Home Blog Page 70

விவசாய நிலங்கள் அபகரிப்பு: திருகோணமலையில் மக்கள் போராட்டம்!

இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள திருகோணமலை – முத்து நகர் பகுதி மக்கள், இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்து நகர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் நோக்கில், பொதுமக்களின் விவசாய நிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அப்பகுதியில் வேலியிடப்பட்ட நிலங்கள், பல ஆண்டுகளாக விவசாயக் களமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முந்தைய ஆலோசனைகள், உரிய தகவலளிப்பு மற்றும் மக்கள் ஒப்புதல் இல்லாமல், அரசாங்கம் முன்வைக்கும் இந்த நடவடிக்கையை மக்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

“எங்கள் காணிகளை எங்களுக்கு கொடு”, “திருகோணமலையின் வளங்களும் நிலங்களும் சூறையாடப்படுவதை நிறுத்து”, “கம்பனிகளுக்கு இலாபம் எங்களுக்கு நடுத்தெரு”, “அரிசி இல்லாமல் நாம் மண்ணையா சாப்பிடுவது”, “இந்திய கம்பனிகளின் காணி மற்றும் வளத்திருட்டுக்கு எதிராக போராட்டத்தை தொடங்குவோம்” உள்ளிட்ட வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசம் எழுப்பியவாறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தினர், சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து காணி அபகரிப்புக்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.

