இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் அவசியத்தை இந்த அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப்பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஒரு கவலைக்குரிய சித்திரத்தை முன்வைப்பதுடன், சர்வதேச சமூகம் ஏன் இலங்கை விடயத்தில் தனது கண்காணிப்பைத் தளர்த்தக்கூடாது என்பதற்கான ஓர் எச்சரிக்கை மணியாகவும் உள்ளது.
ஐ.நா. அறிக்கை குறிப்பிடும் கட்டமைப்பு ரீதியான காரணிகள் தற்காலிகப் பிரச்சினைகள் அல்ல. அவை நாட்டின் நிர்வாக சட்ட மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நீண்டகாலப் பிரச்சினைகளாகும். சர்வதேசக் கண்டனங்கள் இருந்த போதும், தன்னிச்சையான கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.
போர்க்குற்றங்கள் மற்றும் பெரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது நம்பகரமான விசாரணைகள் இன்றி, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளனர். கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் இல்லாமை மற்றும் உள்நாட்டு நீதிப்பொறி முறைகள் தோல்வியடைந்தமை என்பன சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்துகிறன.
ஐ.நா. ஆணையாளரின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் என்பது, இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் பெரும் மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து, பாதுகாத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு சர்வதேசப் பொறிமுறையாகும். இலங்கை இத்தகைய சர்வதேசப் பொறிமுறைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து, நாட்டின் இறைமையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்துகிறது.
எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான ஒரு புதிய தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், அதன் ஆயுள்காலத்தை நீடிக்கவும் சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வலுப்படுத்துகிறது. இலங்கையின் கட்டமைப்பு மாறாத வரை, சர்வதேசத்தின் கண்காணிப்பும் தளரக்கூடாது – என்றார்.
அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்ப் அலாஸ்காவில் ஒரு “மோசமான ஒப்பந்தம்” செய்து, ராஜதந்திர வெற்றியை அறிவிக்கலாம் என்று ஐரோப்பிய தலைவர்கள் கவலைப்படுகிறார்கள் என தி எகனாமிஸ்ட் என்ற ஊடகம் கடந்த வியாழக்கிழமை (14) தெரிவித்துள்ளது.
உக்ரைனையும் அதன் நட்பு நாடுகளையும் ஒரு மீளமுடியாத நிலைக்கு இந்த உடன்பாடு கொண்டுசெல்லக்கூடும். ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனான ட்ரம்பின் இந்த வாரம் இடம்பெற்ற காணொளி உச்சிமாநாட்டிற்குப் பிறகும், ஜெலென்ஸ்கியால் செயல்படுத்த கடினமாக இருக்கும் ஒரு பிராந்திய பரிமாற்றத்தை அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்துகிறார் என்று உக்ரைனின் நட்பு நாடுகள் கவலைப்படுகின்றன.
ட்ரம்பின் சமீபத்திய அணுகுமுறை மாற்றத்தில், அவரது ரியல் எஸ்டேட் வணிக கூட்டாளியான விட்காஃப் முக்கிய பங்கு வகித்துள்ளார். விட்காஃப் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு பெரிய ஒப் பந்தத்தை ஆதரிக்கிறார். பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடுவது பொதுவாக உக்ரைனுக்கு தீங்கு விளைவிக்கும். எப்படியோ, ரஷ்யா தனது வசம் வைத்திருக்கும் பிரதேசங்களின் மீதான கட்டுப்பாட்டை அங்கீகரிப்பது குறித்த விவாதம், ரஷ்யாவிடம் இன்னும் அதிகமான பிரதேசங்களை ஒப்படைப்பது பற்றிய பேச்சு வார்த்தைகளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனிய துருப்புகள் இருந்தது முதல், நிலப்பரிமாற்றக் கருத்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது, உக்ரைன் குர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதால், இந்த திட்டம் சர்ச்சைக் குரியதாக மாறியுள்ளது.
