Home Blog Page 56

ஐ.நா.வின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும்!

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று பிரித்தானியாவும் கனடாவும் அறிவித்துள்ளன. எனினும், அந்த தீர்மானங்கள், முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது மென்மையானதாக இருக்கும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தவிடயம் இலங்கை அரசாங்கத்திற்கு வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை குறித்த முந்தைய தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியதால், இலங்கை குறித்த புதிய மையக் குழுவின் அமைப்பு மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் முன்னைய மையக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியவை இந்த ஆண்டு தீர்மானத்தில் பங்கேற்காமல் போகலாம் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Turk), 60வது அமர்வில் “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” குறித்த தனது அறிக்கையை முன்வைப்பார்.

திட்ட வரைவின்படி, அமர்வு தொடங்கும் நாளான, செப்டம்பர் 8ஆம் திகதியன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் ஏற்கனவே செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டுச் சென்றுள்ளமையால், இலங்கை குறித்த தனது அறிக்கையில் முக்கியமாக அந்த புதைகுழி இடம்பெற வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்கான உள்நாட்டு செயல்முறைவலுப்படுத்தப்படுவதையும் அரசியல் தலையீடு இல்லாததையும் உறுதி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைப்பது, உள்ளூர் பொறிமுறையின் மீதான சர்வதேச நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழித் தளம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து, கருத்துரைத்துள்ள விஜித ஹேரத், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மன்னார் மற்றும் மாத்தளை போன்ற பிற இடங்களிலும் இதுபோன்ற இடங்கள் உள்ளன, அத்துடன் அரசாங்கம் புதைகுழிகளைத் தோண்டி எடுத்து விசாரணைகளை நடத்த அனுமதித்துள்ளது.
எனவே இந்த விடயங்களில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துக்கொள்கிறது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

இந்தியாவிற்கு எதிராக மேலும் அதிக தடைகள் – ட்ரம்ப் சபதம்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக புது டில்லி கூடுதல் அபராதங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை (7) தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக “இன் னும் நிறைய” தடைகளை விதிக்க ட்ரம்ப் சபதம் செய்திருக்கிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா “இன்னும் நிறைய” தடைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அவை இரண் டாம் நிலை வரிகளின் வடிவத்தில் இருக்க லாம் என்பதைக் குறிக்கிறது.
ரஷ்யாவுடனான அதன் தொடர்ச்சியான எரிசக்தி வர்த்தகத்திற்காக தெற்காசிய நாட்டிற்கு கூடுதலாக 25% வரிகளை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது அறிக்கை வந்துள்ளது.
“8 மணி நேரம் மட்டுமே ஆகிறது. எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீங்கள் இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.இரண்டாம் நிலைத் தடைகள் என்பது, தடை செய்யப்பட்ட ஒரு நாட்டோடு தொடர்பு கொள்ளும் மூன்றாம் தரப்பினரை குறிவைத்து, தடை விதிக்கும் நாட்டின் சந்தையை அவர்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அவர்களை குறிவைக்கும் தண்டனைகள் ஆகும்.
“இதனிடையே, எங்களைப் பொறுத்த வரை, விவசாயிகளின் நலனே எங்கள் முதல் முன்னுரிமை” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (7) தடைகள் தொடர்பாக பேசும் போது தெரிவித்துள்ளார். “விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும், நான் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற் குத் தயாராக உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் இந்த நடைமுறைக்கு பதிலடியாக, சீனாவில் நடைபெறவுள்ள சங்காய் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக தகவல்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளும் அவர், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி செப்டம்பர் 23ஆம் திகதி அமெரிக்காவுக்குச் செல்வார், மேலும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.

