Home Blog Page 42

சத்துருக்கொண்டான் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றம்!

சத்துருக்கொண்டான் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 3வது மாதாந்த அமர்வு முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் கூடிய போது, குறித்த படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலையிட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதிகோரியும் புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்றும் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
‘உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடமும் தோண்டப்பட வேண்டும்’ என்று அவர் கோரியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த பிரேரணைக்கு சகல உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில், அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் ரணில் அனுமதி

கைது செய்யப்பட்டு விளக்கம் மாறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமைனக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவனையில் மருத்துவர்கள் இதற்கான பரிந்துரையை வழங்கினர். முன்னதாக அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை மருத்துவர்கள் அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்திருந்தனர்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.  இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த சிறைச்சாலை மருத்துவர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதேநேரம், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.

சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் (wolverhampton) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜோன் ராஃப்டரி (John Raftery), லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரகத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழை வழங்கியிருந்தார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி நபரொருவர் சமீபத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவிடமும் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேராவிடமும் சமீபத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் நேற்று முற்பகல் 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 1.15 அளவில் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் பிற்பகல் 3 மணியளவில் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.
இதன்படி, சந்தேகநபர் 2023 செப்டம்பர் 22ஆம் மற்றும் 23ஆம்திகதிகளில் பொது நிதியிலிருந்து 16.6 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி தனிப்பட்டவிஜயத்தில் ஈடுபட்டதாகக் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் கூறினார்.

சுமார் 33 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றபிறகு, இந்த நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கணிசமான ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2023 செப்டம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை, சந்தேகநபர் கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பத்து பேர் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.

இருப்பினும், பின்னர் அவர் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் கௌரவ பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியாவுக்கு சென்றார்.ஆரம்பத்தில் இந்த விஜயத்தை தனிப்பட்ட விஜயமாக விபரிக்கும் ஆவணங்கள் காணப்பட்ட போதிலும் பின்னர் அவை உத்தியோகபூர்வ விஜயமாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில் யாரோ ஒருவர் பதிவுகளை மாற்றியமைத்ததாகக் கூறப்படுவதாகவும் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் மன்றுரைத்தார். எனினும் விசாரணையில் குறித்த விஜயம் ஒரு தனிப்பட்ட விஜயம் என்று தெளிவாக தெரியவந்துள்ளது.

குறித்த பயணம் நிறைவடைந்ததன் பின்னரே, அதை ஒரு உத்தியோகபூர்வ விஜயமாக குறிப்பிட்டு ஆவணங்கள் மாற்றப்பட்டன.ஆவணங்கள் ஜோடிக்கப்பட்டவை என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது என்றும் மேலதிக மன்றாடியர் திலிப பீரிஸ் குறிப்பிட்டார்.

நாடு திவாலாகிவிட்டதாகக் கூறி பல அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்தேகநபர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
அவர் செலவிட்ட 16.6 மில்லியன் ரூபாய் பொது நிதியில் 4.5 மில்லியன் ரூபாய் வாகன வாடகைக்கு செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் 13.2 மில்லியன் ரூபாவும் இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையால் 3.2 மில்லியன் ரூபாவும் இதற்காக வழங்கப்பட்டடுள்ளது என்றும் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் மன்றுரைத்தார்.
அத்துடன் பிணையை எதிர்த்து வாதிட்ட மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வருவதாகவும், எனவே பிணை வழங்கச் சிறப்புக் காரணங்கள் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன முன்னிலையாகி பிணை கோரி மனுவை தாக்கல் செய்தார். தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், இது போன்ற வழக்குகள் இவ்வாறான முறையில் தாக்கல் செய்யப்படக் கூடாது என்று வாதிட்டார்.
‘சந்தேக நபர் 76 வயதானவர், நீண்ட விமானப் பயணங்களைத் தாங்க முடியாது. அதனால் தான் இங்கிலாந்து ஒரு போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தப்பட்டது. அவர் ஏழு ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்’ என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மன்றுரைத்தார்.

‘அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அவர்கள் இருவர் மட்டுமே, அவருடைய அனைத்து தேவைகளையும் தமது சேவை பெறுநரே கவனித்துக்கொள்கிறார்’.
‘அத்துடன் இந்தியாவில் நடைபெறும் பொதுநலவாய இளைஞர் உச்சி மாநாட்டில் அவர் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்’.

