Home Blog Page 75

தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர்!

கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, “எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 26 அன்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் நஜுவில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நடந்துள்ளது. குறித்த தொழிற்சாலையில் இலங்கையர் பணிபுரிந்தார்.

தொழிற்சாலையில் இருந்த சக தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளியை செங்கல் குவியலில் கட்டி வைத்து, ஃபோர்க்லிஃப்ட் மூலம் தூக்கி, துன்புறுத்தி கேலி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொழிலாளி டிசம்பர் 2024 இல் வேலை அனுமதி முறையின் கீழ் E-9 விசாவில் கொரியாவிற்கு சென்றதாகவும் சம்பவத்திற்கு முன்னர் சுமார் மூன்று மாதங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜியோனம் புலம்பெயர்ந்த தொழிலாளர் மனித உரிமைகள் வலையமைப்பு, தொழிலாளி வேலையில் தவறு இருந்ததாக தெரிவித்து சக தொழிலாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பின்னர், சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதுடன், கொரிய அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்தால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை தொழிலாளி உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்து சம்பவம் தொடர்பில் தென் கொரிய ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில்,

“என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு கலாச்சார அதிகார மையத்திலும் இதுபோன்ற துஷ்பிரயோகம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது மன்னிக்க முடியாத வன்முறைச் செயல்.

சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு எதிரான மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும். புலம்பெயர்ந்த தொழிலாளியின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை யாரும் சுரண்டவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

வெளிநாட்டில் பணிபுரியும் கொரிய குடிமக்களை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை!

வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டிருந்து.  இது தொடர்பான கள விஜயத்தின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2025.07.17 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் (24) பிரதேச சபை தவிசாளர் சே.கருணாநிதி, பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், உதவி பிரதேச செயலாளர் திருமதி. துசிதீபா, தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபில்யூ.யு.எஸ்.பெரேரா, பிரதேச சபை செயலாளர் சாந்தகுமார், குடியேற்ற உத்தியோகத்தர் ந.கஜகோகுலன், உதவி வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் பி.ஜெகதீஸ்வரன், அடைவு வன நிலதாரி எம்.பி.எம்.அசாருதின், தொல்பொருள் திணைக்கள வலய உத்தியோகத்தர் ஜி.கிரிஷாந்த், கிராம அலுவலர் சாள்ஸ் அன்ரனி, கிராம அலுவலர் திருமதி ஜீவராணி ஆகியோர் குறித்த கள விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலாளரினால் குறித்த களவிஜயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தொல்பொருளியல் இடமான வட்டவன் பகுதியில்  பிரதான வீதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டரில் பாலக்காட்டு பகுதியில் உள்ளோக்கி செல்லும்போது மலைத்துடர் காணப்படுகின்றது இம்மலை தொடரில் அண்ணளவாக 12 இடங்களில் தொல்பொருள் அடையாளங்களான புராதன எழுத்துக்களும், குகைகளும் காணப்படுபட்டதை அவதானிக்க முடிந்தது எனவும், தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட மலைத் தொடரை சுற்றியுள்ள எல்லைப் பிரதேசங்களில் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்கும் அதேவேளை நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தொல்லியல் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளரினால் குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2025.08.14ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னதாக விசேட தொழிற்ப குழுவினர் இவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டதுடன் உத்தேசமாக மலை உச்சியில் இருந்து அண்ணளவாக 50 மீட்டர் பகுதி சுற்றளவு உடைய இடங்களையே தொல்லியல்துறை ஒதுக்கமாக எல்லைப் படுத்துவதாக தெரியப்படுத்தப்பட்டதுடன் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் மக்கள் வழமை போன்று நெற்செய்கையில் ஈடுபட முடியும் என தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்லடி பகுதியில் பாசன பப்பத விகாரையை சூழ தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லை கற்கள் இடப்பட்டு காணப்படுகின்றது. இப்பகுதியில் பயிர்ச்செய்கை பண்ணப்படும் காணிகளும் சிறிய பற்றை காடுகளும் காணப்படுகின்றது இதில் வேளாண்மை மற்றும் மேட்டுநில பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் காணியானது சுமார் 15 தொடக்கம் 20 ஏக்கர் வரையும் காணப்படுகின்றது. தொல்பொருள் திணைக்கள எல்லைக்குள் ஒருவருக்கு காணி அளிப்பு பத்திரமும் ஒரு நபருக்கு காணி அனுமதி பத்திரமும் காணப்படுவதாக குறித்த கிராம அலுவலரினால் தெரியப்படுத்தப்பட்டது.

