Home Blog Page 82

சில உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவது குறித்து அவதானம்…

செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாத சில உள்ளூராட்சி மன்றங்களை சிறப்பு ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுபோன்ற நடவடிக்கைகள் நியாயமற்ற முறையில் செயற்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.

முறையான நிர்வாகங்களை அமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்கள், குறிப்பாக தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களை தேர்ந்தெடுப்பதில் தோல்வி கண்டுள்ள சபைகள் சிறப்பு ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன அறிவித்துள்ளார்.

அத்துடன் வேண்டுமென்றே கூட்டங்களில் கலந்து கொள்ளாமல், சபைகளின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் செயற்படும் சபைகளின் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த சிறப்பு ஆணையாளர்கள் மூன்று மாதங்களுக்குள், அந்தந்த மாகாண ஆளுநர்களிடம் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஏற்கனவே சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த செயற்பாட்டில் அரசாங்கம் அநீதியாக நடந்து கொண்டால், தனது கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்துள்ளார்.

ஒரு உள்ளூராட்சி சபை இரண்டு சந்தர்ப்பங்களில் ஒரு தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தேர்ந்தெடுக்கத் தவறினால், சிறப்பு ஆணையாளரை நியமிக்க, சட்டத்தில் இடமுண்டு என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், ஆளும் கட்சியால் அரச அதிகாரிகள் மீது செலுத்தப்படும் தேவையற்ற அழுத்தம் காரணமாக பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டங்களைப் புறக்கணிக்கின்றனர் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீதாவாக்கை பிரதேச சபை போன்ற இடங்களில், உள்ளூர் ஆணையாளர்கள் ரகசிய வாக்கெடுப்புகளை நடத்த அழுத்தம் செலுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் சீதாவாக்கை, ஆனமடுவ மற்றும் கலிகமுவ போன்ற உள்ளூராட்சி சபைகள், கோரம் இல்லாததால் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்கள் இதுவரை தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு

காஸாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஸாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் பட்டினியில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது,

மேலும் அந்த பகுதியில் உள்ள மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா ஜனாதிபதி சுவைதா மாகாணத்தில் “உடனடி போர்நிறுத்தத்தை” அறிவிக்கிறார்.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்கும் ஒரு போர்நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்ததாகவும்,

எந்த ஒப்பந்தமும் இல்லாவிட்டால் நீண்ட போருக்குத் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் கூறியது.

இஸ்ரேல்ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 58,667 பேர் உயிரிழந்துள்ளதுடன் 139,974 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மலையகத்தில் கன மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் சனிக்கிழமை (19) காலை முதல் நிரம்பி வழிகின்றது.

அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, தாழ்நிலப் பகுதிகளில் வாழ்பவர்கள் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகால் ஏற்கப்பட்டாலே ஈழத்தமிழருக்கான அனைத்துலக நீதி நடைமுறைச் சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 348

யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள “செம்மணிப்புதைகுழிகள் கிளறிய சிந்தனைகள்” என்னும் அறிக்கையில், மிதக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிபோல (Tip of the iceberg) தற்போது வெளிவந்துள்ள 65 புதை உடல சிதைவுப்பகுதிகளும் கிருசாந்தி பாலியல் வன்முறை, இனஅழிப்புக் கொலைஞர் சோமரட்ண ராஜபக்ச  குறிப்பிட்ட 600 புதை உடலங்களின் சிதைவுகளில் சிலவெனக் கருதுவது மிகையாகாதெனக் குறிப்பிட்டுள்ளது.
அதே அறிக்கை, “அண்மையில் செம்மணிக்குச் சென்றிருந்த அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் வொல்கர் ரேக், அணையா விளக்கு நிகழ்விலும் மூன்று நாட்கள் கலந்து கொண்டு பார்வையிட்ட பின்னரும், அவரது கருத்துக்களில் அனைத்துலக விசாரணையை சுட்டாதிருப்பது கவலைக்குரியது” எனத் தெரிவித்துள்ளது. கூடவே, தமிழர் தாயகத்தில் நடைபெற்ற அனைத்து குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள் உட்பட அனைத்து யுத்தவெறியாட்டங்கள் வழியாக தாயகம் எங்கும் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்தும் அனைத்துலக விசாரணையின் அவசியத்தை அறிக்கை புள்ளிவிபரங்களுடன் எடுத்து விளக்கியுள்ளது.
3000 நாட்களுக்கு மேலாக தங்களது கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கான நீதிக்காகப் போராடுபவர்களில் 200 பேரளவில் போராட்டக் களத்திலேயே உயிரிழந்த நிலையிலும், இன்னமும் அவர்களுக்கான நீதி கிடையாத நிலையையும் அறிக்கை எடுத்துரைத்துள்ளது.
பலவிதமான வாக்குறுதிகளுடன் மாற்றத்தை ஏற்படுத்துவோமெனப் பதவிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் “பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை” என்ற கதையாகவே ஆட்சி செய்கின்றனர் என்பதையும் இவ்வறிக்கை கூட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய அறிக்கைகளை அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்கள் அனைத்துலக மக்கள் மயப்படுத்த வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
இவ்வாரத்தில் தாயகத்தில் இடம்பெற்ற செம்மணிக்கான நீதி கோரல் நிகழ்வுகளில் சிலவற்றை இங்கு தொகுப்பதன் மூலம், தாயகத்தில் மீளவும் மக்கள் விழிப்புணர்வும், கட்சி பேதங்களை மறந்து பொதுவிடயங்களில் ஒருமைப்பாட்டுடன் செயற்படும் மனநிலையும் வளரத் தொடங்குவதை இலக்கு வெளிப்படுத்த விரும்புகிறது.
கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் மேற்கொண்ட “செம்மணிச் சமூகப்படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்” கவனயீர்ப்பு நிகழ்வில், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல், “தெற்கில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் படுகொலைகளுக்கே நீதி கோராத இன்றைய அரசாங்கம், எவ்வாறு தமிழர்களுக்கு நீதி கோரும்? எனவே, வடக்கு கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை அனைத்துலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற வேண்டுகோளை விடுத்தார்.
மேலும், கிழக்கில் ஊர்க்காவல் படையினர் என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து 1990-1991ம் ஆண்டுகளில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமை தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ள நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத், இந்தப் புதைகுழிகள் தோண்டப்பட்டு ஈழத்தமிழர்களுக்கான நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். அதே வேளை, அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன், யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நடாத்திய அடையாளப்போராட்டத்தில், உள்ளக தீர்வு முறைகள் ஏற்கப்படாத ஒன்றாகவும், வெளியகத் தீர்வு முறைகள் வலுவிழந்தும் கிடக்கும் இன்றைய சூழலில், பிரித்தானியா தானே தொடக்கி வைத்த ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிலும் தவிசாளர் தியாகராசா நிரோஜன், “இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை; இதற்கு சிறிலங்கா அரசே காரணம். ஆதலால், சிறிலங்கா அரசின் உள்நாட்டு விசாரணைகளில் நாம் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைகளுக்கு அனைத்துலக நீதியே தீர்வைப் பெற்றுத் தரும் என, அறுபதினாயிரம் மக்களின் ஆணையைப் பெற்ற இச்சபை தீர்மானிக்கிறது” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையிலும் உறுப்பினர் துரைசிங்கம் மதன், தனிநபர் பிரேரணையாக, செம்மணி புதைகுழிகள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை மாநகரசபை கோருகிறது எனக் கொண்டு வந்த பிரேரணைக்கு, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 உறுப்பினர்களும், சபையில் இருந்த அனைவரும் ஆதரவு அளித்து அதனை நிறைவேற்றியுள்ளனர்.
அதே வேளை, தையிட்டியில் மற்றொரு கட்டிடம் கட்டவும் விகாராதிபதி முயன்றமைக்கு உடனடியாகவே, வலிவடக்கு பிரதேச சபை விளக்கம் கோரியமையும், தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனும், சபை உறுப்பினர்களும் நேரில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்குச் சென்று நிலம் வெட்டப்பட்டிருப்பதைப் பார்வையிட்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரமும், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் நேரடியாகச் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளனர். அதே வேளை, வலிவடக்கு பிரதேச சபையின் சார்பில், சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக்கு எதிராக, அரச அதிபர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை வழக்கறிஞராகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இவ்விடயத்தில் விகாரை தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரனால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஈழத்தமிழர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால், பொதுவிடயங்களில் ஒருமைப்பாட்டுடன் செயற்படத் தொடங்கியுள்ளமை ஆரோக்கியமானதாக உள்ளது. இந்நேரத்தில், சிறிலங்காவின் ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மகாசங்கத்தினரைச் சந்தித்து, அவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை அரசு எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின் வாங்காமல் அரசு செயற்படுத்துவதாகவும், புத்தசாசன செயற்பாட்டுக்கான ஆணையகத்தை அமைக்க ஆணைவழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளமை, இவ்வரசாங்கமும் பௌத்த சிங்களப் பேரினவாத அரசியல் கொள்கையை மேலும் வளர்க்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்நிலையில், ஈழத்தமிழர் தாயகத்தில் வேகம் பெற்று வரும் நீதிக்கான குரல், ஈழத்தமிழரின் இறைமையை உலகம் ஏற்பதன் வழியாகவே நடைமுறைச் சாத்தியமாகும் என்பதை உணர்ந்து, அனைத்துலகிலும் உள்ள தமிழர்களும் ஒருமைப்பாட்டுடன் பொதுவேலைத்திட்டங்களை அதற்கேற்ப உருவாக்கிச் செயற்பட வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
 ஆசிரியர்

