Home Blog Page 77

யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23.07.2025) கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கறுப்பு ஜூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி (UNP) உறுப்பினர்களால் திட்டமிடப்பட்ட போதிலும், அதன் பின்னர் கணிசமான சிங்கள பொதுமக்களின் பங்கேற்புடன் 1983 ஜூலை 23 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கி, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

அந்தகவகையில், 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கா அரசு, சிறிலங்கா சிங்கள பாதுகாப்பு படையினர், இனவெறி கொண்ட காடையர்கள் மற்றும் பொதுமக்களால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பான கறுப்பு ஜூலை சம்பவம் இன்னமும் தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவாகவே இருக்கிறது.

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயம் – கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்இ குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இலங்கை வரலாற்றில் கருப்பு ஜூலை ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது.

தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியது மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்தது – இது உண்மைஇ நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும்.

இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடா தமிழ்-கனடியர்களுடன் நிற்கிறது. இந்தப்  நாளில் இழந்த உயிர்களை நாங்கள் போற்றுகிறோம் அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம்.

ஜே.ஆர்.ஜெயவர்தன விட்ட தவறை அனுரகுமார திசாநாயக்காவும் விட்டால் பாரிய பாதிப்பு ஏற்படும்!

கறுப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று 42 ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும் இதுவரையிலும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்று இன்று (23) பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு முன்னர், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இதேபோன்ற ஒரு நாளில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
42 ஆண்டுகள் கடந்தும் இந்த விடயத்தில் எவ்வித பொறுப்புக்கூறலும், நீதியும், விசாரணையும் இல்லாமல் இருக்கிறது.

இந்த வரலாற்றில் எந்த அரசாங்கம் வந்தாலும், இதுவரையிலும் நீதியான முறையில் அதற்கான மன்னிப்பையோ அல்லது பரிகாரத்தையோ தேட முற்படவில்லை.  ஜே.ஆர்.ஜெயவர்தன விட்ட தவறை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விடுவாரானால், நாடு தான் விரும்பும் திசையில் பயணிக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்திருந்தார்.

அது சுயநிர்ணயத்துடன் கூடிய தமிழர்களுக்கான தீர்வை நோக்கியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க, இந்த நாட்டின் அரசாங்கமொன்று தமது படை பலத்தை பயன்படுத்தி கடுமையான வேதனையுடன், இன்று வரை தீர்க்க முடியாத பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நாளாக இன்றைய நாள் இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியாக இலங்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட நாளாகவும் இந்த நாள் உள்ளது.  அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

திட்டமிட்ட வகையில் இலங்கையில் இனவாதத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் உந்துதலுடன் குறிப்பாக கொழும்பு உட்பட வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் திட்டமிடப்பட்டு வேட்டையாடப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.  சில சாதாரண சிங்கள மக்கள் தங்களின் நண்பர்களை பாதுகாப்பதற்காக தங்களால் முடிந்த அளவு தமிழ் மக்களை மறைத்து வைத்திருப்பதற்கும் உதவியிருந்தார்கள்.  தற்போதைய அரசாங்கம் தங்களை சகல சந்தர்ப்பங்களிலும் இனவாதிகள் இல்லை என்று கூறி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் வடக்கு கிழக்கு மக்கள் கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூரும் இன்றைய தினம் (23), அரசாங்கம் தெற்கில் இருந்து இளைஞர் குழுக்களை வடக்குக்கு அனுப்புகிறது.

அந்த நினைவு கூரலை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் சகோதரத்துவம் என்ற பெயரில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.  ஜே.வி.பி அரசாங்கத்துக்கு இனவாதம் இல்லை என்றால், இன்றைய தினம் கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்திருக்க வேண்டும்.  இன்றைய தினத்தை சகலரும் நினைவு கூரும் தினமாக தற்போதைய அரசாங்கம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு மாறாக வரலாற்றை மறைக்கவும் மாற்றியமைக்கவும் தற்போதைய அரசாங்கம் முயல்கிறது.
இதுவரையிலும் உத்தியோகபூர்வ மன்னிப்பு ஏதும் கிடைக்காத நிலையில், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

‘அரகலய’ போராட்ட விவகாரம்: ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு

2022ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘அரகலய’ போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, அப்போதைய பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் ஊடாக, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2ஆவது சரத்தின் கீழ் பிரகடனப்படுத்திய, அவசரகால நிலை, தன்னிச்சையானதும், அதிகாரம் அற்றதுமான செயற்பாடு என்று மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் யசந்த கோத்தாகொட ஆகியோரே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.

எனினும், மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் மற்றுமொரு உறுப்பினரான நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர தமது தீர்மானத்தை அறிவிக்கும்போது, பதில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கான கட்டணங்களை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அத்துடன், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், லிபரல் இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளும் இணைந்து விடயம் தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தன.

கறுப்பு ஜூலை வாரம் இன்று ஆரம்பம்!

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை இனப்படுகொலை இடம்பெற்று 42 ஆண்டுகளாகின்றன. யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வன்முறைக்கான காரணம் உருவாக்கப்பட்டது.