இருப்பினும், பரிமாற்றக் கருத்து வாஷிங்டனில் தொடர்ந்து வாழ்வதாகத் தெரி கிறது. சமீபத்திய உக்ரேனிய திட்டங்களில் ஒரு தெளிவான நிபந்தனை இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. பிராந்திய சலுகைகள் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக முழுமையான போர்நிறுத்தம் இருக்க வேண்டும் என்பதே அது. ஆனால், உக்ரைனை அதன் சொந்த பிரதேசத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஒரு எதிர்த்திட்டத்தை முன்வைக்க அழைப்பு விடுக் கும் அமெரிக்கர்களுக்கு இது போதாது,” என்று தி எகனாமிஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகளால் அமெரிக்க கார் விற்பனை சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இது கார் உற்பத்தி யாளர்களை கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் காக்ஸ் ஆட்டோமோட்டிவ் வெளியிட்ட தரவுகளின்படி, புதிய கார் விற் பனை கடந்த ஜூன் மாதம் 15.6 மில்லியனில் இருந்து 15.3 மில்லிய னாக, அதாவது 300,000 கார் விற்பனை குறைந்துள்ளது.
தேவைக்கு மீறிய செலவு மற்றும் விலைகள் உயர்ந்துள்ளன. நுகர்வோர் அந்த அதிக விலைகளுக்கு பணம் செலுத்தும் மன உறுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதால், அவர்கள் கொள்முதல் செய்வதில் இருந்து பின்வாங்கு கின்றனர் என ஜார்ஜியா மாநிலத்தின் ராபின்சன் வர்த்தகக் கல்லூரியின் விநியோகச் சங்கிலி மேலாண்மை உதவிப் பேராசிரியர் ஜினோ கோலாரா அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் வரிக் கொள்கைகள் மீதான ஒழுங்கற்ற அணுகுமுறை, சிலவற்றை நடைமுறைப்படுத்தி பின்னர் அவற்றை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் வர்த்தகத் திட்டமிடலில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம், ஸ்டெல்லாண்டிஸ், போர்ட் மற்றும் வோல்வோ போன்ற கார் நிறுவனங்கள் இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்களது நிதித் திட்டமிடலை நிறுத்தி வைத்திருந்தன.
இரண்டாவது காலாண்டில் வரிகள் காரணமாக 1.2 பில்லியன் டாலர்களை இழந்ததாக வோல்வோ நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்தது. போர்ட் நிறுவனமும் கடந்த காலாண்டில் 800 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது. எனவே இந்த ஆண்டு அது 3 பில்லியன் டாலர்களை இழக்கலாம் என தெரிவித்துள்ளது. ஜி.எம். நிறுவனம் தனது இழப்பு 5 பில்லியன் டாலர்கள் என தெரிவித்துள்ளது. ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் 9.5 பில்லியன் டாலர்களை இழக்கலாம் என தெரிவித்துள்ளது.
மே மாதத்தில், ஃபோர்டு நிறுவனம் மெக்சிகோவில் தயாரிக்கப்படும் அதன் சில கார்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று அறிவித்தது. இதில் மஸ்டாங் மேக்-ஈ எலக்ட்ரிக் எஸ்யூவி, மேவரிக் பிக்-அப் டிரக் மற்றும் ப்ரான்கோ ஸ்போர்ட் போன்றவை அடங்கும். சில சந்தர்ப்பங்களில் $2,000 வரை விலை உயர்த்தப்படலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது என எட்மண்ட்ஸின் ஆட்டோமோட்டிவ் துறை நுண்ணறிவு தளமான கோஸ்டு கார் இன்டெக்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (18) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும்.அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8 ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது.முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச் சென்றதாகவும், இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,அதனால் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு ‘முத்தையன்கட்டு முகாமிற்குள் ஒருதரப்பினர் அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிட்டு,.இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்வதாக’குறிப்பிட்டிருந்தது.
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிகொண்டுள்ள இராணுவ பிரசன்னத்துக்கும், இளைஞனின் மரணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது.இந்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறித்து கடந்த 15 ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபட அறிவித்திருந்தது.
இருப்பினும் பல்வேறு நியாயமான காரணிகளால் ஹர்த்தால் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த பூரண ஹர்த்தாலுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் தரப்பினர்,வணிக அமைப்பினர் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தாலில் அமுல்படுத்தப்படுகிறது.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி சகல தரப்பினரிடமும் வலியுறுத்துகிறது.
பொதுமக்களின் உயிர்க ளைக் காக்கும் உதவிப்பொருட்களை காசாவிற்கு அனுப்பு வதை இஸ்ரேல் தடுத்து வருவதற்கு எதிராக நூறுக்கும் மேற்பட்ட உதவி அமைப்புகள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரி வித்துள்ளன.
