Home Blog Page 94

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்ப்பு

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம்் சமூகத்துக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனால் முஸ்லிம் சமூகத்தில் ஒரு தரப்பினர் தவறான வழிக்கு தள்ளப்பட்டார்கள். இவ்வாறான பின்னணியில் தான்  குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. மைத்திரி – ரணில் இருவருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நெருக்கடியை ராஜபக்சக்கள் ஏற்படுத்தினார்கள். இதனால் நல்லாட்சி அரசாங்கம் பலவீனடமடைந்தது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன காயங்களை முழுமையாக ஆற்ற முடியாது.இருப்பினும்  குண்டுத்தாக்குதலின் உண்மையையும், பிரதான சூத்திரதாரியையும் வெளிப்படுத்தி, அவர்களுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன காயங்கள் சிறிதேனும் ஆறும்.

இந்த குற்றத்தின் பொறுப்புதாரிகள் பேசுவதும், அதற்கு சபையில் ஒருதரப்பினர் கரகோசம் எழுப்புவதும் கவலைக்குரியது. தமது ஆட்சியில் நடந்த தாக்குதலை மறந்து விட்டு இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பார்த்து விமர்சிப்பதும் கவலைக்குரியது. அரசியலுக்காக இவர்கள் இந்தளவுக்கு கீழ் நிலையில் சென்றிருப்பதையிட்டு  வெட்கடைய வேண்டும்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டு வர முடியாது.2015 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள்  தோல்வியடைந்ததன் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. மைத்திரி – ரணில் இருவருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நெருக்கடியை ராஜபக்சக்கள்  ஏற்படுத்தினார்கள்.இதனால் நல்லாட்சி அரசாங்கம் பலவீனடமடைந்தது.

2015ஆம் ஆண்டு மக்களாணை பலமாக இருந்த காரணத்தால்   ராஜபக்சக்கள்  நோக்கம் உடனடியாக நிறைவேறவில்லை.   ராஜபக்சக்கள்  2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வு பிரிவு ஊடாக சிங்களம் – முஸ்லிம் இனவாதம் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பிரிவினரை உருவாக்கி அவர்களை தமது தேவைக்காக  பயன்படுத்தினார்கள்.

இந்த குழுக்கள் ஊடாகவே ராஜபக்சக்கள் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கான சூழலை ஏற்படுத்தினார்கள்.முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள்.இதனால் இலங்கையில் வாழ முடியாது என்ற நிலைக்கு முஸ்லிம் சமூகத்தினர் தள்ளப்பட்டார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு பிரிவுக்கு தள்ளப்பட்டார்கள். தவறான வழிகளுக்கும் செல்ல நேரிட்டது. இதன் பின்னரே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்மங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ராஜபக்சக்களை  மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையினால் தான் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.இந்த தாக்குதல்களை தடுத்திருக்கும். புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த அடிப்படைவாதம் தொடர்பில் உலமா சபை உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் பலமுறை எடுத்துரைத்தும் ரணில்,சஜித் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய  உண்மையை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என்றார்.

எந்தவகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், சித்துபாத்தி மனித புதைகுழி வழக்கிலிருந்து விலகப் போவதில்லை :மயான நிர்வாகசபை அறிவிப்பு

எந்தவகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், சித்துபாத்தி மனித புதைகுழி வழக்கிலிருந்து விலகப் போவதில்லை என்று குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ள சித்துபாத்தி மயான நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்த அவர் தமக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். தற்சமயம் அகழ்வுகள் பணிகள் இடம்பெற்றுவரும் செம்மணி மனித புதைக்குழியை அண்மித்த பகுதிகளில் மர்ம வாகனங்கள் நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை என்றும், அந்த மர்ம வாகனமானது தமது வீட்டு அருகாமையிலும் வந்திருந்ததாகவும், மனுதாரரான தம்மை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அச்சுறுத்தல்கள் மற்றும் எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், வழக்கில் தாம் உறுதியாக இருப்பதாகவும், மக்களும் உறுதியாக தமது சாட்சியங்களை தருகின்றார்கள் என்றும் சித்துபாத்தி மயான நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் இன்றும் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நடத்தும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் குறித்த விகாரைக்கு அருகில் மீண்டும் ஆரம்பமாகி மாலை 6.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

பூரணை தினமான நாளை வியாழக்கிழமை காலை 06.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறும்.

இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார்.

அறுகம்பை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய அரசு!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி   பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுவதாகக்கூறப்படுகின்றது.

ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், காவல்துறை  மற்றும்  கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில்  காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி: பிரதமர் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர்  ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற விவாதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1000 பாடசாலைகளுக்கு பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இதுவரை, 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய கல்வி மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பப் பணிகளும், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு 5,000 ரூபா வரம்பற்ற தரவு தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், நேற்றைய நாள் வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

பலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பு அதிகரிப்பினால் குறித்த அனர்த்தத்தை  அந்நாட்டு ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் பேரிடராக அறிவித்துள்ளார்.

மனித புதைகுழிகளை அகழ்வதற்கு பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றதா? : உமா குமரன் எம்.பி. கேள்வி

பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி  விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நீங்கள் இறுதியாக இந்த குழுவின் முன்னிலையில் 2024 நவம்பரில் தோன்றியபோது நான் தமிழ் மக்களிற்கான நீதி குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இந்த விடயம் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்காகவும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழ் சமூகத்திற்கு நீங்க்ள வெளிப்படுத்திய ஆதரவிற்கும்  நான் உங்களிற்கு எனது நன்றியை தெரிவிப்பதன் மூலம் எனது உரையை  ஆரம்பிக்க விரும்புகின்றேன்.

உங்களிற்கு இது தொடர்பிலான எனது குடும்பத்தின் கதை தெரியும்,

இலங்கையில் மோதலின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டன் தடைகளை அறிவித்தமை குறித்து நான் திருப்தியடைகின்றேன்.சித்திரவதைகள் , பாலியல் வன்முறைகள் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக.

இது அந்த சமூகத்திற்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கியமான விடயம் ஆனால் கவலையளிக்கும் விதத்தில் கடந்த மாதம் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மற்றுமொரு மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த புதைகுழியில் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளை சர்வதேச தராதரத்தின் கீழ் அகழ்வு செய்வதற்கான போதிய வளங்கள் இலங்கையில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஸ் அரசாங்கம் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?

மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா?

செம்மணி மனித புதைகுழி விவகாரம்: பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு – அமைச்சர் டேவிட் லமி தெரிவிப்பு

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம்.

இலங்கையின் பல பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை பேணி வருகின்றோம்.அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

எங்களால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நான் தயார்.

மனித புதைகுழி விடயத்தில் திறன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமை குறித்த புரிந்துணர்வு காணப்படுகின்றது.

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை இதன் காரணமாக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு  பதவி முற்றாக புறக்கணிப்பு – பா. அரியநேத்திரன்

