குற்றப்பத்திர அலுவலகம் வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்துடன் எவ்வித முரண்பாடுகளும் எமக்கு கிடையாது. சட்டமா அதிபருடன் இணக்கமாகவே செயற்படுகிறோம்.பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க சட்டமா அதிபர் முயற்சிக்கவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பதை போன்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது அமைச்சரவை அமைச்சர்களாக இருந்தவர்கள் பலர் இன்று எதிர்க்கட்சியில் உள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் இன்று (நேற்று) பல யோசனைகளை முன்வைக்கிறார்.அன்று இந்த யோசனைகளை முன்வைத்திருந்தால் உண்மையை கண்டுப்பிடித்திருக்கலாம். இருப்பினும் முன்வைத்த இந்த யோசனைகள் தொடர்பில் நாங்கள் விசேட கவனம் செலுத்துவோம்.
குண்டுத்தாக்குதல்களை தொடர்பில் அப்போதைய எதிர்க்கட்சியின் அரசியல் செயற்பாட்டினால் இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.1983 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் எவ்வாறு அச்சமடைந்திருந்தார்களோ அதேபோன்று தான் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்கள் தமது மத அனுஸ்டானங்களில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள்.
எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளார்கள். குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களை போன்று இனவாத பிரச்சாரங்களினால் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.அக்காலப்பகுதியில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கு நாடளாவிய ரீதியிலான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.
குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள்.இவர்கள் அமைச்சு பதவிகளை துறந்தார்களா,இல்லை,முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக இவர்கள் பேசவில்லை. ஆனால் நாங்கள் பேசினோம்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, சிறப்பு குழு விசாரணை கோரப்படுகிறது. அனைத்தையும் நிறைவேற்றினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா,இல்லை, அரசியல் தலையீட்டுடன் எந்த விசாரணைகளை மேற்கொண்டாலும் தீர்வு கிடைக்காது . எமது அரசாங்கத்தில் எவ்வித விசாரணைகளுக்கும் அரசியல் தலையீடுகள் இல்லை. ஆகவே சர்வதேச விசாரணைகள் அவசியமற்றது.
குற்றப்பத்திர அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிட்டுள்ளோம். சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் தான் நாங்கள் செயற்படுகிறோம். வெகுவிரைவில் குற்றப்பத்திர காரியாலயம் ஸ்தாபிக்கப்படும்.
சட்டமா அதிபர் திணைக்களத்துடன் முரண்பாட்டினால் குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிக்க தீர்மானிக்கவில்லை.சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நாங்கள் இணக்கமாகவே செயற்படுகிறோம். ஒருசில ஊடகங்கள் சட்டமா அதிபரை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகின்றன. பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க சட்டமா அதிபர் முயற்சிக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வோம்.இருப்பினும் நீதி விசாரணைகளுக்கு சர்வதேச நீதி கட்டமைப்பு அவசியமற்றது. தேசிய நீதிக்கட்டமைப்பு ஊடாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
குண்டுத்தாக்குதல் விவகாரத்தை அரசியல் கட்சிகளின் பேசுபொருளாக்குவற்கு நாங்கள் இனி இடமளிக்க போவதில்லை. குற்றவாளிகளுக்கும், பிரதான சூத்திரதாரிகளுக்கும் நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்றார்.