என்று கேலியாகக் கூறி 90 நாட்களுக்கு பரஸ்பர வரி அமுலாக்கத்தினை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார்.
குறித்த காலப்பகுதிக்குள் உலக நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக சமநிலையை உறுதிப்
படுத்துவதற்கான பேச்சுக்களை நடத்தி உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார் ஜனாதிபதி ட்ரம்ப்.
இலங்கையைப் பொறுத்தவரையில், ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பு செயற்பாட்டுக்கு வருமாக இருந்தால், 44சதவீதமான வரியை ஏற்றுமதிப் பொருட்களுக்காகச் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீதம்  வரி அறவிடப்படும் என்றும் அறிவித்திருந் தார்.
இதனால், அமெரிக்கச் சந்தைக்குச் செல் லும் அனைத்து இலங்கைப் பொருட்களுக்கும் (10-44) 54சதவீதமான வரியைச் செலுத்த வேண்டிய நிலைமையொன்று தோற்றம்பெற்றிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார அமெரிக்காவின் பரஸ்பர வரி விடயத்தினை கையாள்வதற்காக குழுவொன்றை நியமித்திருந் தார். இந்தக்குழுவின் திறைசேரியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹர்சண சூரியப்பெரும உள்ளிட்டவர்கள் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தக்குழுவினர் அமெரிக்காவுக்கு இரு தடவைகள் சென்று பேச்சுக்களை முன்னெடுத்தனர். அந்தப் பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
ஆனால் அமெரிக்காவுடன் நடத்தப்பட்டப் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக மட்டும் அர சாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகம், வர்த்தக பொருட்கள்,நேரடி முதலீட்டுக் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் கலந்துரை யாடல்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அமெரிக்க முகவர் அலுவலகமே கையாள்கின்றது.
இதன் தலைமைப்பதவியில் இருப்பவர் தூதுவர் ஜேமிசன் கிரீயர். இவருடன் தான் இலங்கையின் தூதுக்குழுவினர் முதலில் பேச்சுக்களை நடத்தினர்.
அதன்பின்னர், ஜேமிசன் கிரீயர் தனது எக்ஸ் தளத்தில் இலங்கைத் தூதுக்குழுவினருடனான சந்திப்பு தொடர்பில் ‘இரு நாடுகளுக்கும் இடை யில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான வர்த்தக தொடர்பை உறுதிப்படுத்த விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியுமெனவும் நம்பிக்கையுள்ளது’ என்று பதிவிட்டிருந்தார்.
அதனையடுத்த பேச்சுவார்த்தைகள் தூதுவர் கிரீயரினால் நியமிக்கப்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கு பொறுப்பான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான தூதுக்குழுவுடனும்,  தெற்காசியா விற்கு பொறுப்பான பணிப்பாளர் எமிலி ஏஷ்பி தலைமையிலான குழுவினருடனும் தான் நடத்தப் பட்டது.
இலங்கையைப் போன்று, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற உள்ளிட்ட பல நாடுகள் இவ்வாறான பேச்சுக்களில் பங்கேற்றிருந்தன. ஆனால் அப்பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இலங்கை தனது பேச்சுவார்த்தைகள் குறித்து உத்தியோக பூர்வமாக எந்தவிதமான அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை. மிகமிக இரகசியமாகவே அனைத்தையும் பேணிவந்தது. இவ்வாறான நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக,  பரஸ்பர வரிகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் வியட்நாமுடன் இணக்கப்பாட்டை எட்டியிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில,  வியட்நாமின் பொருட்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் மேலதிக அறிவிப் பையும் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விடயத்தில் வியட்நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவால் ஏற்படுத்தப்பட்டுள்ள மீளாய்வு இணக் கப்பாடு வெற்றியளித்துள்ளமை அந்நாட்டுக்கு மிக முக்கிய மைல்கல்.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை யில் இந்த விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். நாட்டின் ஒட்டுமொத்த பொரு ளாதாரத்தினையே ஆட்டம் காணச்செய்யும் நிகழ்வாகும். ஏனென்றால், இலங்கைக்கும் அமெரிக் காவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சமநிலை இல்லை. அதாவது,  2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, மொத்த பொருட்களின் வர்த்தகம் 3.4 பில்லியன் டொலர்களாகும்.
2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து, இலங்கை,  368.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய் திருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு, இலங்கையிலிருந்து அமெரிக்கா,  இறக்குமதி செய்த பொருட்களின் பெறுமதி, 3 பில்லியன் டொலர்களாகும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளி, 2024 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது. இவ்வாறு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சமமற்ற நிலை காணப்படுவதே,  இலங்கைக்கு ட்ரம்ப் 44 சதவீத வரியை விதிப்பதற்கு காரணமாகியது.
