Home Blog Page 80

காஸாவில் உணவுக்காக காத்திருக்கும் சிறுவர்களை கொலை செய்யும் இஸ்ரேல் – உலக நாடுகள் கடும் கண்டனம்

காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள்  யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட  பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதையும் கண்டித்துள்ளனர்.

மனிதாபிமான உதவி பொருட்களை பெற முயன்ற 800 பொதுமக்கள் கொல்லப்பட்டமை பயங்கரமானது என தெரிவித்துள்ள 25 நாடுகளும் இஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு பயன்படுத்தும்முறை ஆபத்தானது இது ஸ்திரமின்மையை உருவாக்குவதுடன் காசா மக்களின் மனிததன்மையை பறிக்கின்றது என தெரிவித்துள்ளன.

காணி வர்த்தமானியை இரத்து செய்து மக்களுடையதென உறுதி செய்யுங்கள்: மயிலிட்டி காணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் குறித்த விடையத்தின் ஏற்பாட்டாளருமான யே.யாட்சன் பிகிறாடோ வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி,இன்று காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு ஒன்று யாழ் பாடி தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்னமும் 2808 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது. ஆனால் யாழ.மாவட்டச் செயலகம் 2800 ஏக்கர் நிலம் என்று தெரிவிக்கின்றது.

இவ்விரு அரச நிறுவனங்களும் முதலில் ஒரு சமநிலையில் தகவல் பதிவை கொண்டிருக்க வேண்டும். அதேவேளை மாவட்ட செயலர் எதேச்சத்தனமாக தகவல்களையும் வழங்கக் கூடாது.

இதேநேரம் 2013 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 6317 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் இருப்பதாக என்று கூறியிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் அரச காணிகள் என்றும் தெரிவித்தது. இதேவேளை கடந்த ஆட்சியாளர்களால் பல ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

அதேபோன்று வீதிகள், ஆலயங்கள் என்றும் மக்களிடம் கையளிக்கப்பட்டன. ஆனால் இந்த வர்த்தமானியின் பிரகாரம் இன்னமும் அரச காணிகளாகவே மக்களின் காணிகள் இருக்கின்றன. எனவே குறித்த வர்த்தமானியை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.

இதற்கு இன்றைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இரத்துச் செய்தால் மடுமே மக்களின் காணி மக்களுக்குரியதாகும். இல்லையேல் அவை சட்டவிரோதமானவையாகவே இருக்கும்.

அதன்படி காணிகளை விடுவிப்பதுடன் இவ்வளவு காலமும் அக்காணிகளை வைத்து விவசயம் உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்வதற்கான குத்தகை இழப்பீடும் உரிய நபர்களுக்கு வழங்குவதுடன் வர்த்தமானியையும் இரத்துச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டப்படுதல் வேண்டும் என்ற வழக்கு ஆகஸ்ட் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில், திங்கட்கிழமை (21) மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் சட்டமா அதிபருக்கு, 21ம் திகதி திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு களுவாஞ்சிகுடி நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த தவணையின் போது, கட்டளை பிறப்பித்திருந்தது.

எனினும் இந்த வழக்கு   திங்கட்கிழமை (21) விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரை பிரதி நிதித்துவப்படுத்தி எவரும் ஆஜராகி இருக்க வில்லை. எனினும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இருந்து இரண்டு சட்டத்தரணிகள் ஆஜாராகி சமர்ப்பணங்களை முன் வைத்தனர்.

அவர்கள், களுவாஞ்சிகுடி நீதிமன்றத்துக்கு காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஒரு விரிவான கடிதத்தினை ஏற்கனவே அனுப்பி இருந்ததாகவும் குருக்கள் மடம் மனித புதை குழி தோண்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அதே நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருப்பதாகவும் கூறினார்கள்.

இவற்றை செவிமடுத்த நீதிபதி ஏற்கனவே திட்ட வரைபு ஒன்று சட்ட வைத்திய அதிகாரியினால் நீதி மன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது என்று சுட்டிக்காட்டினார். அது 2020ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டதால் கால மாற்றத்தினால் அதை மீளாய்வு செய்து மீள அந்த திட்ட வரைவை நீதிமன்றத்துக்கு அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் கட்டளையிட்டார்.

