Home Blog Page 81

செம்மணியில் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகின – இன்றும் 7 மனித என்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இன்றைய (21) அகழ்வின் போது 07 என்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று (21) ஆரம்பமானது.

இந்தநிலையில், இன்று 07 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றிலிருந்து எதிர்வரும் 15 நாட்களுக்கு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது என  ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மாதாந்திர கச்சா எண்ணெய் கட்டணம் சுமார் 300-400 மில்லியன் டொலர்கள் என்றும், இதை விட செலவு குறைந்ததாக இருந்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதைப் பரிசீலிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அரசாங்க பரிவர்த்தனைகளின் கீழ் கச்சா எண்ணெய் வாங்குவதற்குதடை இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் அமெரிக்காவில் எரிபொருள் வர்த்தகத்தில் எந்த அரசு நிறுவனமும் ஈடுபடவில்லை என அவர் கூறியுள்ளார்.

தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க அதிபருக்கான நோபல் பரிசுக்காக 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுவோம் – காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சங்கத்தினரால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

1948 முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல், கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்பட்டன.

அந்த வகையில் பல உலகத் தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், இன்று ஒரே ஒரு தலைவருக்கு மட்டுமே செயற்பட தைரியமும் தெளிவும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும்போது உலகம் அதை கேட்கிறது. சிலர் மரியாதைக்காகவும், மற்றவர்கள் பயத்திற்காகவும் அதனை கேட்கின்றனர். ஆனால், அவர் காரியங்களைச் செய்து முடிக்கிறார்.

ஜனாதிபதி டிரம்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் தமிழர்களுக்கு நீதியை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், உலகெங்கிலும் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரைக்கும் வண்ணம் ஐந்து மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்போம் என உறுதியளிக்கிறோம். உலகம் ஒருபோதும் எதிர்பார்க்காத அமைதித் தூதராக டிரம்ப் மாறட்டும் என்றனர்.

விவசாயக் காணியை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

வவுனியா செட்டிக்குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (21) மெனிக்பாம் மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது தமக்கு அருவித்தோட்டம் பகுதியில்  வழங்குவதாக கூறிய ஒரு ஏக்கர் விவசாய காணியினை  வழங்க வேண்டும்  என தெரிவித்தே   முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள்,  “ அரச அதிகாரிகளே ஏழைகளின் ஒருவேளை உணவை நிம்மதியாக உண்ணவிடு, மெனிக்பாமில் வசிக்கும் மக்களுக்கு வயல் காணி ஒரு ஏக்கர் வீதம் வழங்கு” போன்ற பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

தாங்கள்  2004 ஆம் ஆண்டு சிதம்பரபுரம் முகாமில் இருந்து மெனிக்பாமிற்கு 1/2 ஏக்கர் மேட்டுக்காணி மற்றும் 01 ஏக்கர் வயல் காணி தருவாதாக தெரிவித்து குடியேற்றம் செய்தனர். ஆனால் தற்போது வரை எங்களிற்கு வயல் காணி தரப்படவில்லை.

மேலும் கூலி வேலையினை மேற்கொண்டே எமது வாழ்வாதாரம் போகின்றது. அத்தோடு கடந்த காலத்தில் கிராம சேவையாளரிடம் சென்றும் வயல் காணி தொடர்பாக நாங்கள் பதிவு செய்திருந்தோம். அதன் மூலமாக ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது. ஆனால் 20 வருடமாகியும் எங்களிற்கு கிடைக்கவில்லை.

அத்தோடு அருவித்தோட்டம் கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள்  பல ஏக்கரில் வயல் காணிகளை பெற்று வயல் செய்கின்றனர். ஆனால் எங்களிற்கு எந்த வயற் காரணிகளும் கிடைக்கவில்லை எனவே எங்களிற்கு தருவதாக தெரிவித்த வயற்காணியினை தரவேண்டும் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் 2004ம் ஆண்டில் இருந்து அருவித்தோட்டம் பகுதியில் பயிர் செய்து வந்திருந்தோம். 2005,2006,2007 காலப்பகுதியில் காணியினுள் இராணுவம் எங்களை நுழைய விடாமல் எங்களை வற்புறுத்தி இராணுவத்தகற்கு வழங்க கோரியிருந்தனர்.

