Home Blog Page 41

வட, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாலானதொரு பார்வை – விதுரன் 

இலங்கை தமிழரசுக் கட்சியால் கடந்தவாரம், முத்தையன்கட்டு இராணுவ முகாம் சம் பவத்தை எதிர்த்து பூரண ஹர்த்தால், முதலில் ஆகஸ்ட்; 15ஆம் திகதி நடைபெறும் என அறிவிக் கப்பட்டு, பின்னர் 18ஆம் திகதிக்கு மாற்றப் பட்டு இறுதியில் ‘அரைநாள் ஹர்த்தாலாக’ அறிவிக்கப் பட்டு முன்னெடுக்கப்பட்டது.
அரைநாள் ஹர்த்தால் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தொடர்பில் பல்வேறுவிதமான ஆய்வுகளும், அதற்கான ஆதாரங்களும் அறிவிப்பை விடுத்த சுமந்திரன் அணியாலும், அதற்கு எதிராக வுள்ளதரப்புக்களாலும் வெளியிடப்பட்டு வருகின் றன.அந்த வகையில் இந்தப் பத்தியில் ஹர்த் தால் வெற்றியா தோல்வியா, என்பதற்கு அப் பால் காய்தல், உவலத்தலின்றி சில விடயங் களை ஆழமாக அவதானிக்க வேண்டியது அவசிய மாகின்றது.
தவறான ஆரம்பம்முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குச் சென்று காணாமலாகியிருந்த இளைஞனின் சடலம் 24மணிநேரத்தின் பின்னர் கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை காலை குளத்திலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.
பிரேதபரிசோதனைகளின் முடிவுகள் என்ன? நடந்தது என்ன? என்ற எந்தவிதமான அடி ப்படை ஆராய்வுகளுமின்றி, ஜனாதிபதி அநுரகு மாரவுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கேயும், பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனும் இணைந்து ‘நீதி நிலைநாட்டக்கோரி’ கடித மொன்றை 9ஆம் திகதி நண்பகலுக்குப் பின் னர் அனுப்பி வைத்தனர்.
இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் அதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்து வதற்காக கொழும்ப தயா வீதியில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் அவசரமாக ஊடகவிய லாளர் சந்திப்பொன்றுக்கான அழைப்பு விடுக் கப்பட்டு அது முகநூல் நேரலையிலும் ஒளிப்பரப் பட்டது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதிக்கான கடித விடயத்தினை வெளிப் படுத்திவிட்டு அதன் மையப்பகுதியில், வட, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்திருந்தார்.
அந்த அழைப்பின் பிரகாரம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையே ஹர்த்தால் அறிவிக்கப் பட்டது.
இந்தக் ஹர்த்தால் அறிவிப்பு தொடர்பில் சுமந்திரன் ஏனைய தமிழ்க் கட்சிகளுடனோ, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடனோ, வர்த்தக, தொழிற்சங்கங்களுடனோ கலந்துரையாட வில்லை.
ஏனென்றால், படையினருக்கு எதிரான விடயம் என்பதால் தனது அறிவிப்பின் பின்னால் அனைவரும் இயல்பாக அணி திரள்வார்கள் என்ற தற்துணிவு அவருக்கு இருந்தது.அதுமட்டுமன்றி, குறித்த ஹர்த்தால் தினம் வெள்ளிக்கிழமை என்பதால் சகோதர முஸ்லிம்களும் அன்று நண்பகல் தொழுகைக்கு பின்னர் பெரிதும் வர்த்தக நிலையங்களை மூடி விடுவார்கள் என்பதால் ‘வட,கிழக்கு’ முழுமை யாக முடங்கும் என்ற நப்பாசை அவருக்கு மேலி ட்டிருந்தது.
ஆனால், குறித்த காலப்பகுதியில், நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மறுபக்கத்தில் மடுதாதாவின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளும் அன்றாக இருந்தது.
தாயகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இருவேறு முக்கிய நிகழ்வுகள் பற்றி அவர் கிஞ்சித்தும் சிந்தித்திருக்கவில்லை. மன்னார் மாவட் டத்துக்குச் சென்ற அவர் காற்றாலை வாகனங்களை பெருநிலப்பரப்பிற்குள் கொண்டு செல்வதற்கு தடையாக போராட்டகாரர்கள் நின்றமை தொடர்பி லான வழக்கில் முன்னிலையாகினார்.
அதன்பின்னர், மன்னார் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசத்தினை சந்திப்பதற்கு தொலைபேசி அழைப்பெடுத்தார். குருமுதல்வர் தமிழ் நேசன் அடிகளால் தொலைபேசியை எடுத்து பதிலளித்தவாறு ஆயருக்கு அருகில் சென்றபோது யார் என்று வினவிய ஆயர் ஞனப்பிரகாசம் ‘அழு க்கு நிறைந்த அரசியல்வாதிகளுடன் உரை யாட விரும்பவில்லை’ என்றொரு வார்த்தை உதிர்த்தார்.
தொலைபேசியில் மறுபக்கத்தில் ஆயருடன் உரையாட காத்திருந்த சுமந்திரனுக்கு இந்தக் கூற்று மிகத்தெளிவாக விளங்கியிருக்கும். அதனைத் தொடர்ந்து குருமுதல்வரும் நிலைமைகளை எடுத்துரைத்தார். அது மேலதிக விளக்கங்களை அவருக்கு வழங்கியிருக்கும். அதனடிப்படையில் தான், பூரண ஹர்த் தாலை 18ஆம் திகதி திங்கட்கிழமை மாற்றினார். திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிப் பதற்குரிய நாளொன்று அல்ல என்பதை உணரும் அளவிற்கு சுமந்திரனின் சாணக்கியம் காணப் படவில்லை.