ஜனாதிபதி ட்ரம்பின் குறித்த பரஸ்பர வரிவிதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், இரு நாடுகளுக்கும் இடையிலான சமநிலையற்ற நிலை முழுமையாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது குறைக்கப்பட வேண்டும்.
இன்னமும் ஓரிரு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அமெரிக்காவுக்கும், இலங்கைத் தூதுக்குழுவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாதுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவுடன் பரஸ்பர வரி தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பில் பாராளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான கலாநிதி.ஹர்ஷ டிசில்வா, கயந்த கருணாதிலக்க உள்ளிட்டவர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த, தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னான்டோ, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரே  ஆசிய நாடு இலங்கை தான் என்று கூறியதோடு ஆசியாவில் இலங்கையுடன் தான் அமெரிக்கா பரஸ்பர வரிகள் குறித்து முதல் முறையாக பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஆசியாவில் இலங்கையுடன் மட்டும் அமெரிக்கா பேச்சு நடத்தவில்லை. இலங்கையுடன் மட்டும் வர்த்தகத்தை நடத்தவில்லை. பலநாடுகளுடன் அமெரிக்கா பேச்சுக் களை நடத்தியுள்ளது. வியட்நாமுடன் இணக்கப் பாட்டையும் அமெரிக்கா ஏற்படுத்தி விட்டது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி அமுலாக்கம் செய்யப்படுவதற்கு சொற்ப நாட்களே இருக் கையில்  பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர் னான்டோ உள்ளிட்ட ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கருத்துக்கள் வேடிக்கையாக அமைந்திருக்கின்றன.
அதனையும் விடவும், வியட்நாமுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இணக்கப்பாடா னது, இலங்கையில் வெகுவான தாக்கத்தையும் ஏற்படுத்த வல்லது. ஏனென்றால், வியட்நாமைப் பொறுத்த
வரையில், இலங்கையில் ஆடை ஏற்றுமதித் துறைக்கு,  ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந் தைகளில் கடும் போட்டியை கொடுக்கின்ற நாடுக ளில் ஒன்றாகவுள்ளது.
அதனடிப்படையில், வியட்நாமுக்கு குறைந்தளவு வரி விதிக்கப்படுகின்ற நிலையில் அந்த நாடு குறைந்த செலவுடன்  அமெரிக்காவில் பொருட்களை சந்தைப்படுத்த முடியும். அவ்விதமான நிலைமை ஏற்பட்டால் இலங்கையின் ஆடை ஏற்றுமதித்துறையின் நிலை மையானது அந்தோ பரிதாபமாகவே போய்விடும். அது உள்நாட்டு பொருளாதாரத்தினை வெகுவாகப் பாதிக்கும்.
குறிப்பாக, ஜனாதிபதி ட்ரம்ப் அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்திலும் பரஸ்பர வரி அமூலாக்கத்தை குறிப்பிட்டிருக்கின்றார். ஆகவே அவர் இவ்விடயத்தினை கைவிடப் போவதில்லை.
ஆகவே இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரியை குறைத்து, 25 30 தீர்வை வரியை செலுத்தி னாலும் அது நாட்டுக்கு பெரும் சிக்கலாக அமையும்.
நாட்டின் வர்த்தகங்களின் இலாபத்தின் அடிப்படையில் நோக்கினால் இவ்வாறான தீர்வை வரியினூடாக இலாபத்தை உழைக்க முடியாது. அது நட்டத்தையே ஏற்படுத்தும். தீர்வை வரி அதிகரிக்க அதிகரிக்க நுகர் வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடையும். இதன் தாக்கத்தால் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போகக்கூடும்.
நாட்டின் மீள்செலுத்துகை பிரிவுக்கு பெரும் சுமை ஏற்படும். நாம் செலுத்த வேண்டி யுள்ள நிதி மற்றும் கிடைக்கவுள்ள நிதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும். வருவாய் குறைவடைந்து கடன் அதிகரிக்கும்.
முதற்கட்டமாக இலங்கை 300 பில்லியன் டொலர்களை மீள செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக எங்கிருந்து நிதி திரட்டினாலும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்.இந்த நெருக்கடியின் காரணமாக ரூபாவின் பெறுமதி தற்போதே வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
2028ஆம் ஆண்டு மீள செலுத்த வேண்டியுள்ள கடன் இலக்கின் அடிப்படையில் நாம் தற்போதிலிருந்தே செயலாற்ற வேண்டும். கடந்த வருடத்தில் 05 சதவீத வருமான வளர்ச்சியை ஏற்படுத்தப்பட்டுள்ளபோதும் தற்போதுள்ள இந்த நெருக்கடியால் வருமான வளர்ச்சியும் வீழ்ச்சியை சந்திக்கலாம். இதனூடாக இலங்கைக்கு பல்வேறு பிரச்சினைகள் தோன்றும். இந்தப் புரிதல் அரசாங்கத்துக்கு இன்னமும் ஏற்படவில்லையா?

காணி அபகரிப்புகளூடாக நடைபெறும் தமிழர் விரோத செயல்!

Unknown 1 1 காணி அபகரிப்புகளூடாக நடைபெறும் தமிழர் விரோத செயல்!

வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு எனும் பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் சுமார் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடமிருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மகாவலித் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரம்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.

அந்த வகையில் வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பித்தக்கது.

Unknown 5 காணி அபகரிப்புகளூடாக நடைபெறும் தமிழர் விரோத செயல்!

அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் சுமார் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிலத்தை தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை அவுஸ்திரேலியா அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்தை (Matthew Duckworth) நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில்  சிரேஷ்ட தொழில் அதிகாரி என்றும், முன்னர் அமெரிக்க வர்த்தக பணிக்குழுவின் உதவிச் செயலாளராகவும், அவுஸ்திரேலியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான துணைத் தலைமை பேச்சுவார்த்தையாளராக பணியாற்றியவர் என்றும் அறிக்கை ஒன்றில் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2022 முதல் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய போல் ஸ்டீபன்ஸ் (Paul stephens) என்பவருக்குப் பதிலாக டக்வொர்த் நியமிக்கப்படுகின்றார். “இலங்கை, வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில்  அவுஸ்திரேலியாவின் முக்கிய பங்காளி என்று அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

‘எங்கள் உறவு வலுவான சமூக இணைப்புகள், நீண்டகால வளர்ச்சி கூட்டாண்மை, வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள், அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது’.

‘நாடு கடந்த குற்றம், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் மக்கள் கடத்தல் உள்ளிட்ட பகிரப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளைக் கண்டறிய அவுஸ்திரேலியாவும் இலங்கையும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன’ என்றும் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிதி நிறுத்தப்பட்டால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் : சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி அளித்துவரும் நாடுகளில் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்கா அதன் நிதியளிப்பை நிறுத்தும் பட்சத்தில் அது இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்துமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரின்போது பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இலங்கை தொடர்பில் இதுவரை காலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையுடன் முடிவுக்கு கொண்டு வரப்படக்கூடும் கரிசனை நிலவுவதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச செயற்திட்டங்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வரும் நிதியளிப்பை நிறுத்துவதற்கு அந்நாடு உத்தேசித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளே இக்கரிசனைக்கான பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி அளித்துவரும் நாடுகளில் அமெரிக்கா முதன்மை நாடாகத் திகழ்வதாகவும், அமெரிக்கா அதன் நிதியளிப்பை நிறுத்தும் பட்சத்தில் அது இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் நிறைவேற்றப்படினும், அதனைத்தொடர்ந்து அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான போதியளவு நிதி ஐ.நாவின் வரவு, செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படாவிடின், அதுவும் எமக்குப் பாதகமானதாகவே அமையும் என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவான வகையில் புதிய தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கே முன்னுரிமை அளித்து செயற்படவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

வரி விவகாரத்தில் அமெரிக்காவுடன் சாதக இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கை அறிவிப்பு

இலங்கை மீது அமெரிக்கா விதித்த, அதிக வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், சாதகமான நிலையை எட்டியுள்ளதாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், பரஸ்பர வரியை விதிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானித்தது.

அதன்படி, இலங்கைக்கு 44 சதவீதம் வரை வரியை விதிக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
எனினும் இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு, 90 நாட்களுக்கு அந்த வரி விதிப்பு இடைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், இலங்கை உட்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் வரி குறைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.

எவ்வாறாயினும், குறித்த 90 நாட்கள் காலஅவகாசம் எதிர்வரும் 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவுக்கு ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து மேற்கொள்ளப்படும், இறக்குமதிகளுக்கான தீர்வை வரி அளவுகளை குறிப்பிட்டு அந்தந்த நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12 நாடுகளுக்கு இவ்வாறான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவை  இன்றைய தினம் (07) வெளிவரும் எனவும் தெரிவித்த அவர், எந்தெந்த நாடுகளுக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில், அமெரிக்காவுடன் இடம்பெற்ற வரி இணக்க பேச்சுவார்த்தை சாதமான மட்டத்தை எட்டியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

செம்மணியில் மேலும் இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழியின்  நேற்றைய தினம் (06) அகழ்வு நடவடிக்கையின் போது இரண்டு மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 11வது நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இன்று வரை 44 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் மொத்தமாக 47 என்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில்  கடந்த 4ம் திகத தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.
மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில்  இன்றையதினம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதிலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன

யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவ குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

கருணாவுடன் தொடர்புடைய இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்  யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை  வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இன்று (06) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர். குறித்த கைது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தனும் தனது முகப்புத்தகத்தின் ஊடாக உறுதிப்படுத்தி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த தகவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் உள்ள வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி   புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதானது  இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  இளைஞர் யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவர் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தி பொலிசார் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் மனித கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர். அத்துடன் இனிய பாரதிக்கு மேலதிகமாக மற்றும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்

உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், உள்நாட்டு செலவினம், வரி குறைப்பு தொடர்பான மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்ததால்,இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, புதிய கட்சி தொடங்குவது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில், ‘அமெரிக்கா பார்ட்டி’ எனும் புதிய கட்சியை எலான் மஸ்க் 5-ம் தேதி தொடங்கியுள்ளார். ‘2 கட்சி மட்டுமே அமெரிக்காவை ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப் போக்கை முறியடிப்போம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜே.வி.பி அதிகார பகிர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்குமாயின் அதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்: மனோ வலியுறுத்தல்

செம்மணி என்பது அவலக் குரலின் அடையாளம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரச பயங்கரவாதத்தினாலேயே செம்மணி போன்ற ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்னும் தமிழர்களின் போராட்டம் நீடித்துக்கொண்டே இருப்பதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
‘உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் அடிப்படை காரணமே அதிகாரபகிர்வு என குறிப்பிட்ட மனோ கணேசன், இந்த விடயத்தை அமைச்சர் சந்திரசேகர் ஜனாதிபதி அனுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

யுத்தத்தை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்களுக்கு சென்று யுத்தத்திற்காக இளைஞர்களை சேர்த்துக்கொண்டதும் அவர்களே எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன் அதிகார பகிர்வுக்கு எதிராக போராடிய ஜேவிபி தற்போது அதிகார பகிர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்குமாயின் அதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.அதிகார பகிர்வு குறித்து, அனுரகுமார திசாநாயக்க மற்றும் ரில்வின் சில்வாவே பகிரங்கமாக கூற வேண்டும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் மனோ கணேசன் கூறியுள்ளார். போர் இடம்பெற்ற போது தமிழ் மக்களை கைவிட்டுச் சென்ற சர்வதேசத்துக்கு தற்போது நீதியை பற்றிப் பேசுவதற்கு என்ன தார்மீக பொறுப்பு உள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த விடயத்தை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடமும் தாம் சுட்டிக் காட்டியதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

போர் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு செல்ல வேண்டாம் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் மனித உரிமைகள் பேரவை அதனை புறக்கணித்து செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் கரிசனை வெளியீடு!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

முன்னதாக செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய ஆலோசனைகள் என்பவற்றுக்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சுயாதீன விசாரணையை ஆதரிப்பது தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, அந்த நாட்டு பாராளுமன்றில் எழுத்து மூல கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் (Catherine West), இந்த பிரச்சினையில் பிரித்தானியாவின் தீவிர ஈடுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.  ‘மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் உறுதியாக உள்ளது’.  ‘வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்தி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விவாதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும்’ கெத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

தாம் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த போது பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வடக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நாடளாவிய ரீதியாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நெருங்கிய உறவை பேணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த கரிசனைகளை இலங்கை அதிகாரிகளிடம் தொடர்ந்தும் தங்களது தரப்பு எழுப்பி வருவதாகவும் பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.