Home Blog Page 76

செம்மணி மனிதப் புதைகுழி,தமிழினப் படுகொலையின் சாட்சி:கருணாஸ் தெரிவிப்பு

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழ தேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள்  காலத்தின் கறையான் அரித்து எலும்புக்கூடுகளாய் மாறி, அவை ஈழத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலைதான் என்பதை அடையாளம் காட்டுகின்றன. செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான சேது கருணாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இனப்படுகொலைக்கு செம்மணிதான் சாட்சி. இதற்கு முன்னால் எத்தனையோ இனப்படுகொலை சாட்சிகளைப் பன்னாட்டு அவையில் முன்னிறுத்தினோம். ஆனால் நீதிக்கு இடம் தராத ஐ.நா அவைகள் கள்ள மெளனம் காத்தது. இந்த செம்மணி அகழாய்வு உண்மையிலாவது, இனப்படுகொலையின் இன்னல்களை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளட்டும்.

செம்மணி  மனிதப் புதைகுழி 2009ஆம் ஆண்டிற்கு முன் நிகழ்ந்திருக்கிலாம் அல்லது பின் நிகழ்ந்திருக்கலாம். எப்போது நடந்தாலும், சிங்களவரால் நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலைதான் என்பதை செம்மணியும் மற்ற அகழ்வாய்வுகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

2009க்கு பின்னும் கூடுதலாய் அதே புதைகுழி உத்தியை சிங்கள பேரினவாத அரசு கையாண்டுள்ளது என்பது இப்போது கூடுதலாய் வெளிப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் செம்மணியை விட சர்வதேச சமூகத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்!?

இதுவரை 80க்கும் மேற்பட்ட அகழ்வாய்வு தொகுப்புகள் கிடைத்துள்ளன. எந்த நாட்டிலும் இதுபோல், அகழாய்வில் அதிர்ச்சியில்லை. தமிழர் அகழாய்வில்  முன்னோர் வாழ்வியல் படித்துள்ளோம். ஆனால், தமிழீழ தேசத்தில்தான் எலும்புக் கூடுகளின் வலியை உணரமுடிகிறது.

தாயும் குழந்தையும் கட்டி அணைத்தபடி மடிந்த எலும்புக்கூடுகளின் காட்சி, காலம் கடந்தும் நம் காயங்களை மீண்டும் காயப்படுத்துகிறது. பள்ளிச்சிறுவர்களின் புத்தகப் பை, பொம்மையோடு கண்டறிந்த அகழாய்வு  கொடுமையின் உச்சத்தை தொடுகிறது. எண்ணிலடங்கா எலும்புக்கூடுகளில் சிறுவர் சிறுமியர் அதிகம் என்பதை  உலகம் கண்டுணரா அதிர்ச்சி.

வதைக்கப்பட்டும் புதைக்கபட்டும் வல்லுறவில் மறைக்கப்பட்டும் எத்தனைப் பெண்கள்! அத்தனையும் செம்மணியில் எலும்புக்கூட்டின் சாட்சியங்கள். இன்னும் இலங்கை அகழாய்வு நீண்டாலும் கள்ள மெளனம் சாதிக்கும்  இவ்வுலகம்.

நாம் சிங்கள பெளத்த பேரினத்தின் அநீதிகளை பன்னாட்டு அவையில் எடுத்துரைப்போம். மக்கள் திரள் போராட்டம் வழியாய் நமக்கான நீதிக்குக் குரல் கொடுப்போம்.

ஒன்றிய அரசு, அண்டை நாட்டில் நிகழ்ந்த அநீதிக்கு ஐ.நா அவையில் குரல் கொடுக்க வேண்டும்! இதற்கு முன் தமிழினத்திற்கு செய்ததை, செம்மணி மனிதப் புதைகுழியை அறிந்தும் கண்டும் காணமல் இருக்கக்கூடாது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி படுகொலைக்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுகோள் விடுக்கவேண்டும். மேலும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

செம்மணி நமது தமிழினப் படுகொலைக்கு சாட்சியத்திற்கு அடையாளம்.  ஆனாலும், இன்னும் இதுபோன்ற தோண்டப்படாத அகழாய்வுகள் இன்னும் எத்தனையோ  உள்ளன. காலம் ஈழத் தமிழனத்திற்கு நல்ல தீர்ப்புகள் வழங்கும். நாம்  தொடர்ந்து போராடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

1983 கறுப்பு ஜூலை: ஈழத்தமிழர்களின் மறக்க முடியாத இனப்படுகொலை!