ஏனென்றால், ஹர்த்தால் அறிவித்தல் பற்றிய விமர்சனங்களும், ஏனைய கட்சிகளின் அமைதியும், வர்த்தக சம்மேளனத்தினரின் எதிர்ப் பும், தமிழரசுக்கட்சிக்குள்ளேயே காணப்பட்ட சலசலப்புக்களும் சுமந்திரனுக்கு தான் எடுத்த காரியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற சிந்தனையை மட்டும் தான் தோற்றுவித்திருந்தன.
இதனால் அதற்கான அம்புகளாக உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களை பயன் படுத்த முனைந்தார். தமிழரசுக்கட்சியின்  ஆளு கைக்கு உட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் கட்டுப் பாட்டுக்குள் காணப்படும் வர்த்தக நிலை யங்கள் மூடப்பட வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்.
அந்த அழுத்தங்களால் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஒவ்வொரும் களத்தில் இறங்கினார்கள். வர்த்தகர்களுடன் கடுமை யாக நடந்து கொண்டார்கள். ஊடக சந்திப்புக் களை நடத்தினார்கள். தங்களுடைய ‘சேர்’ ஐ திருப்திப்படுத்தவே முனைந்தனர். கள யதார்த்தத் தினை அவர்கள் எடுத்துரைக்கவில்லை.
எவ்வாறாயினும் இத்தகைய அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக ஏற்பட்ட சமூக த்தின் பிரதிபலிப்புக்களால் ஹர்த்தாலை முழுநாள் நடத்துவது சாத்தியமில்லை என்பதை சுமந்திரனு க்கு உணர்த்தியது. அதனால் ஹர்த்தால் அரைநாளாக அறிவிக்கப்பட்டது.
வரலாற்றில் கரும்புள்ளி
இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரை யில் அதனுடைய 76 வருட வரலாற்றில் இந்த ஹர்த்தால் அழிக்கப்பட முடியாதவொரு மிகப் பெரும் கரும்புள்ளியாகும். கடந்த காலங்களில், ஒரே நாளில் அறி விக்கப்பட்டு, மிக வெற்றிகரமாக நடத்தப் பட்ட போராட்டங்கள் பல உள்ளன. ஆனால், முத்தையன்கட்டு சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்ட ஹர் த்தாலொன்றை அக்கட்சியால் வெற்றி பெறச் செய்திருக்க முடிந்திருக்கவில்லை.
அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ஸ்.ஜே.வி. செல்வநாயகம் வரலாற்றில் பல தியாகங்களின் மூலம் போராட்டங்களை முன்னெடுத்தவர். அவர் ஜனநாயகப் போராட்டங்களை வெகுஜனங்களின் திரட்சியாக காண்பித்தவர். வட,கிழக்கை முடக்கி அரசாங்கத்தினை ஆட்டம் காணவைத்தவர். உல கத்தை திரும்பிப் பார்க்கச்  செய்தவர்.
அத்தகைய பாரம்பரியத்திலிருந்துவந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியால் ஜனநாயக ரீதியில் போராடுவதற்காக தமிழர் தேசத்தினை திரட்சியடையச் செய்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு தமிழ் மகனினது ஆதரவினைப் பெற்றி ருக்க முடிந்திருக்கவில்லை.
வட, கிழக்கில் தமிழ் மக்கள் தொடர்ச்சி யாக தமிழரசுக்கட்சிக்கே ஆணை வழங்கு கின்றார்கள். உள்ளூராட்சி மன்றங்கள் முதல் பாராளுமன்றம் வரையில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவங்களை வழங்குகின்றார்கள்.
தற்போதைக்கு வட,கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்ற கட்சி தமிழரசுக்கட்சி தான். இதனால் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற மார்பு தட்டும் போக்கு காணப்படுகின்றது.
ஆனால் நிலைமைகள் தலைகீழாக இருக் கின்றது.  தமிழரசுக் கட்சி, தன்னை தமிழ் மக்க ளின் ஏக பிரதிநிதியாக நினைத்து, தன்னிச்சை யாக முடிவெடுத்தது. அதிகாரத்தை மேலிருந்து கீழ் நோக்கிச் செலுத்துதற்கு மாறாக அனைத்து தரப்புக்களையும் அரவணைத்துச் செல்வது தான் ஒரு சிறந்த அரசியல் தலைமை. அவ்விதமான தலைமைத்துவம் தமிழரசுக்கட்சியிடம் காணப் படவில்லை.
கடந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தகமையுடன் இருப்பதற்காக, பல தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்தார்கள். அவர்களின் தலைமைத்துவமும், அவர்கள் கொடுத்த விலையும் மிக அதிகம். ஆனால், தமிழரசுக் கட்சி அத்தகைய தியாகங்களைச் செய்த கட்சியல்ல. குறிப்பாக தற்போதிருக்கின்ற அக்கட்சியின் தலைமைகள் போராட்டங்களின்போது ஒருதுளி வியர்வையை கூடச் சிந்தியிருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும். அதுமட்டுமன்றி, வட,கிழக்கு மக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கு தேர்தலில் பெருவாரியாக வாக்களித்தார்கள், எதிர்காலத்தில் வாக்களிப்பார்கள் என்பது உண்மை தான். ஆனால், அது கட்சி மீதான பற்றினால் மட்டும் அல்ல, அந்த எண்ணத்துக்கு பல காரணிகள் உள்ளன. அந்த வாக்குகளை வைத்துக் கொண்டு, தாங்கள் நினைத்ததை மக்களின் மீது திணிக்க முயற்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல.
