அரசற்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது, அடிப்படையில் உள் நாட்டு தன்மைவாய்ந்ததாயினும், போராட்டத் திற்கான கட்டுமானமானது பெரிதும் வெளிநாட்டு பரிமாணங்களை கொண்டது.
மிகச் சரியான, துல்லியமான வெளிநாட்டு பார்வையின்றி, சர்வதேசப் பார்வையின்றி மேற் படி வகையிலான ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை வெற்றிக்குரியதாக்குவது சாத்தியமில்லை.
இந்த வகையில் அடிப்படை யிலுமாக அரசு, வெளிநாடு, சர்வ தேசம் பற்றிய ஒரு கணிப்பீடு போராடும் ஈழத்தமிழர் மத்தியில் சரிவர அமைய வேண்டும்.
பொதுவாக தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்கும் பல்வேறு சக்திகள்மத்தியிலும் அதற்கான கணிப்பீடு மிகவும் பல வீனமாக உள்ளது.
ஈழத்தமிழர் மத்தியில் புராண, இதிகாச, காப்பிய கலாச்சாரங்களின் பின் னணியினால் தூய்மைவாதமும், கற்பனாவாதக் கருத்தோட்டமும், சிந்தனைப்போக்கும் மேலோங்கியுள்ளன.யதார்த்தத்திற்குப் புறம்பான, நடைமுறைக் கொவ்வாத இத்தகைய கருத்துமண்டலத்துள் சிக்குண்டு, இரத்தமும் தசையுமான நவீன சர்வதேச அரசியலை மனவேகக் கற்பனைகளினால் தலையிற் தூக்கி, காலிற் போட்டுடைக்கும் ஒரு பரிதா பகரமான போக்கை தமிழரசியல் கொண்டுள்ளது.
அந்த வகையில், அரசு, வெளிநாடு, சர்வ தேசம், சர்வதேச அரசுகள் அல்லது வெளிநாட்டு அரசுகள் என்பன பற்றிய ஓர் அறிவார்ந்த கணிப்பீட்டைச் செய்யும் முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.
ஐநா சபைக்கான அங்கத்துவ அடிப் படையில் அங்கீகரிக்கப்பட்ட 196 முழு அரசுகள் இந்த பூமியில் உள்ளன.
தனக்கென சொந்த அரசமைத்து, அரசுடன் கூடிய தேசிய விடுதலைக்காக போராடும் அரசு அற்ற ஈழத்தமிழ் தேசிய இனம், மேற்படி அரசுகள் நிறைந்த இந்த உலகில், அவ்வாறு காணப்படும் அரசுகளை கையாளும் வித்தையை சரிவர கையி லெடுக்க வேண்டும்.அதற்கும் முன் நிபந்தனையாக அரசுகள் பற்றிய அடிப்படை இயல்பை, அதற்குரிய செயல்பாட்டை, அதற்கான யதார்த்தத்தை சரிவர எடைபோட்டு, அதற்கேற்ப அவற்றை கையாள வேண்டும்.
அரசை, முடியரசு, மக்கள்அரசு, அந்நியஅரசு, இனஆதிக்கஅரசு, தன்னினஅரசு, 21ஆம் நூற்றா ண்டுக்குரிய பூகோள வளர்ச்சிக்குட்பட்ட அரசு என, அவை அவர்களுக்கு உரிய பரிமாண வேறுபாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதேவேளை, “அரசு” என்ற நிறுவனத்திற்கு இருக்கக்கூடிய பொதுஇயல்பை அடிப்படையாகக் கொண்டு, அரசநடத்தைகளையும் அவை மேற்கொள்ளும் அரசுகளுக்கிடையேயான உறவுகளை யும் சீர்தூக்கி அணுகவும், கையாளவும் வேண்டும்.
இவற்றை யதார்த்தபூர்வமான, நடைமுறை சாத்தியத்திற்குரிய, விஞ்ஞானபூர்வமான அணுகு முறைக்குப் பின்பற்றியே அணுக வேண்டும்.விருப்பங்களினாலோ, இலட்சிய வேட்கை களினாலோ, தூய எண்ணங்களினாலோ அணுக முற்பட்டால், அழிவுகளை தான் தலையில் சுமக்க வேண்டி வரும்.
