ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலை மையிலான ‘தேசிய மக்கள் சக்தி’ என்று முலாமிடப்பட்ட ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்து விட்டன.
இந்நிலையில் கடந்தவாரம் நடை பெற்றிருந்த பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன் னெடுக்கின்ற, முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கேள்விகளை தொடுத்திருந்தார்.
அந்தக்கேள்விகளுக்கு பிரதமர் கலாநிதி.ஹரிணி அமரசூரிய பதிலளித்திருந்தார். அவர், புதிய அரசியலமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமது ஆட்சி நிறைவுக்கு வருவதற்குள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் உறுதி யாக கூறியிருந்தார்.
இதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை நிச்சயமாக கொண்டுவரும், அதுவொரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாக இருக்கும் என்றும் தொடர்ச்சியாகவும் திட்ட வட்டமாகவும் கூறிக்கொண்டிருக்கின்றார்.
அதுமட்டுமன்றி, ஏற்கனவே மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் உருவாக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியலமைப்புக்காக இடைக்கால அறிக்கையை அடியொற்றியதாகவே புதிய அரசியலமைப்பு பணிகள் இருக்கப்போவதாக அநுரகுமார ஆட்சி ப்பீடத்தில் அமர முன்னதாகவே தெரிவித்துள்ள கருத்துக்களையும் அவர்சுட்டிக் காட்டுகின்றார்.
அந்தவகையில், மூன்றிலிரண்டு பெரும் பான்மையைக் கொண்டிருக்கின்ற அநுர அரசாங் கம் எந்த நேரத்திலும் புதியஅரசியலமைப்பு விடயத்தினை முன்வைக்கலாம், அவ்வாறு முன்வைக்கின்றபோது, இலங்கைத் தமிழரசுக்கட்சி அதற்கு முழுமையான ஆதரவினை வழங்கும். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்துகின்றார்.
சிங்களத்தில் ‘ஏக்கிய ராஜ்ய’, தமிழில் ஒருமித்த நாடு என்று வார்த்தைகளைப் பயன் படுத்தி இடைக்கால அறிக்கையில் நாட்டின் தன்மை குறித்த விடயத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்துக்கு தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் பொதுச்செயலாளராக இருக்கின்ற சுமந்திர னின் வகிபாகம் மிக முக்கியமானது.
அதே சுமந்திரன் பின்னரான நாட்களில் வழங்கிய செவ்வியொன்றில், புதிய அரசியல மைப்பு பணிகளில் தன்னுடன் பணியாற்றிய சகாவான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி.ஜயம்பதி விக்கிரமரட்ன தனது எண்பது வயதான தாயார் புதிய அரசியலமைப்பில் நாட்டின் தன்மையானது ஒற்றையாட்சி வடிவமாக இருக்க வேண்டும். அதனை சிங்கள மொழியில் மாற்றுவதற்கு என்று கேட்டுக்கொண்டதாகவும் அதனால் ஜயம்பதி அப்பதத்தினை மாற்றுவதற்கு இணங்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில், ஏலவே தயாரிக்கப்பட்டு ள்ள புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது ஒற்றையாட்சி அடிப்படையி லானது என்பது சுமந்திரனே ஏற்றுக்கொண்ட விடயம். இந்த விடத்தில் கஜேந்திரகுமார் வெளிப்படையாக கூறும் விடயம் அரசியலுக்கு அப்பால் யதார்த்தமானது.
இவ்வாறான பின்னணியில் தான் தற்போது, புதிய அரசியலமைப்புக்கான பேச்சுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தயாரிக்கப்பட்டுள்ள ஒற்றை யாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்பதில் உடும்புப்பிடியாக உள்ளார்.
ஆனால், சுமந்திரனையும், அவரது அணியினரையும் பொறுத்தவரையில் அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரப்போவதில்லை என்பதிலும் ஆகவே அதுபற்றி உரையாட வேண்டிய அவசியமே இல்லையென் பதிலும் உறுதியாக இருக்கின்றார் கள்.
இத்தகைய நிலையில் அநுர அரசாங்கம் நிச்சயமாக அரசியலமைப்பு மறுசீரமைப்பையோ அல்லது புதிய அரசியலமைப்பொன்றையோ நிச்சயமாக கொண்டுவரப்போகின்றது என்பது தற்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்ட விடயமா கின்றது.
அதற்கான பணிகள் சத்தமின்றி ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஜே.வி.பிக்கு மிக நெருக்க மான சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட வர்களை ஒன்றிணைத்து வரைவு தயாரிக்கின்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரை யில் புதிய அரசியலமைப்பையோ அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றையோ கொண்டுவர வேண்டிய தேவை உள்ளதென்பது அவர்களால் உணரப்பட்டுள்ளது.
குறிப்பாக, அண்மைக்காலமாக அரசாங்கத் துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ‘எதிரான மனோநிலை’ நிச்சயமாக எதிர்வரும் காலத்தில் அலையாக உருவாகும். அவ்விதமான சூழலை சமாளிப்பதென்றால் வெறுமனே ‘அநுர’ என்ற ‘தேர்தல் அரசியல் முத்திரையை’ பயன் படுத்தி சமாளிக்க முடியாது.
‘அநுர’ என்ற தேர்தல் அரசியல் முத்திரைக்கு இன்னமும் நாடாளவிய ரீதியில் வரவேற்பு இருந்தாலும் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி முரண்பாடுகளும் செயற்பாடுகளும் கடுமையான சலிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவ்விதமான சூழலில் மீண்டும் ‘அநுர’வை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலொன்றுக்குச் செல்வதாக இருந்தால் அது மிகப்பெரும் சவாலான விடயமாகும். ஜனாதிபதி தேர்தலில் சறுக்கினாலும் அடுத்துவருகின்ற தேர்தல்களின் முடிவுகள் பற்றி கூறவேண்டியதில்லை.
