Home Blog Page 96

எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்கள் போராட்டம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கு எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு  கோரி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (8) மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இரு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பாரபட்சமின்றி தமது நிர்வாக கடமைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கடந்த காலங்களில் குறித்த பிரதேச செயலகம் தொடர்பில் ஆணை குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும், இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும் என கோரி இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்ட பக்கச்சார்பான நடவடிக்கைக்கு எதிராக தொடர் நாள் போராட்டமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதே முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதற்கான தீர்வு கிடைக்கும் வரை இந்த எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

யுத்தத்திற்கு பின் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ்,  குகன்  முருகானந்தன், உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08)  நடைபெற்ற  அமர்வின் போது  வாய்மூல விடைக்கான கேள்வி நேர வேளையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்த ஆளும் தரப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்  நஜித் இந்திக, தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தை அடுத்து ஏழு குற்றச் செயல்கள் தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை ஜனாதிபதி அறிவித்தார் என்பதை அறிவீர்களா?.

2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்களின் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் இன்றளவிலான முன்னேற்றம் யாது? என்றும், இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல் நிலை முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற ஆயினும் இற்றைவரையில் தீர்க்கப்படாத ஏதேனுமொரு காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணைகள் இன்றளவில் நிறைவடைந்துள்ளதா? என்றும் மற்றும் மேற்படி காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் தாமதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக அமைந்துள்ளனவா? என்றும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 2011 டிசம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற லலித் குமார்,குகன் முருகானந்தம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் 2011 டிசம்பர் 11ஆம் திகதி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் 17 சந்தர்ப்பங்களில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். எனினும் இறுதியாக 2014 ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிறுத்துவதற்கு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் இல்லாமையினால் பதில் பொலிஸ்மா அதிபரால் 2025 ஜூன் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இது தொடர்பான தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி குற்றவியல் விசாரணை மற்றும் நிதி விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து இந்த விசாரணைகள் தொடர்பில் சகல ஆவணங்களையும் முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த திணைக்களத்தால் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவினால் தற்போது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன்  வடக்கு  மற்றும் கிழக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற நான்கு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாலும், 6 சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது டன் இந்த காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.