அத்துடன் அடுத்த தவனையான 25.08.2025ம் திகதி சட்டமா அதிபரை ஆஜராகுமாறு கட்டளையிட்ட நீதவான்   இந்த வழக்கை அந்த திகதிக்கு ஒத்தி வைத்தார். குறித்த இவ் வழக்கில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துர் ரஊப் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்ததுடன் அவரின்  சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

12.071990 ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய காத்தான்குடியை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை  மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு இடம் பெற்று சந்தேகத்துக்கிடமான மனித புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தை தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையாக்கி இருந்த நிலையில் 04.10.2020ல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துர் ரவூப் என்பவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 11.07.2025ந் திகதியாகிய வெள்ளிக்கிழமை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில்   நகர்த்தல் பத்திரத்தை சமர்ப்பித்தனர். அந்த வழக்கானது திறந்த மன்றில் மீள எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டம் தீவிரமாகும் – பிரபாத் பிரியந்த

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இன்றைய தினத்துக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக மின்சார சபையின் சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக மின்சார பாவனையாளர்களுக்கோ மின்சாரசபை ஊழியர்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தற்போது மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து, அடுத்துவரும் ஓர் இரண்டு வருடங்களில் இது தனியார் மயமாகும் வகையில்  25, 30 பங்குகளாக பிரிக்கப்படும். அவ்வாறானதொரு மறுசீரமைப்பே தற்போது  முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்தை முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொண்டுவரும்போது, இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை பத்தவைத்து, கிழித்தெரிந்து, புதிய சட்டமூலம் கொண்டுவருவதாக தெரிவித்த இந்த அரசாங்கம், தற்போது அந்த சட்டமூலத்தில் சில வசனங்களை மாற்றம் செய்து, காஞ்சன விஜேசேகர கொண்டுவந்த சட்டமூலத்தையே மீண்டும் கொண்டுவந்திருக்கிறது.

மின்சாரசபை சட்டமூலம் ஒன்றை தயாரிக்க முடியுமான அறிவுடைய யாரும் இந்த அரசாங்கத்தில் இல்லையா என கேட்கிறோம். மின்சக்தி அமைச்சர் மின்சார சபை தொழிற்சங்கம்,  ஊழியர்களுக்கு முகம்கொடுப்பதில்லை, கலந்துரையாட இடமளிப்பதில்லை, கடிதங்களுக்கு பதிலளிக்காமல், வேறு சிலருக்கு இந்த நடவடிக்கையை கையளித்துவிட்டு மறைந்து செயற்படுகிறார்.

அதனால் மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுறை அறிவித்துவிட்டு இன்று காலை 10 மணிக்கு கொழும்புக்கு வர தீர்மானித்திருக்கிறது. சேவை பாதுகாப்பு, மின்சார பாவனையாளர்களை எதிர்காலத்தை பாதுகாக்கும்  வகையிலான  சட்டபூர்வ ஒப்பந்தம் ஒன்றுக்கு மின்சாரசபை ஊழியர்களுடன் வரவேண்டும் என்றே நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கிறோம். அரசாங்கம் முறையான பதில் ஒன்றை வழங்காவிட்டால் இன்று மாலையாகும்போது எமது தொழிற்சங்க போராட்டத்தை மேலும் தீவிரமாக்குவோம் என்றார்.

செம்மணி மனித புதைகுழி : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு !

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன்  தெரிவித்தார்.

”அகழ்வில் முதலாவது ‘சைட் வன்’ புதைகுழியில் நான்கு மண்டையோட்டுத் தொகுதிகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை இரண்டாவது புதைகுழியில் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மொத்தமாக 7 அடையாளம் காணப்பட்டுள்ளன.”

யாழ்ப்பாண பொலிஸாரினால் நடத்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கைகள் குற்றவியல் விசாரணை பிரிவுக்கு (CID) மாற்றப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

ஜூலை 10 ஆம் திகதி அகழ்வாய்வுக் குழுவினருக்கு ஓய்வு அளிக்க தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டபோது, 15 நாட்களாக தொடர்ந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து 65 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை 72 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி உள்ளிட்ட புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

”மனித புதைகுழிகளில் இருந்து எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கவும், சாட்சிகளைப் பாதுகாக்கவும், பயனுள்ள விசாரணைகளை நடத்தவும், இறந்தவர்களை அடையாளம் காணவும் போதுமான நிதி ஒத்துழைப்பு, நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கவும்” அரசாங்கத்திற்கு பரிந்துரைக்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வுப் பணிக்காக 11.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தை வெளிப்படுத்திய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார “பணம் ஒரு பிரச்சினை அல்ல” என இந்தியாவின் தி இந்து ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் திகதி அகழ்வாய்வுத்தளத்தில் வழக்கு விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு மீனவர்களின் தொடரும் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் – விதுரன்