கடந்த மாதம் 2025, யூன் 30ம் திகதியுடன் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரங்கள் இலங்கை முழுவதும் கையளிக் கப்பட்டாயிற்று இனி அந்தந்த சபைகள் தத்தமது சபைகள் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி, வாழ்வாதார, பொருளாதார, திட்டங்களை முன் எடுக்கப்பட வேண்டியதுதான்.
இலங்கையில் தற்போது மூன்று தேர்தல்கள் இடம்பெற்று முடிந்துள்ளன. இந்த மூன்று தேர்தல்களும் இடம்பெற்ற மாதங்களை தமிழ் மக்கள் உற்றுநோக்கினால் ஈழவிடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாதங்களாகும் அவ்வாறான மாதங்களை இலக்குவைத்தே தேர்தல்கள் இடம்பெற்றன.
இது ஒருவகையில் தமிழர்களின் சிந் தனையை திசைதிருப்புவதற்கான திட்டமிட்ட செயலாக கூட இருக்கலாம்.
1. ஜனாதிபதி தேர்தல் 2024, செப்டம்பர் 21ல் நடைபெற்றது செப்டம்பர் 26, தியாகி திலீபன் நினைவு நாள்மாதம்.
2. பாராளுமன்ற தேர்தல் 2024, நவம்பர் 14ல் இடம் பெற்றது.நவம்பர் 27, மாவீரர் நாள் மாதம்.
3. உள்ளூராட்சி சபை தேர்தல் 2025, மே,06, ல் இடம் பெற்றுள்ளது.மே 18, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மேமாதம்.
இந்த மூன்று தேர்தல்கள் இடம்பெற்றமாதம் செப்டம்பர்,  நவம்பர், மே ஆகிய மூன்றுமாதங்களும் ஈழத்தமிழர்களுக்கு மறக்கமுடியாத மாதங்களாகும் அந்த மூன்றுமாதங்களிலும் தேர்தல் நடைபெற்றது தற்செயலான ஒன்றா திட்டமிட்ட ஒன்றா என்பது தெரியவில்லை ஆனால் தமிழர்களாகிய நாம் இதனை சிந்திக்கவேண்டும்.
இனி எஞ்சியிருப்பது மாகாணசபை தேர்தல் மட்டுமே அது எந்தவருடம் எப்போது நடக்கும் என்று எவருக்கும் தெரியாது தற்செயலாக அடுத்த ஆண்டு நடந்தால் இப்படியான ஒரு தமிழ்தேசிய நினைவுகளுடனான மாதத்தை  தேர்தல் தினமாக தீர்மானித்தாலும் ஆச்சரியம் இல்லை.
இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வடக்கு கிழக்கை பொறுத்த வரை அனேகமான தமிழ் மக்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிசபைகளில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் பல சபைகள் உள்ளன.
குறிப்பாக வடகிழக்கில்  தமிழர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் 58 சபைகளில்,12 சபைக ளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு பிரதி நிதிகளைப் பெறமுடிந்தது.
ஏனைய 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஏனைய தமிழ்த்தேசிய கட்சிக ளும் சில சபைகளில் ஆட்சியமைத்துள்ளது. இவ்வாறு ஆட்சியமைத்த சபைகளில் பெண் பிரதி நிதித்துவமானது உள்ளூராட்சி தேர்தல் சட்டத்திற்கு அமைவாக அனேகமான சபைகளில் பட்டியல் மூலமாகவே பெண்களின் எண்ணிக்கை ஈடுசெய்யப்பட்டுள்ளது. வடகிழக்கை பொறுத்
தவரை சகல தமிழ்தேசிய கட்சிகளும் பெண்வேட்பாளர்களை அந்த உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் சட்டத்தில் கட்டாயம் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும் என குறிப்பிட்டபடி தான் பெண்வேட்பாளர்களை நிறுத்தினார்களே தவிர கட்சிகள் விரும்பி ஆண்வேட்பாளர்களை போல் பரவலாக நிறுத்தவில்லை.
அப்படி இருந்தும் வடமாகாணத்தில் மட்டுமே பதவி நிலைகளில் ஆறு பெண்கள் நியமித்த போதும் கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு பெண்களையும் எந்த கட்சியும் பதவி நிலைகளில் நியமிக்கவில்லை. யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராக  மதிவதனி, வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளராக கிருஷ்ணவேணி, முல் லைத்தீவு மாந்தை பிரதேச சபை தவிசாளராக நளினி,வவுனியா தெற்கு பிரதி தவிசாளராக கோணேஷ்வரி, கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் பிரதி தவிசாளராக குணலெட்சுமி என ஆறு பெண்களுக்கு அதிகாரங்களை வடக்கில் உள்ள தமிழ்தேசிய கட்சிகள் வழங்கியுள்ளன. இது பாராட்டப்படவேண்டியது.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் பெண்கள் முற்றாக புறக்கணிப்பு எந்த ஒரு தமிழ்தேசிய கட்சிகளும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் எந்த ஒரு மாநகர சபை, பிரதேச சபைகளில் முதல்வராகவோ, பிரதி முதல்வராகவோ, தவிசாளராகவோ, பிரதி தவிசா ளராகவோகூட நியமிக்க மனம் வரவில்லை. பெயரளவில் உறுப்பினர்களாக மட்டுமே பெண் கள் கிழக்கில் உள்ளனர்.