போராட்டத்தின்போது மாவட்ட செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கோரப்பட்டதுடன், அதற்கான தீர்வு எட்டப்படாவிடின் எதிர்வரும் நாட்களில் பரபரப்பான மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரப்படலாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மணியைத் தொடர்ந்து சம்பூர் – தாமோதரம் பிரதீவன்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிக
ளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட் டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டி ருந்த நிலையில் தற்காலிகமாக ஓய்விற்காக நிறுத்தப்பட்டி ருந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் 21.07.2025 ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் திருகோணமலை சம்பூர் பகுதியில் மனிதப் புதைகுழி என சந்தேகப்படும் இடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.
திருகோணமலை, சம்பூர் கடற்கரையை அண்டிய பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித மண்டையோடு உள்ளிட்ட சில மனித எலும்புத் தொகுதிகள், மனித எச்சங்கள் வெளி வந்ததையடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அங்கு மனித எச்சங்கள்  கண்டுபிடிக்கப் பட்டுள்ள இடம் தொடர்பிலும் சம்பூர் தொடர்பி லும் சற்று ஆழமாக உற்று நோக்கினால்.
ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரின் கொடூரமான காலப்பகுதியையும் குறிப்பாக வடக்குக் கிழக்கில் நடந்த மனிதப் பேரவலங்க ளான மனிதப் படுகொலைகளின் வரிசையில் கிழக்கில்  சம்பூரில் நிகழ்ந்த படுகொலைகளின் பயங்கரத்தையும், அதன்  நினைவுகளையும் மீண்டும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளதோடு அதற்கு நீதி கிடைக்குமா எனும் ஏக்கத்தையும் உண்டாக்கியிருப்பதோடு இங்கு தற்போது மீட்கப்படும் மனித எச்சங்கள் யாருடையது, எக்காலத்திற்குரியது, இதற்கும் சம்பூர் படு கொலைக்கும் தொடர்பிருக்கிறதா எனும் சந்தேகங் களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ள தோடு, மனிதர்கள் நடமாடித் திரிந்த இந்த பிரதேசத்தில் காணப்படும் சிறுவர் பூங்கா, மீனவர் சங்கக் கட்டிடம், சம்பூர் படுகொலை நினைவுத் தூபி, என்பன அமைந்துள்ள இந்த பிரதேசத்தில் நடைபெறும் கண்ணிவெடி அகழ்வுப் பணிகள் இப்போது இடம்பெறுவது பற்றியும் ஏன் எனும் கேள்விகள் உள்ளதாகவும் ஆனாலும் இந்தப் பகுதியில் சில இடங்களில் வெடி பொருட்கள் சிலவற்றை பொதுமக்களின் தகவலுக்கமைய மீட்டுள்ளதாகவும்  கூறப்பட்டதோடு, யுத்த காலங்க ளில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாகவும் இது காணப்படதாகவும் பிரதேச வாசிகளும் கூறினர்.
கடந்த வியாழக்கிழமை (2025.07.17) மூதூர் – சம்பூர் கடற்கரையோரப் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டிருந்தது. இந் நிலையில் சம்பூர் சிறுவர் பூங்காவின் முன்பாக மீனவர் சங்கக் கட்டிடம்,சம்பூர் படுகொலை நினைவுத் தூபி என்பன அமைந்துள்ள  கடற்கரையோரப் பகுதியில், கடந்த ஒரு வாரகாலமாக (MAG) எனப்படும் கண்ணிவெடி அகழும் நிறுவனம், தங்களுக்குரிய தளபாடங்கள் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு, கடந்த வியாழக்கிழமை முதல் கண்ணிவெடி அகழும் பணிகளைத் தொடர்ந்தது.
இதன்போது 2025.07.20 ஞாயிறு குறித்த பகுதியில் மனித மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அது நீதிபதிக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலி
கமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டி ருந்ததோடு குறித்த பகுதியை திபதியின் முன்னிலையில், அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன்  புதன்கிழமை (2025.07.23) அகழ்வதற்கும் உத்தரவிட்டதுடன் பொலிஸாரைக் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தர விட்ட நிலையில் பொலிஸாரின் பாதுகாப்பும் குறித்த பிரதேசத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதிக்கு  (2025.07.23) புதன்கிழமை கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்து ரையாடியதோடு சட்ட வைத்திய அதிகாரிக்கு இப்பகுதியில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில் மிதிவெடி அகற்றும் பணிகளை முன்னெடு க்கும்  நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக் குமாறும் அறிவுறுத்தியதோடு, தொல்லியல் திணைக்களத் திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து உரிய அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும், குறித்த அறிக்கைகளை  எதிர்வரும் புதன்
கிழமை (2025.07.30) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தர விட்டுள்ளார்.
அன்றைய தினம் குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வுத் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவல கம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக் களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் வருகை தந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டிருந்தனர்.
குறித்த பகுதிக்கு இன்றைய தினம் (23) உரிய  திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்ன மாகியிருந்ததுடன் அப்பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வரு கின்ற அதேவேளை  அப்பகுதிக்குள், குறித்த திணைக்களத்தினரைவிட்டு வேறு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை, ஊடகவியலாளர்களும் உட்செல்ல அனுமதிக்கபடவில்லை என்பதோடு எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்கள  அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படும் எனவும் அறிய முடிகின்றது.
கிழக்கில் இராணுவமும், முஸ்லீம் ஊர்காவல் படைகளும் இணைந்து அரசின் திட்டமிடலுடன் நடத்தப்பட்ட  படுகொலைகளா கக் கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தின் உடும்பன்குளம்,திராய்க்கேணி,வீரமுனை உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை,மகிழடித்தீவு,சத்துருக்கொண்டான்,சித்தாண்டிப் படுகொலைகள் போன்ற மிகக் கொடிய படுகொலை நடந்த இடமே இந்த சம்பூர்ப் படுகொலையாகும்.
திருகோணமலை சம்பூர் பகுதி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது பல மனித உரிமை மீறல்களுக்கும், பொதுமக்கள் படுகொலைகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர்  1990.07.07 ஆம் திகதி இப்பகுதியில் நடந்த ஒரு கோரமான சம்பவத்தில், அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் இராணு வம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பூர் கிராமத்தில் வெட்டியும் சுட்டும் 57 பேர்  கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவங்களின் விளைவாக, அப்பகுதி மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டு அவர்களின் சொத்துகளும்,காணிகளும் கூட சூறையாடப் பட்டன இவ்வாறான பெருத்த துன்பங்களை அனுபவித்த அந்த மக்களின் உயிரிழந்த உறவுக ளின் உடல்கள் மீட்கப்படாமலும், முறையாக அடையாளம் காணப்படாமலும்,உரிய முறை யின்றி புதைக்கப்பட்டும் இருந்தது.
இந்தப் படுகொலைகளின் நினைவாகவே சம்பூர் கடற்கரையோரத்தில் தூபியொன்று அமைக் கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த மக்களால் அங்கு அஞ்சலிகள் செய்யப்படுவதோடு நீதிக்கான குரல் தொடர்ந்தும் ஒலித்து வந்தது.இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள மனித எச்சங்கள் அந்தப் பகுதி மக்களின் நீதியும் உண்மைக்குமான தேடலுக்கு மேலும் நல்ல நம்பிக்கையும்  வலுவும் சேர்த்துள்ளது.
சம்பூர் படுகொலை நீதிக்காகக் குரல் கொடுப்போம்.