பொதுச் சபையின் கூட்டத்துக்கு மேலதிகமாக அவர் பல உலகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நியூயோர்க்கிலிருந்து, செப்டம்பர் 27ஆம் திகதி ஜப்பானின் ஒசாகாவுக்குச் செல்லும் ஜனாதிபதி, அங்கு அவர் எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18,500 குழந்தைகள் இஸ்ரேலிய இராணுவத்தால் படுகொலை – அமெரிக்க செனட்டர்

காசா பகுதியை பஞ்சம் வாட்டி வதைக்கும் வேளையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து இராணுவ உதவி செய்வதாகவும், அமெ ரிக்க மக்களின் வரிப்பணம் குழந்தைகளை கொல்லவும், பட்டினியால் வாட்டவும் பயன் படுத்தப்படுகிறது எனவும் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண் டர்ஸ் தெரிவித்துள்ளார்.
காசாவில் 18,500 குழந்தைகள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்று வருகின்ற போதும், அமெரிக்கா போருக்கு 22 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது. “எங்கள் வரி செலுத்துவோர் டாலர்கள் குழந்தைகளை பட்டினியால் கொல்லவும்,பள்ளிகளில் குண்டு வீசவும், உதவிக்காக காத்திருக்கும் பசியால் வாடும்மக்களை துப் பாக்கியால் சுடவும் பயன் படுத்தப்படு கின்றன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டு பத்திரிகையா ளர்கள் காசா பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், இஸ்ரேலின் முற்றுகையால் ஏற்படும் பட்டினியை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை தேவை என்றும் பத்திரிகையாளர் களைப் பாதுகாக்கும் குழு (CPJ) தெரிவித்துள்ளது. “உலகம் இப்போது செயல்பட வேண்டும்” என்று பி.ஜே.கே. குழுவின் பிராந்திய இயக்குநர் சாரா குதா கடந்த வியாழக்கிழமை (7) தெரி வித்துள்ளார்.

மன்னார் மருத்துவமனையில் மரியராஜ் சிந்துஜா உயிரிழந்த சம்பவம்: மூவர் கைது

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி, பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மரியராஜ் சிந்துஜா, கடந்த வருடம் ஜூலை 28 திகதி உயிரிழந்தார்.
மருத்துவர்களின் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இந்த நிலையில் கடமையில் இருந்த மருத்துவர் உள்ளடங்களாக இரண்டு தாதியர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்தநிலையில் குறித்த ஐவரில் தாதியர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முத்தையன்கட்டு பகுதியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் : மூன்று இராணுவத்தினர் கைது

முல்லைதீவு – முத்தையன்கட்டு பகுதியில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மூன்று இராணுவத்தினரும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில்  கடந்த 9ம் திகதி காலை பொதுமகன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் தரப்பு சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்துகிறது. எனினும், இராணுவ தரப்பு, சடலம் மீட்கப்பட்ட விடயத்தில் தமக்கு தொடர்பில்லை என்றுக் கூறுகிறது.

முத்தையன்கட்டு இராணுவம் முகாமில் பணி ஒன்றுக்காக படையினரின் அழைப்பை ஏற்று, ஐந்து இளைஞர்கள் அங்கு சென்றதாகவும் அவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமது முகாமுக்குள் அத்துமீறி பிரவேசித்த 5 பேரை, தமது இராணுவம் பின்தொடர்ந்ததாகவும் அதில் ஒருவர் பிடிக்கப்பட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஏனையோர் தப்பிச் சென்றதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவங்கள் வரையில் மாத்திரமே இராணுவம் தொடர்புபட்டிருப்பதாகவும் அதன் பின்னர், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமைக்கும் இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும்,  காவல்துறையினரின் விசாரணைகளுக்கு படையினர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் இராணுவம் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழ் மீனவர்களின் விடுதலைக்காக போராட்டம் தீவிரம்!

தமிழக அரசின் மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் இந்தியா தமிழ்நாடு  இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு  இலங்கை சிறையில் தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதில் காலதாமதமாகும் பட்சத்தில்  வரும் 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம், 19ஆம் திகதி புகையிரத  மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் நேற்று வரை 61 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடியில் கைது  செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள 61 ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், தொடர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள்  பிரச்சனை இன்றி கடலில் மீன் பிடிப்பதற்கு  இரு நாட்டு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்

மேலும் மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்வதில் கால தாமதம் செய்யும் பட்சத்தில் 13ஆம் திகதி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம், 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும், அதனை தொடர்ந்து  வரும் 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்தில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன்  ஈடுபட போவதாக இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இன்று நடந்த மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மீனவர்களின் இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தினசரி சுமார் ரூபாய் ஒரு கோடி வரை அந்நிய செலாவணி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் அதிகபடியான பிரசன்னம்: இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளது.

இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞன் மரணித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை (09) காலை எதிரிமன்சிங்கம் கபில்ராஜ் என்பவரின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் உங்கள் கவனத்துக்கு அறிவுறுத்துகிறோம்.

2025.08.07 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தின் 63ஆவது பிரிவு முகாமுக்கு 05 ஆண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இராணுவத்தால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

இன்றைய உலகின் மாற்றங்களும் அதில் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்தலும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 351

கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவரின் வரிவிதிப்புப் போரில் இந்தியாவுக்கான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் வரி 50 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 25 வீதம் இந்தியாவுக்கு அது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்ததற்கான தண்டனை வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு பெரும் பொருளாதாரச் சவாலை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் “ரஷ்யாவின் அரசுத் தலைவர் புடின் இந்தியாவுக்கு விரைவில் நேரடி வருகை தந்து உச்சநிலைக் கருத்தரங்குகளை நடாத்தி அடைய வேண்டிய இலக்குகளின் எல்லைகள் குறித்த விவாதங்களைச் செய்யவுள்ளதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அறிவுரையாளர் டோவல் ரஷ்யாவில் வைத்துக் கூறியுள்ளார். ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அமைச்சர் சேர்கை சைகூ  இந்திய-ரஷ்ய நட்புறவு காலத்தால் பரிசோதனைகளுக்கு உட்பட்டு உறுதியான நட்பு” என்று வர்ணித்துள்ளார். “ஒருவரை ஒருவர் மதித்தல், நம்பிக்கை, ஒருவர் மற்றவரது ஆர்வங்களைச் சமமாகக் கருதி ஒன்றுபட்ட செய்பணி நிரல்களை உருவாக்குதல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட இருதரப்பையும் முற்றாகப் பலப்படுத்தத் தக்க விசேட முன்னுரிமை தந்திரோபாய பங்காண்மைகளை உருவாக்குதல் மொஸ்கோவுக்கு முக்கியமானதாக உள்ளது” என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அமைச்சர் சேர்கை சைகூ விளக்கிக் கூறியுள்ளார். அத்துடன் “புதிய அதிக நீதியும் நீண்டகால மேம்பாட்டுக்கானதுமான உலக முறைமையைத் தோற்றுவித்து அனைத்துலக சட்டங்களை உறுதிப்படுத்தி கூட்டாகப் புதிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள ஒத்துழைப்புடன் செயற்பட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.” எனவும் அமைச்சர் சேர்கை சைகூ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்திய ரஷ்ய நட்பு பலம்பெறும் சூழலில் ரஷ்யாவைக் கொண்டு ஐக்கிய நாடுகள்  பாதுகாப்புச் சபையில் இந்தியா ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதி வளர்ச்சிகளை மேம்படுத்தும் எந்த முயற்சியையும் அனுமதிக்காது என்ற துணிவில் சிறிலங்கா ஈழத்தமிழர்கள் மேலான தனது கட்டுப்பாடுகளைச் சகல நிலைகளிலும் மேலும் இறுக்கமடையச் செய்யும் செயற்பாடுகளை வேகப்படுத்தும் என்பது வெளிப்படையான உண்மை. அதே வேளை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சீனாவுக்கு இம்மாதக் கடைசியில் நேரடியாகச் செல்லவுள்ளார் என்ற ஆரம்பச் செய்தியும் வெளியாகியுள்ளது. இதன்வழி சீன ரஸ்ய இந்திய துணையுடன் சிறிலங்கா தனது ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக்கத் தேசிய நீக்கத் திட்டங்களை வேகப்படுத்துகையில் ஈழத்தமிழர்கள் அதற்கான சனநாயக வழி எதிர்வினைகளை எவ்வாறு செய்யலாம் என சிந்தித்துச் செயற்பட வேண்டிய நேரமிது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
கூடவே பிரித்தானியப் பாராளுமன்ற அறிக்கையில் இந்தியாவும், சீனா, எகிப்து, எரித்திரியா, ஈரான், பாகிஸ்தான், ரஸ்யா, பஹ்ரைன், ரூவாண்டா, துருக்கி, சவூதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்தது பிரித்தானியாவில்”நாடு கடந்த அடக்குமுறைகளில்”ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சின் குரல்தரவல்ல பேச்சாளர் ரந்தீர் ஜைஸ்வால் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார். இச்செய்தியும் கூட மேற்குலக ஆசிய விரிவாக்கங்களைத் தடுப்பதற்கான ஆசிய கோட்டை என்கின்ற பாதுகாப்புக்கட்டமைப்புக்கு  ஆசிய நாடுகள் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ தங்களைக் கட்டமைக்கின்றன என்பதைத் தெளிவாக்கி வருகின்றன. இதற்குள் சிறிலங்காவையும் இவை தம்மோடு இணைப்பதற்கான ஆர்வங்களை வெளிப்படுத்துகையில் அதனைச் சிறிலங்கா தனது ஈழத்தமிழின அழிப்புக்கான சாதகமான காலமாகப் பயன்படுத்தும் பேரபாயம் தோன்றக் கூடுமென்பதால் ஈழத்தமிழர்களின் இறைமையினை அவர்கள் மீளுறுதி செய்வதற்கான சமகாலப்பெருந்தடையாக இவை அமையும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. இதனை எவ்வாறு ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள்?  ஈழத்தமிழர்களின் தாயக உலக தேசிய ஒருமைப்பாடு ஒன்றே இதற்கான ஒரே பாதுகாப்புக்கவசம் என்பது இலக்கின் தெளிந்த முடிபு.