மேலும் குறித்த காணிகள் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் 13 ஏக்கர் அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளாகும். மேலும் இக்காணி உறுத்தினை நீக்கி வேறு ஒருவருக்கு வழங்க முடியாத நிலையும் இருந்தது.

இந்நிலையில் குறித்த காணிக்குரியவர் இல்லாத நிலையில் காணி இல்லாதவர்கள் கூட குறித்த காணிகளை துப்பரவு செய்து பயிர்ச் செய்கை நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பிரதேச செயலகம் மற்றும் கமநல சேவை நிலையத்தாலும் வழங்கப்பட்டது.

குறிப்பாக 2010ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச காலத்தில் எந்தவொரு நிலமும் பாவனையின்றி இருக்க முடியாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.

மேலும் காணி இல்லாதவர்களிற்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட போது மூவர் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் போது இருவர் அவற்றினை கைவிட்டு செல்லும் நிலை காணப்பட்டதுடன், கைவிடப்பட்ட பகுதிகள் காடுகளாக காணப்பட்டமையால் காட்டு விலங்குகளின் தாக்கம் பெருமளவு ஏற்பட்டது.

இதன்போது பிரதேச செயலகத்தால் குறித்த பகுதியினை அருகில் உள்ளவர்கள் துப்பரவு செய்து பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டதுடன், உரியவர்கள் வரும் போது நட்ட ஈட்டினை பெற்றுக்கொண்டு வழங்க வேண்டும் என பிரதேச செயலகத்தால் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் 10 ஏக்கர் பதினைந்து ஏக்கர் என விவசாயம் செய்வதாக கூறினர். இது தவறான கருத்தாகும் ஏனெனில் குறித்த காணிகளிற்கு உரியவர்கள் குத்தகைக்கே வழங்கியுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு காணி அடையாளப் படுத்தப்பட்டு காணகயினை துப்பரவு செய்து எடுக்கவில்லை என தெரிவித்தார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்,

ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் இதுதொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் சுலோசனாவுடனும் நேரடியாக சென்று இது தொடர்பாக கலந்துரையாடிய போது  குறித்த அருவித்தோட்டம் பகுதியில்  விவசாயம் செய்வதற்கு மேலும் காணி இருப்பதாக பிரதேச செயலாளரினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு குறித்த காணியினை துப்பரவு செய்ய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டால் வழங்குவதற்கான நடவடிக்கைகளை வழங்க முடியுமென கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணியினை பெற்றுத்தருவதற்கான தீர்மானத்தினை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் குறித்த ஆர்ப்பாட்டமானது கைவிடப்பட்டிருந்தது.

வசதி படைத்தோருக்கும் போசாக்கின்மை பாதிப்பு – வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

அன்று எம்மிடத்தே போசாக்கின்மை வறுமையால்தான் தலைதூக்கியிருந்தது. இன்று வசதி படைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உணவுப் பழக்கத்தை ஆக்கிரமித்திருக்கும் துரித உணவுகளால் இத்தகைய பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய இளையோர் சுகநலக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடைபவனி இன்று திங்கட்கிழமை (21) தெல்லிப்பழையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தங்கள் கடமைக்கு மேலதிகமாக சமூகத்துக்காக பணியாற்றுபவர்கள், கடமையை மாத்திரம் செய்பவர்கள், கடமையைக் கூட செய்யாதவர்கள் என்று மூன்று வகையினர் இருக்கின்றனர். இவர்களில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பரா.நந்தகுமார், முதலாவது வகைக்குள் அடங்குவார். அவர் தனது கடமைக்கும் அப்பால் சென்று இந்தச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக சிந்தித்து புத்தாக்கமாகச் செயற்படுகின்றார். அவரைப் போன்று இந்தச் சமூகத்துக்கு இப்போது அவசிய தேவையாக உள்ள இவ்வாறான விடயங்களை ஏனையோரும் முன்னெடுக்கவேண்டும்.

தாய் – சேய் நலம், உணவும் போசாக்கும், பாடசாலை சுகாதாரம், சுற்றுச்சூழல் – தொழில்முறை சுகாதாரம், ஆன்மிக உள நல சுகாதாரம் ஆகிய 5 தலைப்புக்களின் கீழ் இந்தக் கண்காட்சி முன்னெடுக்கப்படுகிறது.

செம்மணியைத் தொடர்ந்து சம்பூரிலும் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Unknown 1 4 செம்மணியைத் தொடர்ந்து சம்பூரிலும் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்காலிகமாக ஓய்விற்காக நிறுத்தப்பட்டிருந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் இன்று 21.07.2025 ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நேற்றைய தினம் திருகோணமலை சம்பூர் பகுதியில் மனிதப் புதைகுழி என சந்தேகப்படும் இடும் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, சம்பூர் கடற்கரையை அண்டிய பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித மண்டையோடு உள்ளிட்ட சில மனித எலும்புத் தொகுதிகள் ,மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் தொடர்பிலும் சம்பூர் தொடர்பிலும் சற்று ஆழமாக உற்று நோக்கினால்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் கொடூரமான காலப்பகுதியையும் குறிப்பாக வடக்குக் கிழக்கில் நடந்த மனிதப் பேரவலங்களான மனிதப் படுகொலைகளின் வரிசையில் கிழக்கில் சம்பூரில் நிகழ்ந்த படுகொலைகளின் பயங்கரத்தையும், அதன் நினைவுகளையும் மீண்டும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளதோடு அதற்கு நீதி கிடைக்குமா எனும் ஏக்கத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை (2025.07. 17) மூதூர் – சம்பூர் கடற்கரையோரப் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில், கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி (MAG) எனப்படும் கண்ணிவெடி அகழும் நிறுவனம், தங்களுக்குரிய தளபாடங்கள் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு, கடந்த வியாழக்கிழமை முதல் கண்ணிவெடி அகழும் பணியைத் தொடர்ந்தது.

Unknown 2 3 செம்மணியைத் தொடர்ந்து சம்பூரிலும் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

இதன்போது 2025.07.20 ஞாயிறு குறித்த பகுதியில் மனித மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டு பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டு அது நீதிபதிக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டிருந்ததோடு குறித்த பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை (2025.07.23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரைக் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அகழ்வுப் பணியின்போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியை அண்மித்த பகுதியிலிருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கில் இராணுவமும், முஸ்லீம் ஊர்காவல் படைகளும் இணைந்து அரசின் திட்டமிடலுடன் நடத்தப்பட்ட படுகொலைகளாகக் கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தின் உடும்பன்குளம்,திராய்க்கேணி,வீரமுனை உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை,மகிழடித்தீவு,சத்துருக்கொண்டான்,சித்தாண்டிப் படுகொலைகள் போன்ற மிகக் கொடிய படுகொலை நடந்த இடமே இந்த சம்பூர்ப் படுகொலையாகும்.

திருகோணமலை சம்பூர் பகுதி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது பல மனித உரிமை மீறல்களுக்கும், பொதுமக்கள் படுகொலைகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் 1990 07.07 ஆம் திகதி இப்பகுதியில் நடந்த ஒரு கோரமான சம்பவத்தில், அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பூர் கிராமத்தில் வெட்டியும் சுட்டும் 57 பேர் கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவங்களின் விளைவாக, அப்பகுதி மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டு அவர்களின் சொத்துகளும்,காணிகளும் கூட சூறையாடப்பட்டன இவ்வாறான பெரும் துன்பங்களை அனுபவித்த அந்த மக்களின் உயிரிழந்த உறவுகளின் உடல்கள் மீட்கப்படாமலும், முறையாக அடையாளம் காணப்படாமலும்,உரிய முறையில் அல்லாமல் புதைக்கப்பட்டும் இருந்தது.