இப்பிரதேசத்தில் பற்றை காடுகளாக காணப்படுகின்ற தொல்பொருளியல் திணைக்களம் எல்லை கற்கள் காணப்படும் பகுதிகள் தொல்பொருளியல் தடயங்கள் காணப்படுவதால் அப்பகுதியை விடுவிக்க முடியாது என்றும் அப்பகுதிக்கு அப்பால் வெற்று காணிகளாக காணப்படுகின்றதும் எல்லை கற்கள் இடப்பட்டுள்ள காணிகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தீர்மானத்தினை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்று தற்போது இடப்பட்டுள்ள எல்லை கற்களை பிடுங்கி குறித்த பகுதியை விடுவிக்க ஆவண செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன அழிப்பு கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு…

0 இன அழிப்பு கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு...
தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றில் மறக்க முடியாத, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் அழிக்கப்பட்ட, இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் உள்ள வெளிக்கடை தியாகிகள் அரங்கில் இடம் பெற்றது.இதனை திருகோணமலை நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.
‘1983 களில் தமிழர்களுடை வாழ்வியலை அளித்த ஜூலை கலவரம், தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில்  தங்களுடைய வாழ்வை  அலங்கோலமாக்கி அலைந்து திரிந்து உடமைகளை உயிரை இழந்து புலம்பெயர் தேசங்களுக்கு கூடுதலான தமிழர்கள் இடம் பெயர்ந்து,  அல்லோல கல்லோலப்பட்ட நாள் ஒன்றினை இன்னுமொரு யுகத்துக்கும் சந்ததிக்கும் நினைவுபடுத்தி கடத்திச் செல்கின்ற அந்த நிகழ்வை திருகோணமலையில்  செய்கின்றோம்.
இந்த நாள் தமிழர்களுடைய ஒரு கரி நாளாக, தமிழர்களுடைய வாழ்வில் இனப்படுகொலையின் ஆரம்ப நாளாக இதனை பார்க்கின்றோம். தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. ஜூலை 23 தொடங்கிய கலவரம் அதற்கு பின்னர் பல்வேறு நாட்கள் இடம் பெற்று தமிழர்களை   அவர்களுடைம பண்பாட்டியலையும் வாழ்வியலையும் கூறு போட்ட நிகழ்வாக திருகோணமலை நண்பர்கள் வட்டம் சார்பாக நினைவு கூறுகிறோம்’ என  நிகழ்வில்   கலந்து கொண்டவர்கள்   கருத்து தெரிவித்தனர்.

மனித புதைகுழிகளுக்கு நீதிக்கோரி மன்னாரில் அமைதி பேரணி

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை வரையில் அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது.
இப்பேரணி, மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று (24) முற்பகல் 10 மணியளவில் அடம்பன் சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், “எங்கே எங்கள் உறவுகள்?”, “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?”, “வேண்டும் சர்வதேச விசாரணை!” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

பேரணி மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதைகுழி பகுதியில் நிறைவடைந்தபின், அங்கு இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டவர்களுக்கும் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று (24) நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சிறைவாழ்க்கை கண்காட்சியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள “விடுதலை விருட்சத்துக்கான ”  விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றன.
இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர்  சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான சந்தையை திறக்கும் நாடுகளுக்கு மாத்திரமே வரி குறைக்கப்படும் : அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கான சந்தையை திறக்கும் நாடுகளுக்கு மாத்திரமே வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை குறைப்பதற்கான முயற்சியில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ள அவர், ‘அதிக வரிகள் இல்லையென்றால்’ தங்களது வரியும் குறைக்கப்படும் என்ற வகையில் கருத்துரைத்துள்ளார்.

அவ்வாறில்லாமல் எந்த நாட்டுக்கும் அமெரிக்காவின் பூஜ்ஜிய வரியை பெறுவது சாத்தியமற்ற விடயமெனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அந்த அளவு 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த 30 சதவீத வரியை 19 சதவீதமாக குறைப்பது தொடர்பில் இலங்கை அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம்

இந்தியாவில் பிறந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள பல இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும் என்று தமிழகத்தின் குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நல ஆணைக்குழு தகவல்களை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.

விண்ணப்பங்களை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில், குடியுரிமைச் சட்ட விதிகளின் கீழ் சுமார் 300 இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை பெறுவதற்கான தகைமையை கொண்டுள்ளமை தெரியவந்தது.
தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 57 ஆயிரத்து 500 பேரை உள்ளடக்கிய வகையில் குறித்த ஆணைக்குழு மதிப்பீட்டை நடத்தியதுடன் குடியுரிமை பெறுவதில் அவர்களுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தது.