இஸ்ரேலின் இந்த நடவடிக் கைகளால் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள உதவிப்பொருட்களின் களஞ்சியங் களில் பெருமளவான நிவாரணப் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால் பாலஸ்தீனிய மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை இஸ்ரேல் முற்று கையிட்டுள்ள நிலையில், காசாவின் எல்லைகளில் உதவி லாரிகள் குவிந்துள்ளன. மேலும் உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் நுழைவதைத் தடுக்க இஸ்ரேல் புதிய விதிகளைப் பயன்படுத்தி வருகிறது என்று குழுக்கள் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
காசாவிற்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்குத் தடைகள் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளபோதும், கடந்த மார்ச் மாதம் 2 ஆம் நாளில் இருந்து அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனங்களால் ஒரு லாரி உணவுப் பொருட்களைக் கூட அனுப்ப முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வளர்ந்து வரும் பொருட்களின் தேக்கத்தை அகற்றுவதற்குப் பதிலாக, இஸ்ரேலிய அதிகாரி
கள் டஜன் கணக்கான அரசு சாரா நிறு வனங்களின் உயிர்காக்கும் பொருட்களைக் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர். இந்த அமைப்புகளுக்கு ‘உதவி வழங்க அதிகாரம் இல்லை’ என்று காரணம் காட்டியுள்ளனர். எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் (MSF) மற்றும் ஆக்ஸ்பாம் ஆகியவை இதில் அடங்கும்.
பல தசாப்தங்களாக காசாவில் பணியாற்றி வரும் நிவாரண அமைப்புகளிடம், புதிய “பதிவு விதிகள்” காரணமாக உதவி வழங்க “அங்கீகாரம்” இல்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் “பாதுகாப்பு” சோதனையும் அடங்கும். இதன் விளைவாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் இப்போது அடிப்படைப் பொருட்கள் இல்லாமல் உள்ளன. மேலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் “இறந்து வருகின்றனர்”.
“இராணுவமயமாக்கப்பட்ட உணவு விநியோகத் திட்டம் பட்டினியையும், துன்பத் தையும் ஆயுதமாக்கியுள்ளது. GHF தளங்களில் விநியோகம் தீவிர அளவிலான வன்முறை மற்றும் கொலைகளுக்கு வழிவகுத்துள்ளது. முதன்மையாக இளம் பாலஸ்தீனிய ஆண்கள், ஆனால் உணவு பெறும் நம்பிக்கையில் தளங்களுக்குச் சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட,” என்று காசாவில் உள்ள MSF இன் அவசர ஒருங்கிணைப்பாளர் ஐடர் ஜபல்கோகியாஸ்கோவா கூறினார்.
மே மாதத்திலிருந்து GHF விநியோக தளங்களைச் சுற்றி உதவிப் பொருட்களை அணுக முயன்ற குறைந்தது 859 பாலஸ்தீனியர்கள் கொல் லப்பட்டுள்ளனர். அறிக்கையில் கையெழுத்திட்ட 100க்கும் மேற்பட்ட நிவாரண அமைப்புகள், இஸ்ரேல் அதன் “உதவி ஆயுதமாக்குதலை” நிறுத்தவும், இஸ்ரேல் அதன் “அதிகாரத்துவத் தடையை” முடிவுக்குக் கொண்டு வரவும், காசாவிற்கு உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளை நிபந்தனையின்றி வழங்கவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும். எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று, ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும் அரங்கேற்றப் பட்டு வரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை வெறுமனே நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும் அதிகூடிய தேவை யற்ற இராணுவ முகாம்களும் முப்படையின் பிரசன்னமுமே காரணமாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு வழங்கவேண்டிய பதிலை, சட்ட மா அதிபர் திணைக்களம் தற்போது தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker turk) இலங்கை குறித்த தனது அண்மைய அறிக்கையில், சட்ட மாஅதிபர் அலுவலகத்தை நீதிக்கு ஒரு முக்கிய தடையாக விபரித்துள்ளார்.
