Home Blog Page 44

நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்குமாறு பிரித்தானியாவிடம் கோரிக்கை

செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பிரித்தானிய பாராளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனிதப்புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்க முன்வரவேண்டும் என்றும் பிரித்தானியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்த நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் (Keir starmer) கடிதமொன்றை கையளித்து இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். குறித்த கடிதத்தில் செம்மணி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் பிரித்தானியாவின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

அரச அனுசரணையுடனான ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமை, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியின் ஊடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணிப்படுகொலை என்பது தனியொரு குற்றச்செயல் அல்ல என்றும், மாறாக அது நீண்டகாலமாகத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டத்தின் ஓர் அங்கம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவித் தமிழ் மக்களின் எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி, தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் போக்கு தொடர்கிறது என்பதற்கான சான்று என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதுடன் செம்மணி விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், செம்மணி உள்ளடங்கலாகத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும் பிரித்தானியாவிடம் வலியுறுத்த வேண்டும். அத்துடன் செம்மணிப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறலைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவ ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்துவதுடன் தமிழர்களை இலக்குவைத்துத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் நில அபகரிப்புக்களை கண்டிக்க பிரித்தானியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர்.

மண்டைதீவு மனிதப்புதைகுழிக்கு நீதியான விசாரணையை கோரி வேலணை பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு மனித புதைகுழிக்கு நீதியான விசாரணையை கோரி வேலணை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சுயேட்சைக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பில் பிரேரணையை முன்வைத்திருந்தார். குறித்த பிரேரணை சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல – மைத்திரிபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை  அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர்,

இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் எதிர்காலத்தில் எமக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை பகிரங்கமாகவே கூறுகின்றேன்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளோடு இறுதியில் இந்தியா எமக்கு பருப்பு வழங்கியது. பருப்பினை வழங்கி ஜே.ஆர்.ஜெயவர்தன தரப்பினரை அச்சுறுத்தி இந்து – லங்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது.

இந்து – லங்கா ஒப்பந்தத்தின் பின்னர் என்ன ஆனது? அதனை நடைமுறைப்படுத்துவதற்காக 13ஆவது அரசியமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாகாணசபை சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மாகாணசபைகள் செயற்பாட்டில் இல்லை. 2500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்களுக்கான சம்பளம், வாகனம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவை எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை அல்ல என்பதே உண்மையாகும். தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதாயின் எமது நாட்டுக்குள்ளேயே அதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. ஆனால் இந்து – லங்கா ஒப்பந்தம் காரணமாக இன்று தேசிய ஒற்றுமை எட்ட முடியாத ஒரு இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவு திட்டத்தில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கூடியளவு நிதி வீணாக மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலைமை எம்மால் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக எமக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தத்தினால் ஏற்பட்டவையாகும்.

இவற்றை விட மேலும் பல அநீதிகள் எமக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமாகவே எனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டு எனது அரசாங்கம் கலைக்கப்பட்டு கட்சியும் சீரழிக்கப்பட்டது. இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால் யாராலும் அதனை வெளியில் கூற முடியாத நிலைமையே காணப்படுகிறது. தற்போது பிரதான சூத்திரதாரியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள்.

சகல அரசாங்கங்களும், இராணுவத்தினரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சூத்திதாரி எங்கிருக்கின்றார் எனக் கூறினாலும், எம்மால் அவர்களுடன் மோத முடியாது.

சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். அவர்களால் போர் இல்லாமல் வாழ முடியாது. அவர்களுக்கு போர் மனநிலை மாத்திரமே இருக்கிறது. உதாரணமாக, நெதன்யாகுவைக் குறிப்பிடலாம். அவர் எப்போதும் யாரையாவது தாக்க முயற்சித்துக் கொண்டே இருப்பார்.

போருக்குச் செலவிடப்பட்ட பணம் அனைத்தும் உலகின் ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும். 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் சென்றபோது, தெருக்களில் யாசகர்களைப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது, அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். இந்தப் போர் மனநிலைதான் இதற்கு வழிவகுத்தது என்றார்.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம் – பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும்  கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை  ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் ஏன்  இடைநிறுத்தியது என்பதை அறியவில்லை. இவ்விடயம் குறித்து அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். இவ்வாறான கைதுகளை தடுக்க நீதியமைச்சுடன் கலந்துரையாடுவோம். தமிழர்கள் என்பதால் கைது செய்யப்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ராஜபக்ஷர்களின் ஒருசில அவதாரங்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது  என   பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற  சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சபையில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டன.யுத்தகாலத்தில் தான் இவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச் சென்றுள்ளாளர்கள். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள்.

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகாலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றளவில் தீர்க்கப்படவில்லை.110000 இலங்கையர்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இதில் 28500 பேர் இலங்கை குடியுரிமையும், இந்திய குடியுரிமையும் இல்லாத நிலையில் இருந்தார்கள். இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர்  ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் பங்குப்பற்றலுடன் பாராளுமன்றத்துக்கு பிரேரணையொன்றை கொண்டு வந்தோம்.ஒரு உறுப்பினரை தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் அந்த பிரேரணைக்கு ஆதரவளித்தார்கள்.இதன் பின்னரே அந்த 28500 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுமார் 6000 பேர் வரையிலானோர் இலங்கைக்கு வந்து மீள்குடியேறியுள்ளார்கள்..இந்தியாவில் அகதிகளாக இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களை மீள்குடியமர்த்த தனிப்பட்ட முறையில் தலையீடு செய்துள்ளேன். கனகபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று மீள்குடியேற்ற பணிகளை ஆராய்ந்துள்ளேன்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. சின்னையா சிவலோகநாதன் என்பவர் நாடு திரும்பிய போது அவர் யாழ்.பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்விடயத்தில் நான் தலையீடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்  அறிவுறுத்தல்களுடன்  சிவலோகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்க பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வது அரசாங்கத்தின் கொள்கையல்ல,அவ்வாறு கைது செய்வது தவறு .நாங்கள் நாட்டை நிர்வகிக்கிறோமே தவிர குடும்பத்தை நிர்வகிக்கவில்லை. அரச அதிகாரிகளில் ஒருசிலர் செய்யும் தவறுகளை அரசாங்கத்தின் தவறு என்று குறிப்பிடுவது முறையற்றது.