ஆகவே, தான் தென்னிலங்கையில் ஏற்படவுள்ள வாக்குவங்கிச் சரிவை வடக்கு, கிழக்கைப் பயன்படுத்தி ஈடுசெய்வதற்காக அரசியலமைப்பு மறுசீரமைப்பு அல்லது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை அரசாங் கம் முன்னெடுக்கவுள்ளது.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை சமாளித்துக்கொள்வதற்கான ஒரு உபாயமாகவும், இராஜதந்திர மட்டத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முனையும் தரப்புக்களை புறநோக்குவதற்கான உபாயமாகவும் இந்தச் செயற்பாட்டை அநுர அரசு மேற்கொள்ளவிருக்கின்றது.
எவ்வாறாயினும், இச்செயற்பாடு அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதியில் அல்லது மூன்றாம் வருட நடுப்பகதியில் தான் வெளிப்படுத்தப்படவுள்ளது.இந்த தகவலை, நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, தனது பால்ய நண்பரான தமிழ் அரசியல் தலைவர் ஒருவருக்கு நம்பிக்கையு டன் பகிர்ந்திருக்கின்றார். அத்துடன் தமிழ்த் தரப்பிலிருந்தும் புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
எவ்வாறாயினும், கடந்த காலத்தில் ஆட்சிப் பீடங்களில் இருந்த அரசியல் தரப்புக்கள் போன்றே, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவா அல்லது, அரசியலமைப்பு மறு சீரமைப்புக்களைச் செய்வதா என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதற்கு அநுரவும் அவரது சகோதரர்களும் தயாராக இல்லை.
ஏனென்றால், அவர்களுக்கு இச்செயற் பாட்டை மையப்படுத்திய அரசியல் தந்திரம் உள்ளது. குறிப்பாக இரண்டாவது தடவையும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு இருக்கின்ற ஒரேயொரு ‘பிடி’ அரசியல மைப்பு விடயம் தான்.
அந்த அரசியலமைப்பு விடயத்தினை எவ் வாறு தமது இருப்பை நிலைநிறுத்துவதற்காக அதிகாரங்களுடன் கூடியவாறாக எவ்வாறு தகவமைப்பது என்பது அவர்களினது முக்கியமான நோக்கமாகவுள்ளது.
தற்போது கிடைக்கின்ற உள்வீட்டுத் தகவல்களின் பிரகாரம், ஜனாதிபதி அநுரவும், அவரது தாய்வீடான பெலவத்த ஜே.வி.பி.தலை மையகமும் தற்போதிருக்கின்ற அரசியலமைப்பில் மறுசீரமைப்பினைச் செய்வதற்கே தீர்மானித் துள்ளன.
குறிப்பாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்ற பிரதமர் முறைமையை அறிமுகப்படுத்துவது அவர்களின் முதலாவது நோக்கமாக உள்ளது. அடுத்தபடியாக, உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட சுயாதீன ஆணைக்குழுக்கள், கணக்காய் வாளர் நாயகம் உள்ளிட்ட உயர் பதவிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆகியவற்றுக்கான நியமனங்களை அங்கீகரிக்கம் அதிகாரத்தினை அரசியலமைப்பு பேரவை கொண்டிருக்கின்றது.
இது அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக தலையிடியாக இருந்துவருகின்ற நிலையில் ‘அரசியலமைப்பு பேரவையின்’ அதிகாரங்களை வலுவிழக்கச் செய்தலும் இரண்டாவது நோக்கமாக உள்ளது.
இதனை விடவும், ‘சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம், உண்மை, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட விடயங் களையும் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாக கண்துடைப்புச் செய்வதற்கும் நோக்கங்கள் உள்ளன.
மறுபக்கத்தில் புதிய அரசியலமைப் பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் தேசிய மக்கள் சக்தியால் தொடர்ச் சியாக ஜே.வி.பிக்கு கூறப்படுகின்ற விடயமாக இருக்கின்றது.
விசேடமாக, ஜனாதிபதி முறைமை, தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட விடயங்களை அது மையப்படுத்திய இருக்க வேண்டும் என்ற வாதங்களும் காணப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, மாகாண சபை முறைமைகளை நீக்க வேண்டும் என்ற நோக்கமும் ஜே.வி.பிக்குள் உள்ள கடும்போக்காளர்களுக்குள் காணப்படுகின்றது. இதனைவிடவும், ஜே.வி.பியின் கட்சிக் கொள்கைகளை தேசிய கொள்கைகளுக்குள் புகுத்தி அதனை மையப்படுத்தியமாக நாட்டின் அடிப்படையச்சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கு நிலைகளும் தாராளமாகவே உள்ளன.
இவ்வாறு தான் ஜே.வி.பி.தலைமையிலான அநுர அரசாங்கமும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை அல்லது, அரசியல் மறுசீரமைப்ப பணிகளை தமது அடுத்த ஆட்சிக்கால நீட்சிக்காகவே பயன்படுத்தப்போகின்றது.
மாறாக, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் முகமாக, வட,கிழக்கு தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வுடன் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படப்போவதில்லை. அவ்விதமான நிலையில், அநுர அரசாங்கத் தின் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளையோ அல்லது அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கை களையோ கையாள்வதற்கு தமிழ்த் தரப்பில் தற்போதே முனைப்பே ஆகக்குறைந்த வியூகமாக இருக்கும்.