அதேநேரத்தில் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்தே குறித்த கருத்துக்கள் தொடர்பில் வெளியுறவு அமைச்சுடன் கலந்தாலோசித்து பதில் வரைவு செய்யப்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்கின் அறிக்கையில் அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கு, இலங்கை அரசாங்கத்தின் பதிலின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த செவ்வாயன்று, வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடுமையான மனித உரிமை மீறல்களைத் தொடர ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக சட்ட மாஅதிபர் அலுவலகத்திற்குள் சீர்திருத்தம் தேவை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் சட்ட மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ள வழக்குத் தொடரும் விருப்புரிமை, பொலிஸாரின் வரையறுக்கப்பட்ட புலனாய்வுத் திறன், தகுதிவாய்ந்த தடயவியல் நிபுணர்கள் இல்லாமை மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகளின் வெற்றிடங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவதைக் கூட்டாகத் தடுக்கின்றன மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கின்றன என்று அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அரசாங்கம் தனது கொள்கை அறிக்கையில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இருந்து சுயாதீனமான பொது வழக்குத் தொடரும் பணியகத்தை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது என்பதையும் உயர்ஸ்தானிகரின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், இந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் நேற்று (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒட்டுச்சுட்டான் பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் கடந்த 7ஆம் திகதி 5 பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.
அதன்போது, அங்கிருந்த சில சிப்பாய்கள் அவர்களை தாக்கி, அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய போது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர்களை விரட்டிய மற்றும் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 3 இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது என்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் பொலிஸார் தயாரித்துள்ளனர். சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கு, சில குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கண்டிக்கிறது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, இராணுவம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார். முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாகவும், இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. எனினும், மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைக்கு பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும் என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப சட்ட கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும், செயல்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இலங்கை தொடர்பான பரிந்துரை அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
போர் மற்றும் மோதல் சூழலில் பதிவாகிய பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாலியல் வன்முறை குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், நிலைமாறுகால நீதி செயல்முறைகளைக் கொண்ட நாடுகளின் அதிகாரிகளிடம் இதற்கான கோரிக்கை விடுப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் தொடர்பான பாலியல் வன்கொடுமையால் பிறந்தவர்கள் உட்பட, உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உருமாறும் இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்களை மேம்படுத்துவதற்கு, போதுமான நிதியை ஒதுக்குமாறு சர்வதேச சமூகத்திடம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் அவதானிக்கப்பட்ட பேர்க்கால பாலியல் துஷ்பிரயோக வன்முறை சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு பொதுச் செயலாளரால் விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில், பாதுகாப்புப் படையினரால் தமிழர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் 2024 ஆம் ஆண்டு விசேட அறிக்கையில் பதிவாகியிருந்தமையை பொதுச் செயலாளர் தனது புதிய அறிக்கையில் நினைவுப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் தொடர்ச்சியான தாமதம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக, இலங்கையின் வடக்கு பகுதியில் உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், தமக்கு ஏற்பட்ட களங்கம் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் அதில் பங்கேற்கத் தயங்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ட்ரம்ப்-பூட்டினின் பொய்களை விழுங்குவதே உக்ரேனுக்குக் குண்டுகளை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது” என்ற கருத்தைப் பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான “தி கார்டியன்” இல் அதன் பத்திரிகை எழுத்தாளர் ரபாயேல் பெய்ர் 13/08/2025இல் தனது அரசியல் ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருந்தார். அதை வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டேர்க்கின் சிறீலங்காவின் மனித உரிமைகள் குறித்த அறிக்கை, “தமிழரசுக் கட்சி சிறீலங்காவின் பொய்களை விழுங்குவதே ஈழத் தமிழர்களுக்கு சிறீலங்காவின் இன அழிப்பு என்னும் குண்டை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது” என்று இலக்கை எழுத வைக்கிறது.