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினரால் மக்கள் பதற்றம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்போது நல்லூர் ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நல்லூர் திருவிழா காலத்தில் அந்தப் பகுதியில் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் எவரும் ஆலய வளாகத்துக்குள் செல்வதற்கும் அனுமதி இல்லை.

இந்நிலையில், பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினரின் வாகனம் அத்துமீறி உள்நுழைந்தமை, உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இராணுவத்தின் அத்துமீறல் இன்னமும் தொடர்கிறதா என பெருமளவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த ஆண்டு திருவிழாவின்போதும் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் நல்லூர் வளாகத்திற்குள் சென்று அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்ட சீன வாகனங்கள்!

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் மோட்டார் திறன்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, துறைமுகத்தில் கிட்டத்தட்ட 1000 சீனத் தயாரிப்பு BYD மின்சார வாகனங்கள்ளை இலங்கை சுங்கத்திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இறக்குமதி வரிகளை நேரடியாகப் பாதிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த வாகனங்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் ஆறு தடவைகளாக இறக்குமதி செய்யப்பட்ட குறித்த ரக வாகனங்கள் அனைத்தும் 100 கிலோவோட் மோட்டார் திறன்களை கொண்டவை என்று அறிவிக்கப்பட்டிருந்தன.

எனினும் அவற்றின் உண்மையான திறன் 150 கிலோவோட்ஸாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இது பொருந்தக்கூடிய கலால் வரியை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய வரி விதிகளின் கீழ், 100 கிலோவோட்ஸ் மின்சார வாகனத்துக்கு நேரடி வரியாக 2.4 மில்லியன் ரூபாய்கள் விதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் 150 கிலோவோட்ஸ் பதிப்பிற்கு 5.4 மில்லியன் ரூபாய் வரை வரி விதிக்கப்படலாம், இந்த நிலையில் குறைந்த கிலோவோட்ஸ் திறனை அறிவித்து, அதிக வரிகளைத் தவிர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து சுங்கத்திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு முதலீட்டாளர்கள் இலங்கையை நம்பலாம் : ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்றன.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இந்த நிலையில்,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை  மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் கிடைத்த அழைப்பிற்கும் அமோக வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் அதிமேதகு ஜனாதிபதி முகமத் முய்சு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீண்ட கால உறவு உள்ளது.

இந்து சமுத்திரத்தில் உள்ள நமது இரு நாடுகளும் பழங்கால கடல்வழி வர்த்தகப் பாதைகள் மற்றும் பொதுவான வரலாறு ஆகியவற்றுடன் நமது தொடர்புகளால் வளம் பெற்றுள்ளன.

சிறிது நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி முய்சுவும் நானும் எங்கள் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், மேலும் எதிர்காலத்தில் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். எப்போதும் இலங்கைக்கு வழங்கும் நிலையான ஆதரவிற்கு ஜனாதிபதி முய்சு மற்றும் மாலைதீவு அரசாங்கத்திற்கு  நன்றி தெரிவிக்கிறேன்.

நமது மக்களின் பொது நலனுக்காக நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், நமது உறவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி முய்சுவும் நானும் இனங்கண்டோம். மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக ஜனாதிபதி முய்சுவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாலைதீவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், இலங்கையில் உள்ள மாலைதீவு மக்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.

கல்வித் துறையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே வலுவான பங்காளித்துவம் உள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாங்கள் மாலைதீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளோம். இத்துறையில் மேலும் ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஜனாதிபதி முய்சுவும் நானும் கலந்துரையாடினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தினோம். மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என்று நான் தெரிவிக்கிறேன்.

முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இலங்கை தற்போது உருவாக்கி வருகின்ற அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் அடைவதற்கான பொறிமுறை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தும்  நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி முயிசுவிடம் தெரிவித்தேன்.

இலங்கையின்  நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் பற்றியும் அவருக்கு விளக்கினேன்.

அவை முதலீட்டாளர் நேய மற்றும் உற்பத்தி – விசேட தொழில்துறை வலயங்களாக உள்ளதோடு,  மாலைதீவு முதலீட்டாளர்கள் அந்த வலயங்களில் முதலீடு செய்யலாம்.

மேலும், மாலைதீவு வர்த்தகர்களுக்கு இலங்கையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்/செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய செயலாக்கம், சுற்றுலா மற்றும் ஓய்வு, ஆதன வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்யுமாறு  நான் அழைப்பு விடுத்தேன். நமது இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறை ஒரு முக்கிய பொருளாதார காரணியாகும். இந்த சூழலில், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

விசேடமாக விமானத் தொடர்புகளை மேம்படுத்துவதுடன், விமான சேவைகள் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடியோம். விவசாயத்துறை, இளைஞர்களை வலுவூட்டுதல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடுகளாக, மீன்பிடி மற்றும் கடல்சார் துறையின் பெரும் ஆற்றலை நாங்கள் இனங்கண்டோம். நவீன மற்றும் நிலைபேறான மீன்பிடி நடைமுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாம் கலந்துரையாடினோம்.

இலங்கை மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவு கடல் எல்லை வழியாக அரபிக் கடலுக்குள் தடையின்றிச் செல்வதற்கு போக்குவரத்து வழிகளை நிறுவுவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கையும் மாலைதீவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளன. இலங்கை மற்றும் முழு இலங்கை சமூகத்தையும் நிலைபேறான நிலைக்கு உயர்த்துவதற்காக சமூக அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் தார்மீக அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய கூறுகளின் ஊடாக செயற்படும் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தை எனது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதுபற்றி நான் ஜனாதிபதி முய்சுவுக்கு விளக்கினேன். திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான  ‘Maldives Clean Environment’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக ஜனாதிபதி முயிசுவைப் பாராட்டினேன்.

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் அதிகரித்தல் ஆகிய சவாலை எதிர்கொள்ள பின்பற்ற வேண்டிய பொதுவான முயற்சிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் இனங்கண்டோம். இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது அதன் மின்சாரத்தில் 70% புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இலக்கை அடையும் நோக்கில், நமது இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த நான் பரிந்துரைத்தேன்.

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வலுவான கலாசார உறவுகள் உள்ளன. எங்கள் மொழிகள் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளதுடன், சிங்களம் மற்றும் திவெஹி மொழி ஆகிய இரண்டும் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும். மக்களிடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புத் துறையில் இலங்கைக்கு மாலைதீவு வழங்கும் ஆதரவை நான் பாராட்டியதுடன்,  மாலைதீவுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று நான் உறுதி அளித்தேன்.

நமது இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. அந்த ஒத்துழைப்பை தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு இரு தரப்பினருக்கும் வசதியான  நாளில் இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன். எனது விஜயத்தின் போது நான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றுவதுடன் மாலைதீவில் வாழும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளேன்.

ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே, எனக்கும் எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்பது உறுதி.

இலங்கைக்கு பூரண ஆதரவு: நெதர்லாந்து தெரிவிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (28) சந்தித்தார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மூன்று அமைதியான முறையில் நடந்த தேர்தல்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டுவதாகவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கை முகங்கொடுக்கும் சவால்கள் குறித்தும், அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு நெதர்லாந்து அரசாங்கம் பூரண ஆதரவளிக்கும் எனவும் தூதுவர் இங்கு வலியுறுத்தினார்.

நெதர்லாந்து தூதுவராக இலங்கைக்கு வழங்கிய ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்திலும் நெதர்லாந்தின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக செயற்படுமாறும், எதிர்காலப் பணிகளுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, நெதர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகார ஆலோசகர் திரு. நாமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் உதவிப் பணிப்பாளர் செல்வி. திவங்கா அத்துரலிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பு!