இலங்கை வடக்குக் கடற்பரப்பில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இத்தனை வருடங்கள் கழிந்தும் தீராத ‘கடல் – அரசியல்’ பிரச்சினையாகவே நீண்டுகொண்டிருக்கிறது.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப் பில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து, இழுவைப் படகுகள் மூலமாக தாராளமாக மீன்களை வாரி அள்ளிச் செல்கின்றனர்.
இந்த நிலைமைகள் தொடர்வதால் வடக்கில் வாழும் பாரம்பரிய மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றார்கள். அத்துடன் வடக்கு கடல்வளம் விரைந்து அழிக்கப்படும் நிலைமையும் தொடர்கிறது.
கடந்த வாரம், கூட பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடு பட்டமைக்காக மன்னார் கடற்பரப்பில் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள னர்.
ஜுன், ஜுலையில் மீன் இனப்பெருக் கத்துக்கான ஓய்வுகால நிறைவுக்குப் பின்னர் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்ற நிலைமைகள் தீவிரமடைந்து வருகின்றன.
அத்துடன், இதுபற்றி பல பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டாலும் ஒரு தீராப் பிரச்சினையாக தொடர்கதையாகின்ற நிலைமைக ளும் நீண்டு கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தான், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இடையிலான முக்கியமான தொரு சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
அந்த சந்திப்பின் போது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடிக்கின்றனர் என்பதையும், அதனால்  இலங்கை மீனவர்கள் கடும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்கின்றனர் என்பதையும் அமைச்சர் நேரடியாகவே குறிப் பிட்டார்.
அமைச்சர் சந்திரசேகர் குறித்த ‘உணர்வு பூர்வமான’ விடயத்தினை கையிலெடுப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, வடக்கு மீனவர்களின் அபிமானத்தை பெற்றுக்கொள்வது. இரண்டாவது, இந்தியாவுடன் அவருக்கும், அவரது கட்சிக்கும் காணப்படுகின்ற ‘ஒவ்வாமை’. எது எவ்வாறாக இருந்தாலும், அமைச்சர் சந்திரசேகர், காய்தல், உவத்திலின்றி, தமிழக மீன வர்களின் அத்து மீறல்களால் வடக்கு மீனவர்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகளை நேரடியாக சுட்டிக்காட்டியமை வரவேற்கப்பட வேண்டியது.
ஆனால், தமிழக மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் சந்திரசேகர், மீண்டும் இந்தியாவிடமிருந்து வடக்கு மீனவர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவித்திட்டங்களை கோரியமையும், சீனோர் போன்ற கட்டமைப்புக்களுக்கு உதவியளிக்க கோரியமையும், பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மீனவ துறைமுகங்களை கட்டியெழுப் பும் கோரிக்கையை விடுத்தமையும் ‘சரணாகதி’ நிலைமையையே வெளிப்படுத்தி இருக்கிறது.
அமைச்சரின் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வழக்கம்போல் இருநாடுகளின் நட்புறவுகளை பேண வேண்டும், ஒரே மொழி பேசும் மீனவர்களுக்கு இடையிலான முரண் பாடுகளை சமாதானமாகத் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.
இலங்கையில் கடமையாற்றும் உயர்ஸ் தானிகருடன் விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை போரின் பின்னரான கடந்த 16 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் விளைவுகள் எதுவும் நிகழவில்லை. பேச்சுக்கள் வெறும் செய்திகளாக மட்டும் வெளிவந்து மறைந்து விடுகின்றன.
வடக்கு மீனவர்களின் விவகாரம் தொடர் பாக பாராளுமன்றத்திலும் தீவிரமான விவாதங்கள் எழுகின்றன. ஆனால் அதற்கும் உருப்படியான பதில்களை ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் வழங்கியதாக பதிவுகள் இல்லை. இத்தகையதொரு நிலையில் கடந்தவாரம், மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மீனவர் பிரச்சினை தொடர்பான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முக்கியமான கேள்வி எழுப்பி யிருக்கின்றார்.
‘இலங்கை கடற்படையிடம் போதிய ரோந்து கப்பல்கள் இருக்கின்றன, தேவையான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. ஆனால் இந்திய மீனவர்கள் சட்டவி ரோதமாக நம்முடைய கடற்பரப்பில் மீன் பிடிக்கும்போது அதை தடுப்பதில் ஏன் தோல்வியடைகிறார்கள்?’ என்பது தான் அவரது கேள்வி.
அதுமட்டுமன்றி, வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் முழத்துக்கு முழம் முகாம்களை இலங்கைப் படைப்பிரிவுகள் நிறுவியிருக்கின்றன. கடற்படையும் அவ்வாறு தான் முகாம்களை கடற்கரையோரமெங்கும் நிறுவியிருக்கின்றது. ஆனால் கடற்படையால் இந்திய மீனவர்க ளின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை. இது அதன் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது. இலங்கை கடற்படையின் இயலுமையை இங்கு கவனத்தில் கொள்வது முக்கியமானது.
போருக்குப் பின்னர் கடற்படை தனது பலத்தை அதிகரித்த போதும், இலங்கையின் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் பலத்தை அதிகரித்திருக்கிறதா என்பதில் கேள்வி கள் உள்ளன.
கடற்படையிடம் 6 ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இருக்கின்றன. இவ்வாறான பெரிய கப்பல்கள் இருந்தாலும் அதிவேகத் தாக்குதல் படகுகள் முக்கியமானவை. அவையே அத்து மீறல்கள் கட்டுப்படுத்தக் கூடியவை. விரைவாக செயற்பட கூடியவையாகவுள்ளன.