‘முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைச்சாலை பாதுகாப்பான இடம் அல்ல’. எனவே, தமது சேவை பெறுநரை பொருத்தமான நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு பிரதிவாதி தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்து தீர்ப்பை அறிவித்த நீதவான் நிலுபுலி லங்காபுர, பிரதிவாதி தரப்பின் பிணை கோரிக்கையை நிராகரித்தார். 1982ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பொதுச் சொத்துசட்டத்தின் 5ன் கீழ் 1 என்ற சரத்துக்கு அமைய, இந்த குற்றம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது என்றும் நீதவான் தமது தீர்ப்பில் அறிவித்தார்.

குறித்த சுற்றுப் பயணத்துக்காக பிரதிவாதி அரச நிதியை பயன்படுத்தியமையை அவரது தரப்பு சட்டத்தரணிகள் நிராகரிக்கவில்லை. எனவே, உத்தியோகபூர்வ விஜயமொன்றின் போது கவனத்திற் கொள்ளப்படும் விடயங்கள், இந்த விடயத்தில் கவனத்திற் கொள்ளப்படமாட்டாது.

அதேநேரம், பிரதிவாதியின் உடல்நிலை இந்த வழக்குக்கு பொருத்தமான காரணமாகவும் கொள்ளப்படாது.
அத்துடன் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே அடிப்படை சட்டமாக உள்ளமையால், சந்தேகநபர் இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதை இவ்வாறான வழக்கில் கவனத்திற் கொள்ள முடியாது என்றும் நீதவான் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பட்டமளிப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்து 2023 செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த கடிதம் சரியானதா? என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார். இந்தநிலையில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவரது மருத்துவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் குருதிஅழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் என்பன இருப்பதாகவும் இது தொடர்பில் மருத்துவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்

Unknown 1 4 தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது இன்றைய தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது, இதில் பொதுமக்கள், இளைஞர்கள் குறிப்பாக இன, மத பேதமின்றி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள், மாணவர்கள் என பல நூறு பேர் தங்களது கையொப்பங்களை ஆர்வத்தோடு இட்டதோடு தமிழின அழிப்பின் வலிகளையும் ஆர்வத்தோடு கேட்டறிந்ததோடு தமது கையப்பத்தை இட்டிருந்தார்கள், இன்றைய இந்த நிகழ்வின் நிகழ்வில் இந்த நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமும் ஊடகங்களிடமும் இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள்,பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இப்போராட்டமானது தாயகச் செயலணியினரின் ஒருங்கமைப்பில் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இறைமையும் தன்னாட்சியுமுள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாடு (Cry) பலமடைய வேண்டிய வாரம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 353