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும்  என்று  காரைதீவு  பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது வருடத்தை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு  நேற்று (23) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரைதீவு எல்லையில் கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத இந்த துயரான நாளானது இன்று 42 வருடங்களாக மறக்கவும் முடியாமல் காணப்படுகின்றது.

1983 ஜூலை 23 தொடக்கம் 30 காலப்பகுதியில்  இனப்படுகொலை அதாவது தமிழினத்தின் படுகொலை மிகவும் கொடூரமாக காணப்பட்டது.

அதாவது பேரினவாத சக்திகளால் இந்த கொடூரமான நிகழ்வு எங்களது இனப்படுகொலை, குறைந்தது அந்த காலகட்டத்தில் மூவாயிரம் பேர், இந்த இனப்படுகொலை செய்யப்பட்டதாக அறிந்துள்ளோம்.

இந்தவகையில் இந்த  இனப்படுகொலைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் அந்த நினைவேந்தலை செய்வோம்.- என்றார்.

தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றன!

தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்றுபோகின்ற தன்மையும் காணப்படுகிறது என யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தின் 135ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ். கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம்  புதன்கிழமை (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது வரலாற்றுத் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தொல்லியல் மையங்கள் சுற்றுலாத்துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும்போது மக்கள் இது தொடர்பில் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

யாழ். மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக்கொண்டு செல்கின்றார்கள். பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்றுப் பெறுமதி மிக்கவை. மிகப் பெறுமதியான பொக்கிஷமாக யாழ்ப்பாண கோட்டை காணப்படுகிறது.

ஆனால், எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாக உள்ளது. காலி கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்றவேண்டும். அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு வாழும் கோட்டையாக  யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில் கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள்.

மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது.

பட்டினி நிலையால் காசா பெரும் துன்பத்தில் சிக்குண்டுள்ளது – உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

காசாவில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலையால் 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ள நிலையில்,  மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும் உணவு மையங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்து பாதிக்கப்படு வருகின்றனர்.

இந்த நிலையில், காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.

பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படுவதை விட குறைவானதாக காணப்படுகின்றது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மிகப்பெருமளவு மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்,காசாவின் போர்க்களத்தில் சிக்குண்டுள்ள 2.1 மில்லியன் மக்கள் குண்டுகள் துப்பாக்கிரவைகளிற்கு அப்பால் மற்றுமொரு கொலைகாரனை எதிர்கொள்கின்றனர் அது பட்டினி என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது போசாக்கின்மையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையை பார்க்கின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் 20 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் மிக மோசமாக என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- நீதியை நிலைநாட்ட விடாமல் தடுப்பது யார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய ”பிக்போஸ்” யார் என்பது தொடர்பிலும், அந்த தாக்குதல் தொடர்பான நீதியை நிலைநாட்ட விடாமல் தடுக்கும் ”பிக்போஸ்” யார் என்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் வெளிவராத தகவல்கள் தொடர்பில்  முதற்தடவையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 2024 நவம்பர் 24ஆம் திகதி முன்வைக்கப்பட்ட பி அறிக்கையின் ஊடாகவே வெளிவந்தன.

இதில் முதல் அறிக்கையாக சனல் 4 அலைவரிசைக்கு வழங்கிய அசாத் மௌலானவினால் வெளியிடப்பட்ட தகவல்களாகும். அடுத்ததாக ஆயர் சிறில் காமினிக்கு கிடைத்த வட்ஸ்அப் தகவலாகும். இந்த சாட்சிகளுக்கமைய இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். சிவனேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானும், சுரேஷ்சாலே என்பவருமே ஆகும்.

ஆனால் இன்றுவரை இவர்களை கைது செய்வதற்கோ, இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவோ அவர்களை சந்தேக நபர்களாக கைது செய்வதற்கோ குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முமுடியாமல் போயிருக்கிறது.. அத்துடன் சாரா என்பவர் இறந்துவிட்டதாக காட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன..

