Home Blog Page 61

மாகாணங்களுக்கு முழுமையாக அதிகாரம் பகிரப்பட வேண்டும் : சிங்கள அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாகவும் முறையாகவும் பகிர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாணசபைகள் வெள்ளை யானை என சித்தரிக்கப்படுவது முறையற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
முன்னதாக வலது கையில் அதிகாரத்தை வழங்கி இடது கையில் பறிக்கும் நிலையே காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்ற ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி சர்வக்கட்சித் தலைவர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் என்பதற்காக மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னதாக, இனப் பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

“வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” – இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய்  வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

கறுப்பு யூலை இனவழிப்பு மறந்து செல்லும் மலையக மக்கள் – மருதன் ராம்

கருப்பு ஜூலை இனவழிப்பு இடம்பெற்று 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலை யில் இன்று வரை பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை எடுத்துக் காட்டுவதுடன் நீண்ட உள்நாட்டுப் போரில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தையும் வகித்தது. இந்த வன்முறைக்கான விதைகள் நீண்ட காலத்துக்கு முன்னரேயே விதைக்கப்பட்டிருந்தன. 1956, 1958, 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981 ஆகிய வருடங்களையும் உள்ளடக்கிய விதத்தில் 1983 வரையில் தமிழர்களுக்கெதிரான பகைமையுணர் ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருந்தது.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கீழான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வடக்கிலும், கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியையும் ஒடுக்குவதற்கு முயற்சித்தது. இந்தக் கொடூர உத்தியின் விளைவாக சுமார் 200,000 மக்கள் உயிரிழந்தார்கள். வன்முறைச் சம்பவங்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கான இலங்கையர் கள் இடம்பெயர்ந்ததுடன், அவர்கள் தமது சொந்த நாட்டிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக மாறினார்கள். இந்தச் சம்பவங்களின் பின்னர் பெருந்தொகையான குடும்பத் தலைவிகள், பெற்றோரை இழந்தோர் மற்றும் உடல் ரீதியான, உள ரீதியான காயங்களைக் கொண்ட தனிநபர்கள் பெரும் எண்ணிக்கையில் எஞ்சியிருந்தார்கள்.
சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை ஏனைய குடிமக்கள் மீது பிரயோகிக்கும் நோக்கத்துடனேயே இவை அனைத்தும் முன் னெடுக்கப்பட்டன. இப்பொழுது 42 வருடங்கள் கழிந்திருக்கும் நிலையிலும் கூட, மாறி மாறி ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசாங்கங்கள் இந்த வன்முறையைத் தூண்டிய தேசிய பிரச்சினையின் மூல காரணங்களை கவனத்திற்கு கொள்ளத் தவறியுள்ளன.
மறக்கப்பட்ட மலையக மக்கள்
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கருப்பு ஜூலை இனவழிப்பு இலங்கை முழுவதும் வாழ்ந்த தமிழ் மக்களின் மனதில் நீங்காது இடம்பிடித்த வடுவாக மாறியுள்ளது. எனினும் இந்த திட்டமிடப்பட்ட இனவழிப்பில் மலையக மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது தொடர்பில் இன்றுவரை அதிக படியான கவனம் செலுத்தப்படவில்லை. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலையக பிரதேசங்களில் நடந்த இன வன்முறைகளை மலையக மக்களின் தனித்துவ மான துயரம் சார்ந்த நீண்ட வரலாற்றின் பின்னணி யில் பார்க்க வேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தனி சிங்கள சட்டம்,  ஸ்ரீமாவோ பண்டார நாயக்க காலத்தில் ஏற்பட்ட பஞ்சம், ஸ்ரீமா – சாஸ்த்ரி ஒப்பந்தம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக இங்கு வாழ்ந்த மலையக மக்களில் பாதியாளவானோர் இந்தியாவுக்கும் மீதமானவர் கள் இலங்கைக்குமென, பிரிக்கப்பட்ட இன ஒடுக்குமுறையும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத் தின் போது பதிவான சம்பவங்களில் திருமணம் முடித்து சில நாட்களின் பின்னர் மனைவி இந்தியாவுக்கும் கணவர் இலங்கைக்கும் என்று பிரித்து அனுப்பப்பட்ட பல சம்பவங்களும் உள்ளன. அது மட்டுமல்லாது 1972ஆம் ஆண்டு பஞ்சம் ஏற்பட்ட காலப்பகுதில் கூட இலங்கை யில் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு வாழ்வாதாரம் சொந்த நிலம் என்று காணப்பட்ட போதும் நிலமற்ற தமக்கென்று வாழ்வாதாரமற்ற மலையக மக்கள் மிகவும் ஒரு துன்பகரமான வாழ்க்கையில் தான் வாழ்ந்திருக்கின்றனர். 