ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவோம் என கூறியிருந்தார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் 159 பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசானது, மாகாணசபை தேர்தலை இழுத்தடித்து காலம் கடத்தும் போக்கையே காட்டி வருகிறது.
மாகாணசபைகளுக்கு முழுமையாக அதிகாரங்களை பகிர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். இதேபோல், மாகாணசபை தேர்தல் தொடர்பாக சர்வகட்சி மாநாட்டை நடத்துமாறும், இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேம் நாத் தொலவத்த கூறியுள்ளார்.
இவ்வாறு, இரண்டு பிரதான சிங்களக் கட்சிகள் தற்போது இதனை தெரிவிக்கும் நிலையில், வடகிழக்கை மையப்படுத்தும் தமிழ் கட்சிகளும் மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசின் செல்வாக்கு, பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சரிவு நிலைக்குச் சென்றுள்ளது. இது கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தெரிந்தது.
மாகாணசபை முறைமை, வடகிழக்கு இனப்பிரச்சனைக்காகவே இலங்கை–இந்தியா ஒப்பந்தம் மூலம் 1987ல் கொண்டுவரப்பட்டு, இணைந்த வடகிழக்கு தேர்தல் 1988ல் நடை பெற்றது. ஓராண்டுக்குள் அது சிதைந்து போனது. இணைந்த வடகிழக்கை சட்டம் மூலம் 2006ல் ஜே.வி.பி. கட்சியால் பிரித்த பிறகு, கிழக்கில் 2008 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டும் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன. வடமாகாணசபையில் 2013ல் மட்டும் ஒரேயொரு மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது.
மாகாணசபை அதிகாரங்கள் தற்போது ஆளுநரிடம் இருப்பதால், வடகிழக்கில் மக்கள் திருப்தியற்ற ஆட்சியே நிலவுகிறது.மாகாணசபை தேர்தல் இழுத்தடிப்புக்கு காரணம் 2015ல் நல்லாட்சி அரசாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோரே. 2015 முதல் 2019 வரை எல்லை நிர்ணய ஆணைக்குழு ஒன்றை நிறுவி, தேர்தலை பிற்போட்டதால், இப்போது சட்ட சிக்கலை காரணம் காட்டி தேர்தலை தாமதப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நல்லாட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், மாகாணசபை சட்டத்திருத்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் போது எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம், மாகாணசபை தேர்தலை விடவும் புதிய அரசியலமைப்பில் முழு நம்பிக்கையை வைத்திருந் ததால், மாகாணசபை சட்டத்திருத்தத் தில் அக்கறை காட்டவில்லை.
தற்போது மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த, பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கினால் போதும். நல்லாட்சி காலத்தில் மாகாணசபை திருத்தச் சட்டத்திற்கு மௌனமாக இருந்துவிட்டு, 2020க்கு பிறகு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தனிநபர் பிரேர ணையாக பழைய முறையில் தேர்தல் நடத்தும் முன்மொழிவை சமர்ப்பித்தபோதும், அது இது வரை பரிசீலிக்கப்படவில்லை.
தற்போது தேர்தல் நடத்த இரண்டு வழிகள் உள்ளன:
பழைய முறையில் தேர்தல் நடத்துவது.
திருத்தங்களுடன் ஆணைக்குழு அறிக்கையை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவது.
இந்த இரண்டில் ஒன்றை செய்யாமல் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை.2024 மதிப்பீட்டின்படி, கிழக்கு மாகாணத் தின் சனத்தொகை 1,782,050 ஆகும். இது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 8.2% ஆகும். திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழர் முன்னணியில் இருந்தாலும், 2012 புள்ளிவிபரத்துடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளது. ஆனால் 2024 இல் இன ரீதியான கணிப்பீடு வெளியாகவில்லை. இது வெளியாகும்போது நிலைமை புரியும். கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம் பெற்றால், எந்தக் கட்சியும் அல்லது இனமும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலையே இருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில், 49 முஸ்லீம் பெரும் பான்மையுடையவை. மீதமுள்ள 297 தமிழ் பெரும்பான்மையுடையவை. விகிதாசாரம் 6:1. 965 கிராமங்களில் சுமார் 65 முஸ்லீம் கிராமங் களாகவும், 900 தமிழ் கிராமங்களாகவும் அடை யாளப்படுத்தப்பட்டுள்ளன. சில கிராமங்களில் சிங்களரும் வாழ்கின்றனர் (விகிதாசாரம் 15:1).இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட் டத்தின் நிலப்பயன்பாடு மாவட்டத்தின் மொத்த 2,854 சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.
இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6 வீதம். நீர்நிலைகள் 5 வீதம், சதுப்பு நிலங்கள் 2 வீதம், வீட்டு வசதி, வீட்டுதோட்டங்களுக்கான நிலம் 5 வீதம்.ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள் அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப் பிரயாணத்துறை விருத்திக்கானதாகும்.
உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட் டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத் தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 342 உள்நாட்டு நீர்நிலைகள் உள்ளன. இதில் பத்துக்கும் குறைவானவை முஸ்லீம் பகுதிகளில்; மீதமுள்ள 330க்கும் மேற்பட்டவை தமிழ் விவசாயப்பகுதிகளில். இவை விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பில் பயன்படுகின்றன.
பட்டிருப்பு தொகுதியும், மட்டக்களப்பு மேற்குக் கரை பெரும்பாலான நிலப்பரப்பும் (99%) வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்களே. எழுவான்கரையில் சில முஸ்லீம் மற்றும் தமிழ் பகுதிகள் இணைந்து நிர்வகிக்கப்பட்டன. 1961ல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பின் ஒரு பகுதியை இழந்தது.
மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத் தியடைய, மாகாணசபை அதிகாரம் பகிரப்பட்டு, அந்த மாவட்ட மக்களே முடிவெடுக்கும் வகையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும். அதற்காக கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்று, பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே உண்மை.