Home Blog Page 74

செம்மணி மனிதப் புதை குழி : சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை  நிலை நாட்ட முடியும்!

யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில்  சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை  நிலை நாட்ட முடியும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1996 ஆம் ஆண்டு செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்ட நிலையில் பதினைந்து மனித எலும்புக்கூடுகள் மட்டும்தான் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 80 மனித எலும்புக் கூடுகளை கடந்து விட்டது.

ஏற்கனவே செம்மணி புதை குழி  வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் குறித்த பகுதியில் 600 வரையான சடலங்கள் இருப்பதாக சாட்சியம் வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை கண்காணிப்பதற்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில் இலங்கை பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் பாரிய மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில் அதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயலக்கூடும்.

இந்நிலையில் தற்போது அகழ்வுப் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் அகழ்வப் பணிக்கான நிதிகளை தடையின்றி வழங்க வேண்டும்.

ஆகவே குறித்த புதை  குழி தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்வதே  சிறந்த தீர்வுக்கு வழிவகுக்கம் என அவர் மேலும் தெரிவித்தார் .

சுற்றுலாத் துறையை மேம்படுத்த 40 நாடுகளுக்கு இலவச விசா – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

‘Hotel Show Colombo 2025’ கண்காட்சி இன்று காலை கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், கடந்த காலத்தில், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணமின்றி இலங்கைக்கு வரும் வாய்ப்பை வழங்கினோம்.

இங்கிலாந்து உள்ளிட்ட மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன், மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணமின்றி இலங்கைக்கு வர அனுமதிக்கப்படுவர்.

இந்தத் தீர்மானத்தால், அரசு திறைசேரி ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும். இந்த நேரடி வருவாய் இழப்பு இருந்தாலும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் மறைமுகமாக நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.  என்றார்.

வடக்கு கிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் – கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி  கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா  புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது.

உண்மைக்கும் நீதிக்குமான  இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு  தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளைசர்வதேச விசாரணை பொறிமுறையை” கோரி நாளை இலங்கையின் வடக்கு – கிழக்கு எங்கும்  இடம்பெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக ‘மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு’ கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்னால் நாளை காலை 10 மணிக்கு போாராட்டம்,

கல்வி ஓர் அடிப்படை உரிமையாக அமைய வேண்டும் : கல்விச் சீர்திருத்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து

காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். அதனால் உத்தேச புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியானது ஓர் அடிப்படை உரிமையாக அமைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தி கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கையைத் தயாரித்து, ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போதும், பின்னர் வந்த தேர்தலிலும் முன்வைத்தது, சமூக இணக்கப்பாட்டை எட்டிக்கொண்டது.

அரசாங்கம்  கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஒரு வெள்ளை அறிக்கையை முன்வைக்கும் பட்சத்தில், அதன் ஊடாக சிறந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் முற்போக்கான கல்விச் சீர்திருத்தத்தை நோக்கிச் செல்ல முடியுமாக இருக்கும்.

கல்விச் சீர்திருத்தம் என்பது காலத்தின் அவசியமாகும். அது நிகழும்போது, குறித்த இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் எவ்வாறு அடைவது என்பது குறித்த தெளிவான புரிதல் காணப்பட வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். எந்தவொரு செயல்முறையும் ஒழுங்கற்ற முறையில் தொடங்கினால், அதன் முடிவு வெற்றிகரமான ஒன்றாக அமையாது.

இன்று நாட்டில் காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். கல்வி என்பது மனித உரிமையும் அடிப்படை உரிமையும் ஆகும்.

தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தால், நலன்புரி பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களான கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், வாழும் உரிமை, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், மதம் மற்றும் அரசியல் போன்ற உரிமைகள் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாக அமையும் விதமாக இருக்க வேண்டும். தற்போதைய கல்வி முறைமை புதுப்பிக்கப்பட வேண்டும்.

கல்வியை ஸ்மார்ட்டான ஒன்றாக மாற்றும் போது ஸ்மார்ட் மாணவர், ஸ்மார்ட் இளைஞன், ஸ்மார்ட் குடிமகன், ஸ்மார்ட் நாடு உருவாகும். கல்வியில் வழக்கமான மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை இல்லாதொழித்து, நாடும் உலகமும் எதிர்கொண்டு பன்முக பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய குடிமக்களை உருவாக்க வேண்டும்.