சிறீலங்கா முள்ளிவாய்க்காலில் தேசமாகவே ஈழத் தமிழர்களை இன அழிப்பு செய்து, அவர்களின் 31 ஆண்டுகால நடைமுறை அரசை ஆக்கிரமித்ததின் பின்னரான தமிழரசுக் கட்சியின் தலைமை, “சர்வதேச சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்குத் தொடுப்பதற்கான முக்கிய பொறுப்பு சிறீலங்கா அரசாங்கத்துக்குரியது” என உள்ளகப் பொறிமுறைக்குள் ஈழத் தமிழின அழிப்பு விசாரணைகளை முடக்கியது வரலாறு. தற்போது இவர்களின் அதே கருத்தையே ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும் அப்படியே வெளிப்படுத்தியுள்ளதை, அறிக்கையைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வர். சிறீலங்காவின் முயற்சிகளுக்கு அனைத்துலக வழிமுறைகளால் ஆதரித்து ஆதரவளித்தல் என்பதே இந்த அறிக்கையின் நெறிப்படுத்தலாக உள்ளது. இந்த முறையிலேயே, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனைப் பயன்படுத்தி, பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளைச் சிறீலங்கா மேற்கொள்வதற்கும், நல்லிணக்க முயற்சிகளுக்குப் பங்களிப்பதற்கும் உதவுதல்” என்ற வரைபடத்தையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை உணரத் தேவையான நிதி வலுவைச் சிறீலங்கா அரசுக்கு வழங்கவும், சிக்கன நடவடிக்கைகள் நாட்டின் மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கான திறனைக் குறைமதிப்புக்கு உட்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், அனைத்துலக நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிப்புறக் கடன் வழங்குநர்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். இது ஒருவகையில் சிறீலங்காவின் இன்றைய திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்று, அதற்கான நிதியுதவியை விதந்துரைக்கும் செயற்பாடாகவே உள்ளது.
மேலும், தற்போதைய சிறீலங்கா அரசாங்கம் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், சட்ட விசாரணைகளில் முன்னேறுகிறது என்ற பாணியிலேயே அறிக்கை அமைந்துள்ளமை, அறிக்கையின் எதார்த்தத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையை அறிக்கை பிரிவினையாகவே அறிவித்துள்ளமை யைப் பார்க்கின்றபோது, அதுவும் தமிழரசுக் கட்சி “நாங்கள் பிரிவினை கோரவில்லை” எனத் தேசிய விடுதலை இயக்கம் பிரிவினை கோரியதாக வெளிப்படுத்திய கருத்தியலின் தாக்கம் என்பது தெட்டத் தெரிகிறது. எனவே, ஈழத் தமிழரின் பெரும்பான்மைக் கட்சியெனத் தன்னை முன்னிலைப்படுத்தும் தமிழரசுக் கட்சி சிறீலங்கா ஆட்சியை ஏற்பதும், அதன் உள்ளகப் பொறிமுறையில் தீர்வு காணலாம் என நம்பிக்கை வெளிப்படுத்துவதுமே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மூலம் கூட, கடந்த 16 ஆண்டுகளாக அனைத்துலக விசாரணையைப் பாதிப்புற்ற ஈழத் தமிழர்களால் பெற இயலாது இருக்கிறது. மாற்று அரசியல் தலைமையொன்றை ஈழத் தமிழர்கள் உருவாக்கும் வரை, இந்த இயலாமை தொடரத்தான் செய்யும். இன்றைய செம்மணியின் ஈழத் தமிழின அழிப்பு ஆதாரங்கள் கூட, அதற்குரிய அனைத்துலக கவனத்தை எட்டுவது மிகக் கடினமாக இருக்கும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
அதே வேளை, உலக மக்களினமான ஈழத் தமிழர்களாலும், தாங்கள் வாழும் நாடுகள் உட்பட ஒரு நாட்டைக் கூட ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக விசாரணையை வலியுறுத்த வைக்க இயலாதிருப்பதன் காரணம் புலம்பெயர் ஈழத் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் நாடுகளின் அல்லது அமைப்புக்களின் சார்புநிலையில் அனைத்துலக விசாரணையைக் கொண்டுவர வைக்கலாம் என்னும் நோக்கும் போக்குமே ஆகும். இவை நடைமுறைச் சாத்தியமாகா என்பதை, ட்ரம்ப்-பூட்டின் அலாஸ்கா பேச்சுச் சுற்றில் பாதிப்புற்றுள்ள உக்ரேனின் நேரடிப் பங்களிப்பு இல்லாமலே, உலகின் வல்லாண்மைகளான அமெரிக்காவும் ரஸ்யாவும் தாம் விரும்பியவாறு உக்ரேனின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கிறோம் என உக்ரேன் மக்களின் நிலத்தைத் தாம் நினைத்த மாதிரி பங்கீடு செய்யவும் பயன்படுத்தவும் முயல்வதும் விளக்கியுள்ளது.