இவ்வாரம் 2025 செப்டெம்பர் 8ம் நாளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது ஆண்டுக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதை மையமாக வைத்து அனைத்துலக செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வாரமாக அமையும். அந்த வகையில் இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத் தொடரில்  இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மேலான இனஅழிப்பு, நோக்கிலான போர், ரஸ்யாவின் உக்ரைன் மக்கள் மேலான நிலஆக்கிரமிப்புடன் கூடிய போர் மற்றும் ஈரானை அணுவாயுத நாடாக மாறாது தடுக்கும் அமெரிக்காவின் வான்வெளி ஆக்கிரமிப்புப் போர், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முயற்சிகளுக்கு எதிரான இந்தியாவின் எதிர்ப்புப் போரில் அமெரிக்காவின் நிலை போன்ற அனைத்துலக சமகாலப் பிரச்சினைகளில் பலவற்றினதும் மனித உரிமைகள் பாதிப்பு விளைவுகளே முதலிடம் பெறுவது தவிர்க்க இயலாதவொன்றாக அமையும்.
இவற்றுக்கிடையில்  ஈழத்தமிழர்களின் மனித உரிமை பிரச்சினை சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைகளின் வழி தீர்க்கப்படுவதற்கு அனைத்துலக நிதி மதி உதவிகளை வழங்குதல் என்ற நோக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் போக்காக மாறுவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தெளிவாகத் தொடங்கி விட்டது. இந்த நடைமுறை எதார்த்தத்திற்கு ஈழத்தமிழர்கள் எவ்வாறு இரு வாரத்துள் எதிர்வினை செய்யப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.  உலகளாவிய நிலையில் உலக மக்களின் கவனத்தை, ஈழத்தமிழர்கள் தங்களுக்கான நீதியைப் பெற வைக்க கூப்பாடு வைப்பதன் வழியாக மட்டுமே எதிர் வினை செய்ய முடியும் என்பது இலக்கின் இக்கேள்விக்கான விடையாக அமைகிறது.
இதற்கு ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஈழத்தமிழர்கள் தாங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் இலங்கைத் தீவில், தங்களின் யாராலும் என்றும் பிரிக்க இயலாத இந்த இறைமையின் அடிப்படையிலான, அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையினை முன்னிறுத்தி, நீதிக்கான கூப்பாட்டினை (Cry) பலமாக எழுப்ப வேண்டும். ஈழத்தமிழர்களின் தாயகத்தில் இருந்து எழும் இந்த நீதிக்கான கூப்பாட்டை உலக இனமாக  உலகெங்கும் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும், தொப்புள் கொடி இன உறவாக உள்ள தமிழகத் தமிழர்களும்,  இணைத்து உலக மயப்படுத்த வேண்டும். இந்த ஈழத்தமிழர்களினதும் தமிழகத் தமிழர்களினதும் இனத்துவ ஒருமைப்பாட்டுடன் கூடிய நீதிக்கான கூப்பாடே அனைத்துலக மக்களதும் ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாட்டுக்கான ஆதரவுத் தூண்டலாக அமைந்து அதன் துலங்கலாக ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதியைப் பெற்றுத் தரும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
இன்று ஈழத்தமிழர்கள் அரசியல்வாதிகள், கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள், சிவில் சமூகத்தினர் என்ற ஐங்குழுத்தாக்கத்தினைக் கொண்டவர்களாக உள்ளனர். ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்காவின் இறைமைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் எதிராக எதனையும் சொல்லவோ செய்யவோ முடியாதவாறு சிறிலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் 6ம் திருத்தத்தின் வழி தடுக்கப்பட்டவர்களாகவே கடந்த 43 ஆண்டுகளாக தங்கள் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பொறுப்புக்களை செய்து வருகின்றனர். இதனால் இவர்களால் ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாட்டினை வெளிப்படுத்த இயலாது. ஈழத்தமிழர்களின் கட்சிகளைப் பொறுத்தவரை கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் மேலான கட்டுப்பாட்டினை வலுப்படுத்துவதையே தலைமைப் பணியாகக் கருதிச் செயற்பட்டு வருகின்றனர். ஈழத்தமிழரின் அமைப்புக்களைப் பொறுத்த மட்டில் தங்கள் தங்கள் அமைப்புக்களுக்கான பொருள் பலம் மனிதப்பலம் என்பவற்றினை வளர்ப்பதனையே தலைமைப்பண்பாகக் கருதிச் செயற்பட்டு வருகின்றனர்.
ஈழத்தமிழரின் இயக்கங்களைப் பொறுத்தவரை பல்குழு பாழ்செய்யும் உட்பகை இவற்றின் வழி பிளவுண்டு போகும் தலைமைப்பண்பையே வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில் சிவில் சமூகங்களின் வழியாகவே ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாடு முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் எதார்த்த நிலை காணப்படுகிறது. ஆனால் சிவில் சமூகங்கள் மாணவர், ஆசிரியர், தொழிலாளர்கள், ஊரில் மக்களுடைய நாளாந்த வாழ்வுக்குத் துணையாக இருப்பவர்கள், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களின் உட்கட்டுமானமாக உள்ள கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் காணப்படும் ஆன்மிகத் தலைமைகள், என்ற ஈழத்தமிழரின் சமூக அடித்தளத் தவர்களின் பங்களிப்பு இல்லாத மேற்குலக அல்லது இந்திய அல்லது சீன மேலாண்மைகளுடன் தங்களை இணைத்துக் கொண்ட பிணைத்துக் கொண்ட முகவர்களின் வழியானதாகவே செயல்நிலை பெறுகின்றன என்பது வரலாறாக உள்ளது.
இதற்கு நேர்மாறாகச் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகள், கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள், சிவில் சமூகங்கள் என்பன எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா மாணவர்- ஆசிரியர், தொழிலாளர், நாட்டு வைத்தியர், பிக்குகள் வழியான ஐங்குழு சிவில் சமூகத்தை உருவாக்கியது முதல் இன்று வரை இந்த அடித்தளத்தன்மையில் உறுதியாக நின்று கொண்டே தங்களின் அனைத்துலக பிராந்திய வெளிவிவகாரத் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவே சிங்கள பௌத்த பேரினவாதம் எந்த அரசியல்தலைமையும் தாங்கள் சிங்களவர்களுக்கு பௌத்தத்துக்கு பணியாற்றவே ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளதாக துணிந்து அனைத்துலக பிராந்திய வல்லாண்மைகளுக்கு பதிலளித்து ஈழத்தமிழின அழிப்பை, ஈழத்தமிழினத்துடைப்பை, ஈழத்தமிழினப் பண்பாட்டு அழிப்பை தமது அரசியல் கொள்கை கோட்பாடாகவே படைபலத்துணையுடன் முன்னெடுத்து வரும் வரலாறாக உள்ளது.
இதனால் சிங்கள தேச நிர்மாணத்தினை உறுதியானதாகக் கருதும் அனைத்துலக வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் சிறிலங்காவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அனைத்து அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் அதன் உள்நாட்டுப் பிரச்சினை என்ற வடிவில் ஏற்றுச் சிறிலங்காவின் அரசு மேலும் உறுதி பெறத் தாம் உதவித் தங்களின் சந்தை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இலங்கைத் தீவின் இருப்பையும் வளத்தையும் சிறிலங்காவுடன் இணைந்து பகிர்ந்து கொள்வதினையே தமது தலைமைப்பண்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கான இந்த மாத உதாரணம்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் 2025ம் ஆண்டு செப்டெம்பர் மாத 60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான அறிக்கையின் முதன்நிலை அறிக்கை. அதில் விதந்துரைக்கப்பட்டவற்றைச் சிறிலங்கா எந்த அளவுக்கு ஏற்று எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைச் சிறிலங்கா அதற்கான பதிலினை அளித்த பின்னர் ஆராய்ந்து அதற்கேற்ப 60வது அனைத்துலக மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.
இந்நிலையில் அரசியல், கட்சி, அமைப்பு, இயக்க, சமூக வேறுபாடுகளைக் கடந்து “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற உண்மையை உறுதிப்படுத்தி அதில் அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையினை  பயன்படுத்தி நாங்கள் வாழ்வதற்கான அனைத்துலகச் சட்ட முறைமைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கையொப்பங்கள் இட்ட மனுக்களை  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையருக்கு  அனுப்புதலை முதற்பணியாகவும், தொடர்ந்து அனைத்துலக ஊடகங்களில் உண்மைக்கு அப்பால் உள்ள ஈழத்தமிழர் குறித்த தரவுகள் தகவல்களை சரியானதாக மீள் உற்பத்தி செய்வதற்கு தனியாகவும் கூட்டாகவும் உழைப்பதின் வழி உலக கருத்தியலில் ஈழத்தமிழர் குறித்த உண்மையை மீள் உற்பத்தி செய்ய வேண்டியது அடுத்த பணி. 14 நாட்களைக் கால எல்லையாகக் கொண்டு இவற்றை வேகமாகச் செய்ய இலக்கு அழைக்கிறது
ஆசிரியர்

