Home Blog Page 39

ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும் – பிமல் தெரிவிப்பு

40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இப்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுகிறார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில்   நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, படுகொலைகள் செய்யப்பட்டமை, தமிழர்களின் நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான ஒருவரை கைது செய்திருப்பது தவறு என சுமந்திரன் கூறுகிறார்.

அவர் ரணிலுடன் நெருக்கமானவர், சிலவேளைகளில் ரணிலின் வீட்டில் இருந்து கூட அந்த கருத்தை சொல்லி இருக்கலாம்.

1980களின் முற்பகுதியில் நடந்த முக்கிய சம்பவங்கள், 1981ல் யாழ்ப்பாண நூலகம் எரிப்பு மற்றும் ஜூலை 1983 கலவரம் உள்ளிட்டவற்றின் போது அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க வகித்த பங்கிற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.

1987 மற்றும் 1990 க்கு இடையில், அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர் படலந்த சித்திரவதை கூடம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார், இதற்காக சட்டமா அதிபர் மூலம் இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

2015 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடியில் ரணில் விக்ரமசிங்கவின் தொடர்பு தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வழக்கிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கறுப்பு ஜுலைக் கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்குப் பொறுப்பு கூறவேண்டியவர்.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க மட்டும் அல்ல, எப்படியான நபரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் எவரும் விதி விலக்கல்ல என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

செம்மணிக்கு நீதி கோரி ஓரணியில் திரளும் தமிழ் கட்சிகள்!

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , சமத்துவ கட்சியின் பொது செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோருடன் தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான புதைகுழிகள் வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது என்று ஊடக சந்திப்பை நடத்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளின் எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு சர்வதேச விசாரணைகள் கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுமே இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரணிலின் கைதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!

ரணில் விக்ரமசிங்கவின் கைதும், பிணை வழங்கப்படாமல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதும், அரசியலமைப்பின் எதேச்சதிகாரம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக எதிரணி அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த செயல் அரசாங்கம் எதேச்சதிகாரத்தை நோக்கி பயணிப்பதை எடுத்துக்காட்டுவதாகவும் கூட்டு எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒரு அரச தலைவரின் கடமைகளுக்கும் தனிப்பட்ட செலவுகளுக்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் இல்லை என்றும் அந்தக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன், ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டு அரசியல் நோக்கங்களுக்காக கட்டமைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டு என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் புரிந்த சகல முன்னாள் ஜனாதிபதிகளும் கைது செய்யப்பட வேண்டும் : தமிழர் தரப்பு கோரிக்கை

ரணில் விக்ரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகள், முன்னாள் ஜனாதிபதிகள் மீதும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஞானமுத்து ஸ்ரீ நேசன் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு அவர்களும் கைது செய்யப்படாவிட்டால், ரணில் கைது செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்கலாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, போரத்தீவுபற்று பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஞானமுத்து ஸ்ரீ நேசன் இந்த கருத்தை வெளியிட்டார்.

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக்கோரி பேரணி

பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஒன்றிணைத்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

‘பருத்தித்துறை நகரை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (25) காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் நிறைவாக மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

நகர்ப் பகுதியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களால் பருத்தித்துறை நகரின் வளர்ச்சி பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தை இடப்பற்றாக்குறை காரணமாக இடமாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் நீதவான் வாசஸ்தளத்திற்கான நீதிமன்ற காணியில் இராணுவம் முகாமிட்டுள்ளனர் என்று பேரணியை முன்னெடுத்த தரப்பினர் சுட்டிக்காட்டினார்.குறித்த முகாம் அகற்றப்பட வேண்டும் என்றும் அந்த முகாம் அகற்றப்பட்டால் நீதிமன்ற இடமாற்றம் தேவையற்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இரண்டாவதாக பருத்தித்துறை தபாலகத்தின் காணியையும் இராணுவம் முகாமிட்டுள்ளது.
தபாலகம் வாடகை கட்டடத்தில் இயங்க வருகிறது. அத்துடன் பருத்தித்துறை வெளிச்ச வீட்டு வளாகத்தில் கடற்படை முகாமிட்டுள்ளது என்று பேரணியை முன்னெடுத்த தரப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர்

