சில காலங்களுக்கு முன்புவரை பெருந் தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களை சிறந்த முறையில் பராமரித்து வந்தன. அதே நேரம் அரசாங்க நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையில் காடுகளாகக் காட்சியளித்தன. ஆனால், தற்போது பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களும், அரசுக்கு சொந்தமான தோட்டங்களும் ஒரே மாதிரியாக காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இது தொழிற்றுறை அழி வின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மறுபுறம் தேயிலை தோட்டத் தொழிற்துறை படிப்படியாக கைவிடப்படுகின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது. எது எவ்வாறாயினும் இதன் நேரடி தாக்கம் பெருந்தோட்ட மக்களை சென்றடை கிறது. இலாபம் ஈட்டும் போது அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் தோட்ட கம் பனிகள் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத் தல்களுக்கு தீர்வுகளை வழங்குவதில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் களைநாசினி அறிமுகமாகும் வரை முற்றுமுழுதாக தொழி லாளர்களைக் கொண்டே புற்கள் வெட்டி அகற்றப்பட்டு தேயிலை தோட்டங்கள் பரா மரிக்கப்பட்டன. நாளாந்த சம்பளத்துக்காக மட்டுமன்றி குத்தகை முறையிலும் இந்த தொழிலுக்கு தொழிலாளர்கள் அமர்த்தப் பட்டனர். அத்துடன் தாங்கள் பணியாற்றும் தேயிலை தோட்டங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் தொழி லாளர் மத்தியில் காணப்பட்டது. அந்தக் காலத்தில் பெருந்தோட்டங்கள் சுத்தமாகவும் அழகாகவும் மட்டுமன்றி அதிகளவில் தேயி லைச் கொழுந்து அறுவடையைத் தரக் கூடியதாகவும் இருந்தன. அத்துடன் கிருமி நாசினி பயன்படுத்தப்படாத, இரசாயனம் கலக்காத தேயிலையைப் பெறக் கூடியதாக இருந்தது. இது இலங்கையின் ‘சிலோன் டீ’ என்ற நாமத்தை உலகறியவும் செய் தது.
பின்னர் புற்களை அழிப்பதற்காக பல் வேறு வகையான இரசாயனங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அதனால் பெருந்தோட்டங்கள் சுத்தமாக, புற்கள் வளரா மல் இருந்தன. தொழிலாளர்கள் ஓரளவு பாது காப்புடன் தொழில் புரிந்து வந்தனர். அத்துடன் பெருந்தோட்டப் பயிர்களுக்கு போடப்படும் உரங்கள் நேரடியாக பயிர்களுக்கே கிடைக்கக் கூடியவையாக இருந்தன.
பின்னரான காலப்பகுதியில் பெருந்தோட் டங்களில் புற்களை ஒழிப்பதற்கு களைகொல்லி இரசாயனங்களை பயன்படுத்து வதற்கு தடை விதிக்கப்பட்டது. இரசாயனங்களை பயன் படுத்தாத தேயிலைச் செய்கையும் சில தோட் டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி, புற்களை அகற்றுவதற்காக அதிக தொழி லாளர்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், பெருந்தொகை பணத்தையும் பெருந்தோட்டக் கம்பனிகள் செலவிட வேண் டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால் பெரும் பாலான தோட்டக் கம்பனிகள் அவ்வாறு செய்ய வில்லை. பல தேயிலை தோட்டங்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்தோட் டங்களில் தேயிலை உற்பத்தி முன்னணியில் இருந்தது. தற்போது 25% தேயிலை உற்பத்தி கள் பெருந்தோட்டங்களிலும், 75% தேயிலை உற்பத்திகள் சிறுதோட்டங்களிலும் பதிவாகின் றன. மறுபுறம் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தேயிலைகள் அழிந்து தோட்டங்கள் காடுகளாக தோற்றமளிக்கின்றன. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, மாத் தறை மாவட்டங்களில் மட்டுமின்றி நுவரெ லியா மாவட்டத்திலும் கூட இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தேயிலை பெருந்தோட்டத் தொழிலையே நம்பியிருக் கும் இந்திய வம்சாவளி மக்களின் வாழ் வாதாரம் முற்றாக அழிந்து போகும் அபா யம் தோன்றியுள்ளது. இதனைப் பற்றி பெருந் தோட்டத் துறை சார்ந்த மக்கள் பெரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சில பெருந்தோட்டத் துறை தொழிற்சங்கத் தலை வர்களும் அரசியல்வாதிகளும் இன்னும் சில ஆண்டுகளில் பெருந்தோட்டத் துறை, குறிப்பாக தேயிலைச் செய்கை முற்றாக அழிந்து போய்விடும் என்று பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பேச்சுக்கள் தேயிலையை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாளர்களிடையே அச் சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரு கின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்காக அர்ப் பணிப்புடன் செயல்படுவதாகக் கூறிக்கொள் ளும் தரப்பினர், தொழிலாளர்களின் வாழ்வாதார த்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மனிதாபிமான செயற்பாடாகத் தெரிய வில்லை.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் குறித்து தொடர்ச்சியாக கருத்தாடல்கள் இடம்பெறுகின்ற போதிலும் அவர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவில் பேசப்படுவதில்லை.
அண்மைய போக்குபெருந்தோட்டங்கள் காடுகளாக மாறுவதால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாத்திரமின்றி பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. குளவி, சிறுத்தை, பாம்பு, காட்டெருமை, யானை உள்ளிட்ட விலங்குக ளின் அச்சத்துடனேயே அந்த மக்களின் வாழ்க்கை கடந்து செல்கிறது. குறிப்பாக அண்மைய நாட்களில் மலையக பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட பலரும் குளவி கொட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் நாளாந்தம் பதிவாகி வருகின்றன.
பெருந்தோட்டங்களில் உள்ள வீடுகளை அண்டிய பகுதிகளில் சிறுத்தைகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத் தின் நோர்வூட், போடைஸ், கினிகத் ஹேன, பொகவந்தலாவ உள்ளிட்ட பகுதிகளில் சிறுத் தைகளின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகளை சிறுத்தைகள் வேட்டை யாடும் சம் பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கம், பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு நட வடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் கருத்துரைத்த பெருந் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச் சர் சமந்த வித்யாரத்ன, “வனஜீவராசிகள் திணைக் களத்துடன் கலந்துரையாடி இதற்கான தீர்வு எட்டப்படும்” என்று தெரிவித்தார்.
மறுபுறம் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர கூறுகையில், “சிறுத்தைகளை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக் களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக கினிகத்ஹேன உள் ளிட்ட சில நகரங்களை அண்டிய குடியிருப்பு பகுதிகளிலும் சிறுத்தைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஒரு புறம் சிறுத்தைகளை கொல்ல முடியாது என்பதுடன் மறுபுறம் மக்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டும். எனவே, இது மிகுந்த அவதானத்துடன் கையாள வேண்டிய பிரச் சினை” என்றார்.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க் கைத் தரத்தை மேம்படுத்தவும், தோட்ட ங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வும், நில உரிமை, வீட்டு வசதி போன்ற அடிப் படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கைவி டப்பட்ட தோட்டங்களை புனரமைக்கவும், விவசாயம் மற்றும் இதர தொழில்களில் ஈடு படவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். மேலும், தோட்டப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்த நிலைமைக்கு தீர்வு காணாவிட்டால், மலையகத்தின் வளங்கள் குறைந்து, சுற்றுச்சூழல் சீரழிந்து, தொழிலாளர்களின் வாழ்க்கை மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது.