Home Blog Page 90

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் எம்.பிக்களுக்கு விளக்கமளிப்பு

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டும் கொள்கைகள், புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வியின் முக்கிய தூண்கள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு மூலம் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் கண்காணிக்கப்படும் விதம் தொடர்பாகவும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டன.

அத்தோடு, 21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதற்கான அடிப்படை அடித்தளத்தை அமைப்பது மற்றும் அந்த புதிய குடிமகனை நாட்டின் நிலையான தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானச் செயன்முறைக்கு பங்களிப்பாளராக மாற்றுவது ஆகியன இந்த புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.

கல்வி சீர்திருத்தங்கள் குறித்த அடிப்படை விளக்கத்தைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள், சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை முன்வைத்தனர். அப்போது, விசேட தேவைகள் உள்ள மற்றும் மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளுக்கு இந்த கல்வி மாற்றத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேவைகள் குறித்து விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோர் உட்பட கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பிரிக்ஸை (BRICS)ஆதரிக்கும் இலங்கையின் அறிக்கையை ரஷ்யா வரவேற்பு

இலங்கையுடனான நீண்டகால கூட்டாண்மைக்கான உறுதிப்பாட்டை ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) தமது நாட்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

‘தெற்காசியாவில் நம்பகமான நண்பர்’ என்று அவர் இலங்கையை விபரித்துள்ளார். அத்துடன் இரு தரப்பு உறவுகள், ஆழமானதும், நேர்மறையானதுமான வரலாற்றை கொண்டுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலேஷியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற ஆசியான் மாநாட்டிற்கு இடையே இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போது ரஷ்ய – இலங்கை உறவு மற்றும் சர்வதேச தளங்களில் ஒத்துழைத்து செயற்படுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பிரிக்ஸ் (BRICS) அமைப்பு மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை அனுப்பிய செய்தியை வரவேற்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருமித்த கருத்துக்களுடன் இணைவதற்கு தங்களது தரப்பு தயாராகவுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த சந்திப்பு தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், பல தளங்களில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் ஆயுதங்களைத் தேடி, ஆராயப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியில், விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது.

மூல்லைத்தீவு நீதவானின் மேற்பார்வையில் குறித்த பதுங்கு குழியில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், பதுங்கு குழியிலிருந்து எவ்வித பொருட்களும் கண்டுப்பிடிக்கப்படாமையால், குறித்த குழி மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதலை புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைபாட்டுக்கு அமைய, புதுகுடியிருப்பு பொலிஸாரினால், நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தேடுதல் மேற்கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டது.

புதுக்குடியிருப்பு பொலிஸார், கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் அதிகாரிகள் இணைந்து குறித்த பதுங்கு குழியினுள் தேடுதலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த கடிதம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுப்பி வைத்துள்ளது அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக நாங்கள் எழுதுகிறோம். உண்மையை வெளிக்கொணரவும், தடயவியல் நெறிமுறைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அவசர மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

1998 ஆம் ஆண்டில், பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசாமி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது விசாரணையில் 300 முதல் 400 வரையிலான தமிழ் பொதுமக்கள் அங்கு புதைக்கப்பட்டதாக வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் குறித்து பகுதியில் கடந்த 1999 இல் அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது அங்கு 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு 1996 ஆம் ஆண்டு காணாமல்போனவர்களது என அடையாளம் காணப்பட்டன. தடயவியல் உறுதிப்படுத்தல் இருந்தபோதிலும், வழக்குகள் தேக்கமடைந்தன, இன்றுவரை அதற்கு அர்த்தமுள்ள நீதி வழங்கப்படவில்லை.

2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி அரியாலைச் சித்துப்பாத்தி இந்துமையான புனரமைப்புப் பணிகளின் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இதனால் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அந்த இடத்தை ஒரு பாரிய மனித புதைகுழியாக அறிவித்து, நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன் படி தற்போதைய நிலையில், குழந்தைகள் உட்பட சுமார் 65 எலும்புக்கூடுகள் இரண்டு கட்டங்களாக தோண்டி எடுக்கப்பட்டன, அவற்றுடன் பாடசாலை பை, பொம்மை, வளையல்கள், செருப்புகள் மற்றும் துணித் துண்டுகள் போன்ற சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அனைத்து எலும்புக்கூடுகளும் தடயவியல் பரிசோதனைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிகள், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரச்சாரத்திற்கான தெளிவான சான்றுகளை காண்பிக்கின்றன.

எந்தவொரு நிலைமாறுகால நீதி செயல்முறைக்கும் உண்மையைக் கண்டறிவது அடித்தளமாக இருக்க வேண்டும். 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

எனவே, பின்வருவனவற்றை தாமதமின்றி செயல்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் வலியுறுத்துகிறோம்:

1.1999 மற்றும் 2025 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவை தொடர்பான சட்ட வழக்குகளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றங்களின் கீழ் ஒரே நீதித்துறை மற்றும் தடயவியல் விசாரணையாக ஒருங்கிணைக்கவும்.

2. விசாரணையின் அனைத்து நிலைகளையும் மேற்பார்வையிட, தடயவியல் ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய, சுயாதீனமான, சர்வதேச அளவில் மதிக்கப்படும் தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்துதல்.

3. அனைத்து இடைக்கால மற்றும் இறுதி தடயவியல் அறிக்கைகள், டி.என்.ஏ விவரங்கள் மற்றும் அடையாள முடிவுகளை வெளியிடுதல், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு அணுகலை எளிதாக்குதல்.

4. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடுகின்றனர், உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. தேசிய ஒற்றுமைக்கு அவசியமான இந்தக் கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கவும்.