Tamil News

அரசியல் பழிவாங்கல்களையே அரசாங்கம் செய்கின்றது:மஹிந்த ராஜபக்ஷ சாடல்

அரசியல் பழிவாங்கல்களைத் தவிர அரசாங்கத்தால் வேறு எந்த  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் தலைவர்கள் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நீங்கள் அரசியலில் ஈடுபட்டால், அது உங்கள் வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி. தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலைக் கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறொன்றும் இல்லை. மக்கள் அரசியல் தலைவர்களை தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும், “நாம் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது   சங்க அலுவலகத்தில்,

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா கலாரஞ்சினி  இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில்  எதிர்வரும் முப்பதாம் திகதி  வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும்  கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி புதைகுழி  தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும்.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைக்காகவும் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளுக்காகவும் நீதி கிடைக்க ஒன்று திரள  ஓரணியில் திரண்டு தங்களுக்கு நீதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா

மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.

சுமார் 5 இலட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய்யின் அடிப்படையிலானது என பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த 15-ம் திகதி நிலவரப்படி காசா நகரில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் காசா முனையின் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதியிலும் இந்த நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர் என ஐபிசி கூறியுள்ளது.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது.

அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ilakku Weekly ePaper 353 | இலக்கு-இதழ்-353 | 23 ஆகஸ்ட் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 353 | இலக்கு-இதழ்-353 | 23 ஆகஸ்ட் 2025

