Home Blog Page 2414

பேரனைத் தேடி போராடிய தாயொருவரின் குரல் இன்று மௌனித்தது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் நேற்று (26-02) மரணமடைந்துள்ளார் .

செல்வம் சிவபாக்கியம் என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் .

முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே நேற்று காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் இன்று (27) காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது .

625.0.560.350.390.830.053.800.670.160.91 2 பேரனைத் தேடி போராடிய தாயொருவரின் குரல் இன்று மௌனித்தது.

தனது மகளின் மகனான அல்பிரட் தினு என்ற தனது பேரப்பிள்ளை 2009 இறுதியுத்த பகுதியில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மழை வெயில் பனி என்று எதையுமே பொருட்படுத்தாமல் முல்லைத்தீவில் தகரக் கொட்டில்களில் நோய் நொடிகளுக்கு மத்தியில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாக மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

தனது மகளின் மகனாக பேரனை தனது மகனாகவே தன்னுடன் வளர்ந்து வந்த இவர் பேரன் காணாமல் ஆக்கப்பட்ட நாளிலிருந்தே அவரைத்தேடி பல்வேறு இடங்களுக்கும் முறையிட்டு தேடிவந்தார் .

தனது இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாக மண்ணுக்கு ஈர்த்த இந்த தாய் இறந்துபோன பிள்ளைகளை பற்றிய கவலை இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது பேரன் வந்தால் தான் தனக்கு நிம்மதி எனவும் அடிக்கடி கூறிவந்தார் .

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையான காலப்பகுதியில் இவருடன் சேர்த்து இதுவரையில் 60 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடுசெய்நீதியை சர்வதேசம் எமக்கு தர வேண்டும் : ஜெனீவாவில் தாய்மார்கள் கோரிக்கை !

சர்வதேச சமூகம் சிறிலங்காவில் முன்னெடுத்த நிலைமாறுகால நீதி சிறிலங்கா அரசினால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், எமக்கு பரிகாரநீதியினை சர்வதேச சமூகம் தரவேண்டும் என காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களது தாய்மார்கள் ஜெனீவாவில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 43ஆம் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளில், ஐ.நா தீர்மானத்துக்கு வழங்கிய அனுசரணையில் தாம் வெளியேறுவதாக சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தாய்மார்கள் இக்கோரிக்கையினை சர்வதேச சமூகத்தை நோக்கி முன்வைத்துள்ளனர்.

சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்பட்டத்தியோ அல்லது, இனப்படுகொலையினை தடுப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கைக்கு அமைய,சிறிலங்கா இனப்படுகொலை அரசினை, அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தியோ, தமக்கான பரிகார நீதியினை சர்வதேச சமூகம் தரவேண்டும் என தாய்மார்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை உயர்நீதிமன்ற நீதிபதியூடாக உள்நாட்டு நீதிமன்றில் விசாரணையினை தாம் மேற்கொள்ள இருப்பதான சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் நிலைப்பாட்டினை முற்றாக நிராகரித்த தாய்மார்கள், குற்றத்தை செய்தவர்களே குற்றத்தினை விசாரிக்க முடியாது எனவும், இக்குற்றங்களை விசாரிப்பதற்குரிய சட்ட ஏற்பாடுகள் சிறிலங்காவின் நீதிபரிபாலனத்தில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுவிஸில் பல மாநிலங்களுக்கு பரவியுள்ள கொரோனா

சுவிஸின் திசினோ மாநிலத்தில் ஒரு கொரோன வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டதை தொடர்ந்து கிராப்புண்டன்,ஜெனிவா ஆகிய மாநிலங்களிலும் இந்த வைரஸ் தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூர் என இங்குள்ள தமிழர்களால் குறிப்பிடப்படும் கிராப்புண்டன் மாநிலத்தில் இருவர் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

ஜெனியா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் இனங்காணப் பட்டுள்ளதாகவும் இவர் மூன்று தினங்களுக்கு முன்னர் இத்தாலியின் மிலான் நகரிலிருந்து திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவரின் தோற்று மிதமான நிலையிலேயே உள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நபருடன் தொடர்புபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

நாட்டின் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட சுவிஸ் பொது சுகாதார அமைச்சகம் ‘நிலைமைகள் ஆபத்தான நிலையில் இல்லை,இது ஒரு மிதமான நிலைமைதான்’ என கூறியுள்ளது.

இழுவைப் படகு தொழிலை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம்

அத்துமீறிய இந்திய இழுவைப் படகு தொழிலை தடை செய்ய வலியுறுத்தி தீவ மீனவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

யாழ்.பண்ணைப் பகுதியில் இருந்து இன்று (27) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது, நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதன் பின்னர், அங்கிருந்து, காங்கேசன்துறை வீதி வழியாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்ததுடன், அமைச்சரின் பிரதிநிதிகளிகளிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

அங்கிருந்து, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு சென்று, அங்கும் தூதுவரிடம் மகஸர் கையளித்தனர்.

இந்த போராட்டத்தின் போது, இந்திய இழுவைப் படகின் அத்துமீறலால், தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், எமது பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றதாகவும், தெரிவித்தனர்.

ஆகையினால், இந்திய இழுவைப் படகின் அத்துமீறிய தொழில் முறையை தடை செய்யுமாறும், வளங்களை சூரையாடுவதை தடை செய்யுமாறும், வேண்டுகோள் விடுத்ததுடன், வாழ்வாதாரம் இன்றி, எமது வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்கள்.