1972ஆம் ஆண்டு காலத்தை பற்றி மலையக பிரதேசத்தில் பேசும் போது ‘பஞ்ச காலத்தில் மரவள்ளி கிழங்கை அவித்து உண்டோம், இரண்டு ரொட்டியை பத்து பேர் பிரித்து சாப்பிட்டோம்’ என்றெல்லாம் இன்றும் கூறுவார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் மலையக மக்கள் சனத்தொகையில் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் இலங்கை நாட்டிற்கு அச்சுறுத்தலாக வந்துவிடுவார்கள் என்ற ஒரு கருத்துவாதமும் பரப்பப்பட்டது.
இந்தநிலையில் 1983ஆம் ஆண்டு கலவரம் கொழும்பில் இருந்த தமிழ் மக்களை எவ்வாறு பாதித்ததோ அதேபோன்று இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மாத்தளை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் சிங்கள மக்களின் மத்தியில் வாழ்ந்த மலையக தமிழ் மக்களையும் பாதித்தது. இந்த கலவரத்தின் போது நுவரெலிய நகரமும் எரியூட்டப்பட்டது. இதற்கு பிரதான காரணமாக அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்க இருந்தார். ‘நுவரெலியா நகரம் பிரித்தானியர்களினால் கட்டமைக்கப்பட்டது, இதில் சில பழமையான விடயங்கள் காணப்பட்டதால் அவற்றை அழித்து புதிதாக நகரை உருவாக்குவதற்கே எரித்தோம்’ என்றும் அவர் கூறியிருந்தார். 1983 ஜூலை இனவழிப்பின் போது பதுளை – லுணுகலை பகுதியில் இரண்டு பாடசாலைகள் எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுதந்திரத்தின் பின் மலையக பகுதிகளில் அந்த மக்களின் இருப்பையும் கல்வியையும் அரசாங்கத்தால் கட்டவிழ்க்கப்பட்ட இனக்கல வரங்களில் 1983ஆம் ஆண்டு இனக் கலவரம் வரலாற்றில் அழிக்க முடியாத இருண்ட சம்பவமாக இருந்து வருகிறது.
கரும் புள்ளியின் தாக்கம்
ஜூலை இனவழிப்புக்கு பின்னர் மலையக மக்கள் சார்ந்த பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த இனவழிப்புக்கு பின்னர் தங்களின் இருப்பு தொடர்பான கேள்வி மலையக மக்களின் மத்தியில் எழுந்தது. இதனடிப்படையில் அரசியல் உரிமை சார்ந்த கேள்வி வலுவடைந்தது.. கருப்பு ஜூலையை கண்டித்து 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ‘சிறுபான்மை தமிழ் மக்கள் மீது ஏவி விடப்பட்ட இந்த வன்முறை நன்கு திட்டமிடப்பட்ட இன அழிப்புச் செயலாகும். குண்டர்களும் காடையர்களும் எந்தவிதமான கட்டுப்பாடும், தங்கு தடையும் இன்றி சுதந்திரமாக வீதிகளில் அலைந்து திரிந்து திட்டமிட்ட இலக்குகளை தெரிந்தெடுத்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபட்டு பேரழிவு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பல சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படைகள் அவர்களை உற்சாகப்படுத்தியும் மேலும் அழிவுகளை ஏற்படுத்த ஒத்தாசையும் புரிந்தனர். அவ்விதம் அவர்களை செய்ய அனுமதித்து விட்டு அரசு இயந்திரமும் பாதுகாப்புப் படைகளும் வெறுமனே கை கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. எந்தவித பாதுகாப்புமற்ற அப்பாவி மக்கள் மீது படுகொலை, கற்பழிப்பு, கொள்ளை, தீ வைப்பு என்பன தங்கு தடையின்றி மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் மீது இந்த மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது.’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான பல திட்ட மிடப்பட்ட இனவழிப்புகளை எதிர்நோக்கிய மலையக சமூகத்தினர் மத்தியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான விழிப்பு தற்போது குறைவடைந்து செல்கிறது. உதாரணமாக ஜூலை கலவரம் குறித்து அறிந்திராத இளைஞர்களும் சிறுவர்களும் தற்போது மலையத்தில் உள்ளனர். தங்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட இனவழிப்பை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டியது மலையக மக்களின் பொறுப்பாகும். இது மீள நிகழாமையை உறுதி செய்வதற்கு வழிவகுக்கும்.

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம் காண வருபவர்களுக்கு மனநல ஆலோசனை?

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே, பொது மக்களின் உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், புதைகுழியில் கண்டுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்த நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தமது அலுவலகம் விடுத்த கோரிக்கை குறித்து நீதிமன்றம் அவதானம் செலுத்துமென யாழ்ப்பாண நீதவான் கூறியதாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் தெரிவிக்கின்றார்.

“வருபவர்களுக்கு நீர் ஆகாரங்கள் மற்றும் உளவள ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில் சில வேளைகளில் சிலர் வந்து தங்களுடைய தொலைந்த உறவினர்களுடைய சான்று பொருட்களைப் பார்த்து அவர்களுக்கு ஒரு உளவள ஆலோசனை ஒன்று தேவைப்படும் பட்சத்தில் வைத்திய உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக நீதிபதி தெரிவித்தார்.”

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் மனித எலும்புகளுடன் குழந்தை பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும். இவ்வாறு மீட்கப்பட்ட பிற பொருட்களின் எண்ணிக்கை 50ற்கும் அதிகம் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் இன்றைய தினம் (ஓகஸ்ட் 5) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற பொருட்களை அடையாளம் காண வரும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றைப் பார்ப்பதை எளிதாக்கும் வகையில் தகவல் பகிரப்பட்டிருக்கலாம் என தமது அலுவலகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் தெரிவிக்கின்றார்.

பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் சமர்ப்பித்தோம். எனினும், முதற்கட்டமாக இவ்வாறான காட்சிப்படுத்தல் இடம்பெறுவதாக நீதிபதி தெரிவித்தார்.

45 நாட்கள் அகழ்வாய்வுக்கு பின்னர் கண்டெடுக்கப்படும் அனைத்து பிற பொருட்களும் காட்சிப்படுத்தப்படும் பட்சத்தில் பொது மக்களை சென்றடையும் வகையில், முறையான விதத்தில் தகவல்கள் பகிரப்படும் என நீதிபதி அவர்களால் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு கூறப்பட்டுள்ளது.

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாக சட்டத்தரணி பூரணி மேலும் கூறினார்.

யாழ்ப்பாணக் கடலில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

குறித்த படகைச் சோதனையிட்ட கடற்படையினர், அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு, மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

பின்னர், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கில் அவர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி: சர்வதேச பொறிமுறைகள் தேவை -ஐ.நாக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கடிதம்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும். அதன்படி வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப்புதைகுழிகளை மீள் அடையாளப்படுத்துவற்கும், முறையான கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான சர்வதேசப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதிமுன்னுரிமை வழங்கவேண்டும் என வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும், மனித உரிமைகள் பேரவையின் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ஜனநாயக தமிழரசுக்கட்சியின் தலைவர் கே.வி.தவராசா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் ஆகியோரும், மதத்தலைவர்கள் 11 பேரும், 115 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து அனுப்பியுள்ள இக்கூட்டுக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் ஒத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இயங்கிவரும் ஏனைய அமைப்புக்களுமான நாம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இக்கடிதத்தை எழுதுகிறோம்.