நமது நாட்டின் கல்வித்துறையில் தகவல் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும். விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், ஆங்கிலம், கலை மற்றும் கணிதம் ஆகிய துறைகளை நோக்கிச் செல்ல வேண்டும். ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட கல்வி சகல பாடசாலை கட்டமைப்பிலும் முன்னெடுக்க வேண்டும்

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல்  மற்றும் இயந்திரவியல் கற்றல் போன்ற புதிய தொழில்நுட்பக் கல்வியை நாட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். கல்விக்கான மனித உரிமையை நாம் உண்மையிலேயே பாதுகாக்க வேண்டும்.

பிரதமர் முன்வைத்த விடயங்களில  மூலோபாய ரீதியான விடயங்களோ செயல்பாட்டு ரீதியான நடவடிக்கைகளில் போதிய விவரங்களோ அடங்கியிருக்கவில்லை. இதை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்துவது  மற்றும் செயல்படுத்துவதற்கான காலக்கெடு என்பன தெளிவாகத் தெரியவில்லை. 2029 ஆம் ஆண்டில் உறுதியான அடைவுகள் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன. உரிய செயல் வரைவு காணப்படாத விடத்து, பாடசாலை கல்வியில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களால் இதன் பலன்களைப் பெற முடியாமல் போகும்.

பாலர் கல்வியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களையும் பிரதமர் தெளிவாக குறிப்பிடவில்லை. இந்த சீர்திருத்த திட்டத்தில் கிராமப்புற பாடசாலைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை.

உயர்தரக் கல்வியை வழங்கும் 3,000 பாடசாலைகளில் 1,000 பாடசாலைகள் மாத்திரமே விஞ்ஞானம் மற்றும் கணிதக் கல்வியை போதிக்கின்றன. ஆசிரியர் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து தெளிவான திட்டம் எதுவும் இந்த புதிய சீர்திருத்தத்தில் குறிப்பிடபடவில்லை. ஆசிரியர்களின் நலன் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தை ஆரம்பிக்க, பாடசாலைத் துறையில் ஈடுபட்டுள்ள சகலரையும் மையமாகக் கொண்டதொரு திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். பாட வேளையின் கால அளவைக் கருத்தில் கொள்ளும்போது, ஆல்பா மற்றும் பீட்டா தலைமுறைகளின் எண்ணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பட்டபின் கற்கைகள், பிரயோக ஆங்கிலத் திறன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்பன புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் கவனம் செலுத்தப்படவுமில்லை. பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களை இலக்காக் கொண்ட திட்டம் பற்றியோ, ஊட்டச்சத்து திட்டம் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

240,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் குறித்தும் தெளிவான தகவல் எதுவும் இல்லை. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைந்த மட்டத்திலயே செலவிடப்படுவதால், குறித்த ஒதுக்கீடு இங்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும்

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டது போல, வரலாற்றுப் பாடத்தையும் முக்கிய ஒரு பாடமாக ஆக்க வேண்டும். கல்வி முறைமையின் தரத்திற்கு இது முக்கியமானது. வரலாறு என்பது விடயங்களை மனப்பாடம் செய்யும் நடவடிக்கையல்ல. மாறாக ஒரு நாட்டினது குடிமக்களின் அடித்தளத்தை கட்டமைக்கும் மானிடவியலாகும். பொதுவான பாரம்பரியம், கலாசார விழுமியங்களைப் புரிந்துகொள்ள இப்பாடப்பரப்பு உதவுகிறது. கடந்த கால வரலாற்று நிகழ்வுகளிலிருந்து காரண-காரிய விளைவுகளின் தொடர்பு குறித்து புரிந்துகொள்வது விமர்சன சிந்தனை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் போன்றவற்றை விருத்தி செய்யும். எனவே, வரலாறு கட்டாயப் பாடமாக ஆக்கப்பட வேண்டும்.

ஸ்மார்ட் கல்வி மூலம் நமது நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், மனித மூலதன மேம்பாடு என்பன நோக்கி இந்த சீர்திருத்தம் செல்ல வேண்டும். கல்வி முறைமையின் மூலம் வெளிவரும் இளைஞர்கள், யுவதிகள்,  குடிமக்கள் சர்வதேச தொழிலாளர் சந்தையில் வேலைவாய்ப்புகளை அணுகுவதற்கும்,  சர்வதேச தொழிலாளர் சந்தையில் தொழிலை பெறுவதற்கும் முடியுமாக இருக்க வேண்டும். இதன் மூலம், கல்வித் துறையில் காணப்படும் உள்ளோர் இல்லாதோர் இடையேயான பேதங்களை நீக்க முடியும். இலவச  கல்விக்குள் காணப்பட்டு வரும் இந்தப் பேதத்தை நீக்க வேண்டும் என்றார்.