அதே வேளை, சிறிலங்கா தமிழர் தாயகம் முழுவதையும் தனது 2009 இல் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தை முப்பததொரு ஆண்டுகள்  முன்னெடுத்த ஈழத்தமிழரின் நடைமுறையரசை முறியடித்தது போல இஸ்ரேல் காசா நீள்கரை முழுவதையும் தனது இராணுவக்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனது இராணுவக்கட்டுப்பாட்டை காசா முழுவதும் முழுமைப்படுத்தும் செயற்பாடுகளைத் கடந்த வாரத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறீலங்கா இஸ்ரேலுக்கும் இலவச விசா முறையை அறிமுகம் செய்துள்ளது. இது  யுத்தக்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை வன்முறைகள் செய்த இஸ்ரேலியப் படையினர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கான பாதுகாப்பான காலனி ஒன்றை அமைக்கத் தொடங்கியுள்ளதை மேலும் வலுப்படுத்தும் என்று இலங்கையில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் சிலர் கடந்த வாரத்தில் அச்சமாக உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் இதனால் பெரும்பாதிப்புக்கள் ஏற்பட இடமுண்டு.
அவ்வாறே சிறிலங்கா அமெரிக்க வர்த்தகப் போரில் தனக்கு விதிக்கப்பட்ட 44 வீத வரியினை 30 வீதமாகவும் பின்னர் 20 வீதமாகவும் குறைப்பதற்கு எத்தகைய சலுகைகளை பாதுகாப்பு நிலையில் அமெரிக்காவுக்கு அளித்துள்ளது என்ற சந்தேகமும் கடந்த வாரத்தில் சிங்கள கட்சிகளிடை எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவுடன் செய்யப்பட்ட ஏழு ஒப்பந்தங்கள் மற்றும் சீனாவுடன் செய்யப்பட்ட பதினாறு ஒப்பந்தங்கள் தொடர்பான இத்தகைய கேள்விகளைச் சிங்களச் சமூகம் எழுப்பி வருகிறது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈழத்தமிழர் தாயகப் பகுதியின் சொந்தமான இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள இந்துமாக்கடலின் பெரும்பாகம் தான் முக்கிய இடம்பெறும் என்பதையே ஈழத்தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நேரமிது.
இந்நிலையில் சீனா தற்போது சிறிலங்காவின் ஆட்சியாளர்களாக உள்ள தேசிய மக்கள் சக்தியினர் அடுத்த பத்து பதினைந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தாலே உரிய மாற்றங்களை கொண்டு வரலாம் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் டி சில்வாவுக்குத் தெரிவித்ததாக அவர் கடந்த வாரத்தில் வெளியிட்ட தகவல் தேசிய மக்கள் சக்தியும் முன்னைய ஆட்சி நீடிப்பாளர்களான சிறிமாவோ பண்டாரநாயக்கா ஜே அர் ஜயவர்த்தனா வழியில் ஆட்சி நீடிப்புச் செய்யும் ஆட்சியாளர்களாக மாறுவதற்கான முன்னறிவிப்பாக அமைகின்றது.
கடந்த வாரத்தின் நிகழ்வுகள் எல்லாமே இன்றைய உலகின் மாற்றங்கள் ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதி செய்யும் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தடைகள் அதிகரிப்பதற்கான அனைத்துலக மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளையே உறுதி செய்கின்றன. இந்நிலையில் உலகின் சிறுதேசஇனமாக உள்ள ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகெங்கும்  எவ்வாறு தங்கள் இறைமையை மீளுறுதி செய்யும் தொடர் தேசியப் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்கள் என்பது இன்றைய முக்கிய கேள்வியாக இலக்கு கருதுகிறது. இதற்கான கருத்தியல் தெளிவை வளர்க்கும் வகையில் “இன்றைய உலகின் மாற்றங்களும், அதில் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்தலும்” என்கிற சிந்தனைகளையும் கருத்தாடல்களையும் இம்மாதத்தில் ஊடகங்கள் வளர்க்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது. இந்த சிந்தனை தெளிவுடனேயே செப்டம்பர் மாத மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்களையும் ஈழத்தமிழர்கள் அணுக வேண்டுமென்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
 ஆசிரியர்