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பவற்றுக்குக் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப்பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதம் தொடர்பில் மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னர் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் ஐக்கிய நாடுகள் சபை அடைந்த தோல்வியானது, இப்போது உலகளாவிய ரீதியில் எதேச்சதிகாரப்போக்கிலான பல நாடுகளின் அரசாங்கங்கள் தண்டனையிலிருந்து விடுபட்டு, மிகமோசமான குற்றங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் உங்களிடம் நாம் சில விடயங்களை வலியுறுத்த விரும்புகிறோம். அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது, இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த 16 ஆண்டுகளில் பொறுப்புக்கூறல் செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்படவில்லை என்ற விடயத்தை ஐ.நா பொதுச்சபை, ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா பாதுகாப்புச்சபை ஆகிய கட்டமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக்கோரி உறுப்புநாடுகளால் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டும்.

அதேபோன்று உள்ளகப்பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான வாய்ப்பையும் நேரத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். குறிப்பாக ‘சுயாதீன குற்றப்பத்திர அல்லது சட்டவாதி அலுவலகத்தை’ ஸ்தாபிப்பதே இலங்கையின் உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கிய நகர்வாக அமையும் என சிலர் முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் இலங்கையின் அரச கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பொறுப்புக்கூறல் செயன்முறையை நிறுவுவதற்கான தன்முனைப்பற்ற நிலையைக் கையாள்வதற்கு சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை நிறுவுவது மாத்திரம் போதுமானதன்று.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின்’ நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்பதுடன் அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் காலநீடிப்புச் செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும் அக்காலநீடிப்பானது குறித்து வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கானதாகவும், இலங்கையை ஐ.நா பொதுச்சபை, ஐ.நா பாதுகாப்புச்சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகிய கட்டமைப்புக்கள் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியதாகவும் அமையவேண்டும்.

அடுத்ததாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப்புதைகுழிகளை மீள் அடையாளப்படுத்துவற்கும், முறையான கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான சர்வதேசப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதிமுன்னுரிமை வழங்கவேண்டும்.

19 வருடங்கள் கடந்தும் கனவாகிப் போகும் நீதி!

Unknown 1 1 19 வருடங்கள் கடந்தும் கனவாகிப் போகும் நீதி!

திருகோணமலையை மாத்திரமல்ல உலகையே உலுக்கிய மூதூர் படுகொலை நடந்து 19 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை எனும் மன வேதனையோடு திருகோணமலையில் இடம் பெற்ற நிகழ்வேந்தல் நிகழ்வு.

திருகோணமலை மூதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட எக்ஷன் பாம் எனும் சர்வதேச நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நேற்று திங்கட்கிழமை (04) திருகோணமலை மட்டிக்களி லகூன் பூங்காவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

Unknown 2 19 வருடங்கள் கடந்தும் கனவாகிப் போகும் நீதி!

