விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? – மு.திருநாவுக்கரசு
காஸாவில் மேலும் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை
தெற்கு காஸா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நாசர் மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் ஒரு அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் ஆகியோர் அடங்குவர். மற்ற இரண்டு பத்திரிகையாளர்களும் அல் ஜசீரா மற்றும் என்பிசி நிறுவனங்களில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
முதல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர், மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது நடந்த இரண்டாவது தாக்குதலில் மற்றவர்கள் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் தங்களின் ஒளிப்பதிவாளர் ஹுசாம் அல்-மஸ்ரியும் ஒருவர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுயாதீன பத்திரிகையாளரான மரியம் டாகாவும் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. 33 வயதான அந்த நபரின் மரணத்தால் “அதிர்ச்சியும் வருத்தமும்” அடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றவர்கள் அல் ஜசீராவில் பணிபுரியும் முகமது சலாமே மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி சேனலான NBCயில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் முவாத் அபு தாஹா என்று கூறப்படுகிறது.
சிவில் பாதுகாப்புத் துறையின் உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடரும் சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்!
தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் தொடர்கிறது.
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்றுமுன்தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இது இரண்டாவது நாள் 24.08.2025 நாவிதன்வெளி பிரதேசத்திலும் நேற்று (25.08.2025) மூன்றாவது நாள் காரைதீவிலும் முன்னெடுக்கப்பட்டது
இன்றைய கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டதுடன் அங்கு கலந்து கொண்டிருந்த காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினருமான திரு.கி.ஜெயசிறில் தனது கருத்துகளையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய நிகழ்வில் இந்த நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள்,இளைஞர்கள், மாணவர்களிடமும் இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள்,பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பில் AMM. ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்நிலையில் நீதிபதி ஜே.பீ ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதன்போது நீதிமன்றம், சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடக் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளம் காட்டி, பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கு இன்று காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம்!
செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் இணைத்தளவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராசா கஜேந்திரன், முருகேசு சந்திரகுமார், மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளி கட்சியின் பிரதிநிதி வேந்தன் ஆகியோர்கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் வடகிழக்கில் இருக்கின்ற அனைவரிடமும் கையெழுத்துக்களை பெற்று சர்வதேச நீதி விசாரணை என்பது தேவை என்பதை வலியுறுத்தி சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் ஐநா சபைக்கு பல்வேறுபட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் கோரிக்கைகளாக நாங்கள் இந்த விடயத்தினை முன்வைக்க விரும்புகின்றோம்.
அத்துடன், ஆரம்ப கட்டமாக ஒரு கையெழுத்து போராட்டம் ஒன்றினை வடகிழக்கில் மேற்கொள்வதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது.
அதுபோல இலங்கை தமிழரசு கட்சியிடமும், தமிழர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் பேசியிருந்தோம் அவர்கள் அதற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள்.
எனவே அனைவரும் இணைந்து ஒரு பொதுவான தமிழ் மக்கள் சம்பந்தமான பிரச்சினை என்ற விடயத்தில் ஒன்று திரண்டு போராட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது
அதேபோல முன்னணியினரும் சில திருத்தங்களுடன் கையெழுத்துப் போராட்டத்தில் இணைவதாக தெரிவித்துள்ளார்கள்.
எனவே எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இந்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டு மக்களிடம் வையொப்பங்களை பெற்று உரிய தரப்பிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்
மன்னாரில் 23 வது நாளாக தொடரும் போராட்டம்!
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் திங்கட்கிழமை (25) 23 வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இசைமாலை தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திறண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.
25ஆம் திகதி திங்கட்கிழமை காலை மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இசைமாலை தாழ்வு கிராம பெண்கள் அமைப்பு உள்ளடங்களாக இசைமாலை தாழ்வு கிராமத்தை சேர்ந்த அனேகமானோர் வருகை தந்து கலந்து கொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை 23 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த போராட்டமானது காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,குறித்த போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து கொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும்,தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்ட குழுவிற்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே ரணில் கைது : ஜி.எல்.பீரிஸ் சாடல்
அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.கைது செய்வதற்குரிய நியாயமான காரணிகள் ஏதும் இருக்கவில்லை. இந்த கைதுக்கு அரசாங்கம் நிச்சயம் சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீதான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.
முறையான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படவில்லை.நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதியாக செயற்படும் பொலிஸாரின் பிரதான நோக்கம் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாகவே அமைந்தது.
வாக்குமூலம் பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.சாட்சியாளர்களுக்கு அச்சமூட்டல் அல்லது சாட்சியங்களை இல்லாதொழித்தல் போன்ற சந்தேகம் காணப்படுமாயின் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்திருக்கலாம்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் 33 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்டர் ஜெனரால் நீதிமன்றத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறாயின் சாட்சியாளர்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவினால் எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்யும் செயற்பாடாகவே இதனை கருதுகிறோம் என்றார்.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளில் நீதிக்காகக் குரல் கொடுக்க வருமாறு அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளில் நீதிக்காகக் குரல் கொடுக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எழுச்சியுடன் இடம்பெற இருக்கின்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி போராட்டம் வடக்கில் சங்கிலியன் பூங்காவில் இருந்து செம்மணி வரை ஊர்வலமாக சென்று செம்மணியில் போராட்டம் இடம்பெறும் எனவும், அதேபோன்று கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து பேரணியாக சென்று காந்தி பூங்காவில் போராட்டம் இடம்பெறும் எனவும் இப் போராட்டத்திற்கு பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,கட்சி பதமின்றி அரசியல்வாதிகள், இளைஞர்கள், யுவதிகள், கழகங்கள், இளைஞர் கழகங்கள், ஆலயங்கள், வர்த்தகர் சங்கத்தினர்,மீனவர் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் என இன மத மொழி அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் கலந்து கொண்டு இப்போராட்டத்திற்கு வழமையாகக் கலந்து கொள்வது போன்று இம்முறையும் கலந்த கொண்டு வலு சேர்க்குமாறு அறைகூவல் விடுத்துள்ளனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்.
ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும் – பிமல் தெரிவிப்பு
40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இப்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுகிறார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, படுகொலைகள் செய்யப்பட்டமை, தமிழர்களின் நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான ஒருவரை கைது செய்திருப்பது தவறு என சுமந்திரன் கூறுகிறார்.
அவர் ரணிலுடன் நெருக்கமானவர், சிலவேளைகளில் ரணிலின் வீட்டில் இருந்து கூட அந்த கருத்தை சொல்லி இருக்கலாம்.
1980களின் முற்பகுதியில் நடந்த முக்கிய சம்பவங்கள், 1981ல் யாழ்ப்பாண நூலகம் எரிப்பு மற்றும் ஜூலை 1983 கலவரம் உள்ளிட்டவற்றின் போது அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க வகித்த பங்கிற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.
1987 மற்றும் 1990 க்கு இடையில், அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர் படலந்த சித்திரவதை கூடம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார், இதற்காக சட்டமா அதிபர் மூலம் இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
2015 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடியில் ரணில் விக்ரமசிங்கவின் தொடர்பு தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வழக்கிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
கறுப்பு ஜுலைக் கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்குப் பொறுப்பு கூறவேண்டியவர்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க மட்டும் அல்ல, எப்படியான நபரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் எவரும் விதி விலக்கல்ல என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
செம்மணிக்கு நீதி கோரி ஓரணியில் திரளும் தமிழ் கட்சிகள்!
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , சமத்துவ கட்சியின் பொது செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோருடன் தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான புதைகுழிகள் வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது என்று ஊடக சந்திப்பை நடத்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளின் எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு சர்வதேச விசாரணைகள் கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுமே இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.