ஆதலால், முதலிலே இங்கு “அரசு” பற்றிய அதன் நிறுவனத் தன்மையை விருப்பு–வெறுப்பு களுக்கு இடமின்றி, நடைமுறை சார்ந்த வகையில், அதற்கே உரிய விஞ்ஞானபூர்வ அளவீட்டுடன் எடைபோடுவோம்.
ஒரு தேசிய இனப் பிரச்சினை என்பது எப்பொழுதும் ஒரு சர்வதேசப் பிரச்சினையாகும்.எந்தவொரு தேசிய இனப் பிரச்சினையும் சர்வதேசக் கண் கொண்டே தான் பார்க்கப்பட வேண்டும்.
அதனை சர்வதேச பரிமாணங்களுக் கூடாகத்தான் அணுக வேண்டும். ஆதலால், தேசிய யுகத்தில் ஒரு தேசிய இனப் பிரச்சினை என்பது ஒருபோதும் வெறும் உள்நாட்டு பிரச்சினையல்ல; அது ஒரு சர்வதேச பரிமாணம் கொண்ட பிரச்சனையாகும்.
ஜெரிமி பென்தாம் (Jeremy Bentham) என்பவரால் எழுதப்பட்டு 1789 ஆம் ஆண்டு வெளியான “An Introduction to the Principles of Morals and Legislation” என்ற நூலில்தான் “சர்வதேசம்” — “International” என்ற பதம் முதன்முறையாகப் பயன் படுத்தப்பட்டது.அதாவது, புவிப்பரப்பில் முதன்முறையாக தேசியப் புரட்சிகள் தோன்றியதையடுத்துதான் இப்பதம் பயன்பாட்டுக்கு வந்தது.
1776 ஆம் ஆண்டு அமெரிக்க விடுதலையும், 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியும் நிகழ்த்திய பின்னணியில், தேசிய அரசுகள் உருவாகவே, தேசங்களுக்கிடையேயான உறவுகள் என்ற அர்த்தத்தில் “சர்வதேசம்” என்ற பதம் உருவாக வேண்டிய வரலாற்றுத் தேவை ஏற்பட்டது.அதாவது நாடுகளுக்கிடையேயான அல்லது அரசுகளுக்கிடையேயான உறவுகள் என்பன புவிப்பரபில் அரசுகள் தோன்றியதை உடனடுத்த காலத்திலேயே ( சுமாராக கிமு 2500 ஆண்டுகளை ஒட்டி) தோன்றியுள்ளன. ஆனால் சர்வதேச உறவுகள் என்பது கிபி 18 ஆம் நூற்றாண் டின் பிற்பகுதியில் தேசிய அரசுகள் தோன்றியதைத் தொடர்ந்தே தோன்றின.
ஆனால் நடைமுறையில் தேசங்களுக் கிடையேயான உறவுகள் என்று சொல்வதை விடவும், அரசுகளுக்கிடையேயான உறவுகளா கவே அவை மேலோங்கியுள்ளன. தேசியம், சர்வதேசம் என்பன அரச கட்டமைப்பின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் அரசவாதமே பலம் பொருந்தியதாயுள்ளது.
அரசு” என்பது அதிகார மையத்தை குறிக் கும். இத்தகைய அதிகார மையங்கள் நீர்வாழ், நிலம் வாழ்ப் பிராணிகள், மனிதப் பிராணி, பறவைகள் வரை ஏதோ ஒரு வகையில் ஆங்காங்கே உள்ளன. உதாரணமாக யானைக் கூட்டத்திற்கு முன் மாதிரி யானை அல்லது தலைவி யானை (The matriarch), என்ற பெண் தலைமைத்துவமுண்டு. சிங்கக் கூட்டத்திற்கு மேலாண்மை ஆண் சிங்கம் (The dominant male) என்ற ஆண் தலைமைத்துவமுண்டு. சிம் பாஞ்சி ( chimpanzee) கூட்டத்திற்கு The Alpha male என்ற ஆண் தலை மைத்துவமுண்டு. அப்படியே குரங் குக் கூட்டத்திற்கும் The Alpha male என்ற ஆண் தலைமைத்துவம் உண்டு. கடல்வாழ் உயிரினங்களில் ஆர்காஸ் திமிங்கிலத்திற்கு (Orcas -Killer Whales) matriarch என்று அழைக்கப்படும் மூத்த பெண் திமிங்கலத்தின் பெண் தலைமைத்துவ முண்டு.