தற்போதைய நிலையில் இலங்கை கடற் படையானது சிறிய வகை படகுகளையும் பெரிய வகை ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களையுமே பெருக்கிக் கொண்டிருக்கிறது. நடுத்தர வகையான அதிவேகத் தாக்குதல் படகுகளை அது பலப்படுத்தவில்லை. ஒரு காலகட்டத்தில் இலங்கை கடற் படையிடம் அதிவேக தாக்குதல் படகுகள் இருந்தன. ஆனால் இப்பொழுது இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ தகவல்களின் படி 9 அதிவேகத் தாக்குதல் படகுகள் மட்டுமே உள்ளன. இந்த படகுகள் இல்லாமல் எந்தவொரு கடல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
ஆகவே, கடற்படையைப் பொறுத்தவரை யில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுப்பது நீண்ட கால முக்கிய பொறுப்பாக இருக்க போகிறது. அப்படியான நிலையில் அதனை தடுப்பதற்கு ஏற்றதொரு பலமான கடற்படையை அது கட்டியெழுப்பி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு கடற்படை முயலவில்லை. வடக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதிகளை ஆக்கிரமிப்பதையே இலக்காக கொண்டிருக் கின்றது.
வடக்கு மீனவர் சங்கங்களைப் பொறுத்த வரையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் சம்பந்தமாக பலவிதமான விசனங்களை கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பாக, இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் விலகி நடக்கும் போக்கும், சர்வதேச அழுத்தங்களும் காரணமாக கடற்படையினர் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதும் முக்கியமானது.
கடற்படையின் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக குறைந்துவிட்டன. ஒருபக்கம் வடக்குப் பகுதிகளில் போதிய ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், மறுபக்கம் கடற்படையினர் சில நேரங்களில் கைது செய்தாலும், கப்பல்கள் விரைவில் விடுவிக்கப்படுகின்றன என்பதும் தங்களின் நம்பிக்கையை முற்றிலும் குலைப்பதாகவும் குறிப்பிடுகின்றன.
மேலும் கடற்படையினர் தொடர்ந்தும் சட்டவிரோத மீன்பிடிப்பை தடுப்பதில் கையறு நிலையில் இருப்பதற்குக் காரணம் அரசியல் அழுத்தங்கள் தான் என்றும். வடபகுதி கடல்வளங்கள் அழிந்து செல்லும் போதிலும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது என்றும் மீனவ சங்கங்கள் கூறுகின்றன.
இவ்வாறான நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் பற்றி கரிசனைகளை வெளிப்படுத்துகின்றபோது, தமிழகத்திலும், இந்தியாவிலும் குறித்த விடயத்துக்கு தீர்வளிப்பது பற்றி ஆராய்வதற்கு பதிலாக கச்சதீவு விவகாரத்தை கையிலெடுக்கும் போக்கு தீவிரமடைந்து காணப்படுகின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கச்சதீவு விடயம் ஒரு ‘அரசியல் கருவியாக’ மாறியுள்ளது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இருந்து விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வரையில் அனைத்து கட்சிகளும் கச்சதீவின் உரிமையை மீளப் பெறவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சட்டவிரோத மீன்பிடிப்பை தவிர்ப்பதற்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு திராணி இருப்பதாக காண முடியவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கச்சதீவு விடயத்தில் இந்திய மத்திய அரசை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிகளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எடுக்கவில்லை. ஏனென்றால், இழுவைப்படகு உள் ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளின் முதலீட்டாளர்களாக இருப்பவர்கள் இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரு வர்த்தகர்களும், அரசியல்வாதிகளும் தான்;. அப்படியிருக்கையில் அவர்களால் எவ்வாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்?
இவ்வாறான நிலையில், தமிழக மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்துக்காக போராட்டங்களை நடத்துகின்றார்கள். சரியான கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். ஆனால் இழுவைமடி முறையிலான மீன்பிடியை கைவிடுவதற்கு தயாராக இல்லை. எது எவ்வாறாக இருந்தாலும் இரு நாடுகளின் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க இரண்டு நாடுகளும் பயனுள்ள தீர்வுகளை உடனடியாக எடுக்க வேண்டும். முதலாவதாக, இரு நாடுகளும் ஒருங்கிணைந்த கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. இரண்டாவதாக, இழுவைபடகு மீன்பிடி முறைகளை முற்றிலும் தடை செய்யும் சட்ட நடவடிக்கைகளை இந்தியா விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், இலங்கை கடற்படையினரின் செயற்றிறனை அதிகரித்து, சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கானசுதந்திரத்தை வழங்கு வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும்.  இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிப்பை அரசியல் நட்பு காரணமாக விடுவிப்பதை நிறுத்தி, கடல்வளங்களை பாதுகாக்க நம்பிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இல்லையெனில், வடக்கு, தமிழக மீனவர்கள் இரு நாட்டு அரசியல் நாடகங்களுக்குள் சிக்கி நரபலியாகும் நிலைமையும் வடக்கு கடல்வளம் அழிவின் விளிம்புக்குச் செல்லும் நிலைமையும் துயர நிலைமை தொடரும் என்பது தான் கடைசி உண்மை.