Ilakku Weekly ePaper 349

Ilakku Weekly ePaper 353 | இலக்கு-இதழ்-353 | 23 ஆகஸ்ட் 2025

Ilakku Weekly ePaper 353 | இலக்கு-இதழ்-353 | 23 ஆகஸ்ட் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • இறைமையும் தன்னாட்சியுமுள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாடு (Cry) பலமடைய வேண்டிய வாரம்| ஆசிரியர் தலையங்கம்
  • வட, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாலானதொரு பார்வை – விதுரன்
  • தாயகத்தில் இனி சாத்தியப்படாத ‘கதவடைப்பு’ போராட்டம்..! – பா. அரியநேத்திரன்
  • தமிழ் மக்களின் நிராகரிப்பும் சுமந்திரனின் அரசியல் தோல்வியும் – சிவயோக நாதன் சீலன்
  • விளை நிலங்களைப் பெற ஜனாதிபதி செயலகம் முன் போராடிய விவசாயிகள் – கிண்ணியான்
  • இன அழிப்புக்கான சர்வதேச நீதியை மையப்படுத்தும் மனுவில் தாயகத்தின் 56 மத, குடிசார், மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கையெழுத்து
  • காடுகளான தேயிலை தோட்டங்கள் உயிர் அச்சத்தில் மக்கள் – மருதன் ராம்
  • ஒரு மரணம் ஒரு சோகம், ஒரு மில்லியன் இறப்புகள் ஒரு புள்ளிவிவரம் | வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

இனப் பிரச்சினையில் தெளிவான நடவடிக்கை எடுக்க சிறிதரன் எம்.பி. வலியுறுத்தல்

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து  ஒரு வருடத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில் 80 ஆண்டுகள் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் 7 தடவைகள் விசேட உரையாற்றியுள்ளார்.

இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மூலோபாயம் மற்றும் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி வெளிப்படையாக குறிப்பிடவில்லை. கடந்த கால ஆட்சியாளர்களை போன்று தற்போதைய ஜனாதிபதியும் செயற்பட கூடாது. கடந்த தீர்வு திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி தான் எதிர்த்தது.  எதிர்த்தவர்களே தீர்வு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே காத்திரமான நடவடிக்கைகளை  பகிரங்கமாக அறிவியுங்கள். பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு காண தயாராகவே உள்ளோம் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர் எஸ். சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை  (22) நடைபெற்ற  அமர்வின் போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு  பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு  பிரேரணையை கொண்டு வந்துள்ளேன். இலங்கையில் வாழும் சுதேசிய இனத்தவர்களான தமிழ் தேசிய மக்கள் நீண்டகாலம் எதிர்கொண்டு வரும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் இப்பிரேரணையை முன்வைக்கிறேன்.

தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமான நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கும், அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்த்தை கதவுகளை திறப்பதற்கும், கடந்த எட்டு ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம்  ஊடாக கைதுகளும், ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன செயற்பாட்டாளர்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள், மலையக மக்கள் எதிர்கொள்ளும் காணி, வீட்டுரிமைக்கான கடந்த கால தீர்வு முயற்சிகள் இன்றும். இழுபறிநிலையில் உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் தமிழ் தேசிய இனம், சிங்கள தேசிய இனம் என்று இரண்டு தேசிய இனங்கள் உள்ளன. தேசிய இனங்களுக்கிடையிலான  நீண்டகால பிரச்சினைகள் சுமார் 80 ஆண்டுகாலமாக நிலைத்திருக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்மாதிரியான நடவடிக்கைகள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. 1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தம், 1965  டட்லி – செல்வா ஒப்பந்தமும் இந்த நாட்டில் கிழித்தெறியப்பட்டன. இவை அடிப்படை தீர்வாக முன்வைக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் தலைவர்கள் நீதியான முறையில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகள், பிரேரணைகள் கிடப்பில் போடப்பட்டன.ஒரு அரசியல் தீர்வுக்கான முக்கிய அடி த்தளத்தையிட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு 38  ஆண்டுகளை கடந்துள்ளது.இருப்பினும் இந்த ஒப்பந்தம் படுக்கையில் கிடக்கும் நோயாளி போன்றே இன்றும் உள்ளது. எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அரசியல் தீர்வுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தமான இலங்கை – இந்திய ஒப்பந்தம் இன்றும் இழுபறி நிலையில் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியில் மங்கள முனசிங்க தெரிவுகுழு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.இந்த யோசனைகள் பேசப்பட்ட காலத்தில் எவ்வித தீர்வுகளும் எடுக்கப்படவில்லை.

பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், இலங்கை – இந்திய ஒப்பந்தம், மங்கள முனசிங்க தெரிவுக்குழு யோசனைகள் உட்பட அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995-1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்ட தீர்வு ஆலோசனைகளின் பிரகாரம் 2000  ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு  சட்டமூலமாக  தீர்வு ஆலோசனையாக ‘ பிராந்திய கூட்டு’ சமர்ப்பிக்கப்பட்டது. இதுவும் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டது. சிங்களத் தலைவர்கள் இந்த திட்டங்களை கடுமையாக எதிர்த்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் ஓஸ்லோ மற்றும்  டோக்கியோவில் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழு, பல்லின நிபுணர் குழு அதிகார பகிர்வுக்கு 13 பிளஸ் என்பதை வலியுறுத்தின.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில் 80 ஆண்டுகள் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் 7 தடவைகள் விசேட உரையாற்றியுள்ளார்.

இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மூலோபாயம் மற்றும் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சி கடந்த காலங்களில் பாரிய போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது.  மக்கள் விடுதலை முன்னணியின் 62 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.ஆகவே போராட்டங்களின் விளைவுகளை அவர்கள் நன்கு அறிவார்கள்.

இந்த சித்திரவதைகளை நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக பாரிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இழப்புக்கள் மாத்திரமே மிகுதியாகின.யுத்தம் முடி வடைந்ததன் பின்னரும் தமிழ் மக்களின் உடல்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்படுகின்றன.தேசிய விடுதலைக்காக ஆயுதமேந்திய  போராட்டம் .ஜனநாயக போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள் ஆயுத முனையில் நசுக்கப்பட்டதால் எம்மக்கள் ஆயுதமேந்தினார்கள்.

இதனை சுட்டிக்காட்டி மேதகு  பிரபாகரன் ‘  ஜே.ஆர் ஜயவர்தன சரியான பௌத்தராக செயற்பட்டிருந்தால் நாங்கள் ஆயுதமேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது’ என்று  குறிப்பிட்டிருந்தார்.1952 ஆம் ஆண்டு எமது தமிழ் தலைவர்கள் காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவம், பொலிஸ் மற்றும் குண்டர்களை கொண்டு எமது தலைவர்கள் தாக்கப்பட்டார்கள்.

இதன் பின்னரே எமது அறவழி போராட்டங்கள் நசுக்கப்பட்டன.  நாங்கள் உங்களிடம் சவா ல்விடவில்லை. ஏட்டிக்குப்போட்டியாக செயற்படவில்லை.  எம்மை சமமாக கொண்டு அரசியல் தீர்வுக்குரிய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

தேசிய இனத்துடனான அடையாளத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறோம்.இந்த நாட்டில் பூர்வீக மாக தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள். இயக்கர்,நாகர்கள் வாழ்ந்துள்ளார்கள். நாங்கள் இறையான்மையுடன் வாழ்ந்துள்ளோம்.இந்த இறையான்மை சிங்கள வல்லாதிக்கத்தில் இன்றும் உள்ளது.  இனப்பிரச்சினைக்கு தீர்வினையே நாங்கள் கோருகிறோம். ஒன்றுப்பட்ட,தூய்மையான  மற்றும் வளமான இலங்கையை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் ஏன் எம்மையும் தேசிய இனமாக இணைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இலங்கை முன்னேற்றமடைய வேண்டுமாயின்  அச்சமின்றிய  வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். சமாதானத்துக்கான கதவுகளை திறங்கள்.கலந்துரையாடுவதற்கு தமிழ் தலைமைகள் தயாராகவுள்ளோம். எம் மக்களை யார் கொன்று குவித்தார்களோ, அவர்களிடமே விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குற்றம் புரிந்தவர்களே நீதிபதிகளாக இருக்கையில் எவ்வாறு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிடைக்கும்.

யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுப்பிடிக்கப்படும் மனித எலும்புகூடுகள் தமிழர்களுடையது என்பது உறுதியாகியுள்ளது.இயற்கை என்றும் தவறு விடுவதில்லை. இந்த சித்துப்பாத்தி எலும்புகூடுகளை இயற்கையே  காட்டிக்கொடுத்தது.இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.இந்த கடிதங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் செயற்பாடுகள், அடக்குமுறைகள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளேன்.அண்மையில் முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதர்கள் தவறிழைக்கலாம். ஆனால் அடித்து கொலை செய்வதற்கு இராணுவத்துக்கு யார் அனுமதியளித்தது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டும்.

1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போதும்   எதிர்ப்பு  தெரிவித்தீர்கள், 2000 ஆம் ஆண்டு வடக்குகிழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்ததும் நீங்கள் வடக்கு கிழக்கை பிரித்தீர்கள். ஆகவே பிரச்சினைகள் உங்களிடம் உள்ளது. கடந்த கால தீர்வுகளை இல்லாதொழிக்க மக்கள்  விடுதலை முன்னின்று செயற்பட்டது. ஆகவே தற்போது புதிய முகம் கொண்டுள்ளீர்கள். ஆகவே  பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுங்கள்.