இந்தப் படுகொலைகளின் நினைவாகவே சம்பூர் கடற்கரையோரத்தில் தூபியொன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த மக்களால் அங்கு அஞ்சலிகள் செய்யப்படுவதோடு நீதிக்கான குரல் தொடர்ந்தும் ஒலித்து வந்தது.
இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் அந்தப் பகுதி மக்களின் நீதி மற்றும் உண்மைக்கான தேடலுக்கு மேலும் நல்ல நம்பிக்கையும் வலுவும் சேர்த்துள்ளது.

ஜனாதிபதி மாளிகைகள் மக்கள் நலனுக்காக பயன்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் தவிர, நாட்டின் ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் மக்களின் நலனுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளன என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் நெடுந்தீவுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது, மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கும் மோசடியாளர்களுக்கும் தப்பிக்க இடமில்லை. சட்டம் தனது பாதையில் செயல்படும்; அரசியல் தலையீடு இருக்காது.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும், வறுமையை ஒழிக்க “சமூக சக்தி” வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கி பயணிக்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மடகஸ்கார் சிறையில் இலங்கை மீனவர்கள் மனிதாபிமானமற்ற முறையில், நடத்தப்படுவதாக தகவல்

கைது செய்யப்பட்டு, மடகஸ்கார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை கடற்றொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில், நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 2ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து மடகஸ்கார் பாதுகாப்பு படையினரால் 8 இந்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள், உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள கடற்றொழிலாளெர்களுக்கு மருந்து வழங்கப்படுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடற்றொழிலாளர்கள் 16 டொன்களுக்கும் அதிகமான சுறாக்களை சட்டவிரோதமாக பிடித்தமையினாலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பா.ஜ.க கேள்வி

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பாரதீய ஜனதாக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே கேள்வி எழுப்பியுள்ளார்.

1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ராஜீவ் காந்தி அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ரொனால்ட் றீகனுக்கு (Ronald Reagan) அனுப்பியதாக கூறப்படும் கடிதத்தை அவர் இதற்கு சான்றாக பகிர்ந்துள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு அட்டூழியங்களைச் செய்தன என்பதை இந்தக் கடிதம் விபரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இறையாண்மை கொண்ட நாடாக இருக்கும் இந்தியா அமெரிக்காவுடன் இந்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டது ஏன்? என்றும் பாரதீய ஜனதாக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி நிறுவனத்தின் ஆரம்ப செலவுகளை மீள செலுத்த இலங்கை தயாராகிறது…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப செலவுகளுக்காக இலங்கை 300 முதல் 500 மில்லியன் ரூபாவை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலை நிர்ணயம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து இந்தியாவின் அதானி நிறுவனம் அதன் மின்சக்தி திட்டத்தில் இருந்து விலகியது. எனினும் அந்த திட்டத்தை இலங்கையில் செயற்படுத்துவதற்காக ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை மீண்டும் செலுத்துமாறு அதானி நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பான கடிதம் கடந்த மே மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. குறித்த நிறுவனம் கோரியத்துக்கு அமைய, பணத்தை மீண்டும் செலுத்த வேண்டுமா? என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சட்ட ஆலோசனை கோரியுள்ளது.

இந்தநிலையில் சில செலவுகளை மீண்டும் செலுத்துவதற்கான சட்ட ஆலோசனை நேற்றைய தினம் (18) பெறப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, சுமார் 300 முதல் 500 கோடி ரூபாய் வரையான தொகையை இலங்கை செலுத்த வேண்டும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் அதானி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய சரியான தொகை தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் 350 மொவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக காற்றாலை மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கு அதானி நிறுவனம் 442 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்ய தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.