இதன்படி, 1983 ஜூலை 24ஆம் திகதியன்று இரவு குறித்த படையினரின் சடலங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் கொழும்பு – பொரளை பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த இன வன்முறையின் ஆரம்பம் பொதுவாக கறுப்பு ஜூலை என்று பதிவாகியுள்ளது. இந்த வன்முறை 1983 ஜூலை 30ஆம் திகதி வரை நீடித்தது. இந்த நாட்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
18 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டன. 5 ஆயிரம் வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன், 90 ஆயிரம் முதல் 1 இலட்சத்து 50ஆயிரம் தமிழர்கள் இடம்பெயர்ந்தனர்.

கறுப்பு ஜூலை வன்முறையின்போது சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கைத்தீவை விட்டு புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கு இந்த வன்முறையே வித்திட்டது. அத்துடன், இந்த வன்முறையே தமிழர் போராட்டம் தீவிரமாவதற்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், இலங்கையின் இனப்பிரச்சினையையும் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது.

செம்மணி அகழ்வுக்காக 11.7 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுக்காக 11.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் தற்போது நாடு முழுவதும் 14 பாரிய புதைகுழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரழிவு மரணங்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இழப்புகளை அனுபவித்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான அரசியல் ரீதியிலான விருப்பம், தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தவகையில், மனித புதைகுழி விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 18ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, இன்றைய தினம் (23) 5 மனித என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அதன்படி, செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரையில் 67 என்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறை: ஹரிணி

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து,இன்று புதன்கிழமை (23) பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள்

இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர்.

பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார்:

கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம்: 

“ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன,” என்று பிரதமர் விளக்கமளித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: 

புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும்.

அமுலாக்கத்தின் தொடக்க நிலை: 

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

 வகுப்பறை மாணவர் எண்ணிக்கை: 

ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 – 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன. கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்: 

முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம்

இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சம்பூரில் மனித எச்சங்கள்: வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு இன்று புதன்கிழமை (23) விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு சட்ட வைத்திய அதிகரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும்  30 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் (23) வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தனர்.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறும் குறித்த பகுதியை நீதிமன்றின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம்  குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் குறித்த பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வருகின்றது அப்பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற இரு தரப்பினரதும் அறிக்கைகளை ஆராந்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிய வருகின்றது.

மீனவர் விவகாரம்: இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்- வைகோ வேண்டுகோள்

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் எனமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆகவும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன.

இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும்  நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.  அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

அண்மையில் 13.07.2025 அன்று ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது.

பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப்  பறிக்கும் வகையில்இ இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து  மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும்.

தொடர்ச்சியான கைதுகள் மீனவர்களுக்கு நெருக்கடியை உருவாக்குவது மட்டுமல்லாமல்இ பாக் விரிகுடா பகுதியில் மீன்பிடிப்புத் தொழிலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மீன்பிடி தொழிலின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றது.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்துஇ கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா தகவல்

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறல்கள் அரங்கேறுவது தொடர்கிறது.

‘ராணுவ நடவடிக்கை காரணமாக உறவு, உடமை என அனைத்தையும் இழந்து நிற்கும் காசா வாழ் மக்களுக்கு உண்ண முறையான உணவு கூட கிடைப்பதில்லை. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்தனர். அதில் 31 பேர் உதவி தேடி சென்றவர்கள். இதை மத்திய கிழக்கு பகுதியில் பிரபலமாக உள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த 2023-ல் அக்டோபர் 7-ம் திகதி தொடங்கியது. அன்று முதல் ஜூலை 22, 2025 வரையில் இந்த மோதலில் சுமார் 59,106 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த சூழலில்தான் காசாவில் பட்டினி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நஸர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. உதவி மையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து காசாவில் களப்பணியில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். காசாவுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் பிரத்யேக சிறப்பு வழித்தடத்தை ஏற்படுத்தும் வகையில் கத்தாரில் ‘இஸ்ரேல் – ஹமாஸ்’ இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மோதல் காரணமாக அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில் உதவி முகாம்களை மக்கள் அணுக முயற்சிக்கும் போது அவர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்படுகின்றனர். மொத்தத்தில் காசா பகுதி பூலோக நரகமாக மனிதர்களுக்கு மாறியுள்ளது.

இந்நிலையில், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவின் இயக்குனர் முகமது அபு சால்மியா, “காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 72 மணி நேரத்தில் 21 குழந்தைகள் இறந்துள்ளனர்” என தெரிவித்தார். காசாவில் உள்ள உலக சுகாதார மையத்தின் அமைப்புகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்ததாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

வெடிகுண்டு சப்தம், குண்டுவெடிப்பு, நெருப்பு, புழுதி, புகை, தாக்குதலில் அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும் மனித உடல்களின் பாகங்களுக்கு மத்தியில்தான் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாக காசாவில் முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள் தங்களது வாழ்க்கை சூழலை பகிர்ந்துள்ளனர். மக்கள் தஞ்சம் அடைந்துள்ள முகாம்கள், வசித்து வரும் கூடாரங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். “பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான்” என கடந்த 2021-ல் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருந்தார். இப்போது அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. வேறு எந்த மாற்றமும் அங்கு ஏற்படவில்லை.