முல்லைத்தீவு மின்பாவனையாளர்களை அச்சுறுத்தும் மின்சாரப்பட்டியல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்பாவனையாளர்கள் தமது பாவனைக்கு அதிகளவான மின் அலகுகளுக்கு பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கை காரணமாக வறுமையிலுள்ள குடும்பங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மின்பாவனையாளர்கள் தமது பாவனைக்கு அதிகளவான மின் அலகுகளை மின்சார சபை ஊழியர்களினால் வழங்கப்படும் மின்சாரப்பட்டியலுக்கு மேலதிக பணம் செலுத்திவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்மானிக்கும் மின்சாரப்பட்டியலுக்கும் இடையே பல்வேறு அலகுகள் வித்தியாசம் காணப்படுகின்றன. இம் மாதம் மின்பாவனையாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மின்மானியில் காணப்படும் மின்பாவனை அலகுற்கும் மின்சாரப்பட்டியலில் காணப்படும் அலகுற்கும் பல்வேறு வித்தியாசமான நிலை காணப்படுகின்றதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
IMG 20200227 102304 முல்லைத்தீவு மின்பாவனையாளர்களை அச்சுறுத்தும் மின்சாரப்பட்டியல்

IMG 20200227 103138 1 முல்லைத்தீவு மின்பாவனையாளர்களை அச்சுறுத்தும் மின்சாரப்பட்டியல்

IMG 20200227 103253 முல்லைத்தீவு மின்பாவனையாளர்களை அச்சுறுத்தும் மின்சாரப்பட்டியல்

அலகு ஒன்று தொடக்கம் 36வரையான அலகுற்கு 2.50சதமும் 37 தொடக்கம் 50வரையான அலகிற்கு 4.85சதமும் அறவிடப்பட்டு வருவதாக மின்சாரப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருவருடைய மின்சார பாவனை மானியில் 06083 என்ற நிலை காணப்படுகின்றது. அன்றயை தினம் பாவனையாளருக்கு வழங்கப்பட்ட மின்சாரப்பட்டியலில் 06106 என்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மின் பாவனை மானியிலிருந்து மேலதிகமாக 23 அலகுகளுக்கு மின்சாரப்டபாவனையாளர் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மின்சார சபை ஊழியர்களின் நடவடிக்கையினால் தமது மின்சாரப்பட்டியலுக்கு அதிக பணம் அறிவிடப்பட்டு வருவதாகவும் கூலிவேலைகள், வறுமையிலுள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து தகவல் பெற்றுக்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட மின்சார பொறியியலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு முறையிட முடியும். மின்பட்டியலில் தொலைபேசி இலக்கம் காணப்படுகின்றது. அதனுடன் எங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் ஊடகங்களின் கேள்விகளுக்கு அலுவலக ரீதியாக பதிலளிக்க முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சிவில் பாதுகாப்பு படை சிப்பாயால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ம் கட்டை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று சிறுமியின் தந்தை முறைப்பாடு செய்ததையடுத்தே இன்று சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கன்தலாவ உப சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் கந்தளாய், வெண்றாசன்புர பகுதியைச் சேர்ந்த கபில ஜயசூரிய 40 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,கைது செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு படை வீரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியருக்கு எதிரான வன்முறை : பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்திய தலைநகர் டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முஸ்லீம்களுக்கு எதிரான தீவிரவாத இந்துக்களின் தாக்குதல் இடம்பெற்று வருகிறது.

ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் பார்த்திருக்க ,பல சந்தர்பங்களில் துணையுடனும் இந்த வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாக நேரில் கண்ட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 7 பேர் பலி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மதுபான விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பிக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுஉள்ளனர். அந்த விடுதியில் வழக்கம்போல இன்று வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மதுமான விடுதியில் கூடியிருந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து கண் மூடித்தனமாக
சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்.

மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பெச்லெட் இன்று (27) இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் இன்றைய அமர்வின் போதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தமது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கைக்கு பதில் வழங்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/01 மற்றும் 40/1 ஆகிய பிரேரணையிலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

மேற்கண்ட தீர்மானங்கள் இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணாணவை என அமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அமைச்சரவையினதும், பாராளுமன்றத்தினதும் அனுமதி இன்றி வழங்கப்பட்ட இணை அனுசரனையின் மூலம் கடந்த அரசாங்கம் வெளிப்படையாக ஜனநாயக விழுமியங்களை மீறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன நாளை (28) ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பெச்லெட்டை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இறுதி முடிவு! எதிர்க்கத் தொடங்கிய உலக நாடுகள்

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தமைக்கு இங்கிலாந்தும் கனடாவும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக” அறிவித்திருந்தார்.

இலங்கையின் இந்து முடிவு “மனித உரிமைகளைப் பேணி மீள்நல்லிணக்கம்,நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவது குறித்து அதீத கவனம் செலுத்தும்படி இலங்கையை வற்புறுத்திக் கோருவதாக” பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலவலகத்துக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபு தெரிவித்தார்.

இதேவேளை, “இலங்கையின் இந்த முடிவு கனடாவை ஆழ்ந்த அதிருப்தியில் ஆழத்தியிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப்சம்பைன் தெரிவித்துள்ளார்.