இதனையடுத்து குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் 1987ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1964 மற்றும் 1974 ஒப்பந்தங்களின் கீழ், இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்களால் வழங்கப்பட்ட இந்திய-இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள இந்திய வம்சாவளி தமிழர்கள் சிலரும் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அதேவேளை, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவுச் செய்து அவர்களுக்கான ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மணிக்கு நீதிக்கோரி கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையின் அமர்வின் போது தவிசாளர் தமது யோசனைகளை முன்மொழிந்தார். இதன்படி, செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்பு கூறல் செயல் திட்ட அதிகாரிகள், தொழில்நுட்ப ரீதியான உள்ளீட்டை வழங்கவும் கண்காணிப்பில் ஈடுபடவும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் 46ன் கீழ் 1 தீர்மானத்திற்கு அமைய இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அதிகாரிகளுக்கு தடையற்ற வசதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.

புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றால் கோரப்படும் அனைத்து நிதிக் கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதுவரை வெளிவந்த தகவல்களின் பிரகாரம் அனைத்து புதைகுழிகளிலும் சர்வதேச கண்காணிப்புடனான அகழ்விற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் போன்ற யோசனைகள் தவிசாளரால் முன்வைக்கப்பட்டன.

இதனை சபை உறுப்பினர் கந்தன் பரஞ்சோதி வழிமொழிந்ததுடன் சபை உறுப்பினர்களால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாடசாலைகளில் மாணவர் வரவு குறைவு: ஜனாதிபதி அனுரகுமார தெரிவிப்பு

20 மாணவர்களுக்கு குறைவான  406 பாடசாலைகளும் 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகளும் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று வருகை தந்த ஜனாதிபதி தனது  விசேட உரையில் இதனை தெரிவித்தார்.

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு,

20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகளும் உள்ளன.

அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141, 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.

குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.

சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்”- வைகோ பிரியாவிடை உரை

”தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’ என்று இந்தியாவின் மாநிலங்களவையில் பிரியாவிடையின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

இந்தியமாநிலங்களவையில் இன்று 24,07.2025 நடைபெற்ற பிரியாவிடையின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை:

இந்தப் பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

.1978, 1984 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த பெருமைமிகு அவைக்கு என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கருணாநிதிக்கு என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன். 2019 ஆம் ஆண்டில் இந்த மேலவைக்கு என்னை தேர்ந்தெடுத்து அனுப்பியதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவில் முன்பு நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இருந்த முரசொலி மாறனால் வார்ப்பிக்கப்பட்டவன் நான். நான் மேற்கொண்ட முயற்சியால், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அப்போதைய பிரதமர் வி.பி சிங்கால் அம்பேத்கரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழத் தமிழர்களின் துயரம் மற்றும் சிங்கள அரசாங்கத்தால் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் குறித்து 13 முறை கவன ஈர்ப்புத் தீர்மானத்தை இந்த அவையில் கொண்டுவந்து உரையாற்றியிருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக 19 மாதங்கள் ‘பொடா’ சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். ‘மிசா’ சட்டத்தின் கீழ் 12 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டேன். மொத்தத்தில், நான் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

பொடா சட்டத்தின் கீழ், எனது உணர்வுகளையும். நிகழ்வுகளையும் ‘சிறையில் விரிந்த மடல்கள் (From the portals of Prison)’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதினேன். இந்நூல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் செப்டம்பர் 3, 2004 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

பிரிவு என்றுமே மன வலியை ஏற்படுத்தக் கூடியது, மறக்கமுடியாதது. இந்த புகழ்மிக்க சபையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, நிர்மலா சீதாராமன், அஷ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் பூரி, டெரெக் ஓ’பிரையன், ஜெய்ராம் ரமேஷ், ப. சிதம்பரம், ராம் கோபால் யாதவ், திக்விஜய் சிங், திருச்சி சிவா, வில்சன், என்.ஆர். இளங்கோ, ஜெயா பச்சன், ஜான் பிரிட்டாஸ், மனோஜ் குமார் ஜா, சஞ்சய் சிங், தம்பிதுரை, சரத்பவார், தேவேகவுடா, பிரியங்கா சதுர்வேதி, பைசல்கான் மற்றும் எனது அண்டை மாநிலமான கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறக்கமுடியாத உரைகளைக் கேட்கும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது.

ஜான் பிரிட்டாஸ் மற்றும் மனோஜ் குமார் ஜா என் மீது பொழிந்த அன்பையும் பாசத்தையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது.