Ilakku Weekly ePaper 351 | இலக்கு-இதழ்-351-09 ஆகஸ்ட் 2025:

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 351 | இலக்கு-இதழ்-351-09 ஆகஸ்ட் 2025:

Ilakku Weekly ePaper 349

Ilakku Weekly ePaper 351 | இலக்கு-இதழ்-351-09 ஆகஸ்ட் 2025:

Ilakku Weekly ePaper 351 | இலக்கு-இதழ்-351-09 ஆகஸ்ட் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • இன்றைய உலகின் மாற்றங்களும் அதில் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்தலும் | ஆசிரியர் தலையங்கம்
  • செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான நீண்ட பயணம் – விதுரன்
  • மட்டக்களப்பு மாவட்டமும் ! மாகாணசபை தேர்தலும்! –பா. அரியநேத்திரன்
  • சம்பூர் மனிதப் புதைக்குழி விவகாரம் இன்றுவரையான விரிவான பார்வை.- பிரதீபன் மனித உரிமை செயற்பாட்டாளர்
  • வடகிழக்கில் உரிமைகளை பெற தொடரும் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்குமா??-கிண்ணியான்
  • கிழக்கில் தமிழ்மக்கள் மீது ஜிகாத் மேற்கொண்ட இனப்படுகொலை – ஜெகதாஸ் அடிகளார்
  • செம்மணிப் புதைகுழி அகழ்வுகளின் போது சர்வதேச மேற்பார்வை அவசியம்-காதர் மாஸ்டர்
  • மாற்றத்தை நோக்கி நகரும் மலையகம்-மருதன் ராம்
  • செம்மணி புதைகுழிகளும் தமிழ்நாடும் – தோழர் பாஸ்கர்
  • விஸ்பரூபமெடுக்கும் ஈரான் பின்னணியில் சீனா – சென்றவார தொடர்ச்சி (இறுதிப் பகுதி) – வேல்ஸில் இருந்து அருஸ்