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று  (24) இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.

பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குற்றச்சாட்டுகள் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையென்பதால், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என அவர்களின் வாதத்தை ஏற்ற நீதிபதி மகேஷ் வீரமன், குற்றச்சாட்டுகள் இருந்த போதும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்படாத நிலையில் வழக்கை தொடர முடியாதென்று தெரிவித்துள்ளார்.

எனவே, குற்றச்சாட்டுகளிலிருந்து அந்த 16 இளைஞர்களையும் முற்றிலும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர்!

கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, “எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 26 அன்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் நஜுவில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நடந்துள்ளது. குறித்த தொழிற்சாலையில் இலங்கையர் பணிபுரிந்தார்.

தொழிற்சாலையில் இருந்த சக தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளியை செங்கல் குவியலில் கட்டி வைத்து, ஃபோர்க்லிஃப்ட் மூலம் தூக்கி, துன்புறுத்தி கேலி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொழிலாளி டிசம்பர் 2024 இல் வேலை அனுமதி முறையின் கீழ் E-9 விசாவில் கொரியாவிற்கு சென்றதாகவும் சம்பவத்திற்கு முன்னர் சுமார் மூன்று மாதங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜியோனம் புலம்பெயர்ந்த தொழிலாளர் மனித உரிமைகள் வலையமைப்பு, தொழிலாளி வேலையில் தவறு இருந்ததாக தெரிவித்து சக தொழிலாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பின்னர், சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதுடன், கொரிய அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்தால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை தொழிலாளி உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்து சம்பவம் தொடர்பில் தென் கொரிய ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில்,

“என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு கலாச்சார அதிகார மையத்திலும் இதுபோன்ற துஷ்பிரயோகம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது மன்னிக்க முடியாத வன்முறைச் செயல்.

சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு எதிரான மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும். புலம்பெயர்ந்த தொழிலாளியின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை யாரும் சுரண்டவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

வெளிநாட்டில் பணிபுரியும் கொரிய குடிமக்களை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை!

வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டிருந்து.  இது தொடர்பான கள விஜயத்தின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2025.07.17 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் (24) பிரதேச சபை தவிசாளர் சே.கருணாநிதி, பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், உதவி பிரதேச செயலாளர் திருமதி. துசிதீபா, தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபில்யூ.யு.எஸ்.பெரேரா, பிரதேச சபை செயலாளர் சாந்தகுமார், குடியேற்ற உத்தியோகத்தர் ந.கஜகோகுலன், உதவி வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் பி.ஜெகதீஸ்வரன், அடைவு வன நிலதாரி எம்.பி.எம்.அசாருதின், தொல்பொருள் திணைக்கள வலய உத்தியோகத்தர் ஜி.கிரிஷாந்த், கிராம அலுவலர் சாள்ஸ் அன்ரனி, கிராம அலுவலர் திருமதி ஜீவராணி ஆகியோர் குறித்த கள விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலாளரினால் குறித்த களவிஜயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தொல்பொருளியல் இடமான வட்டவன் பகுதியில்  பிரதான வீதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டரில் பாலக்காட்டு பகுதியில் உள்ளோக்கி செல்லும்போது மலைத்துடர் காணப்படுகின்றது இம்மலை தொடரில் அண்ணளவாக 12 இடங்களில் தொல்பொருள் அடையாளங்களான புராதன எழுத்துக்களும், குகைகளும் காணப்படுபட்டதை அவதானிக்க முடிந்தது எனவும், தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட மலைத் தொடரை சுற்றியுள்ள எல்லைப் பிரதேசங்களில் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்கும் அதேவேளை நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தொல்லியல் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளரினால் குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2025.08.14ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னதாக விசேட தொழிற்ப குழுவினர் இவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டதுடன் உத்தேசமாக மலை உச்சியில் இருந்து அண்ணளவாக 50 மீட்டர் பகுதி சுற்றளவு உடைய இடங்களையே தொல்லியல்துறை ஒதுக்கமாக எல்லைப் படுத்துவதாக தெரியப்படுத்தப்பட்டதுடன் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் மக்கள் வழமை போன்று நெற்செய்கையில் ஈடுபட முடியும் என தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்லடி பகுதியில் பாசன பப்பத விகாரையை சூழ தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லை கற்கள் இடப்பட்டு காணப்படுகின்றது. இப்பகுதியில் பயிர்ச்செய்கை பண்ணப்படும் காணிகளும் சிறிய பற்றை காடுகளும் காணப்படுகின்றது இதில் வேளாண்மை மற்றும் மேட்டுநில பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் காணியானது சுமார் 15 தொடக்கம் 20 ஏக்கர் வரையும் காணப்படுகின்றது. தொல்பொருள் திணைக்கள எல்லைக்குள் ஒருவருக்கு காணி அளிப்பு பத்திரமும் ஒரு நபருக்கு காணி அனுமதி பத்திரமும் காணப்படுவதாக குறித்த கிராம அலுவலரினால் தெரியப்படுத்தப்பட்டது.