எங்கள் மூவரையும் மூன்று துப்பாக்கி வீரர்கள் (மஸ்கடியர்ஸ்) என்று அழைத்தார்கள். இந்த சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் அன்பையும் நட்பையும் இந்த பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் இழக்கிறேன் என்று நினைக்கின்ற போது மனம் வேதனைப் படுகிறது.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்தின விருது பெற்ற லாபம் ஈட்டக் கூடிய நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு தீர்மானித்தது. நான் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து, 25 தொழிற்சங்கங்களின் வேண்டுகோள் மனுவை அளித்தேன். என்.எல்.சி எனது தமிழ்நாட்டில் உள்ளது என்று நான் அவரிடம் கூறினேன். 25,000 தொழிலாளர்கள் இந்த தொழிற் நிறுவனத்தில் வியர்வை சிந்தி உழைத்து வருகின்றார்கள். எனவே இதை தனியார்மயமாக்கக் கூடாது என்று வாதாடினேன். ஏற்கனவே காபினெட் அமைச்சரவை என்.எல்.சி., நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இரண்டு அல்லது மூன்று நாள்களில் இது தனியார்மயமாக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு நிகழ்வில், மக்களிடையே “வைகோ எனது வளர்ப்பு மகன்” என்று நீங்கள் கூறினீர்கள். நான் பிறந்த தமிழ்நாட்டிற்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா? இந்த முடிவை தயவுசெய்து திரும்பப் பெறுமாறு நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர் வாஜ்பாய் வழக்கம் போல், கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, “என்.எல்.சி தனியார்மயமாக்கப்படக் கூடாது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்.எல்.சி. தனியார் மயமாக்கப்படாது” என்று உறுதி கூறினார். பிரதமரின் இல்லத்திலிருந்து ‘இந்து’ ஆங்கில செய்தித்தாளுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தேன்; அது மறுநாள் காலை ‘இந்து’ நாளேடு முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

தமிழக முதல்வராக அண்ணா இருந்தபோது, சட்டமன்றத்தில், “மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே எங்கள் இருமொழிக் கொள்கையாக இருக்கும்” என்று அறிவித்தார். இன்று கர்நாடக, மகாராஷ்டிரா, மேற்கு வங்க அரசுகள் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

மம்தா பானர்ஜியை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. ஒரு நாள், பிற்பகல் நேரத்தில் பேசவிருந்த அவர், என்னை நோக்கி விரைந்து வந்து, என் கருப்பு சால்வையை கேட்டு வாங்கி, “இன்று நான் பல எம்.பி.க்களுடன் போராட வேண்டும், இந்த சால்வை எனக்கு மன உறுதியையும் துணிவையும் தரும்” என்று கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, மம்தா பானர்ஜி “இந்தி திணிப்பு என்பது மொழியியல் பயங்கரவாதம்” என்று கூறியுள்ளார். எனக்கு ஒத்துழைப்பு அளித்த நாடாளுமன்ற செயலாளர் மற்றும் அவரது அனைத்து குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிஞர் லாங் ஃபெல்லோவின் கவிதையை இந்த அவையின் இளம் உறுப்பினர்களிடம், மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். வரலாறு படைத்த மனிதர்கள் அடைந்த உயரங்கள் , திடீர் விமான பயணத்தால் ஏற்பட்டது அல்ல, அவர்களின் சக தோழர்கள் தூங்கும்போது, இவர்கள் இரவில் உழைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, நீங்கள் கடுமையாக இரவு பகல் பாராது கண் துஞ்சாது உழைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

1963 ஏப்ரலில் இந்த பெருமைமிகு அவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்:

அவர் தனது கன்னிப் பேச்சில், “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் திராவிடர்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் வழங்க உறுதியான, தனித்துவமான, வித்தியாசமான ஒன்றைப் பெற்றுள்ளனர் என்று நான் கருதுகிறேன். எனவேதான் நாங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற விரும்புகிறோம். எதிர்காலங்களில், ஒரு புதிய பாராட்டு உணர்வு ஏற்படும், தெற்கின் தேவைகள் மற்றும் கோட்பாடுகள் நன்கு புரிந்து கொள்ளப்படும், மேலும் எனது பெருமைக்குரிய திராவிட நாட்டிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும்” என்றார்

நமது மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை.

1576 இல் ஹால்திகாட்டி போரின் தோல்விக்குப் பிறகு, மகா ராணா பிரதாப் சிங் பற்றிய அந்த பழங்கால மேற்கோளை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

உலர்ந்த புல்லின் ரொட்டிகள் கிடைக்கும் அந்த நேரம் வரை, ஓடைகளில் தண்ணீர் கிடைக்கும் அந்த நேரம் வரை, நான் வளிமண்டலத்தின் காற்றை சுவாசிக்கும் அந்த நேரம் வரை, என் சொந்த நிலத்திற்காக என் வாளை உயர்த்துவேன். இப்போது, நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்.” எனத் தெரிவித்தார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து : 100 கோடி அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானதால் கடல் சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்குமாறு சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கு இன்று வியாழக்கிழமை (24) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பிற்கு அருகே சிங்கப்பூர் கொடியுடன் வந்தடைந்த எக்ஸ்-பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்ப்பட்டு கடல் பகுதி பெரும் பாதிப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.