ஆனால் இதில் முக்கியமானதாக வவுனதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் கொல்லையடிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்த ஆயுதங்கள் சஹரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  புலனாய்வு பிரிவு  அறிக்கையொன்றையும் முன்வைத்துள்ளது. அதில் உளவுத் தகவல்களை வழங்குபவர் ஒருவரின் பெயரும் உள்ளது. அவர் தகவல்களை வழங்கியும் புலனாய்வு படையின் கட்டளை அதிகாரி உள்ள சிலரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் அந்த தகவல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன்படி செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம். இதன்படி உளவு வழங்கியவரின் தகவல்கள் உண்மையானது என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள போதும் இது வரையில் அந்த புலனாய்வு அதிகாரிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. இதில் தமிழ் மொழிபெயர்ப்புக்காக சென்ற அப்பாவி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு படை கட்டளை அதிகாரி பாராளுமன்றத்திற்குள் இருக்கின்றார்.

இதேவேளை கடந்த ஜனவரி 7ஆம் திகதி அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் கூறுகையில், நாங்கள் அந்த விசாரணைகளை புதிதாக ஆரம்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். விசாரணைகளுக்கமைய 12 சிவில் சாட்சியாளர்களும், 7 இராணுவ உறுப்பினர்களும், 26 பொலிஸாரும் அடங்கலாக 48 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

ஆனால் கிழக்கு மாகணத்தின் புலனாய்வு அதிகாரி, கட்டளை அதிகாரி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதை தடுப்பது யார்? நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக செல்வதை தடுப்பவர்கள் யார்? யார் அந்த பிக் போஸ், இந்த கள்வர்களை, பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டவர்கள் இராணுவத்தின் அதிகாரங்களை பயன்படுத்தி சஹரானை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அரசியல் நாடகங்களை செய்வதற்காக இந்த வேலைகளை செய்யும் அந்த பிக் போஸ் யார்?

2018 ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கினார். 2018 நவம்பர் 9ஆம் திகதி வீரவிக்கிரம விபூசன மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இரண்டு வாரங்களில் கிழக்கு மாகாணத்தின் இராணுவ கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் 3 வாரங்களில் வவுனதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இறந்தனர். அதன்போது முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அதனை செய்தது போன்று நாடகமொன்றை முன்னெடுக்க முயற்சித்தனர்.  அந்த நாடகத்தை இராணுவ புலனாய்வு பிரிவே தயாரித்தது.

இதேவேளை அருண ஜயசேகர 87/89 காலப்பகுதியில் ஜே.வி.பிக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டவர். அவருக்கு அதற்கான பதக்கமும் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ் பிரதமராக இருந்த போது கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக இருந்துள்ளார். 2019 நவம்பரில் ஓய்வுபெற்ற அவர், 2023ஆம் ஆண்டில் நீங்கள் அரசாங்கத்திற்கு வரப்போகின்றீர்கள் என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சங்கம் என்று தேசிய மக்கள் சக்தியில் ஆரம்பித்து தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்து பிரதி பாதுகாப்பு அமைச்சராகியுள்ளார். எப்படி இவர் இந்த இடத்திற்கு வந்தார். இதனை செயற்படுத்தும் பிக் போஸ் யார் என்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோருகின்றேன் என்றார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23.07.2025) கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கறுப்பு ஜூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி (UNP) உறுப்பினர்களால் திட்டமிடப்பட்ட போதிலும், அதன் பின்னர் கணிசமான சிங்கள பொதுமக்களின் பங்கேற்புடன் 1983 ஜூலை 23 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கி, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

அந்தகவகையில், 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கா அரசு, சிறிலங்கா சிங்கள பாதுகாப்பு படையினர், இனவெறி கொண்ட காடையர்கள் மற்றும் பொதுமக்களால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பான கறுப்பு ஜூலை சம்பவம் இன்னமும் தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவாகவே இருக்கிறது.

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயம் – கனடா பிரதமர் மார்க் கார்னி

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்இ குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இலங்கை வரலாற்றில் கருப்பு ஜூலை ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது.

தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியது மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்தது – இது உண்மைஇ நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும்.

இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடா தமிழ்-கனடியர்களுடன் நிற்கிறது. இந்தப்  நாளில் இழந்த உயிர்களை நாங்கள் போற்றுகிறோம் அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம்.

ஜே.ஆர்.ஜெயவர்தன விட்ட தவறை அனுரகுமார திசாநாயக்காவும் விட்டால் பாரிய பாதிப்பு ஏற்படும்!

கறுப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று 42 ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும் இதுவரையிலும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்று இன்று (23) பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு முன்னர், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இதேபோன்ற ஒரு நாளில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
42 ஆண்டுகள் கடந்தும் இந்த விடயத்தில் எவ்வித பொறுப்புக்கூறலும், நீதியும், விசாரணையும் இல்லாமல் இருக்கிறது.