அவ்வாறே பறவைகளில் வானில் பறக்கும் பறவைக் கூட்டங்களுக்கு நிரந்தரமற்ற ஆனால் அவ்வப்போது பறக்கும்போது வழிகாட்டுகின்ற, உணவை அடையாளம் காண்கின்ற கூட்டுத் தலைமைத்துவம் இருக்கும். இத்தலைமைத்துவம் அவ்வப்போதைய திறமையின், வல்லமையின், ஆளுமையின் அடிப்படையில் அமையும். இப் படியே வான்கோழி, கோழி என்பனவற்றின் மத்தியிலும் தலைமைத்துவம் உண்டு.
இந்த வகையில் அரசு என்பது பொதுவான உயிர் வாழ்தலில் மிகக் குறிப்பாக மனித வாழ்வில் வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் வளங்க ளைத் திரட்டுவதில் முகாமைத்துவங்களை மேற் கொள்வதில் இயற்கை மற்றும் அனர்த்தங்களில் மனித ஆதிக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்கு அரசு என்ற நிறுவனம் வரலாற்றில் எப்போதும் இன்றியமையாததாய் இருக்கிறது . அதற்காக அரசு என்பது ஒரு தூய்மையான, புனிதமான, மகிமைக்குரிய நிறுவனமல்ல. அரசு என்ற நிறு வனத்தின் இன்றியமையாமையை ஒருபுறமும் அது புனிதமானதல்ல என்பதை மறுபுறமுமென ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் புரிந்து கொள்வதிலிருந்து அரசை அணுக வேண்டும்.
அரசானது அதிகாரத்தை உயிர் மூச்சாகக் கொண்டது. அது தன் அதிகாரத்தால் ஒன்றை அணைத்தும் பெறவல்லது அல்லது அடித்தும் பெறவல்லது கூடவே ஒன்றை அழித்தும் பெற வல்லது. பெறுதல் மட்டுமே இலட்சியம் ஒன்றைப் பெறுதலே குறிக்கோள். அதன் நலன் அல்லது தேவையே அதன் இலக்கு. அதில் மகிமை, தூய்மை என்ற எதுவும் இருக்காது. தன் தேவையை அடைவதற்கான வழிவகைகள் எதுவோ, அதுவே அதற்கு நியாயம். அது கூறும் நியாயமும், நீதியும் அதற்குரிய நலம் சார்ந்த பக்கத்திலிருந்தே இருந்தே எழும்.
சிங்கம், புலி என்பனவற்றிற்கு மாமிசம் தேவை. அந்த இலக்கை அடைவதற்கான வழிவகை கள் நடைமுறையில் அதற்குப் புனிதமானவை.
இவ்வகையில் அரசானது தனது தேவைக் காக எத்தகைய அநியாயங்களையும், புனிதப் பிரசங்கங்களினாலும், புனித வார்த்தைகளினாலும் பூசை செய்து அலங்கரிக்கும். அது தன் இலக்கை அடைவதற்கு எதிரி களை வெற்றி கொள்வதையே மூல மந்திரமாய்க் கொண்டிருக்கும். “ “வெற்றி.”… “வெற்றி” ….” வெற்றி” இதுவே அதன் மூல உச்சாடனமும், ஒரே இலக்கும். அதிகாரத்தை உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு எதிரியை அணைத்து வெற்றி பெற வேண்டுமோ அவ்வாறு வெற்றி பெறுவது அதன் முதல் முயற்சி.
தொடரும்…