அதேபோன்று தான் தலைமைக்கட்சியாக இருந்தால் பொதுவிடயங்களில் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஏனைய கட்சிகளை அரவணைப்பதற்கான முதிர்ச்சியான பக்குவம் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏனைய கட்சிகளுடன் குறைந்தபட்சம் உரையாடல் நடத்து வதற்கு கூட தமிழரசுக்கட்சி தயாராக இருந்திருக் கவில்லை.
அதுமட்டுமன்றி, அரசியலுக்கு எப் போதுமே ஆதரவுச் சக்திகளாக இருக்கும் மதத்த லைவர்கள், வர்த்தகத் துறையினர் உள்ளி ட்டவர்களை கட்சி அரவணைத்திருந்தால் போராட் டத்துக்கான அறைகூவல் நாலாபக்கத்திலிருந்தும் வெளியாகி அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவ்விதமாக எந்த முயற்சிகளும் முன் னெடுக்கப்படவில்லை.
சுமந்திரனுக்கு எதிரான மனநிலை
இந்தக் ஹர்த்தால் தோல்விக்கு முக்கிய காரணங் களில் அடுத்ததாக இருப்பது, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான தமிழர் தாயகத்தில் காணப்படுகின்ற ‘எதிர்மறை மனோநிலை’.  தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை எதிர்த்தவர் சுமந்திரன். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை ஏற்றுக் கொள்ளாதவர். இதற்கும் அப்பால் அவர் மீது பல விமர்சனங்கள் உள்ளன. இவை அனைத்துமே சமூக மயப்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் அவருக்கு அந்தப் புரிதல் காணப்படவில்லை. அவர் தமிழரசுக் கட்சிதான் வட,கிழக்கு தமிழ் மக்களின் முகம்’ என்று காண்பிப்பதற்கே முனைகிறார். ‘மக்கள் எங்க ளுக்கே வாக்களித்தார்கள், நாங்களே முடிவுகளை எடுப்போம்’ என்ற அவரது அணுகுமுறையில், ஏதேச் சதிகாரமே வெளிப்படுகிறது. இது மக்கள் களத்தில் எடுபடவில்லை.
கட்சிக்குள் இருக்கும் பலரும், அவரது முடிவுகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக மாறியிருக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் அவ்வாறு தலையாட்டிகளாக இருப்பதற்கு விரும்ப வில்லை என்பதை  இந்த ஹர்த்தால் போராட்டம் நிரூபித்திருக்கிறது.
இதன் விளைவாக, அவர் எதிர்காலத்தில் முன்வைக்கும் எந்தவொரு போராட்டமும் மட்டுமல்ல கருத்தியலும் தான் மக்கள் ஆதரவை முழுமையாகப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக் கும். அந்த வகையில் அவருடைய முதல மைச்சர் கனவுக்கு இதுவொரு எச்சரிக்கை மணியை ஒலித் திருக்கிறது. அது முதலமைச்சர் தொடர்பில் கட்சி தீர்மானிப்பதற்கு நல்லதொரு சமிக்ஞையாக கொள்ள முடியும்.
தனிமனிதனுக்கு அப்பாலான சிந்தனை
சுமந்திரன் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தார். அவர் முற்கூட்டி உரையாவில்லை. முதலமைச்சர் கனவுக்கான பரீட்சையாக பார்க்கிறார் போன்ற விமர்சனங்களை ஒருபுறமொதுக்கி விட்டு, தமிழர் கள் தேசமாக திரள்வதற்காக ஒற்றுமை அவசிய மானது என்ற நிலைப்பாட்டில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதனுடன் இணைந்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தங்களு டைய நகர்வுகளைச் செய்திருக்கலாம்.
தமிழரசுக்கட்சிக்கு மட்டும் மக்கள் ஆணை வழங்கவில்லை. அனைவருக்கும் வழங்கியுள் ளார்கள். அதனால் தான் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று கூறுகின்ற இந்தத் தரப்பினர், சுமந்திரனின் அறிவிப்பை அடுத்து அதுபற்றி உரையாடுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற அறிவிப்பையாவது விட்டிருக்கலாம்.
முத்தையன் கட்டில் உயிரிழந்த இளைஞ னின் சகோதரி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர். அந்தவகையில் அக்கட்சிக்கு குறித்த மரணத்துக்கு எதிராக போராடுவதில் அதிகமான பிடிமானம் உள்ளது.
எனினும், இளைஞனின் தனிப்பட்ட விடயங்களை ஆராய்ந்து அந்தக் கட்சி போராட்ட களத்தில் இறங்குவதற்கு தயங்கியது. எனினும், வட,கிழக்கு படைகுறைப்பு, முகாம்கள் அகற்றல் என்று ஹர்த்தாலுக்கான தொனிப்பொருள் மாறிய தன் பின்னர் அக்கட்சி தனது நிலைப்பாட்டினை மாற்றியிருக்க  வேண்டும்.
அதுமட்டுமன்றி, முத்தையன்கட்டு சம்ப வத் துக்கு அப்பால், வட, கிழக்கில் படை குறைப்பு, செம்மணி மனிதப்புதைகுழி, பொறுப்புக் கூறல் உள்ளிட்ட பல விடயங்களையும் உள்ளடக் கியதாக போராட்டத்தினை வலுவாக்க உர மூட்டியிருக்கலாம். அடுத்து நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடருக்கும் தமிழ்த் தேசம் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கும். அது காத்திரமான தாக இருந்திருக்கும்.  ஆனால் அரசியல் கட்சிகளும் சுமந்திரனின் அழைப்பு தோல்வி அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இருந்தன. ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த நபரைப் பார்த்தார்களே தவிர, ஹர்த்தால் தோல்வி கண்டால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி சிந்தித்திருக்கவில்லை.