ஏதாவது ஒரு விடயத்தை பிடித்துக் கொண்டு அரசாங்கத்தின் மீது சேறுபூசுவதை ஒரு தரப்பினர் தற்போது பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.வடக்கிலும் தெற்கிலும் இனவாதிகள் தற்போது அநாதையாகியுள்ளார்கள்.தமிழ் அகதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒருசிலர் பல்வேறு வகையில் செயற்படுகிறார்கள்.  ராஜபக்ஷர்களின் அவதாரமாகவே இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதத்துடன் செயற்படுகிறார்கள்.

இந்தியாவில் அகதிகளாக இருந்த ராமசாமி தேவராஜா, தேவராஜா புஷ்பராணி ஆகிய இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்..இலங்கையில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் உள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45(1)பி அத்தியாயத்தின் 34 ஆவது பிரிவின் பொது காரணிகளுக்கு அமைவாகவே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டுக்கு வரும் அகதிகள் இவ்வாறு கைது செய்யப்படுவது கவலைக்குரியது.இருப்பினும் அதற்கு ஏதேனும் சட்ட காரணிகள் இருக்கும் .இந்த சட்ட விடயங்களை திருத்துவதற்கான இயலுமை காணப்படுகிறது. தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் கடந்த காலங்களில் சட்ட திருத்தத்துக்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்.முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம். இந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை  ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் ஏன்  இடைநிறுத்தியது என்பதை அறியவில்லை.கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகாமுடன் அமைச்சு மட்டத்தில் பேசுவோம்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி அவர்களை இலங்கை பிரஜைகளாக்க உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் கலந்துரையாடி இவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.அதிகாரிகள் இழைக்கும் தவறை இனவாதம் என்று குறிப்பிட வேண்டாம்.தமிழர்கள் என்பதால்  இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் பதவி கனவுடன் இருப்பவர்கள் குறிப்பிடலாம்,ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு குறிப்பிடுவது அழகல்ல, குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுங்கள் அதனை விடுத்து இனவாத செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காதீர்கள் என்றார்.

தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், தம்மை கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி அவர் முன் பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் நேற்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபர் என பெயரிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவு செய்ய முடியும்!

விரைவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு அண்மையில் கூடிய போது, அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியேன்சி ஹர்ஷகுலரத்ண இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த சட்டமூலத்தில் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழு இதுவரையில் 14 சந்தர்ப்பங்களில் கூடியுள்ளது.

இதன்படி, குறித்த குழு மீண்டும் நாளைமறுதினம் (22) கூடவுள்ளது. அதேநேரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உள்ளிட்டவற்றிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை

ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பலவருட தாமதங்கள் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தமைக்காக இலங்கையை அந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன. அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து 16 ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்குவதற்கான பேரவையின் இயலாமை குறித்து அந்த அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

தற்போது செம்மணியில் 140 இற்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அமைப்புகள் சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

பாதிக்கப்பட்டோர்களை பாதுகாப்பு தரப்பு தொடர்ந்தும் துன்புறுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

இலங்கை பாதுகாப்பு படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (20) தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தநிலையில் இலங்கையில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கும் நிலைமைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான தீர்மானங்களை புதுப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரிமைகளை மதிக்கும் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்த போதிலும் அவை மிகக் குறைவாகவே உள்ளதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.
இலங்கையில் நீதிக்கான வாய்ப்புகள் எப்போதும் குறைவாகவே உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டமை தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணரக் கூடிய தடயவியல் நிபுணத்துவம் வாய்ந்த சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  பல தசாப்தங்களாக இலங்கையில் சுமார் 20 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் எப்போதும் விசாரணைகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையும் மனித உரிமைகள் பாதுகாவலர்களையும் புலனாய்வு அமைப்புகள் அச்சுறுத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை தன்னிச்சையாக தடுத்து வைக்கவும் துன்புறுத்துவதற்கும் இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்களை பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் முடிவு குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை மீள அனுப்பும் செயற்பாட்டை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியதாகக் கூறப்படும் விடயம் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் இருந்து அகதிகளை மீள அனுப்பும் செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருந்தது. தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக கூறுகின்றவர்களின் நன்மை கருதியே இந்த செயற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.

இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள் அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தங்களுக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  எனினும், இலங்கைக்கு மீள அனுப்பப்பட்ட ஒருவர் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, தாம் தலையிட்டு அவரை விடுதலை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் அதற்கமைய அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மீள அனுப்படும் இலங்கையின் அகதிகளுக்கான எவ்வித திட்டமும் இலங்கையில் இல்லை என்றும் அதனால் புதிய திட்டம் ஒன்றை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதனால், மீள நாடு திரும்பும் இலங்கையின் அகதிகளை கைது செய்ய வேண்டாம் என தாம் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நான்கு பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் 4 பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக செயலாளர் ஆ.சிறி அறிவித்துள்ளார்.

மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்), மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (மின்னியல்), மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (படவரைஞர்), வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை ஆகிய 4 பதவியணிகளுக்குமே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முழுமையான அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பங்கள் என்பன www.np.gov.lk  → Exam and Recruitment  → Advertisement    என்ற வடக்கு மாகாண இணையத்தளத்தில்  பார்வையிட முடியுமென்பதுடன் தகைமையுடையவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு  அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.