இவ்வாறு, உலகில் பாதிப்புற்றவர்களின் பங்களிப்பு இல்லாமல், ஆக்கிரமிப்பாளரும் உலகின் வல்லாண்மை மேலாண்மை நாடுகளும் பாதிப்புற்றவர்களின் தேசியப் பிரச்சினைகளுக்குத் தாம் விரும்பிய தீர்வு காணும் புதிய அரசியல் போக்கை, இந்தியாவே 1987இல் இந்தோ-சிறீலங்கா ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பின் பங்களிப்பு இன்றி செய்து தொடக்கிவைத்தது என்பது உலக வரலாறாக உள்ளது.
இதற்கு அந்நேரத்தில், ஈழத் தமிழர்களின் பாராளுமன்ற அரசியல் தலைமையாக இருந்த தமிழரசுக் கட்சியே பக்கத்துணையாக நின்று, ஈழத் தமிழர்களின் இறைமையைத் தேசியத்தை ஒடுக்கமடைய வைத்தது என்பது, ஈழத் தமிழின அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். அதுவரை நேரடியாக ஈழத் தமிழர் அரசியலில் தலையீடு எதனையும் செய்யாதிருந்த இந்தியாவை, ஈழத் தமிழர் அரசியலின் மேலாதிக்க சக்தியாக மாற்றிய தமிழரசுக் கட்சியின் இச்செயலே, ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமையை ஈழத் தமிழர்கள் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிர்காலத்தை அமைக்க இயலாதவாறு, அவர்களை உள்நாட்டு-வெளிநாட்டுப் பேச்சுக்களில் இறைமையாளர்களாகப் பங்கேற்க இயலாத புதிய அரசியல் எதார்த்தத்தை உருவாக்கியது என்பதும் வரலாறு.
இவற்றை உணர்ந்துதான், ஈழத் தமிழர் தேசியப் பேரவையின் சார்பில் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராக மக்களாணை உடையவரும், சட்டத்தரணியும், ஈழத் தமிழர் அரசியலின் அங்கமாக 80 ஆண்டுகள் அனுபவமுடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சமகாலத் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “எவ்வாறாவது தமிழரசுக் கட்சியுடன் உரையாடல்களை நடாத்தி, ஈழத் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொதுவான கோரிக்கையொன்றை அனைத்துலக விசாரணைக்கு முன்வைக்கும் முறையில் அரசியல் சூழ்நிலையை உருவாக்காது விட்டால், சிறீலங்கா இன்று உருவாக்கிக் கொண்டிருக்கும் அதன் அரசியலமைப்பில் ஈழத் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தக் கூடிய, ஈழத் தமிழரின் தேசிய ஒருமைப்பாட்டுடன் கூடிய அரசியல் அமுக்கத்தை ஏற்படுத்தாது விட்டால், ஈழத் தமிழ்த் தேசியம் அழிந்துவிடும் அபாயம் பலமாக உள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு எதிர்வினையாக, ஈழத் தமிழர் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கச் செயலில் முயன்று வருகின்றார். இந்தக் கட்சிசார்பற்ற முயற்சிக்கு இலக்கு, அவர் அதை ஆரம்பித்த நாளில் இருந்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதன் அவசியத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை கடந்த வாரத்தில் நிரூபித்துள்ளது.
இன்னும் பழைய சித்தைகளில் புதிய திராட்ச இரசத்தை வார்த்து, அது சித்தைகளை வெடிப்பித்துச் சிந்திப்போக வைக்கும் முட்டாள்தனமான அரசியலை நடாத்துவதை விடுத்து, கஜேந்திரகுமாரின் முன்முயற்சிகளில் குறை கண்டால், அதை நிறைவு செய்யக் கூடியனவற்றைச் செய்து, அந்த முயற்சியை ஈழத் தமிழினத்தினை இன அழிப்பு செய்தவர்களுக்கான தண்டனை நீதியையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகார நீதியையும், அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் பெற உழைத்தால் மட்டுமே, செம்மணியின் இன்றைய சாட்சியங்கள் கூட உலகால் அதற்குரிய முறையில் கவனம் பெறும் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.