வரலாறு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பினை உ ங்களுக்கு வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் விட்ட தவறை இந்த ஜனாதிபதி புரியமாட்டார் என்று எண்ணுகிறோம். கடந்த கால தலைவர்களை இந்த மண் மறந்தை போன்று தற்போதைய ஜனாதிபதியையும்  எவரும் மறக்க கூடாது.

ஆகவே வரலாற்றில் ஒரு அடையாளமாக  அரசியல் தீர்வு காணுங்கள், காத்திரமான நடவடிக்கைகளை எடுங்கள். தீர்வு திட்டங்கள் என்னவென்பதை  அறிவியுங்கள்.  இந்த பிரேரணை ஊடாக ஒரு புதிய வழி பிறக்கும் என்று கருதுகிறேன் என்றார்.

சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல: கஜேந்திரகுமார் சபையில் தெரிவிப்பு

அரசாங்கம் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல. அது தொடர்பில் கலந்துரையாடல் என்ற உண்மையை சிங்கள மக்களிடம் கூறும் வரையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அரசாங்கம்  வித்தியாசமானது  என்ற அடிப்படை நம்பிக்கையாவது வளர்க்க தொடங்குங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை   (22) நடைபெற்ற  அமர்வின் போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை தமிழரசுக் கட்சியானது 1949ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட நாளில் இருந்து சமஷ்டி என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வரும் கட்சியாகும். ஆனால் இந்தப் பிரேரணையில் தமிழரின் இனப்பிரச்சினக்கான தீர்வு தொடர்பான சமஷ்டி என்ற கருத்து வலியுறுத்தப்படவில்லை.

அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சியின் தலைமத்துவத்தின் செயற்பாடுகள் அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகியுள்ளதாகவே எங்களின் குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால் பாராளுமன்ற உறுபபினர்  சிறீதரன் அவ்வாறான குற்றச்சாட்டை குறிப்பிடக்கூடியவர் அல்ல. எனினும் இந்தப் பிரேரணையானது அந்தக் கொள்கையை தவிர்த்திருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கின்றது.

கடந்த தேர்தலில் சமஷ்டிக்கும் மற்றும் பொறுப்புக்கூறலில் சர்வதேச விசாரணைக்காகவே  ஆணையை பெற்றது. ஆனால் சர்வதேச விசாரணையும் இந்தப் பிரேரணையில் தவிர்க்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை கொடுக்கின்றது.

ஏன் இதனை குறிப்பிடுகின்றேன் என்றால் இந்த அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணையை நாங்கள் செய்வோம் என்றே கூறுகின்றது.  கடந்த 70 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தின்படி இலங்கையின் இனப்பிரச்சினை இனவாதத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது என்று அரசாங்கமே கூறுகின்றது. அப்படியெனில் கடந்த 76 வருடங்களாக இயங்கிய அரச கட்டமைப்பில் தமிழர்கள் நம்பிக்கை வைக்க முடியுமா?

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் கடந்த வாரத்தில் குமணன் என்ற ஊடகவியலாளர் அழைக்கப்பட்டு அவரிடம் 7 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இராணுவம் கொலைகளை செய்கின்றது.

இந்த அரசாங்கத்திலேயே இது நடக்கின்றது. இந்த அரசாங்கம் அந்த மனோநிலையில் இல்லை என்று கூறினாலும் அது நடப்பதற்கான காரணங்கள் உள்ளன.

அந்த மாற்றங்களை செய்வதற்கு இந்த அரசாங்கம் நேர்மையாக செயற்பட தயாராக இருந்தாலும் இந்த அரசாங்கம் நிரந்தரமாக இங்கிருக்கப் போவதில்லை. ஜனநாயகத்தை கடைபிடிக்கும் அரசாங்கமாக இருந்தால் அரசாங்கம் மாறும். இருந்தவர்கள் இனவாதிகள் என்று இவர்களே கூறுகின்றனர்.

கடந்த  76 வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும். ஜே.வி.பி  அல்லது  என்.பி. பியை நிரந்தரமாக ஆட்சியில் வைப்பதன் ஊடாக மட்டுமே அதனை செய்யலாம்.

தமிழ் மக்கள் கண்மூடிக்கொண்டு அவர்களுக்கு வாக்களித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதா தீர்வு. தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு கிடைக்காதா? யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு இனவாதம் பாயாதுஇ பயங்கரவாத தடைச் சட்டம் பாயாது என்ற பாதுகாப்பு அவசியமல்லவா.