Tamil News

Ilakku Weekly ePaper 348 | இலக்கு-இதழ்-348-யூலை 19, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 348 | இலக்கு-இதழ்-348-யூலை 19, 2025

Ilakku Weekly ePaper 348

Ilakku Weekly ePaper 348 | இலக்கு-இதழ்-348-யூலை 19, 2025

Ilakku Weekly ePaper 348 | இலக்கு-இதழ்-348-யூலை 19, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகால் ஏற்கப்பட்டாலே ஈழத்தமிழருக்கான அனைத்துலக நீதி நடைமுறைச் சாத்தியமாகும்| ஆசிரியர் தலையங்கம்
  • வடக்கு மீனவர்களின் தொடரும் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் – விதுரன்
  • “மக்கள் மேலான போரை” 1983 யூலையில் ஈழத்தமிழர்கள் மேல் பிரகடனப்படுத்திய சிறிலங்காவே பிரிவினைவாதி பயங்கரவாதி – சூ.யோ. பற்றிமாகரன்
  • செம்மணி மனித புதை குழி : உள் நாட்டு விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை (பகுதி 2 (இறுதிப்பகுதி) மூத்த சட்டவாளர் கே.எஸ். ரட்ணவேல்
  • “கறுப்பு யூலை” ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச இருவரின் கூட்டுச்சதி! – பா. அரியநேத்திரன்
  • பயங்கரவாத தடைச்சட்டம்; நீக்கப்பட வேண்டும்- சிரேஷ்ட சட்டத்தரணி ஐங்கரன் குகதாதன்
  • அரசுகளுடனான உறவுகளும், ஈழத் தமிழர் போராட்டமும் (பகுதி 2 இறுதிப் பகுதி) மு. திருநாவுக்கரசு
  • மலையக மக்களை ஏமாற்றிய அரசாங்கம் – மருதன் ராம்
  • ட்ரம்பின் மாற்றம் அழிவு யாருக்கு? – வேல்ஸில் இருந்து அருஸ்

 

ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சியில் நடந்த இனப்படுகொலை விபரம்: பா.அரியநேத்திரன்

முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன (ஐக்கிய தேசிய கட்சி) 1978, பெப்ரவரி,04, தொடக்கம் 1989,ஜனவரி,02, வரை அவருடைய காலத்தில் நடந்த இனப்படுகொலைகளின் விபரம் :

1979, யூலை,19, ல் கல்குடா தொகுதி ஜக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நீதி அமைச்சருமான KWD,தேவநாயகத்தை கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றியவர் JR.ஜெயவர்தன. அதற்கு பின்னர் அவருடைய கட்டளையால் ஏற்பட்ட தமிழினப்படுகொலை விபரம் இது..