அரசியல்கட்சிகள் மட்டுமல்ல, சிவில் அமைப்புக்களும், மதத்தலைவர்களும், புத்திஜீவிக ளும் கூட அமைதியாகவே இருந்தார்கள். சுமந்திரன் என்ற தனிநபரையே அனைவரும் இலக்கு வைத்தனர். சுமந்திரன் அழைத்தால் ‘இராப்போசன விருந்துபசாரத்துக்கு’ செல்லும் புத்திஜீவிகளால் சுமந்திரனுடன் இவ்விடயம் சம்பந்தமாக உரை யாட முடியாது போனதேன்.
சுமந்திரன் அறிவித்த ஹர்த்தாலை தோல்வி யடைச்செய்வதற்கு சிந்தித்ததை விடவும், அப் போராட்டத்தில் பங்காளர்களாக மாறியிருக் கலாம். ஆனால் அவ்வாறு எந்தவொரு தரப்பினரும் சிந்தித்திருக்கவில்லை.
ஹர்த்தாலின் வெற்றிக்கு, மக்கள் அனை வரும் ஒரே மனநிலையில் திரண்டு நிற்பது அவசி யம். வட, கிழக்கில் படைக்குறைப்பு, முகாம்கள் அகற்றல் என்பது நீண்டகாலமாக மக்கள் முன் வைத்துவரும் ஒரு கோரிக்கை. வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்ட படைகள் மக்களின் மீதான அடக்கு முறைகளுக்குக் காரணமாக இருக்கின்றன.
அவ்வாறான நிலையில் ஹர்த்தாலில் ஏற் பட்ட பிசுபிசுப்பு தமிழரசுக் கட்சியின் தோல்வியாக மட்டும் பார்க்கப்படவில்லை. தமிழர்கள் தங்கள் கைகளாலேயே தங்கள் கண்களை குத்திக்கொண்டுள்ளனர் என்பதையே வெளிப் படுத்தி நிற்கிறது. எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த எந்தவொரு தரப்பினராலும் ஹர்த்தால் மற்றும் போராட்டங்களுக்கான அழைப்புக்கள் விடுக் கப்படுகின்றபோது தமிழரசுக் கட்சி தள்ளியே நிற்க முற்படும். ஒருவேளை அக்கட்சி பெருந் தன்மையாக ஆதரவளிப்பது போன்று காண் பித்தாலும், கூடவிருந்தே காலைவாரும் திரை மறைவு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும்.
முஸ்லிம்களின் ஆதரவு
சுமந்திரன் ஹர்தாலுக்கான அழைப்பை விடுத்த போது முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். அவருக்கு துணையாக சாணக்கியனும் அந்தக்கோரிக்கையை கிழக்கில் முன்வைத்தார். ஆனால் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவருடன் உரையாடவில்லை.
அதன்பொதுச்செயலாளர் நிசாம் காரியப் பரிடம் தான் சுமந்திரன் உரையாடினார். அவர் ‘நட்புக்காக’ இறுதி நாளில் ஒரு விசேட ஊடக அறிக்கையை வெளியிட்டார். அதற்கு அப்பால் அக்கட்சி களத்தில் இறங்கிச் செயற்பட்டிருக்க வில்லை.
கட்சியின் தலைவர் ஹக்கீம் உள்நாட்டில் கூட இருந்திருக்கவில்லை. அதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் துடன் உரையாடிய போது, அவர் பலஸ்தீன விடயத்தினையும் ஒரு கோரிக்கையாக உள்ளீர்த்துக்கொள்ளுங்கள் என்று கோரியுள்ளார். அதற்கு சுமந்திரன் தரப்பில் முறையான பதிலளிக்கப்படவில்லை. அதனால் ரிஷாத் அமை தியாக இருந்துவிட்டார். அதாவுல்லாவுடன் உரையாடலே நடத்தப்படவில்லை.  ஐக்கிய மக்கள் சக்தியுடன் உரையாடி இருந்தால் கிழக்கில் அக்கட்சிக்கு ஆதரவுள்ள முஸ்லிம் பகுதிகளில் நிலைமையை சாதகமாக்கி இருக்கலாம். ஆனால் அவ்விதமான எந்தச் செயற் பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை.
அநுர அரசின் எதிர்ப்பு
இதேவேளை, ஹர்த்தால் அறிவிப்பு விடுக்கப் பட்டவுடனேயே அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் எதிர்ப்புக்களை வெளியிட ஆரம் பித்திருந்தது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த எந்த வொரு அரசாங்கமும் படைக்குறைப்பு கோரிக் கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்ட தில்லை. நல்லாட்சி அரசாங்கம் படைக்குறைப்புக்கு அல்லது படை விலக்கத்துக்கு இணங்கிய போதும், அதைச் சரியாக முன்னெடுக்கவில்லை.
சில இடங்களில் இருந்து படையினர் குறைக்கப்பட்டு, இன்னொரு இடத்தில் குவிக்கப் பட்டார்கள். இப்போதும் கூட, இராணுவத்தின் பெரும்பாலான படைப்பிரிவுகள் வடக்கு, கிழக்கி லேயே நிலை கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த காலத்தில் ஹர்த்தாலையோ போராட்டங்களையோ அப்போதைய அரசாங்கம் பொருட்டாக கொண் டாக இல்லை. ஆனால் அநுர அரசாங்கம் ஹர்த்தாலை தடுக்க விரும்பியது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் பேச்சாளர்கள் என்று அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் இந்தப் போராட்டம் அவசியம் இல்லையென வலியுறுத்தப்பட்டது.
