Home Blog Page 50

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானியாவிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது.

இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நடைப்பயணத்தின் இறுதியில் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தும் கோரிக்கை மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

எதிரணிகளை ஒன்றிணைப்பது, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி அல்ல: மனோ

”எதிரணிகளை ஒன்றிணைப்பதானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சூழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சந்திப்பு நடத்தினர்.

மேற்படி சந்திப்பு குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறினார்.

”இது எதிரணி கூட்டணி அல்ல. எதிரணிகளை ஒன்றிணைப்பதற்குரிய பொது மேடையை அமைக்கும் முயற்சியாகும். ஜீ.எல்.பீரிஸ் தலைவர் அல்லர். இப்பணியை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாட்டாளர் அவர். விரைவில் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்கவுள்ளோம்.

ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி நடப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். நாம் அவ்வாறு சூழ்ச்சி செய்யவில்லை. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்கள் இருக்க வேண்டும். அதன்பின்னர் தேர்தல் நடத்தி மக்கள் ஆணை வழங்கினால் பதவியில் மீண்டும் இருக்கலாம். தேர்தல் மூலம் மாத்திரமே நாம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவோம்.”- என்றார்.

மன்னாரில் 14 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்  சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு சனிக்கிழமை (16)  ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சனிக்கிழமை (16) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Ilakku Weekly ePaper 352 | இலக்கு-இதழ்-352-16 ஆகஸ்ட் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 352 | இலக்கு-இதழ்-352-16 ஆகஸ்ட் 2025

Ilakku Weekly ePaper 349

Ilakku Weekly ePaper 352 | இலக்கு-இதழ்-352-16 ஆகஸ்ட் 2025

Ilakku Weekly ePaper 352 | இலக்கு-இதழ்-352-16 ஆகஸ்ட் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழர் இறைமை நீக்கத்துக்குச் சிறிலங்காவுக்கு நிதியும் மதியும் விதந்துரைக்கும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை | ஆசிரியர் தலையங்கம்
  • இரகசியத்தன்மை ‘அரசியல் சிதைவின்’ ஆரம்பம் – விதுரன்
  • செம்மணி ஆவண நூல் வெளியீடு.
  • தமிழீழம் கேட்டு போராடிய இனம் தமிழீழம் கேட்டு போராடிய இனம் இன்று காற்றாலையை தடுக்கப் போராடும் நிலை – பா. அரியநேத்திரன்
  • விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? – மு.திருநாவுக்கரசு
  • ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அறிக்கையால் ஏமாற்றம் – விதுரன்
  • சூழ்ச்சியில் சிக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் – மருதன் ராம்
  • கிங்டம் திரைப்படம் – பேராசிரியர் ஆ. அருள் இனியன்
  • உணவை ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களைக் கொல்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் – தமிழில்: ஜெயந்திரன்
  • அலாஸ்கா பேச்சும் – ஐரோப்பாவின் எதிர்காலத்தை மாற்றப்போகும் போரும்-வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

நிலத்தை கிழித்துக் கொண்டு உண்மைகள் உலகுக்கு வெளிவருவதாக ரணிதா தெரிவிப்பு

சடலங்களை புதைக்கலாம், ஆனால் ஒருகாலமும் உண்மைகளை புதைக்க முடியாது என்று இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற செம்மணி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைத்தப் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதைக்கப்பட்ட என்புக் கூடுகளும் ஆன்மாக்களும் நிலத்தை கிழித்துக் கொண்டு உண்மைகளை உலகுக்கு சொல்ல வெளிவருவதாகவும் ரணிதா ஞானராஜ் இதன்போது கூறியுள்ளார். தமது அன்புக்குரியவர்களை தேடி அழைந்தது மாத்திரமின்றி, விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகள் என பல இடங்களுக்கு அழைந்து திரிந்து மக்கள் களைப்படைந்து விட்டதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது? யாரால் நடத்தப்பட்டது? அவர்களின் பெயர் விபரங்கள், பதவி நிலை என அனைத்து விடயங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்கறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தவர்களும், சோதனை சாவடிகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் இலட்சக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகளில் உள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளில் மீட்கப்பட்டுள்ள என்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா.வின் கவனத்தை கோரும் சர்வதேச அமைப்புகள்!

