Home Blog Page 43

முன்னாள் ஜனாதிபதி ரணில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

சிறை காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

காணிகள் விடுவிப்பு, காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும்   தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம்  தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு , இரண்டு மாதங்களுக்குள் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும்.

அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது ஒரு சிலர் கூறுவது போல இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக் குறியாகி இருக்கின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி யுள்ளது.

1981 ஆம் ஆண்டு நாட்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்று 16, 18இலட்சம்  மக்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள்.

தற்போது அங்கு ஆறு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயம். அன்று 11 பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள். அடுத்து அதுவும் குறைவடையலாம். அந்த வகையில் அரசியல் ரீதியான இருப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.

அந்த  மக்களின் வெளியேற்றமே இந்த கேள்விக்குறிக்கான காரணம். கடந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். அதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மக்கள் இழக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போதும் மாணவர்கள், புத்திஜீவிகள் அங்கிருந்து வெளியேறும் மனநிலை அதிகரித்திருக்கின்றது.

ஒரு காலத்தில் கல்வி ரீதியில் பெரும்  முன்னேற்றமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்கியது. எனினும் கடந்த 10 வருடங்களைப் பார்க்கும் போது கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. இம்முறை அது ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளது.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் ஆற்றப்படவில்லை. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணையை ஸ்ரீதரன் எம்பி சபையில் முன் வைத்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வெளியேறுவார்களானால் இன்னும் சில காலங்களில் மக்கள் இல்லாத யாழ்ப்பாணமே இருக்கும். இந்த நிலைமையில் இருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் சிந்திக்கின்றோம். அதற்காகவே அரசாங்கம் வடக்கிற்கான துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

அந்த வகையில் பல திட்டங்கள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று தொழில்பேட்டைகளை அங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  காங்கேசன்துறை, பரந்தன்,மாங்குளம் பகுதிகளில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையம் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கை தரும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழவேண்டும். அதன் பின்னரே சுய நிர்ணய உரிமைக்காக  போராடுவதா அல்லது தனி நாட்டுக்காக போராடுவதா என்பதை தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும் என்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விளக்கமறியல்!

இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் பின்னர்ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.

இதனையடுத்து இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு  கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்றைய தினம் பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘காஸாவை கைப்பற்றி ஹமாஸைத் தோற்கடிப்பதே இலக்கு’ – நெதன்யாகு அறிவிப்பு

காஸாவில் இஸ்ரேலிய பணையக்கைதிகளை விடுவிக்கவும், தங்களது நாடு முன் வைத்த நிபந்தனைகளின் கீழ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸாவை கைப்பற்றி ஹமாஸைத் தோற்கடிப்பதே தங்கள் இலக்கு என்றும் கூறியுள்ளார். தற்போது சுமார் 60,000 இஸ்ரேலிய வீரர்களை காஸாவில் களமிறக்கி தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைதானதையடுத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கைவிலங்கின்றி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

இதேவேளை ஜனாதிபதியொருவர் கைதுசெய்யப்பட்ட முதற்சந்தரப்பம் இதுவாகும்.

இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என பலர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.

தற்போது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கு முதல் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் ரணில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (22) 5 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இத்தகைய பின்னணியில், மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு தொடங்கிய தபால் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

வேலைநிறுத்தம் காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் அலுவலகம் மூலம் சேவைகளைப் பெற வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை, 5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு  காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றப்போவதில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கட்டாய கைரேகை மற்றும் கூடுதல் நேர வேலைநிறுத்தம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17ஆம் திகதி நள்ளிரவில் தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே கவனயீர்ப்புப் போராட்டம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து  நாடாளுமன்ற  சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ஐ. நா-வுக்கு கடிதம்

தமிழர் தாயக பகுதியில் இடம்பெற்ற இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
தாயகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் அரசியல் தரப்பினர்கள் உள்ளிட்டோரின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் பன்னாட்டு நீதி விசாரணை மாத்திரமே இறுதி தீர்மானமாக இருக்க வேண்டும் என பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமது தாயகத்தில் ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் சுயாதீன நீதிப்பொறிமுறையின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் செயற்பாடுகள், முழுஅளவிலோ அல்லது பகுதியளவிலேனும் ஈழத்தமிழரை அழிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பதுடன் அவ்வழிப்புத் தொடர்பான எந்தவொரு விசாரணையும் நடைபெறாதவாறு நுட்பமாகத் தடை செய்து வருவதும் இனப்படுகொலையாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1956 ஜூன் மாதம் ஸ்ரீலங்கா அரச ஆதரவுடன் சிங்களக் காடையர்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்லோயாப் படுகொலைகள் என அறியப்படும் முதலாவது பாரிய இனவழிப்பு நடைபெற்ற நாளிலிருந்து, தம்மீது நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை அமைக்கவேண்டும் என ஐக்கிய நாடுகளிடம் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பொறிமுறையின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீண்டநாளாகத் தொடரும் வேதனையினைத் தீர்க்கவும் காணாமலாக்கப்பட்டவர்களின் விதியை அறிந்துகொள்ளவும் முடியும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விசாரணையில் இலங்கை அரசின் பங்கு இருந்தால் அது பாரபட்சமானதாகும்.
ஏனெனில் அரசும் அரசுடன் தொடர்புடையவர்களுமே குற்றங்களை நிகழ்த்தியவர்களாக குற்றஞ்சாட்டப்படுபவர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு, எந்தவொரு வகையிலும் பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவே இருப்பதுடன் ஈழத் தமிழர்களின் மீது தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை நிகழ்த்தும் இடைவிடாத திட்டமிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் தாயகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் ஊடகவியலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால், முல்லைத்தீவின் தமிழ் ஊடகவியலாளர் கணபதிபிள்ளை குமணன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் மேரி லோலர் (Mary Lawlor) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.  சட்டத்துக்கு உட்பட்ட ஊடகவியல், சர்வதேச ஈடுபாடு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் கணபதிபிள்ளை குமணன் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த செயற்பாட்டுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்களும், ஊடக உரிமைகள் குழுக்களும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இந்தநிலையில் குறித்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்றைய தினம் (22) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.