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும்  விசாரணைகளின் நம்பகதன்மைக்கு பாதிப்பை  ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை  ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

‘ இங்கு ஒரு பிரச்சினை இருப்பதாக நாங்களும் கருதுகின்றோம்,உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளை அவரது அமைச்சு கையாளவில்லை,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் பொலிஸாரும் சிஐடியினருமே விசாரணைகளை கையாள்கின்றனர் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ ஆனால் அவர் பிரதியமைச்சராக பதவி வகிக்கின்றார் இதனால் விசாரரணைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டும்,உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் பிரதியமைச்சராக பதவி வகிப்பதால் மக்கள் இயல்பாகவே விசாரணைகள் மீது அவர் செல்வாக்கு செலுத்தலாம் என கருதுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக விசாரணைகளின் நம்பகதன்மை குறித்த கேள்வி எழும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்தஞாயிறுதாக்குதலில் இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிற்கு தொடர்பிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதிபாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ கிழக்கு மாகாணத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றியவேளை ஜயசேகரவிற்கு இது குறித்து தெரிந்திருந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாண கட்டளைதளபதியாக அவருக்கு சில தகவல்கள் கிடைத்திருந்ததா?இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் அவர் சிஐடியினருக்கு வாக்குமூலம் தெரிவித்தது  எனக்கு நினைவில் இருக்கின்றது இதனை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்,விசாரணைகளிற்கு பின்னரே அவருக்கு தொடர்புள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ  தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி அம்பாறையில் கவனயீர்ப்பு

Unknown 1 5 சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி அம்பாறையில் கவனயீர்ப்பு

வடக்கு கிழக்கு சமூக இயக்கம் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் செயற்பாட்டாளர்கள் இணைந்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் நேற்றைய தினம் (26.07.2025) முன்னெடுத்த இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டங்கள் இடம்பெற்றது.

Unknown 3 3 சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி அம்பாறையில் கவனயீர்ப்பு

அந்த வகையில் நேற்றைய(26.07.2025) தினம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Unknown 15 சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி அம்பாறையில் கவனயீர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதி ,தமிழர் தேசிச நில அபகரிப்புகள், தமிழர் தேச வளச் சுரண்டல்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அத்துமீறல்கள், போன்ற பல விடயங்களுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்துகின்ற போராட்டத்தில் அதன் ஏற்பாட்டாளர்கள் சார்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பிரதீபன், காந்தன், யசோதரன் உள்ளிட்டவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி மற்றும் நிர்வாகத்தினர், அம்பாறை மாவட்ட இலங்கை தமிழ அரசுக் கட்சியின் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. கோடீஸ்வரன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச உதவி தவிசாளர் ரகுபதி மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் ஆகியோரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழ்,முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததோடு பெருமளவிலான இளைஞர்களும் பொதுமக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து தங்களுடைய கையெழுத்துக்களையும் வழங்கி இருந்தார்கள்.

பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

தற்போது, இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் வீதம் அதிகரித்து வருகின்றது.
அத்துடன், போதைப்பொருளினால் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

இந்தநிலையில், கொழும்பில் உள்ள பிரபல்யமான மகளிர் பாடசாலையொன்றில் பயிலும் ஐந்து மாணவிகள் போதைப்பொருளை உட்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து மாணவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.9ஆம் தரத்தில் பயிலும் மாணவிகள் சிலர் போதைப்பொருளை உட்கொண்டதாக குறித்த பாடசாலையின் அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஐந்து மாணவிகளும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த ஐந்து பேரில் ஒருவரே போதைப்பொருளை வழங்கியதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆயிரத்து 80 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை அவலத்தை நினைவுகூர்ந்து‌ மட்டக்களப்பில் போராட்டம்

கறுப்பு ஜூலை அவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி மனித புதைகுழி மற்றும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கை அரச பயங்கரவாதத்தின் கொடூரம், செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன், வடக்கு கிழக்கில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.