இலங்கையில் இடம்பெறும் அனைத்து மீறல்கள் மற்றும் பழிவாங்கல்கள் என்பவற்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பில் உள்ள பொறிமுறைகளும், உறுப்பு நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் கணபதிபிள்ளை குமணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஊடக உரிமைகள் குழுக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக போர் தொடர்பான குற்றங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் போது அதனை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பொறுப்புக் கூறல், நீதி என்பன வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், தமிழ் ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துஷ்பிரயோகம் மற்றும் உரிமை மீறல்கள் என்பன தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்களை தண்டிக்கவும் அவர்களின் பணியை தடுக்கவும் முயற்சிகள் இடம்பெறுவதாக 8 சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஊடக உரிமைகள் குழுக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள்!

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும்  கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது  நாளாக  வெள்ளிக்கிழமை (15) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மதியம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமை(15) மதியம் நடைபெற்ற ஜும்மா தொழுகை நிறைவடைந்த நிலையில்,முஸ்லிம் மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் 13 வது நாளாக மக்களினால் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இடம் பெற்று வருகிறது.

அண்மையில் இடம் பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் போராட்டம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

செம்மணி ஆவண நூல் வெளியீடு…

Unknown 1 3 செம்மணி ஆவண நூல் வெளியீடு...

கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை கேட்போர் கூட்டத்தில் நேற்று (14.08.2025) பிற்பகல் 2:30 மணியளவில் தென் இலங்கையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களுமான தரிந்து ஜெயவர்தன, தரிந்து உடுவரகெதர, எம்.எப்.எம் பசீர் ஆகிய மூவரும் இணைந்து எழுதி வெளியீடு செய்த செம்மணி எனும் ஆவண நூல் வெளியிடப்பட்டது.

சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற இவ்ளையில் செம்மணி எனும் பெயரிலே அந்த செம்மணியில் நடந்த கொடூரங்களை விபரிப்பதாக இந்த புத்தகம் ஒரு ஆவணமாக ஆக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென் இலங்கை இளைஞர்கள் எடுத்திருக்கிற இந்த முயற்சி தமிழர் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பான விழிப்புணர்வு தென் இலங்கை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவிருக்கின்ற முதல் படியாக பார்க்கப்பட வேண்டியிருக்கிறது.

இந்நிகழ்வில் இந்நூல் தொடர்பாகவும்,செம்மணி,மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் கலந்துரையாடல்களையும் நடாத்தியிருந்தனர் இதில்ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணிகள்,ஊடகவியலாளர்கள்,அரசியல் பிரமுகர்கள்,கல்வியியலாளர்கள்,தொழிற்சங்கப் பிரதிநிதிகள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மனித உரிமைப் பாதுகாவலர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், என பலரும் தென்னிலங்கையில் இருந்து கலந்து கொண்டிருந்தனர். அம்பாறையில் இருந்து மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததோடு சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை விரைவில் தமிழிலும் மொழிபெயர்ப்புச் செய்யவும் இந்நூலிலுள்ள விடயங்களைப் பகுதி பகுதியாகத் தாமும் தமிழில் தொகுத்து வெளியிடவுள்ளதாவும் இதுபற்றி நூலாசிரியர்களில் ஒருவரான தரிந்து உடுவரகெதரவும் தம்முடன் பேசியதாகவும் கூறினார்.

குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும்!

தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு  இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தையும் புதுப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கேட்டுக்கொண்டுள்ளது

அறிக்கையொன்றில் அந்த அமைப்பு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது

தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு ஏனைய சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில்  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு மேலும் தெரிவித்துள்ளதாவது.

பாதுகாப்பு படையினரின் தமிழர்களிற்கு எதிரான உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் பத்திரிகையாளரை விசாரணைக்காக அழைத்தமைக்கான காரணத்தை இலங்கை அதிகாரிகள் தெரிவிக்காத போதிலும் அவரதுசமூக ஊடக பதிவுகள் தொடர்பிலேயே  அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதியில் காணப்படும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான அவரது செய்தியறிக்கையிடலிற்கான பழிவாங்கலிற்காக அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த குமணன் ஒரு புகைப்பட பத்திரிகையாளர்.

முல்லைத்தீவு பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர் ஆவார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படையினரால் தமிழ் பொதுமக்களுக்கு எதிரான மீறல்களை அவர் ஆவணப்படுத்துகிறார்.

ஆகஸ்ட் 17இ 2025 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிடிஐடியால் அவருக்கு  அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவரது சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக தொலைபேசி மூலம் அவருக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும் விசாரணைக்கான காரணத்தை காவல்துறை அறிவிப்பு குறிப்பிடவில்லை.