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 19 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை எனவும் புதிய அரசாங்கத்தின் ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் எனவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இப்படுகொலையில்,
1. ரிச்சட் அருள்ராஜ் (வயது – 24)
2. முத்துலிங்கம் நர்மதன் (வயது – 23)
3. சக்திவேல் கோணேஸ்வரன் (வயது – 24)
4. துரைராஜா பிரதீபன் (வயது – 27)
5. சிவப்பிரகாசம் ரொமிலா (வயது – 25)
6. கணேஷ் கவிதா (வயது – 27)
7. எம். ரிஷிகேசன் (வயது – 24)
8. அம்பிகாவதி ஜெசீலன் (வயது – 27)
9. கனகரத்தினம் கோவர்த்தனி (வயது – 27)
10. வயிரமுத்து கோகிலவதனி (வயது – 29)
11. ஏ.எல்.மொகமட் ஜௌபர் (வயது – 31)
12. யோகராஜா கோடீஸ்வரன் (வயது – 30)
13. சிங்கராஜா பிறீமஸ் ஆனந்தராஜா (வயது – 32)
14. ஐ. முரளிதரன் (வயது – 33)
15. கணேஷ் ஸ்ரீதரன் (வயது – 36)
16. முத்துவிங்கம் கேதீஸ்வரன் (வயது – 36)
17. செல்லையா கணேஷ் (வயது – 54)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மேற்படி 17 பணியாளர்களையும் ஆயுதம் தரித்த இராணுவ சீருடைக்காரர்கள் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து நிலத்தில் குப்புறப் படுக்கப்பண்ணி பின்பக்கமாக தலையில் சுட்டுப் படுகொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ். நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது என்கிறார் பிரதமர்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்ய, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். தேசிய நூலகத்துக்கான கண்காணிப்பு விஜயத்தின் போது அவர் இதனைக் கூறினார்.
யாழ்ப்பாண நூலகத்தில் இருந்ததை போன்று வேறெங்கும் நூல்கள் இருக்கவில்லை எனவும் கடந்த காலத்தில் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

செம்மணியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள் உள்ளமை ஆய்வில் கண்டறிவு

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜீ.பி.ஆர் ரக அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டது.

எனினும் அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்த ஸ்கேன் இயந்திரத்தை பெற்று ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன.
இதன்போதே, பல இடங்களிலும் மனித எச்சங்கள் காணப்படுவதை ஸ்கேன் இயந்திரம் அடையாளப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (05) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை சித்துப்பாத்தி வளாகத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இதன்போது, தமது உறவுகளை தொலைத்தவர்கள் எவ்வித அச்சமுமின்றி சித்துப்பாத்தி வளாகத்துக்கு சென்று, அடையாளங்களை உறுதிப்படுத்த முடியும் என்று சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழாம், நேற்று (04) சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்திற்கு சென்று, நிலைமைகளை ஆராய்ந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் அடங்களாக குறித்த குழாம் இந்த கள விஜயத்தில் பங்கேற்றது.

இந்த நிலையில், சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் யதார்த்தப் பூர்வமாக அறிக்கையிடல்களை முன்னெடுக்க வேண்டும் என்று கள விஜயத்தில் ஈடுபட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் தங்கமுத்து தனராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சோமரத்ன ராஜபக்ஷவை சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகம் நடவடிக்கை

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுமானால், சாட்சியமளிக்க தாம் தயாரென தெரிவித்துள்ள சோமரத்ன ராஜபக்ஷவை சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அவர், தமது மனைவியின் ஊடாக வெளியிட்டுள்ள கடிதம் தொடர்பாக கருத்துரைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி ஜெகநாதன் தர்பரன் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உண்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சோமரத்ன ராஜபக்ஷவுக்கு, சிறைக்குள் விசேட பாதுகாப்பு உடன் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது பேஸ்புக் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷாந்தி குமாரசுவாமி மட்டுமல்ல, இன்னமும் பல நூற்றுக் கணக்கானோர் கொலை செய்யபட்டனர்.
இதனை தாம் 1998 ஆம் ஆண்டு, தமது சாட்சியத்தில் கூறியதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆகவே, சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உடன்பட வேண்டும் என்றும், அதிலே சோமரத்ன ராஜபக்ஷ சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இவற்றுக்கு முன், சிறையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு, உடனடியாக அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சாட்சி விசாரணை இடம்பெறுமாயின் தமது கணவர் சாட்சியமளிக்க தயாராக இருக்கிறார் என்று தெரிவித்து சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்
எவ்வாறாயினும் குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.