இலங்கையின் தார்மீக மற்றும் சட்டக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நோக்கி நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும்

இந்த நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும், அவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Image 2025 07 11 at 2.00.21 PM செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

WhatsApp Image 2025 07 11 at 2.00.29 PM செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

WhatsApp Image 2025 07 11 at 2.00.42 PM செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

திருகோணமலை: கன்னியா – பிலியடி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

20250711 145431 1 திருகோணமலை: கன்னியா - பிலியடி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னியா – பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தக அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (11) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அமெரிக்காவின் தடை குறித்து ஐநா அறிக்கையாளர் கருத்து

குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகபதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஒன்றாக நிமிர்ந்துநிற்போம் என தெரிவித்துள்ள அவர், காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரினது கண்களும் தொடர்ந்தும் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் – உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டுதுண்டாக்கப்படும் காசா மீது இருக்கவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரான்செஸ்கா மிடில் ஈஸ்ட் ஐயின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில், நான் யாரையோ பதற்றமடையச்செய்திருக்கின்றேன் போல தோன்றுகின்றது,நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போது காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார்.

காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அவர்  இந்தக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தில் ஐ.நா. விசாரணையாளருக்கு அமெரிக்கா தடை விதித்தது

காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியதற்காக, ஒரு முக்கிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த சட்டத்தரணியுமான அல்பானீஸ் மீது டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக “அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக” குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

தடை குறித்த செய்தி வெளியிடப்பட்ட பின்னர், எப்போதும் போல நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே முடிவு என்று அல்பானீஸ் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் செம்மணிப் புதைகுழி வழக்கை வழங்க நடவடிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை முற்றுமுழுதாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மனிதப்புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் பதினைந்தாம் நாள் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன.

இதன்போது 11 என்புத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இத்துடன், செம்மணிப் புதைகுழியில் இருந்து 65 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப் பட்டுள்ளன. மனிதப் புதைகுழி முதலில் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளத் தளம் ஒன்று’ என நீதிமன்றால் அடையாளம் காணப்பட்ட குழியிலிருந்து 63 என்புத் தொகுதிகளும், மேலும் செய்மதிப்படங்கள் மூலம் மனிதப் புதைகுழி இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளத்தின் இரண்டாவது பிரதேசமாக’ நீதிமன்றால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து இரண்டு என்புத் தொகுதிகளுமே இவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக பரீட்சார்த்தமாக 9 நாள்கள் இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில், அவை நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரணித்தா. சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்: வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி  வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும்  ஜுலை 26ஆம் திகதி பாரிய  மக்கள் போராட்டத்தினை  மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  கண்டுமணி லவகுசராசா பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள், ஊடகவியலாளர்கள் என  அனைவருக்கும் விடுத்துள்ளார்.

இவ்வழைப்பில் , இலங்கையில்  மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள்  தொடர்பாக எதிர்வரும்  செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை  தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில்  மேற்கொள்ளப் படுவதற்கு மக்கள்  போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழ்  நிலைக்கு  தமிழ் மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப் புது தீர்மானங்கள் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டே செல்கிறது. இற்றைவரை இதுதீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு  எந்த நன்மைகளும் கிடைத்ததில்லை.

இவ்வாறாணதொரு சூழ்நிலையில்  இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தாணிகரின் வருகை  பின்னர் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில்  எமது தமிழ் மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க கூடிய ஆரோக்கியமான விடயங்கள் உள்ளடக்கப் படவில்லை என்பதை இட்டு வருத்தப் படுகிறோம்.

அத்துடன் அண்மையில் ஐ.நா.சபையின் இலங்கைக்கான வாதிவிடப் பிரதியால்  ஊடகம்  ஒன்றிற்கு வழங்கிய ஊடக நேர்காணல்  கூட  எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய  பொறிமுறையாக அமையாத நிலையை நாங்கள் ஊடக செய்திகள் ஊடாக பார்க்கிறோம்.

இலங்கை அரசின் உள்ளக பொறி முறை ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப் போவதில்லை மாறாக சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதனை வலியுத்தி  பல தடவைகள் இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரி வருகின்றோம்.

இந் நிலையில் ஐ. நா இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக பொறி முறைகள் ஊடகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்தினை  தங்களது அறிக்கைகளிலும், ஊடக நேர் காணல்களிலும்  குறிப்பிடுவதை  நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச  நீதிப் பொறி முறையின்  ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும்  ஜுலை 26ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய  மக்கள் போராட்டம்  ஒன்றினை ஏற்பாடு செய்ய எண்ணி உள்ளோம்.

எனவே பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரின் பங்களிப்பினை வழங்குமாறு  அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம் என்றார்.

பாகிஸ்தானில் நடந்த பாரிய மோசடி – இலங்கையர்கள் உள்ளிட்ட 149 பேர் கைது

பாகிஸ்தான் பொலிஸார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த வலைப்பின்னல் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மையம் போன்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், போலி முதலீடுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை வைப்பிடச் செய்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், இரண்டு இலங்கையர்கள், ஆறு பங்களாதேஷினர், இரண்டு மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு ஜிம்பாப்வே நாட்டவர் அடங்குவர்.

149 பேரில் பதினெட்டு பேர் பெண்கள் என்று அந்த நிறுவனம் மேலும் கூறியது. மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் தங்கள் முதல் முதலீட்டில் ஒரு சிறிய வருமானத்தைப் பெற்றதாகவும், பின்னர் பெரிய தொகைகளை வைப்பிட வற்புறுத்தப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில், அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கணினிகள், சர்வர்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு சிம் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

புதன்கிழமை, 149 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள், அவர்களில் 87 பேர் ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் 62 சந்தேக நபர்கள் ஜூலை 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.