விடியலைத்தேடி மயிலிட்டித்துறை – கலாநிதி சூசை ஆனந்தன்

வடபுலத்தில் மட்டுமல்ல இந்த நாட்டிலேயே  முதன் முதலாக அமைக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் குடாவில் வலி வடக்கு கரையோரமாக   தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் மயி லிட்டியானது  வடக்கில் பாக்கு நீரிணையும் மேற்கே தையிட்டி,  கிழக்கே பலாலி , தெற்கே கட்டு வனையும் எல்லைகளைக் கொண்டு  இட அமைவு பெற்றுள்ளது.
போரின் முன்னரான காலப்பகுதிஈழப் போரின் முன்னரான காலப் பகுதியில் (1980)வடபுலத்தில் இதன் அமைவிடம் காரணமாக கரையோர மற்றும் ஆழ்கடல் மீன் பிடியில் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்ற ஒரு இடமாக விளங்கியயிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1970களில் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமாக இயங்கிய பாரிய இழுவைக் கப்பல்களில் ஒன்றின் பெயர் “மயி லிட்டி”ஆகும். அந்தளவுக்கு பிரசித்தி பெற்றிருந்த இடமாக மயிலிட்டி விளங்கியது. வடக்கே பாக்கு நீரிணை, வடகிழக்கே புகழ் பெற்ற பேதுரு மீன்பிடித் தளம் (Pedro bank) கிழக்கே வங்காள விரிகுடா ஆழ்கடற் பகுதி கரையோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடிக்கான சமுத்திரச் சூழலைக் கொண்டு விளங்கியது.வடகீழ் ( வாடை) மற்றும் தென் மேல்  ( சோளகம்) பருவங்களில் ஏற்படும் பருவக்காற்று நீரோட்டங்களும் இப்பிரதேச மீன்பிடித் தொழிலுக்குச் சாதகமான நிலைமைகளக் கொண்டதாக அமைந்திருந்தது.
சிறந்த ஆழ் கடல் ஓடிகளைக் கொண்டி ருந்த மயிலிட்டி விரிகடலுக்குரிய பெரிய வகை மீன்களையும் (பாரை கட்டா ரியூனா வகை அறக்குளா,தளப்பத், கொப்பரை, சுறா திருக்கை) கரையோர சிறிய ரக (சாலை சூடை, கும்பளா) மீன்களையும் இறால் நண்டு, கணவாய், கடலட்டை, சங்கு போன்ற ஏற்றுமதிசார் கடல் உணவுகளை உற்பத்தி செய்கின்ற ஓர் பகுதியாகவும்  மயிலிட்டி விளங்கியது.அக்காலப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவக் குடும்பங்களைக் கொண்ட பகுதியாக மயிலிட்டி  விளங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒரு சில கட்டு மரங்களுடன் ‘ஒரு நாட் டுப் படகுகளான  (one day boat) வெளியிணை இயந்திரப் படகுகள் (OBM) உள்ளிணை இயந்தி ரப் படகுகள் (IBM) ஆகியன  மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
வழிச்சல்வலை படுப்புவலை (gill net) தூண்டில் வரிசைகள் ( long line) மற்றும் கூடுகள் (trap) பிரசித்தி பெற்ற மீன்பிடி முறைகளாக விளங்கின.  உள் இணை இயந்திரப்படகுகள் மற்றும் வெளியிணை இயந்திரப்படகுகளின்  உதவியுடன் வடகிழக்கே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பேதுரு மீன்பிடித் தளத்திலும்  ( Pedro bank) அதற்கு அப்பாலிலுள்ள ஆழ்கடலிலும் வழிச்சல் வலை மற்றும் தூண்டில் வரிசை மீன் கூடுகள் மூலமாகவும் மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆழ்கடல் மீன்பிடியிலே துணிச்சல் பெற்ற மீனவர்களாக மயிலிட்டி மீனவர்கள் அன்றும் இன்றும் விளங்கி வருகின்றனர். 1964 இல் ஏற்பட்ட வங்காள விரி
குடா சூறாவளியின்போது ஆழ்கடலுக்குச் சென்றி ருந்த பல மீனவர்கள் காணாமல் போயிருந்த துயரத்
தையும், வலியையும்  இக்கிராமம் சந்தித்திருந்தது. வலி வடக்கு கரையோரத்திலே மாதகல், சேந்தான் குளம்,  மாரீசன் கூடல், கே.கே.எஸ், பலாலி, வலித்தூண்டல், ஊறணி, வளலாய், தையிட்டி, அக்கரை ஆகிய பிரதான மீன்பிடிக் கிராமங்களும் அமைந் துள்ளன.
2025 இல் 2161     மீனவ குடும்பங்களைச் சேர்ந்த  8672 மீனவர்கள் வலிவடக்கு கரையோரத்தில் வாழ்
வதாக மதிப்பிடப் பட்டுள்ளது.இதில் மயிலிட்டி யில் 2840 மீனவர்களும் பலாலியில் 2080 மீனவர் களும் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மீன்பிடி படகுகளில் 634 வெளியிணைப்படகுகளும் இயந்தி ரம் பூட்டிய மற்றும் இயந்திரம் பூட்டாத வள்ளங்கள் 50 வரையில் மீன்பிடியில் ஈடு படுத்தப்பட்டுள்ளன.மயிலிட்டியில் 190 படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. ஆழ்கடலுக்குரிய பல நாட் கலங் கள் ஆக இரண்டு மட்டுமே மயிலிட்டியில் காணப்படுகின்றன.பெரும்பாலும் மயிலிட்டி துறைமுகத்தில நூற்றுக்கும் மேற்பட்ட பல நாட் கலங்கள் (multi day boat )தென்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமானவையாகவே உள்ளன. வங்காள விரி
குடாவில் டிசம்பர் காலப்பகுதில் நிலவும் சூறா வளி காரணமாக படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கிலே மயிலிட்டி துறைமுகம் சகல வசதிகளுடனும்  நிர்மாணிக்கப்பட்டிருந்தது. கீரிமலை, பலாலி விமானத்தளம், பலாலி பெரும் படைத்தளம் ,கே.கே.எஸ் சீமெந்து தொழிற் சாலை KKS துறைமுகம் போன்ற சுற்றாடல் மையங்கள் மயிலிட்டித்துறைக்கு மேலும் மெருகூட்டியிருந் தன.
கடல்வளத்துறையில் தனித்துவமான இடத்தினை வகித்துவந்த போதிலும்  1983 இனக் கலவரத்தை  தொடர்ந்து இராணுவ நெருக்குவாரம், கெடுபிடிகள்  காரணமாக மீன்பிடியில் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இக்கிராமம்  முற்றாக இழந் தது.1990 இல் அரசினால் பிறப்பிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய பிரகடனம் (HSZ) காரணமாக உயிர், உடைமைகள் ,வளமான நிலங்களை இழந்து மீன்பிடி துறையையும் இழந்து கிராமத்தை விட்டே இடம் பெயர்ந்து அகதிமுகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் வன்னியிலும் தமிழ்நாட்டிலும் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
யாழ் குடாவில் பதினைந்து (15) இடங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தன. அதில் வலிவடக்குப்பகுதியே பரந்த நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்தது .மாவட்டத்தில்  மொத்தமாக 160   ச.கி.மீ பரப்புடைய பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.மொத்த நிலப்பரப்பில் இத 18  சத வீதமாகும்.வலி வடக்கில்  உள்ள 25,000 வீடுகளில் 18,000 வீடுகள் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தன.10,332 குடும்பங்கள் இடம்பெயர்ந்தவர்களாயினர். வலி வடக்கிலுள்ள 46 பாடசாலைகளில் 29 பாடசாலை கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தன. இவற்றுள் பலாலி வடக்கு வயாவிளான் GTMS பாடசாலையும் ஒன்று. இப்போது மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பின்பு இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1-5  ஆம் ஆண்டு வரையில் வகுப்புகள் உள்ளன. மாணவர் தொகை மிக குறைவாகவே உள்ளதாக குறிப்பு ஒன்று கூறுகிறது.வலி வடக்கிலே . 16 பாடசாலைகள் மூடப்பட்டன. 13 பாடசாலைகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே இயங்கியது. கல்விநிலையானது அதன் தனித்துவத்தை இழந்து போனது. பல ஆலயங்கள், கோவில்கள், வைத்திய சாலைகள்  இயங்காது அழிந்தன. இப்போது மீளக் குடியமர ஏற்பாடுகள் மிக மந்த கதியிலேயே உள்ளன.இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன எனக் கூறப்படுகின்றது.
போரின் பின்னர் (2009)போர் நிறைவடைந்து பலவருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் (2009) மயிலிட்டி பகுதியிலிருந்து வெளியேறியோர் இன்னும் சொந்த இருப்பிடத்திற்கு முழுமையாகத் திரும்ப முடியவில்லை. சில பகுதி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. போரின் பின்னர் தடல் புடலாக இத்துறைமுகம் விருத்தி செய்யப்பட்டதாயினும்  (2017) இதன் முழுமையான பயன்பாட்டினை  தென்பகுதி ஆழ்கடல் பல  நாட்கள் (multy day boat) மீனவர் களைவிட மயிலிட்டி மீனவர்களால் பெற்றுக் கொள்ள முடியாத சூழலே நிலவுகின்றன.
பதனிடல் வசதிகள் களஞ்சிய வசதிகள், எரிபொருள் மற்றும் நீர் வழங்கல் வசதிகள்,  போன்ற வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் ஒருபுறம் தென்பகுதி மீனவர்களின் அதிகரித்த  பிரசன்னம் இன்னொரு புறமாக பிடிபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளின் எண்ணிக்கை. காரணமாக இடப்
பற்றாக்குறை ஏற்பட்டு முழுமையாக பயன்படுத்த முடியாதநிலை தோன்றியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் இப்பகுதி தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மக்கள்வாழிடங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பது மகா தப்பு.மயிலிட்டி மக்கள் விடியலுக்காக காத்திருக் கின்றனர்.விடிவு விரைவில் கிடைக்கட்டும்

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம்: போராட்டத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை 9 (புதன்கிழமை) மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை மற்றும் ஜூலை 10 (வியாழக்கிழமை) பௌர்ணமி தினத்தன்று காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமாக நடைபெறவுள்ளது.

விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இப்போராட்டத்தில் காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் இணைந்து பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போராட்டத்தில் அனைத்து சமூகப் பிரதிநிதிகளும், குடிமக்களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா : வெடிவைத்தகல் பகுதியில் 1,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு: ரவிகரன் எம்.பி. தெரிவிப்பு!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில், மகாவலி (எல்) திட்டத்தினூடாக சுமார் 1,000 ஏக்கர் வரையான தமிழ் மக்களின் காணிகள் பெரும்பான்மை மக்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில், திரிவைச்சகுளம் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களால் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மகாவலி (எல்) வலயத்தின் கீழ் மிகப்பெரியளவு வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புச்செயற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்தச் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இந்த விடயம் தொடர்பில் உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடுவதுடன், நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் என்றார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களுக்குள் தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்தக் கொள்கை ஊடக பங்குதாரர்களால் உருவாக்கப்படும். அரசாங்கம் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் ஒரு பங்கை மாத்திரமே வகிக்கும்” என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் அதானி (Adani) நிறுவனம் செலவிட்ட நிதியை மீள செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் கைவிடப்பட்ட காற்றாலை திட்டங்களுக்காக அதானி கிரீன் எனர்ஜி (adani green energy) நிறுவனம் மேற்கொண்ட ஆரம்ப செலவுகளை மீள செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, 350 மெகாவோட் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டங்களில் இருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அண்மையில் விலகியிருந்தது.
புதிய அரசாங்கம் மின்சார கட்டணத்தை மாற்ற முனைந்ததைத் தொடர்ந்து, குறித்த நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

இந்தநிலையில், கடந்த மே மாதத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பிய அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், நிலையான எரிசக்தி அதிகார சபையுடன் இணைந்து மேற்கொண்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர் உள்ளிட்ட ஆரம்ப செலவுகள மீள செலுத்துமாறு கோரியுள்ளனர். எவ்வாறாயினும், அந்த நிறுவனம் தங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த தொகையை இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, இது குறித்து சட்ட ஆலோசனை பெற உள்ளதாக அரச உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏதேனும் தொகை செலுத்த வேண்டுமாயின், அது அமைச்சரவை ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படும் என. அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணிக்குள் நுழைய  காவல்துறையினருக்கு வவுனியா பிரதேச செயலாளர் தடை!

வவுனியா, ஓமந்தைப் காவல்துறையினர் அவர்களின் காவல்  நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த காணிக்குள் நுழைய  காவல்துறையினருக்கு வவுனியா பிரதேச செயலாளரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஓமந்தை காவல் நிலையத்திற்கு என பிறிதொரு இடத்தில் காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டுள்ளனர்.

குறித்த காணிக்கு அருகில் இருந்த தனிநபர் ஒருவரின் காணியையும் அபகரித்துள்ள  காவல்துறையினர்  அதனை துப்பரவு செய்து கையகப்படுத்துவதற்கான முயற்சகளில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை  காவல்த்ய்றையினர் கையகப்படுத்த முடியாது எனவும், அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனையும் மீறி இன்றைய தினமும் (07.07)  காவல்துறையினர் குறித்த காணிக்குள் சென்று துப்பரவு பணிகளில் ஈடுபட்ட போது காணி உரிமையாளரும் வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் சென்று  காவல்துறையினர் முரண்பட்டிருந்ததுடன், அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த காணிக்குள் ஓமந்தைப் பொலிசார் நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் அவர்களால் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை: கனடா பிரதமர் கருத்து!

இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும்  தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழினத்துக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் : நடிகர் ரி.ராஜேந்தர் வலியுறுத்தல்

தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்று தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துபாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள் என்று அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தியில் அகழ்வாராய்ச்சி பணிகளின் போது இதுவரை 47க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

‘இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில், இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்’.  ‘இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த இடத்தில் அவர்கள் தமிழர்களை மாய்த்தார்களாக? அல்லது தமிழர்களை உயிரோடு புதைத்தார்களா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘இந்தப் புதைகுழிக்குள்ளே இத்தனை உடல்கள் மீட்கப்படுகின்றன. தோண்டத் தோண்ட என்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது’.
எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து புதைகுழி வளர்த்திருக்கிறார்கள்.
‘ஆக பயங்கரவாதிகள் தமிழர்களா? அல்லது இந்த சிங்கள இராணுவமா?’ என்றும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் ரி.ராஜேந்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழினம் கொதித்து எழ வேண்டும். அங்கு தமது சொந்தங்களை, பந்தங்களை, உற்றாரை, உறவினரை இழந்து விட்டு இன்றுவரை அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? எறிந்தார்களா? புதைந்தார்களா? சிதைத்தார்களா? என்று தெரியாமல் நாதியற்று அலைந்து கொண்டிருக்கின்ற தமிழின உறவுகளின் உள்ளங்கள் எப்படி பாடுபட்டிருக்கும். இதை எல்லாம் பார்க்கின்ற போது சர்வதேச அளவிலே எமது மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.

அந்த நீதிக்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம் என்று தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.