வங்கதேசத்தில் கல்லூரி மீது விழுந்த விமானம் – 19 பேர் உயிரிழப்பு

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் அந்நாட்டின் விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

F-7 BGI ரக விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் டாக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள உட்டாரா பகுதியில் உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடம் கல்லூரி வளாகம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மனித புதைகுழிகளில் அகழ்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

மனிதபுதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்கவேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம்சட்டத்தினை  ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை ஆராயவேண்டும் என்றும் அந்த ஆணைக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பான குழுவின் 29வது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அமர்வில் ஐ.நாவின் குழு பலவந்தமாக காணாமல் போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் 25 பக்க அறிக்கை முன்வைக்கின்றது.

நபர் ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் மனித உரிமையை மிக மோசமாக மீறும் செயல் என்பதை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் நினைவூட்டியுள்ளது.பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து சமூகங்களையும் பாதித்துள்ளது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்று (20) தெரிவு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவராக யோகராசா கனகரஞ்சினியும் செயலாளராக சிவானந்தன் ஜெனிற்றாவும் உப தலைவராக வல்லிபுரம் அமலநாயகியும் உப செயலாளராக செபஸ்டியாம் தேவியும் பொருளாளராக கதிர்காமநாதன் கோகிலவாணியும் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாக தெரிவுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள், ‘எமது சங்கம் 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை நேர்த்தியாக வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இயங்கி வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு வருட காலமாக தனி நபர்களின் பிரச்சினைகளால் ஒருவர் பிரிந்து சென்று அதனை மழுங்கடிக்கும் நோக்கோடு செயற்படுகிறார். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் என்பது அமைப்பாகவே இருக்கும். அதில் இருக்கும் நபர்கள் மாறிச் செல்லலாம், அதன் அமைப்புக்காக உருவாக்கப்பட்ட சின்னத்தையோ கடிதத் தலைப்பையோ தனி நபர்கள் உரிமை கோரமுடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அடியோடு அழிக்க வேண்டும் : சிறீதரன்

46 வருடங்களாகத் தமிழர்களை துன்புறுத்தி வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலாக்கப்பட்டு 46 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டுக் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது வரையில் அமுலில் உள்ளமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நினைவுபடுத்தியுள்ளார்.

குறித்த சட்டமானது, ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட நோக்கம் வேறாக இருந்தாலும் பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு உட்பட இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் வலிகளையும், வேதனைகளையும் சுமந்த தரப்பாக அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசினர் உள்ளனர்.

அவர்கள் தற்போது இந்தச் சட்டத்தை அமுலில் வைத்திருப்பதற்கு முனைவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் ஜே.வி.பியினர் பயங்கரவாதத்  தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.
தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றுச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர்கள்  முயற்சிக்கின்றார்கள்.

ஜே.வி.பியின் இந்த மாற்றமானது ஏற்றுக்கொள்ள முடியாதது.  ஆகவே, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச தரப்புக்கள் பயங்கரவாதத்  தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் உரிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.