இந்த  அழைப்பாணை குமணனின் அறிக்கையிடலுக்கான பழிவாங்கும் நடவடிக்கை என்று நம்பப்படுகிறது – முதன்மையாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் சமீபத்தில் வடக்கு மாகாணத்தின் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிகள். குமணன் சமூக ஊடகங்களில் புதுப்பிப்புகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 41 நாட்கள் அகழ்வாராய்ச்சிகளை ஆவணப்படுத்தியுள்ளார் இதன் போது 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடு எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாகவோ அல்லது தோண்டி எடுக்கப்பட்டதாகவோ அவர் தெரிவித்தார். அவரது புகைப்படங்கள் பரவலாகப் பகிரப்பட்டுஇ வக்காலத்து மற்றும் செய்தி ஊடகங்களால் வெளியிடப்பட்டன.

மே 2009 இல் ஆயுத மோதல் இரத்தக்களரியாக முடிவுக்கு வந்ததிலிருந்து குமணன் கட்டாயமாக காணாமல் போதல்கள் இராணுவ நிலம் கையகப்படுத்துதல் சுற்றுச்சூழல் குற்றங்கள் மற்றும் போர்க்கால மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உண்மை நீதி மற்றும் நிவாரணம் கோரும் உயிர் பிழைத்த சமூகங்களின் பிரச்சாரங்கள் போன்ற பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிடுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்த   அழைப்பாணைஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்கள் மற்றும் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் குமணன் அவரது குடும்பத்தினர் பிற பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியோருக்கு எதிரான பரந்த அளவிலான மிரட்டலின் ஒரு பகுதியாகும். குமணன் இதற்கு முன்னர் நேரடி பழிவாங்கல்களை எதிர்கொண்டார் இதில் 2024 ஆம் ஆண்டில் அவரது குடும்பத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அடங்கும்.

ஒரு தமிழ் பத்திரிகையாளரை குறிவைக்க  பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும்மற்றும் பிற பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துவது புதியதல்ல. ஆனால் அது இன்னும் ஆழ்ந்த கவலைக்குரியது. அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் இலங்கை அதிகாரிகள் பிற்போக்குத்தனமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Pவுயு) மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையை துஷ்பிரயோகம் செய்து ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தி அறிக்கை செய்யும் நபர்களைத் தண்டிக்கவும் அவர்களின் பணியைச் செய்வதிலிருந்து அவர்களைத் தடுக்கவும் செய்துள்ளனர். தமிழ் மற்றும் முஸ்லிம் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் – குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் – இத்தகைய பழிவாங்கல்களால் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் மனித உரிமை பாதுகாவலர்களும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல்களிலிருந்து விடுபட்டு பாதுகாப்பான இணக்கமான சூழலில் பணியாற்றுவதை உறுதி செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் காவல்துறைத் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட இலங்கை அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் நடந்து வரும் அனைத்து மீறல்கள் மற்றும் பழிவாங்கல்களையும்இகுறிப்பாக போர் தொடர்பான குற்றங்கள் குறித்துப் பேசுபவர்களை அடக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதையும் சம்பந்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் உறுப்பு நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அத்தகைய விழிப்புணர்வை உறுதி செய்வதற்காக வரவிருக்கும் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவை – குறிப்பாக பொறுப்புக்கூறல் மற்றும் நீதி குறித்த –  மதிப்பாய்வு செய்யும் போது இலங்கை மீதானஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின்  இன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் ஆணையையும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின்இன் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தையும் புதுப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கேட்டுக்கொண்டுள்ளது

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலுள்ள பிரச்சினைகளை ஆராய விசேட குழு நியமனம்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் இக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மின் சக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில்  வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டின் ஊடாக 70 சதவீத மின் உற்பத்தியை மேற்கொள்வதே எமது இலக்காகும். அதனடிப்படையில் 5 வருடங்களுக்குள் அதாவது 2030ஆம் ஆண்டாகும் போது மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இந்த இலக்கை அடைவதற்கு மீள் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். அதற்கமைய மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் ஸ்திரத்தன்மை ஆகியவையே அந்த மூன்று பிரதான காரணிகள் ஆகும். இவை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை கிடைத்த பின்னரே வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் சுற்றாடல் அமைச்சன் அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நீர் வழங்கள் வடிகால் அமைப்பு அதிகார சபை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், புவி சரிதவியல் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவுக்கு ஒரு வாரம் காலம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இக்குழுவுடனான முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளது. ஒரு வாரத்துக்குள் பிரச்சனைகளை இனங்ண்டு அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் அந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் அதற்கு எடுக்கும் காலம் என்பவற்றை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வேலைத்திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.