1.1981, மே, யூண்-வண்ணார் நாச்சிமார்
கோயில் படுகொலை.
2. 1983, மே,18,ல்
3. 1983, யூலை,24,25-திருநெல்வேலி படுகொலை-14, தமிழர்கள்.
4. 1983, மன்னார் சாம்பல்தோட்டம் படுகொலை-15, தமிழர்கள்.
5. 1984,ஜனவரி,08,சுண்ணாகம் படுகொலை-19, தமிழ் இளைஞர்கள்.
6. 1984, செம்டம்பர், மதவாச்சி, ரம்பாவவ படுகொலை-15, தமிழர்கள்.
7. 1984, டிசம்பர்,01,முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை-27, தமிழர்கள்.
8. 1984,டிசம்பர்,02, முல்லைத்தீவு குழுழமுனை படுகொலை-07, தமிழர்கள்.
9. 1984, டிசம்பர்,02, செட்டிக்குளம் படுகொலை-39, தமிழர்கள்.
10. 1984,டிசமரபர்,03, மணலாறு தென்னைமரவாடி படுகொலை-15, தமிழர்கள்.
11. 1984, டிசம்பர்,04,மன்னார் முருங்கன் வீதி படுகொலை-71, தமிழர்கள்.
12. 1985, டிசம்பர்,15,கொக்குத்தொடுவாய் படுகொலை-131, தமிழர்கள்.
13. 1985,ஐனவரி,16,முள்ளியவளை படுகொலை-09, தமிழர்கள்.
14. 1985, ஜனவரி,30, வண்டகண்டல் படுகொலை-33, தமிழர்கள்.
15. 1986, பெப்ரவரி,26, உடும்பன்குளம் படுகொலை-39, தமிழர்கள்.
16. 1985, ஷனவரி,01, கிளிவெட்டி படுகொலை-150, தமிழர்கள்.
17. 1985, ஏப்ரல்,21,புதுக்குடியிருப்பு ஐயன்கெவிலியடி படுகொலை-17, தமிழர்கள்.
18. 1985, செப்டம்பர்,04, 09, திருமலை படுகொலை- 311, தமிழர்கள்.
19. 1985, மே,24, வல்வை படுகொலை-24, தமிழர்கள்.
20. 1985, மே,15, குமுதினிப்படகு படுகொலை-42, தமிழர்கள்.
21. 1985, யூண்,08, திரியாய் படுகொலை-10, தமிழர்கள்.
22. 1985, ஆகஷ்ட்,04-09, சாம்பல்தீவு படுகொலை-383, தமிழர்கள்.
23. 1985, ஆகஷ்ட்,24, அம்பாறை திருக்கோவில் வயலூர் படுகொலை -50, தமிழர்கள்.
24. 1985, டிசம்பர்,26,திருகோணமலை நிலாவெளி படுகொலை-30, தமிழர்கள்.
25. 1985, அக்டோபர்,02, திருகோணமலை பிரமந்தனாறு படுகொலை-11, தமிழர்கள்.
26. 1985, நவம்பர்,09, கந்தளாய் படுகொலை-06, தமிழர்கள்.
27. 1985, நவம்பர், 07,08,10, மூதூர் கடற்கரைச்சேனை படுகொலை-70, தமிழர்கள்.
28. 1986,ஜனவரி,06,வங்காலை தேவாலயம் படுகொலை-08, தமிழர்கள்.
29. 1986, மே,08, பெரியபுல்லுமலை படுகொலை
30. 1986, ஜனவரி,25, கிளிநொச்சி படுகொலை-06, தமிழர்கள்.
31. 1986, மார்ச், 19,20, ஈட்டிமுறிச்சிப்படுகொலை-06, தமிழர்கள்.
32. 1986, யூண்,04,ஆனந்தபுரம் படுகொலை- 05, தமிழர்கள்.
33. 1986, யூண்,06, கந்தளாய் படுகொலை -35, தமிழர்கள்.
34. 1986, யூண்,10, மண்டத்தீவு கடல் படுகொலை-31, தமிழர்கள்.
35. 1986, யூண்,12,சேருவெல படுகொலை- 21, தமிழர்கள்.
36. 1986, யூண்,20, தம்பலகாமம் படுகொலை -19, தமிழர்கள்.
37. 1986, யூண்,28, பரந்தன் விவசாயிகள் படுகொலை- 07, தமிழர்கள்.
38. 1986, யூலை,15, திருகோணமலை பெருவெளி படுகொலை-48, தமிழர்கள்.
39. 1986, யூலை,17,தண்டுவான் படுகொலை -06, தமிழர்கள்.
40. 1986, யூலை,18, மூதூர் மணற்சேனை படுகொலை-44, தமிழர்கள்.
41. 1986, அக்டோபர்,12,அடம்பன் படுகொலை-12, தமிழர்கள்.
42. 1986, அக்டோபர்,15, பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 02, தமிழர்கள்.
43. 1987, ஜனவரி,28, கொக்கட்டிச்சோலை படுகொலை-133, தமிழர்கள்.
44. 1987, ஏப்ரல்,26, பட்டித்திட்டல் படுகொலை-17, தமிழர்கள்.
45. 1987, மே,27, தோணிதாட்டமடு படுகொலை- 13, தமிழர்கள்.
46. 1987, மே,29, அல்வாய் வேலிவந்த படுகொலை-37, தமிழர்கள்.