இப்பிரதேசத்தில் பற்றை காடுகளாக காணப்படுகின்ற தொல்பொருளியல் திணைக்களம் எல்லை கற்கள் காணப்படும் பகுதிகள் தொல்பொருளியல் தடயங்கள் காணப்படுவதால் அப்பகுதியை விடுவிக்க முடியாது என்றும் அப்பகுதிக்கு அப்பால் வெற்று காணிகளாக காணப்படுகின்றதும் எல்லை கற்கள் இடப்பட்டுள்ள காணிகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தீர்மானத்தினை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்று தற்போது இடப்பட்டுள்ள எல்லை கற்களை பிடுங்கி குறித்த பகுதியை விடுவிக்க ஆவண செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன அழிப்பு கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு…

0 இன அழிப்பு கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு...
தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றில் மறக்க முடியாத, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் அழிக்கப்பட்ட, இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் உள்ள வெளிக்கடை தியாகிகள் அரங்கில் இடம் பெற்றது.இதனை திருகோணமலை நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.
‘1983 களில் தமிழர்களுடை வாழ்வியலை அளித்த ஜூலை கலவரம், தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில்  தங்களுடைய வாழ்வை  அலங்கோலமாக்கி அலைந்து திரிந்து உடமைகளை உயிரை இழந்து புலம்பெயர் தேசங்களுக்கு கூடுதலான தமிழர்கள் இடம் பெயர்ந்து,  அல்லோல கல்லோலப்பட்ட நாள் ஒன்றினை இன்னுமொரு யுகத்துக்கும் சந்ததிக்கும் நினைவுபடுத்தி கடத்திச் செல்கின்ற அந்த நிகழ்வை திருகோணமலையில்  செய்கின்றோம்.
இந்த நாள் தமிழர்களுடைய ஒரு கரி நாளாக, தமிழர்களுடைய வாழ்வில் இனப்படுகொலையின் ஆரம்ப நாளாக இதனை பார்க்கின்றோம். தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. ஜூலை 23 தொடங்கிய கலவரம் அதற்கு பின்னர் பல்வேறு நாட்கள் இடம் பெற்று தமிழர்களை   அவர்களுடைம பண்பாட்டியலையும் வாழ்வியலையும் கூறு போட்ட நிகழ்வாக திருகோணமலை நண்பர்கள் வட்டம் சார்பாக நினைவு கூறுகிறோம்’ என  நிகழ்வில்   கலந்து கொண்டவர்கள்   கருத்து தெரிவித்தனர்.

மனித புதைகுழிகளுக்கு நீதிக்கோரி மன்னாரில் அமைதி பேரணி

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை வரையில் அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது.
இப்பேரணி, மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று (24) முற்பகல் 10 மணியளவில் அடம்பன் சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், “எங்கே எங்கள் உறவுகள்?”, “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?”, “வேண்டும் சர்வதேச விசாரணை!” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

பேரணி மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதைகுழி பகுதியில் நிறைவடைந்தபின், அங்கு இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டவர்களுக்கும் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று (24) நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சிறைவாழ்க்கை கண்காட்சியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள “விடுதலை விருட்சத்துக்கான ”  விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றன.
இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர்  சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான சந்தையை திறக்கும் நாடுகளுக்கு மாத்திரமே வரி குறைக்கப்படும் : அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கான சந்தையை திறக்கும் நாடுகளுக்கு மாத்திரமே வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை குறைப்பதற்கான முயற்சியில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ள அவர், ‘அதிக வரிகள் இல்லையென்றால்’ தங்களது வரியும் குறைக்கப்படும் என்ற வகையில் கருத்துரைத்துள்ளார்.

அவ்வாறில்லாமல் எந்த நாட்டுக்கும் அமெரிக்காவின் பூஜ்ஜிய வரியை பெறுவது சாத்தியமற்ற விடயமெனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அந்த அளவு 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த 30 சதவீத வரியை 19 சதவீதமாக குறைப்பது தொடர்பில் இலங்கை அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.