இதைப்போலவே கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஏழு ஆண்பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான நிலையில் ஒரேயொரு தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்கு இடம் கிடைத்தது அதனை மன்னாரில் தமிழரசுக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இளம் சட்டத்தரணி அ.கலிஸ்ரா டலிமா என்பவரை நியமிக்குமாறு மன்னார் மாவட்ட தமிழரசுகட்சி கிளை உட்பட பலர் கோரிக்கை விடுத்தபோதும் அதனை தமிழரசுக்கட்சி பதில் தலைவரோ, பதில் பொதுச் செயலாளரோ, அரசியல் குழுவோ அல்லது மத்தியகுழுவில் உள்ளவர்களோ செவிசாய்க்கவும் இல்லை ஏற்கவும்இல்லை வவுனியாவில் தமிழரசுக்கட்சி பதில் பொதுச்செயலாளராக கடமையில் இருந்த மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை நியமித்து ஏழு ஆண்களுடன் எட்டாவது ஆணாக எண்ணிக் கையை மட்டுப்படுத்தினர். பெயருக்கு மட்டுமே பெண்களை உச்சரிப்பதும் செயல்களில் அவர் களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் ஓரம்கட்டும் நிலைமை அநேகமான தமிழ்த்தேசிய கட்சிகளிடம் உள்ளன.
இலங்கையில் 52, வீதமானவர்கள் பெண் கள் என அடிக்கடி ஞாபகப்படுத்தும் மேடை பேச்சாளர்களான தமிழ் கட்சிகளின் பிரமுகர்கள்  இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலிலும் ஆளுமையான பெண்களை வேட் பாளர்களாக நியமிக்கவும் இல்லை அப்படி நியமிக்காமல் பட்டியலை நிரப்புவதற்காக மட்டும் பெயர்களுக்காக போடப்பட்ட பெண்களுக்கு பதவி நிலைகளை வழங்க குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சி உட்பட எந்த கட்சிகளும் முன்வரவில்லை என்ற கசப்பான உண்மையை புரிந்துகொள்ளல் வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட சபைகளில் தற் போது ஆட்சி அதிகாரங்கள் வடகிழக்கில் கூடுத லான சபைகள் இலங்கை தமிழ் அரசுக்கட்சி வசம் உள்ளபோதும் தவிசாளர்களாக தெரிவான ஒரு சிலர் தன்னிச்சையாக உள்ளூராட்சி சபை சட்டதிட்டங்களுக்கு அமைவாக தமது சபை அமர்வுகளையும், தீர்மானங்களையும் எடுக்காமை தாங்கள் நினைத்ததை அமுல் படுத்தலாம் என்ற கடும்போக்குடன் செயல்படுவதாகவும் மக்கள் மத்தியில் அதிருப்திகள் உள்ளன.மக்களுக்கு சபை உறுப்பினர்களுக்காக கருத்துகள் கூறுவதற்கு பதிலாக சமூக ஊடகங்களில் தமது கருத்து வந்தால் சரி என்ற எண்ணத்துடனேயே அனேகமான சபைகளில் தவிசாளர்களும், உறுப்பினர்களும் பேசுகின்றனர்.
தெரிவுசெய்யப்பட்ட மாநகர முதல்வர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சபை உறுப்
பினர்களை ஒன்றிணைத்து துறைசார் வள வாளர்களை அழைத்து செயலமர்வுகளை கட்சிச் தலைமைகள் நடத்தி அவர்களுக்கு உள்ள அதிகார வரம்புகளை தெரியப்படுத்துவதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
வடகிழக்கில் உள்ள சிலசபைகள் வரு மானங்கள் கூடிய சபைகளாகவும், பல சபைகள் வருமானங்கள் எதுவும் இல்லாத சபைகளாகவும் உள்ளன, சபைகளுக்கான வருமானங்களாக அந்த சபைகளில் இயங்கும் தொழில்பேட்டைகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களால் கிடைக் கும் வாடகை மற்றும் சோலைவரிப்பணம் இவைகளை விட போக்குவரத்து பொலிசார்கள் தண்டப்பணமாக அந்தந்த பிரதேசத்தில் பெறப்படும் பணம், மற்றும் அவ்வப்போது இடம் பெறும் நிகழ்வுகளுக்கான வாடகைபணம்.
கலாசாரமண்டபங்கள் உள்ள சபைகளில் அதன் வாடகை என்பன வருமானத்தை தரக்கூடிய சில விடயங்களாக இருந்தாலும் அரசினால் ஒதுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், என் பவற்றோடு சில தனியார் நிறுவனங்களின் அனுசர ணையுடன் வாழ்வாதார விடயங்களையும் சபைகள் இயலுமானவகையில் செய்ய முடியும்.
போரினாலும், இயற்கை அனர்த்தங்களா லும், வறுமையாலும் பாதிப்புற்று நலிவடைந்து வாழும் தமிழ் மக்களுக்கு அடிப்படைவசதி களையும், சுகாதார மேம்பாடுகளையும், கல்வி அபிவிருத்திகளையும் மேற்கொள்வதுடன் வடகிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஈழத் தேசிய விடுதலைப்போராட்டம் தொடர்பான வரலாறுகளையும் இவ்வாறான சபைகள் தெளி வூட்டுவதற்கான செயல் திட்டங்களையும் முன்னெடுப்பது நல்லது.
அடிமட்ட மக்களுடன் வட்டார ரீதியாக பணியாற்றக்கூடிய வல்லமை படைத்த தமிழ்த் தேசிய கட்சிகளின்மூலம் தெரிவானவர்கள் அடிப்படை கொள்கை ரீதியாகவும் மக்களுக்கு விழிப்பூட்டுவது உணர்வுள்ள உறுப்பினர்களின் கடமை என்பதை புரிதல் நல்லது.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் – விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசிடம் வேல்முருகன் கோரிக்கை

சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது.

07.09.1996 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில்இ 11 சிங்கள  ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா தம்பி பிரணவன் குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கொடூர நிகழ்வால் பெரும் கவலையுற்ற ஈழத்தமிழ் சொந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் சிங்களப் பேரினவாத அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும்இ 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவேஇ செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன.

குறிப்பாக 1995–-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது.

ஐ.நா சபையின் தலையீடு காரணமாக சோமரத்ன ராஜபக்சே  அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால் வழக்கம்போல் சிங்களப் பேரினவாத அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது.

அதுமட்டுமின்றி 2009 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணைக்கொண்டு 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ உரிய நீதியையோ இதுவரை பெற முடியாமல் உலகத்தமிழர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு தமிழீழத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வுப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

அந்த அகழாய்வில் அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே. இதுபோன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.

இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசால் கொன்றுக் குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு நீதி விசாரணைக் கேட்டும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமைக் கேட்டும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் யோகராசா நவநாதன் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 4 நாட்களாக அவர் மேற்கொண்ட போராட்டத்தில் நீருக் கூட அருந்தாமல் இருப்பதால் யோகராசா நவநாதன் உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே தோழர் யோகராசா நவநாதனின் கோரிக்கையை ஏற்று சிங்களப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு உரிய நீதி விசாரணை நடத்தவும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமை கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திருச்சி சிறப்பு முகாம் என்கிற கொடூர முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் மேலும் அவர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஈழத்தமிழர்களுக்கோ அல்லது ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கோ சம உரிமை கிடைக்கவும்இ சிங்களப் பேரிவாத அரசால் வேட்டையாப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும்இ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

எனவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து வரும் நிலையில் தோழர் யோகராசா நவநாதன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.