ஐக்கியதேசிய கட்சி ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனவின் 46, தமிழ் இனப்படுகொலை தான் இவை..!

(இன்று 19/07/2025, இதே நாள் 19/07/1979, ல் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேறி 46, ஆண்டுகள் அந்த சட்டத்தை நிறைவேற்ற சொன்ன ஜனாதிபதி ஜே ஆர் .ஜெயவர்தன, நிறைவேற்றிய நீதி அமைச்சர் கே.டவிலியூ. தேவநாயகம் இருவரும் இன்று உயிருடன் இல்லை ஆனால் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொடிய சட்டம் இன்றும் உயிர்வாழ்கிறது)

யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக  சனிக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டது.

இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்தம்!

இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதை துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டாம் பாரக் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கு துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன்படி, ஸ்வெய்டா மாகாணத்தில் சிரியாவின் குறிப்பிட்ட அளவிலான படையினர் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

எனினும், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள சிரிய தூதரகம் இதற்கு உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் கடந்த புதன்கிழமை திடீரென இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதன்போது, ட்ரூஸ் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.

பெண்கள், குழந்தைகள் என 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தெற்கு பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன.

சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள ட்ரூஸ் மக்களை பாதுகாப்பதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை!

இலங்கையில்  உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில்  பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று  விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது,

எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கிமீ சுற்றளவில் 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் அல்லது எந்தவொரு வான்வழிப் பொருளையும் பறக்கவிடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது .

விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு மற்றும் விமானங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டும் வகையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்தையடுத்து பல விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்களில் சிக்கிவருவதால் பயணிகளுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் முகமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது.

இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர்.

தீப்பிடித்த பிறகு பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து   வெளியேறியுள்ளனர்.

விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வௌியான போதிலும், காயமடைந்த இளைஞனின் நிலைமை மோசமாக இல்லை என நிமல் பண்டார குறிப்பிட்டார்.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் அவர்களின் செயல்பாடுகளை அவதானித்து வருவதாகவும், ஏனைய தரப்பினர் வழமை போன்று தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.