எமது தேச அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என்றால் அந்த தேச அடையாளத்தை அங்கீகரித்து நாங்களும் இந்த தேசத்தில் நிரந்தரமானவர்கள் என்பதனை அங்கீகரிப்பதில் என்ன தவறு உள்ளது. எனது சொந்த வீட்டில் என்னுடைய பிரச்சினையை கையாழுவதில் என்ன பிரச்சினை உள்ளது.

நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். ஏன் அனை மறுக்கின்றீர்கள். உங்களின் வாயால் அந்த வாக்குறுதியை வழங்காமல் இருக்கின்றீர்கள். இதனை இந்த அரசாங்கம் செய்வதற்கு தயாராக இல்லை.

கடந்த 76 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பயன்படுத்திய அதே சொற்பதற்களை இந்த அரசாங்கம் பயன்படுத்த முடியாது. ஆனால் அதுதான் இன்னும் நடக்கின்றது. இங்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதில் என்ன தவறு?

தமிழ் மக்களுக்கு தமது உரித்த இடத்தில் அங்கீகாரத்தை வழங்கி அவர்கள் ஆளக்கூடியதை உறுதிப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை அங்கீகரிப்பதில் என்ன பிரச்சினை. இதன்மூலம் ஒற்றுமையை உருவாக்காதா? கடந்த 76 வருடங்களாக இலங்கையர்கள் என்ற போர்வையில் சிங்கள பௌத்தம் மட்டுமே ஆட்சி செய்தது.

நிரந்தர பெரும்பான்மை இனத்தின் நலன்களை மட்டும் கடைபிடித்த வரலாறுதான் உண்டு. இதனை நீங்கள் 5 வருடங்களில் மாற்ற முடியாது. நீங்கள் எத்தனை வருடங்கள் இருந்தாலும் ஜனநாயக ரீதியில் ஒருநாளில் உங்களின் ஆட்சி விழத்தான் போகின்றது.

வருகின்றவர்கள் பழையபடி நடந்துகொண்டால் தமிழ் மக்களின் நிலைமை என்ன? இதனை அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்க கோருவது இனவாதமா? இது தவறா?

தென்னிலங்கை மக்கள் கடந்த 76 வருடங்களாக நடந்த அரசியலை கைவிட்டுள்ளனர். அதனால்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். அந்த நிமிடத்தை நாங்கள் கைவிடக்கூடாது. இது திரும்பவும் வரப்போவதில்லை. உங்களுக்கு அந்த சந்தர்ப்பம் உண்டு. உங்களை முற்றிலும் வித்தியாசமான தரப்பாக சிங்கள மக்கள் பார்க்கின்றனர்.

இவ்வளவு காலங்களிலும் இனவாதிககள் என்று நீங்களே குறிப்பிடுபவர்கள் கடந்த காலங்களில் செய்தவை அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துவதில் சிங்கள மக்கள் உள்ளனர்.

இதனால் உங்களுக்கு ஒரு கடமை உள்ளது. அதாவது தமிழ் மக்கள் கூறும் சமஷ்டி பிரிவினைவாதம் அல்ல என்ற உண்மையை சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

நீங்கள் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஷ்டி பிரிவினைவாதம் அல்ல என்ற உண்மையை நீங்கள் கூற வேண்டும். அந்த விவாதத்தை வெளிப்படையாக நடத்தலாம் என்று நீங்கள் கூறலாம். 76 வருடங்களாக சிங்கள மக்களுக்கு கூறிய பொய்களை இன்றும் நீங்கள் திருத்தாமல் இருக்கின்றீர்கள்.

இங்கேதான் எங்களுக்கு சந்தேகங்கள் எழுகின்றன. ஒற்றையாட்சித்தான் விருப்பம் என்று நீங்கள் கூறினாலும் தமிழர்கள் கூறும் சமஷ்டி பிரிவினை இல்லை. உலகததில் முன்னேறியுள்ள நாடுகள் கடைபிடிக்கின்ற கொள்கை அதனையும் நாங்கள் விவாதிக்கலாம் பேசலாம் என்ற உண்மையை கூறுங்கள்.

இப்போது நீங்கள் உண்மையில் திருந்திவிட்டீர்கள். உங்களுடைய அரசாங்கம் மற்றையவர்கள் போலல்ல. நீங்கள் வித்தியாசமானவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையாவது வளரத் தொடங்கும். அதுவரையிலும் அந்த நம்பிக்கை வருவது என்பது மிகவும் கடினமான விடயமே என்றார்.