இராணுவத் தரப்பு நியாயமாக நடந்து கொள்வதாகவும், விசாரணைகளுக்கு ஒத்துழைப் பதாக வும் ஒரு விம்பம் கட்டியெழுப்பப்பட்டது. அதேசமயம், இச்சம்பவத்திற்கும் இராணுவத்திற் கும் தொடர்பு இல்லை என்ற மறுப்பும் தெரிவிக் கப்பட்டது.  மேலும், இவ்வாறான சம்பவங்கள் இன ரீதியாக இடம்பெறவில்லை என்றும், நாட்டின் பிற மாவட்டங்களிலும் இடம்பெறுகின்றன என்றும்  அரசாங்கம் ஒரு நியாயத்தை முன்வைத்தது.  இதன் மூலம், அரச படைகளின் அத்துமீறல்களை ஒரு சாதாரண விடயமாக அடையாளப்படுத்த முயற்சித்தது.
அதுமட்டுமன்றி குறித்த ஹர்தாலை தோற் றுப்போன தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் நலனுக்கான போராட்டமாக, இனப்பதற்றத்தைத் தூண்டுவதற்கான போராட்டமாக அரசாங்கம் அடையாளப்படுத்த முற்பட்டது.  இனவாதம் இல்லாத ஆட்சியை நடத்து வதாகக் கூறிக்கொண்ட அரசாங்கம், தானே இனவாதத்தை கையில் எடுத்து தமிழர்களை துரும்புச்சீட்டாக பயன்படுத்தி அதனைத் திணிக்க முயன்றது. ஒட்டுமொத்த அரசாங்கக்கட்டமைப்பும் இந்த ஹர்தாலை விரும்பவில்லை, அதனை தோற்கடிக்கவே விரும்பின.
அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேர வையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அந்தப் பிரேரணையில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய விட யங்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு அல்லது தடுப்பதற்கு இத்தகைய ஹர்த்தால் உள்ளிட்ட மக்கள் போராட்டங்கள் நடக்காமல் இருப்பது முக்கியம்.  அண்மையில் ஐ.நா. மனித உரிமை கள் உயர்ஸ்தானிகர் முன்வைத்திருந்த அறிக்கையி ல், (பல பலவீனங்கள் உள்ள) தண்டனை விலக்கு நிலையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
தண்டனை விலக்கு என்பது, இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வரும் புற்றுநோயைப் போன்றது. எந்தவொரு அரசாங்கத்திடமும், தண் டனை விலக்கை முடிவுக்குக் கொண்டு வரு வதற்கான அரசியல் இயலுமை இருந்ததில்லை. தற்போதைய அரசாங்கத்திடமும் அது இல்லை. தண்டனை விலக்கை முடிவுக்குக் கொண்டு வர முயன்றால், அது தங்களுக்குத் தாங்களே ஆபத்தாக அமைந்துவிடுமோ என்று ஆளும் தரப்பினர் அஞ்சுகிறார்கள்.
அதனால் தான் இலங்கையின் எந்த வொரு அரசாங்கமும் தண்டனை விலக்கை முடிவுக் குக் கொண்டு வருவதற்குத் தயங்குகிறது. ஜெனி வாவில் கொடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால், இத்தகைய சம்பவங்கள் நடக்கவில்லையென நிரூபிக்க வேண்டும்.  ஆனால், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சம்பவங்கள், புதிய அரசாங்கம் நியாயமாகச் செயற்படுகிறது என்று நிரூபிப்பதற்குத் தடையாக இருக்கின்றன. இதனால்தான், முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், அதற்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை.
அதுமட்டுமன்றி, ஹர்த்தால் முழுமையாக வெற்றிபெற்றால் வடக்கு,கிழக்கில் அரசாங்கத்து க்கு எதிரான மனோநிலை இருக்கிறது என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்று அநுரதரப்புக்கு அச்சம் ஏற்பட்டது. எனவேதான், ஒட்டுமொத்த அரசாங்கக் கட்ட மைப்பையும் பயன்படுத்தி ஹர்த்தாலை தோல் வியடையச் செய்வதற்கான கருத்துக்கள் வெளிப் படுத்தப்பட்டன.
இத்தகைய மனோநிலை அரசாங்கத்திடம் இருந்தது என்பதை உணர்ந்து கொண்டு, தமிழரசுக் கட்சி இப்போராட்டத்தை இன்னமும் வீரியமானதாக முன்னெடுத்திருக்க வேண்டும். அது நடைபெற்றிருக்கவில்லை.
இந்தப்புரிதல் ஏனைய அரசியல் கட்சிக ளான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்காவது ஏற்பட்டு ஒத்துழைப்புக்களை முன்னெடுத்திருக்க வேண்டும். அது நடைபெற்றிருக்கவில்லை.
அரசியல்தரப்புக்களின் முரண்பாடுகளுக்கு அப்பால் சிவில் அமைப்பினரும், மதத்தலை வர்களும், புத்திஜீவிகளும் மேற்படி விடயத்தினை உய்த்தறிந்து கட்சிகளை ஒருங்கிணைத்து, அனைத்துத் தரப்பு ஆதரவினையும் பெற்றி ருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடைபெற்றிருக்க வில்லை.
இப்போது நிலைமை, சுமந்திரனும், தமிழரசுக்கட்சி என்பதை தாண்டி ஒட்டுமொத்த தமிழர் தாயகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.. ஏனென்றால், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழர் தாயகம் ஆதரவளிக்க வில்லை. தமிழர் தாயகம் அரசாங்கத்துடன் தான் இருக்கின்றது. இது தான் அநுர அரசு ஜெனீவா மட்டுமல்ல உலகத்துக்கே சொல்லப்போகும் செய்தி.
இப்போதாவது சோசலிசம், மார்க்சியத்தின் சாணக்கியத்தை தமிழ்த் தேசியம் புரிந்து கொண் டால் தேவலை.

பல்வேறு குற்றங்களுக்கு பொறுப்பானவருக்கு ஆதரவான கருத்துக்கள் கவலையளிப்பதாக அரசாங்கம் கருத்து

ரணில் விக்ரமசிங்க என்பவர், கறுப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று(24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், ரணிலுக்கு எதிராக மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு இருக்கின்றதாகவும் இவ்வாறான நபரை பாதுகாக்கும் விததத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்றும் பலம் பொருந்தியவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க மட்டும் அல்ல, எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் யாவருக்கும் விதி விலக்கல்ல என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிராக இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் முடிவு

அரிய மண் பொருட்கள், உரங் கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார கட்டுப்பாடுகளைத் தீர்க்க முயற்சிப் பதாக சீனா இந்தியாவிடம் தெரிவித் துள்ளதாக இந்திய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை(19) செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச் சர் எஸ். ஜெய்சங்கருடனான பேச்சுவார்த்தையின் போது சீன வெளி யுறவு அமைச்சர் வாங்யி இந்த உறுதிமொழியை அளித்ததாக எ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தில் உள்ள ஆர்.டி. வட்டாரங்களும் இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்தி யுள்ளன. மூன்று ஏற்றுமதி பிரிவுகள் குறித்த இந்திய கோரிக்கைகளுக்கு பெய்ஜிங் ஏற்கனவே பதிலளிக் கத் தொடங்கிவிட்டது என்று ஜெய்சங்கரிடம் வாங் கூறிய தாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்றுமதி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாங் புது தில்லிக்கு மூன்று நாள் பயணமாக சென்றிருந்தார், அங்கு அவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் எல்லைப் பேச்சுவார்த்தை நடத்தி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அரிய மண் காந்தங்களை உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா, ஏப்ரல் மாதம் ஏழு நடுத்தர முதல் கனரக அரிய மண் பொருட்கள் மற்றும் சில காந்தங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப் பாடுகளை அறிவித்தது. இது விண்வெளி, ஆட்டோமொபைல் மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கு முக்கியமான விநியோகச் சங்கிலிகளைப் பாதித்துள்ளது.
தெற்காசிய நாட்டிற்கு உரங்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங் களை ஏற்றுமதி செய்வதை பெய்ஜிங் கட்டுப் படுத்தியுள்ளதாகவும், இது விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை பாதித்துள் ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டிருந்தன.
சீனாவுடன் இந்தியா ஒரு “நிலையான, கூட்டுறவு மற்றும் எதிர்கால உறவை” விரும்பு வதாக ஜெய்சங்கர் வாங்கிடம் கூறினார். ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து கடுமையான வரிகளை எதிர்கொள்ளும் நேரத்தில் தங்கள் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை தற்போது விரும்புகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகளை மறைமுகமாகக் குறிப் பிட்டு, உலகம் தற்போது விரைவான மாற்றங்களை அனுபவித்து வருவதாகவும், ஒருதலைப் பட்சமான மிரட்டல் அதிகரித்து வருவதாகவும், சுதந்திர வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒழுங்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள் வதாகவும் வாங் ஜெய்சங்கரிடம் கூறினார் என்று சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவும் சீனாவும் உலகளாவிய பொறுப்புணர்வு உணர்வை வெளிப்படுத்தவும், முக்கிய சக்திகளாக செயல்படவும், பல துருவ உலகத்தை மேம்படுத்த பங்களித்து செயல்பட வாங் அழைப்பு விடுத்ததாக அறிக்கை தெரி வித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க கைது: முன்னாள் ஜனாதிபதிகள் கண்டனம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் என சுட்டிக்காட்டியுள்ள கூட்டு எதிர்கட்சிகள், இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாவும் அறிவித்துள்ளன. கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஏற்பாடு செய்திருந்த ஊடகச்சந்திப்பு கொழும்பில் நேற்று (24) இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க, நிமல் ஸ்ரீபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, தலதா அத்துகோரல, ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீம், தயாசிறி ஜயசேகர மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு ரணில் விக்ரமசிங்வின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஊடக அறிக்கையை தலதா அத்துகோரல ஊடகங்களிடம் முன்வைத்தார். ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகவும், இந்த கைதானது ஜனநாயகத்துக்கான தாக்குதலுக்கு சமமானது எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ரணிலுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கின்ற அரசியல் செயற்பாட்டை கடுமையாக எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மூன்று வருட போரில் 17 இலட்சம் உக்ரைன் படையினர் பலி

ரஷ்யாவுடனான 3 ஆண்டு கால மோதலில் “பல தலை முறைகளை” இழந்ததாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கசிந்த இராணுவ கோப்புகள் 2022 முதல் கியேவின் படைகள் 1.7 மில்லியனுக்கும் அதிகமான துருப்புக்களை இழந்துள்ளன என கசிந்த இராணுவ ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
17 இலட்சம் படையினர் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளனர் என்பதைக் அந்த ஆணவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த அறிக்கைக ளைத் தொடர்ந்து உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் டெம் டிமிட்ரக்கின் கருத்துக்கள் வெளி வந்துள்ளன.
கடந்த புதன்கிழமை(20) உக்ரைனின் தலைமைத் தளபதியிடமிருந்து ஹேக்கர் குழுக்க ளால் பெறப்பட்டதாகக் கூறப்படும் டிஜிட்டல் அட்டை குறியீட்டை மேற்கோள் காட்டி, இறந்த அல்லது காணாமல் போன வீரர்களின் பெயர்கள், அவர்களின் இறப்பு விவரங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றை ரஷ்ய ஊடகங்கள் வெளி யிட்டிருந்தன.
2022 இல் 118,500 துருப்புக்கள் கொல் லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர், 2023 இல் 405,400, 2024 இல் 595,000 மற்றும் இந்த ஆண்டு இதுவரை 621,000 துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர் என்று உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“காணாமல் போனவர்களின் பட்டியலில் இன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர், நிச்சயமாக இந்த படையினர் இறந்துவிட்டார்கள், அதே நேரத்தில் அவர்களின் குடும்பங்கள் அதனை அறியாது உள்ளனர். நிலைமை சோகமானது, நிலைமை எம்மை பயமுறுத்துகிறது” கிராமங்களில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற ஆண்கள் மட்டுமே உள்ளனர்.
உக்ரைன் “பெரும் இழப்புகளை” மற்றும் “மக்கள்தொகை நெருக்கடியை” எதிர் கொண்டுள்ளதாகவும். நாங்கள் பல தலை முறைகளை இழந்துவிட்டோம் என்று டிமிட்ரக் தெரிவித்துள்ளார். அறிக்கையிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளை விட மிக அதிகம். பிப்ரவரியில், உக்ரைனின் விளாடிமிர் ஜெலென்ஸ்கி CBS செய்தியிடம் 2022 முதல் தனது வீரர்கள் 46,000 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 380,000 பேர் காயமடைந்ததாகவும் தெரி வித்திருந்தார்.

சர்வதேச நீதி பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மற்றுமொரு போராட்டம்

உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிப்பதுடன், சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் செம்மணியில் 9 கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் (24) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதேவேளை, மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச் சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்புடன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது கருநிலம் என்னும் தொனிப் பொருளில் மன்னார் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

ஐ.சி.சி நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய முயன்ற அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களை வாஷிங்டன் குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜூலை 2025 இல் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் தலைமையகம். அமெரிக்க வீரர்கள் மற்றும் இஸ் ரேலிய அதிகாரிகளுக்கு எதிரா ன வழக்குகளைத் தொடர்ந் ததற் காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தின் (ICC) இரண்டு நீதிபதிகள் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கடந்த புதன்கிழமை(20) அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தா னில் அமெரிக்க துருப்புக்களின் நடத்தை குறித்து ஹேக்கை தள மாகக் கொண்ட நீதிமன்றத்தின் விசாரணையை அங்கீகரித்ததற்காக நீதிபதி கிம்பர்லி புரோஸ்ட் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காசாவில் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு கைது உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதி நிக்கோலஸ் யான் கில்லூவுக்கு அனுமதி வழங் கப்பட்டது. கூடுதலாக, பிடியாணைகளை கொண்டுவந்ததற்காக துணை வழக்கறிஞர்கள் நஜாத் ஷமீம் கான் மற்றும் மேம் மண்டியாயே நியாங் ஆகியோர் கருப்புப் பட்டியலில் சேர்க் கப்பட்டுள்ளர். அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஐசிசியின் அங்கந்துவ நாடுகள் கிடையாது.
“அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் 125 உறுப்பு நாடுகளின் ஆணையின் கீழ் செயல்படும் ஒரு பாரபட்சமற்ற நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு அப்பட்டமான தாக்குதல் இது” என தெரிவித்துள்ள ஐ.சி.சி இந்த தடைகளை நிராகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் பிப்ரவரியில் ஐ.சி.சி மீது தனது முதல் தடைகளை விதித்தார், நீதிமன்றம் “அமெரிக்காவை யும் நமது நெருங்கிய கூட்டாளியான இஸ் ரேலையும் குறிவைத்து சட்டவிரோதமான மற்றும் ஆதாரமற்ற நடவடிக்கைகளை மேற் கொண்டதாக” குற்றம் சாட்டியிருந்தார். அதே போல், நெதன்யாகுவும் பிடியாணைகளை கண்டித்து, ஆளும் கட்சியை “யூத-விரோதி” என்று தெரிவித்திருந்தார்.
2024 ஆம் ஆண்டில், ஐ.சி.சி நெதன்யாகு மற்றும் கேலன்ட்டை தேடப்படும் பட்டியலில் சேர்த்தது, 2023 முதல் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட காசாவிற்கு மனிதாபிமான உதவியை இஸ்ரேல் மறுத்ததற்கான காரணங் களை கண்டறிந்த பின்னர் அது இந்த நடை வடிக்கையை மேற்கொண்டிருந்தது.

ஜெனிவா செல்ல தயாராகும் இலங்கை அரசின் பிரதிநிதிகள்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு அடுத்த மாத ஆரம்பத்தில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.

பெரும்பாலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி குறித்த குழு இலங்கையில் இருந்து புறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்து கொள்வதற்காக குறித்து குழு அங்கு செல்கிறது.

இதன்போது கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கோரவுள்ளதாக அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நிலைப்பாட்டை இலங்கை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான மையக் குழு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஒரு புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளது. எவ்வாறாயினும் குறித்த பிரேரணை இலங்கைக்கு சாதகமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் கொண்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் முன்வைக்க உள்ள அறிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது. அதேநேரம் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை மையக் குழுவின் புதிய தீர்மானம் தொடர்ந்து வலியுறுத்தும் என அரச தரப்பு தகவல்கள் கூறுகின்றன. மறுபுறம் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

‘நீதியின் ஓலம்’ போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து ‘நீதியின் ஓலம்’ என்ற கையெழுத்து போராட்டம் இன்று (23) யாழ்.செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில், கிருசாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்ட செம்மணி பகுதியில் ஆரம்பமானது. மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஏற்பாடுக்குழுவினர் போராட்டத்தின் நோக்கம் குறித்து உரை நிகழ்த்தினர்.

இதன்படி, தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கையெழுத்து போராட்டத்தின் ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்படுகிறது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே இரு தரப்பு கடன் உடன்படிக்கை!

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே இரு தரப்பு கடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக் (Andrew Patrick) மற்றும் இலங்கை நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கை, பாரிஸ் கிளப் (Paris club) நாடுகளின் கடன் வழங்குநர்களுடன் 2024ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளில் கீழ் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இருதரப்பு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், இது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முக்கிய மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த செயற்பாட்டின் ஊடாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும் என்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் இருந்து அசல் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.