அதேநேரம் குறித்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட வர்த்தகர்கள் முற்பகல் 09:30 வரை தமது வர்த்தக நிலையங்கள் பூட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.சந்தை வியாபாரிகளும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும், அது நீதிமன்றத்தின் சுயாதீன செயற்பாடு என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாரையும் கைது செய்வதா? அல்லது அவரை விளக்கமறியலில் வைப்பதா? என்பது குறித்து தானோ அல்லது அரசாங்கமோ தீர்மானிப்பதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எதிர்தரப்பினர் அனைவரும் ஓர் அணியில் இணைவார்கள் என்பதை அறிந்திருந்த நிலையில், குறித்த கூட்டணியால் அரசாங்கத்திற்கு எவ்வித சவாலையும் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
யாரேனும் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுமாயின் அது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் எடுக்கும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அத்துடன், இங்கு யாருடைய ஜனநாயக உரிமையும் பறிக்கப்படவில்லை எனக் கூறிய அமைச்சர், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமையே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

கொள்ளையடித்து, ஊழல் செய்வோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுப்பதை, ஜனநாயக உரிமை மீறப்படுவதாக கூற முடியுமா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.அத்துடன், இந்த கைது ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ முன்னெடுத்த நடவடிக்கை அல்ல என்றும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை புரிந்துகொள்ள முடியாது எனின், எதனையும் செய்ய முடியாது என்றும், அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்திருந்தால் அதனை நீதிமன்றத்திடம் எடுத்துரைக்க முடியும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய ரணிலை சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் அவர் மருத்துவமனைக்கு வருகை தந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க, தனது நோய் குறித்தும் ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்தும், நேற்று (24) சமூக ஊடகங்களில் இதயபூர்வமான கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை தனது கட்சியினரும், சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருந்து ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றிருந்த மூத்த அரசியல்வாதிகளிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமையை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தங்களுக்காக ரணில் விக்கிரமசிங்க, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கட்சித் தலைவர்கள் நேற்று (24) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து எதிர்க்கட்சியினரின் முனைப்புக்களுக்காக அவரது ஆதரவைக் கோரினர்.

இதனையடுத்து, நேற்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தநிலையில் இன்று (25) கொழும்பு வரும் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவையும் ஐக்கிய தேசியக் கட்சியினர் சந்திக்கின்றனர்.

சில முக்கிய சர்வதேச மனித உரிமைக் குழுக்களும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கான விபரங்களைக் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை – தமிழக கடற்போக்குவரத்து சேவை விரைவில் முன்னெடுக்கப்படும் – ஜெயசேகரம்

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம், குறிகாட்டுவன் இறங்குதுறை, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியுடன் காங்கேசன்துறை – தமிழக கடற்போக்குவரத்து சேவை ஆகியவை விரைவில் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

இன்று (25) ஊடக சந்திப்பொன்றில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த அரசுகள் இவற்றை முன்னெடுப்பதில் அசமந்தமாக இருந்தபோதும் இம்முறை  அவற்றை அரசு நிறைவேற்றும். இது தொடர்பாக நான் அரசுடன் பேசியுள்ளேன். அதன் அடிப்படையிலேயே இதை நான் கூறுகின்றேன்.

தீவக கடற்போக்குவரத்து இன்று பெரும் சவாலாக இருக்கிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபை செய்யவேண்டிய விடயத்தை அது கண்டுகொள்ளாதிருப்பதால் தான் பல அனர்த்தங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டே அரசுடன் இவ்விடயம் குறித்துப் பேசி, அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள்ஆ ரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி ரத்மலானையில் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தமது காரில், அலுவலகம் நோக்கி பயணித்த போது
கொலை செய்யப்பட்டார்.

இதேவேளை, ஊடகவிலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்ய வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது சமூக ஊடக கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, 2022ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவை அடைந்தபோது அதைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் அவர் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தை முழுமையாக ஆதரிக்க வேண்டும், ஆனால் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எரிக் சொல்ஹெய்ம் மேலும் கேட்டுக்கொள்கிறார்.

இதேவேளை, தனது பதவி காலத்தில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இறுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.