இந்த வரலாற்றில் எந்த அரசாங்கம் வந்தாலும், இதுவரையிலும் நீதியான முறையில் அதற்கான மன்னிப்பையோ அல்லது பரிகாரத்தையோ தேட முற்படவில்லை.  ஜே.ஆர்.ஜெயவர்தன விட்ட தவறை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விடுவாரானால், நாடு தான் விரும்பும் திசையில் பயணிக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்திருந்தார்.

அது சுயநிர்ணயத்துடன் கூடிய தமிழர்களுக்கான தீர்வை நோக்கியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க, இந்த நாட்டின் அரசாங்கமொன்று தமது படை பலத்தை பயன்படுத்தி கடுமையான வேதனையுடன், இன்று வரை தீர்க்க முடியாத பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நாளாக இன்றைய நாள் இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியாக இலங்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட நாளாகவும் இந்த நாள் உள்ளது.  அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

திட்டமிட்ட வகையில் இலங்கையில் இனவாதத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் உந்துதலுடன் குறிப்பாக கொழும்பு உட்பட வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் திட்டமிடப்பட்டு வேட்டையாடப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.  சில சாதாரண சிங்கள மக்கள் தங்களின் நண்பர்களை பாதுகாப்பதற்காக தங்களால் முடிந்த அளவு தமிழ் மக்களை மறைத்து வைத்திருப்பதற்கும் உதவியிருந்தார்கள்.  தற்போதைய அரசாங்கம் தங்களை சகல சந்தர்ப்பங்களிலும் இனவாதிகள் இல்லை என்று கூறி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் வடக்கு கிழக்கு மக்கள் கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூரும் இன்றைய தினம் (23), அரசாங்கம் தெற்கில் இருந்து இளைஞர் குழுக்களை வடக்குக்கு அனுப்புகிறது.

அந்த நினைவு கூரலை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் சகோதரத்துவம் என்ற பெயரில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.  ஜே.வி.பி அரசாங்கத்துக்கு இனவாதம் இல்லை என்றால், இன்றைய தினம் கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்திருக்க வேண்டும்.  இன்றைய தினத்தை சகலரும் நினைவு கூரும் தினமாக தற்போதைய அரசாங்கம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு மாறாக வரலாற்றை மறைக்கவும் மாற்றியமைக்கவும் தற்போதைய அரசாங்கம் முயல்கிறது.
இதுவரையிலும் உத்தியோகபூர்வ மன்னிப்பு ஏதும் கிடைக்காத நிலையில், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

‘அரகலய’ போராட்ட விவகாரம்: ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு

2022ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘அரகலய’ போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, அப்போதைய பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் ஊடாக, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2ஆவது சரத்தின் கீழ் பிரகடனப்படுத்திய, அவசரகால நிலை, தன்னிச்சையானதும், அதிகாரம் அற்றதுமான செயற்பாடு என்று மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் யசந்த கோத்தாகொட ஆகியோரே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.

எனினும், மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் மற்றுமொரு உறுப்பினரான நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர தமது தீர்மானத்தை அறிவிக்கும்போது, பதில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கான கட்டணங்களை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அத்துடன், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், லிபரல் இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளும் இணைந்து விடயம் தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தன.

கறுப்பு ஜூலை வாரம் இன்று ஆரம்பம்!

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை இனப்படுகொலை இடம்பெற்று 42 ஆண்டுகளாகின்றன. யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வன்முறைக்கான காரணம் உருவாக்கப்பட்டது.

இதன்படி, 1983 ஜூலை 24ஆம் திகதியன்று இரவு குறித்த படையினரின் சடலங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் கொழும்பு – பொரளை பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த இன வன்முறையின் ஆரம்பம் பொதுவாக கறுப்பு ஜூலை என்று பதிவாகியுள்ளது. இந்த வன்முறை 1983 ஜூலை 30ஆம் திகதி வரை நீடித்தது. இந்த நாட்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
18 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டன. 5 ஆயிரம் வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன், 90 ஆயிரம் முதல் 1 இலட்சத்து 50ஆயிரம் தமிழர்கள் இடம்பெயர்ந்தனர்.

கறுப்பு ஜூலை வன்முறையின்போது சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கைத்தீவை விட்டு புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கு இந்த வன்முறையே வித்திட்டது. அத்துடன், இந்த வன்முறையே தமிழர் போராட்டம் தீவிரமாவதற்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், இலங்கையின் இனப்பிரச்சினையையும் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது.